Ongoing Novels

அரணாய் நீ வா! (பாகம் 2) - Epi 10

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 10 மூணாறில் இருந்து திரும்பி வந்ததும் முதல் வேலையாக , சுபத்ராவை பார்க்கச் சென்றாள் பார்கவி . அவளுக்காக சில பரிசுப் பொருட்களை வாங்கி வந்தவள் , அவளது வீடு தேடிச் சென்றாள் . அழைப்பு மணியை அவள் அழுத்தவும் , கதவை திறந்தார் சுபத்ராவின் தாய் தாமரை . பார்கவியைக் கண்டவர் , “ வாம்மா …” என்று அழைத்தாலும் , அவரது முகம் வாட்டமாக இருக்க , குழப்பமடைந்தாள் பார்கவி . உள்ளே சென்றவள் , “ என்னாச்சு ஆன்டி . ஏன் டல்லா இருக்கீங்க ?” என்று கேட்க , விக்கி அழ ஆரம்பித்து விட்டார் அவர் . பதறிப் போனவள் , “ ஐயோ ! என்னாச்சு ஆன்டி ? ஏன் அழறீங்க ?” என்று கேட்டவளிடம் , “ நம்ம சுபத்ரா …” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை . அவர் ஏங்கி ஏங்கி அழவும் , “ சுபத்ராவுக்கு என்னாச்சு ?” என்று கேட்டாள் . “ அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சும்மா !” என்ற தாமரையிடம் , “ ஆக்சிடென்டா ? எப்போ ? எப்படி ?” என்றபடி பதட்டமானாள் பார்கவி . “ இரண்டு நாள் முன்னாடி காலேஜூக்கு அவளோட டூ வீலர்ல கிளம்பிப் போனா … மதியம் எங்களுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் வந்தது . ஆக்சிடென்டுன

அரணாய் நீ வா - Epi 7

 அரணாய் நீ வா!


 

அத்தியாயம் – 7

மறுநாள் காலையில் சீக்கிரமே கிளம்பி காவல் நிலையத்திற்குச் சென்றான் அரண் செழியன்.

அன்று அவன் இன்ஸ்பெக்டராக அந்தக் காவல் நிலையத்தில் முதல் நாள் பொறுப்பேற்கிறான் என்பதால், அங்கே பணிபுரியும் காவலர்கள் அனைவரும் செழியனை வரவேற்பதற்காக வாசலில் காத்து நின்றனர்.

சப் – இன்ஸ்பெக்டர் ஜெகன், செழியனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்க, அனைவரும் கரகொலி எழுப்பினர்.

“தேங்க் யூ!” என்று அனைவரிடமும் தலையசைத்து அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டவன் தனக்கான தனியறைக்குச் சென்று இருக்கையில் அமர்ந்தான்.

அவனுக்கு பின்னால் வந்த சப் – இன்ஸ்பெக்டர் ஜெகனை எதிரே இருந்த இருக்கையில் அமரச் சொன்னவன்,

“உங்க கூட சேர்ந்து வொர்க் பண்ண போறதுல சந்தோஷம் ஜெகன் சார்!” என்றான்.

தனக்கு கீழே உள்ள பதவியில் அவர் இருந்தாலும், தன்னை விட வயதில் மூத்தவர் என்பதால் அவரை மரியாதையுடனே நடத்தினான் செழியன்.

“நன்றி சார்!” என்ற ஜெகனிடம்,

“நம்ம கன்ட்ரோல்ல வர்ற ஏரியா ரவுடிங்க, அதிகமான கிரிமினல் ரெக்கார்ட்ஸ் இருக்கறவங்களோட மொத்த டீட்டெயிலும் எனக்கு வேணும்” என்றான் செழியன்.

“டூ டேஸ்ல ரெடி பண்ணி தர்றேன் சார்” என்று ஜெகன் பதிலளிக்க, அவனும் சரியென்று தலையசைத்தான்.

பின்னர் அவர் தனது வேலைகளை கவனிக்கச் சென்றுவிட, செழியன் தனது வேலைகளில் மூழ்கினான்.

இடையே ஏதோ நினைவு வந்தவனாகத் தனது அலைபேசியில் இருந்து பார்கவிக்கு, ‘குட்மார்னிங் AR’ என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.

அதைப் பார்த்தவள், பதிலுக்கு கோபமான ஸ்மைலி ஒன்றை அனுப்பி வைக்க, அதைப் பார்த்து சிரித்தபடியே தனது வேலையில் கவனம் செலுத்தினான்.

நேரம் சுமார் பத்தை நெருங்கிய வேளையில், செழியனுக்கு எதிர் கடையில் இருந்து தேநீர் வந்தது.

அதை அவன் அருந்திக் கொண்டிருந்த வேளையில், “சார்!” என்று ஒரு குரல் கேட்க,

“உள்ளே வாங்க!” என்றான் செழியன்.

அங்கு வந்த ஜெகன், “ஸ்டேஷனுக்கு இப்போ ஒரு ஃபோன் கால் வந்தது சார். பக்கத்து ஊருல ஒரு வீட்டில் கொலை நடந்ததா தகவல் வந்திருக்கு! நான் போய் பார்த்து விசாரிச்சுட்டு வர்றேன் சார்” என்றார்.

சில நொடிகள் யோசித்த செழியன், “நானும் வர்றேன்!” என்று சொல்ல, ஜெகன் சரியென்று தலையசைத்தார்.

பின்னர் இருவரும் காரில் ஏறி களக்காட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் கோட்டை என்னும் ஊருக்குச் சென்றனர்.

அந்த ஊருக்கு சற்று தள்ளி தனியாக இருந்த ஒரு வீட்டிற்கு முன்னால் போய் நின்றது அவர்கள் சென்ற வாகனம்.

அந்த வீட்டின் முன்பு ஒரே கூட்டமும் சலசலப்புமாக இருக்க, போலீஸ் வாகனத்தைக் கண்டதும் அனைவரும் அமைதியாகினர்.

செழியன் வண்டியில் இருந்து இறங்கி வந்து, “மர்டரை பத்தி இன்ஃபார்ம் பண்ணது யாரு?” என்று கேட்க,

“கொலை செய்யப்பட்டவரோட சொந்தக்காரர் யாரோ தான் சார்” என்றார் ஜெகன்.

“விக்டிமோட மனைவி இப்போ எங்கே இருக்காங்க?” என்றவனிடம்,

“அவங்க அக்கா வீட்டில் இருக்கறதா சொன்னாங்க சார். மர்டரை நேரா பார்த்ததால, அவங்க ரொம்ப பயந்து போய் இருக்கறதா கேள்விப்பட்டேன்” என்று சப் – இன்ஸ்பெக்டர் கூற,

“ம்ம்ம்…” என்றபடி தலையசைத்தவன், சுற்றி நிற்கும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, 

“சீக்கிரமா கிரவுடை க்ளியர் பண்ணுங்க!” என்று கூறவும், வெளியே நின்றிருந்த மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தும் வேலையை மற்ற காவல் அதிகாரிகள் பார்த்துக் கொண்டனர்.

அதன் பிறகு, ஜெகனுடன் சேர்ந்து அந்த வீட்டிற்குள் சென்றான் அரண் செழியன்.

வீட்டின் நடு ஹாலில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் சுமார் நாற்பத்து ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆண்.

உடம்பில் பல இடங்களில் கத்தியால் வெட்டுபட்ட காயங்களை அவர்களால் பார்க்க முடிந்தது.

இறந்தவரை சுற்றி வந்து ஆராய்ச்சியாக சில நிமிடங்கள் பார்த்த செழியன், “க்ரைம் சீன் செக்யூர் பண்ணிடுங்க ஜெகன் சார்” என்று கூற, அவரும் சரியென்று தலையசைத்தார்.

“ஃபாரன்சிக் டீம் எப்போ வர்றாங்க?” என்றவனிடம்,

“இன்ஃபார்ம் பண்ணியாச்சு சார். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க!” என்றார் ஜெகன்.

செழியனோ அந்த வீட்டை சுற்றி முற்றி பார்த்தான். பார்த்தவுடன் அது ஒரு சில வருடங்களுக்கு முன்னால் புதிதாகக் கட்டப்பட்ட வீடு தான் என்பது அவனுக்குத் தெரிந்தது.

நவீன முறையில் அனைத்து வசதிகளுடனும், ஆடம்பரமாகவே இருந்தது.

மெதுவாக நடந்து சென்றவன், அந்த வீட்டில் இருந்த அறைகளை ஆராய்ந்தான்.

கீழ் தளத்தில் இருந்த சமையலறையில் மட்டும் பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.

மற்ற அறைகளில் இருந்தப் பொருட்கள் அனைத்தும் வைத்தது வைத்தபடி அப்படியே தான் இருந்தன.

முழுதாக வீட்டை ஆராய்ந்து முடித்தவன், மீண்டும் ஹாலுக்கு வர, “திருட்டுக்காக நடந்த கொலை மாதிரி தோணுது சார்” என்றார் ஜெகன்.

நாடியில் தன் விரலை தேய்த்து யோசித்தவன், “அப்படி இருக்கும்னு எனக்கு தோணல. லெட் அஸ் சீ!” என்றான்.

பின்னர், “விக்டிமோட மனைவியை நான் பார்க்கணும்!” என்று செழியன் கூற,

“இதோ… அவங்க அட்ரஸ் வாங்கி இப்போவே போயிடலாம் சார்” என்று பதிலளித்த ஜெகன், யாரிடமோ ஃபோனில் பேசிவிட்டு வந்தார்.

“பக்கத்துல தான் சார். வாங்க போகலாம்!” என்று ஜெகனுடன் சேர்ந்து காரில் ஏறியவன், இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு அவருடன் சென்றான்.

அந்த வீட்டிலும் சொந்தக்காரர்கள், அக்கம் பக்கம் வசிப்பவர்கள் என்று நிறைய பேர் குழுமியிருந்தனர்.

ஹாலில் இருந்த சோஃபாவில் துவண்டு போய் அமர்ந்திருந்தாள் ஒரு பெண்.

அவரை சுட்டிக்காட்டிய ஜெகன், “இவங்க தான் சார் விக்டிமோட வைஃப்” என்றார்.

அங்கே அதிகமான ஆட்கள் இருக்க, “நான் அவங்ககிட்ட தனியா பேசணும்” என்றான் செழியன்.

அதன் பிறகு ஜெகன் அவரிடம் சென்று பேசிவிட்டு வந்தார்.

ஒரு சில நிமிடங்களில் அனைவரும் கலைந்து செல்ல, அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்த செழியன், அந்தப் பெண்ணிடம் தனது விசாரணையைத் தொடங்கினான்.

சப் – இன்ஸ்பெக்டர் ஜெகன், அதனை ஆடியோ ஆதாரமாக தனது அலைபேசியில் பதிவு செய்ய ஆரம்பித்தார்.

ஆழ மூச்செடுத்தவன், “என்ன நடந்தது மேடம்?” என்று கேட்க, எதையோ யோசித்த அந்தப் பெண் கலங்கி அழ ஆரம்பித்தாள்.

அதைக் கண்டு அவளுக்கு அருகில் இருந்த அவளது அக்காவும் சேர்ந்து அழ, “அவங்களுக்கு குடிக்க தண்ணீர் குடுங்க!” என்றான் செழியன்.

தண்ணீர் குடித்து ஆசுவாசம் அடைந்தவளிடம், “இந்த விசாரணை உங்களுக்கு நிச்சயமா கஷ்டத்தையும் சங்கடத்தையும் கொடுக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா, அநியாயமா கொலை செய்யப்பட்ட உங்க கணவரோட இறப்புக்கு நியாயம் கிடைக்கறது… நீங்க சொல்லப் போற ஸ்டேட்மென்டை வச்சு தான் இருக்கு” என்றான் அவன்.

அதைக் கேட்டவளுக்கு என்ன தோன்றியதோ தனது கண்ணீர் துளிகளை துடைத்து விட்டு அவனுக்குப் பதிலளிக்கத் தயாரானாள்.

“உங்க பெயர்?” என்ற செழியனிடம்,

“துர்கா” என்றாள்.

“நேத்து ராத்திரி என்ன நடந்தது? எப்படி இந்த சம்பவம் நடந்ததுன்னு கொஞ்சம் விவரமா உங்களால சொல்ல முடியுமா?” என்றவனிடம்,

“காலையில ஒரு மூணு மணி இருக்கும். யாரோ எங்க வீட்டு கதவை தட்டினாங்க. நானும் என் பையனும் ஒரு ரூம்ல படுத்திருந்தோம். என் வீட்டுக்காரர் இன்னொரு ரூம்ல படுத்திருந்தார்” என்று அவள் கூற, புருவம் சுருக்கினான் செழியன்.

“அவர் ஏன் உங்க கூட தூங்கறதை விட்டுட்டு வேற ரூம்ல தனியா தூங்கினார்?” என்று அவன் கேட்க,

“சில சமயம் அவர் வேலை முடிச்சுட்டு லேட்டா தான் வீட்டுக்கு வருவார். அப்போ என் பையன் தூங்கிட்டு இருப்பான். அவனுக்கு தொந்தரவா இருக்கக் கூடாதுன்னு வேற ரூம்ல படுத்துப்பார்!” என்றாள் துர்கா.

“ஓகே… மேல சொல்லுங்க” 

“நேத்தும் அவர் தனியா தான் படுத்திருந்தார். சுமார் மூணு மணிக்கு யாரோ கதவை தட்டவும், அவர் தான் போய் கதவை திறந்திருக்கார். கொஞ்ச நேரத்துல அவர் பயங்கரமா கத்துற சத்தம் கேட்கவும் நான் எழுந்து ஹாலுக்குப் போனேன். அங்…கே… அங்கே ஒருத்தன் முகமூடி போட்டுட்டு கையில பெரிய கத்தியோட நின்னுட்டு இருந்தான்” என்று அந்தச் சம்பவத்தை விவரித்தவளின் உடல் முழுவதும் நடுங்கத் தொடங்கியது.

அதை கவனித்த செழியனும், “பரவாயில்ல… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க!” என்றான்.

துர்காவும் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நடந்த சம்பவத்தை முழுமையாக விவரித்தாள். 

வீட்டிற்குள் நுழைந்த அந்த முகமூடி அணிந்தவன், துர்காவின் கணவர் செல்வனிடம் வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை எடுத்து தரச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தான்.

அந்தக் காட்சியைப் பார்த்த துர்கா பயத்தில் கத்த, அவனது கவனம் அவளிடம் திரும்பியது.

செல்வனோ தன் மனைவி அங்கு நிற்பதைக் கண்டு பதட்டமானபடி, “துர்கா! நீ எதுக்காக இங்கே வந்த? உள்ளே போ” என்று கூற, அவன் கத்தி முனையில் துர்காவை ஹாலுக்கு அழைத்து வந்தான்.

அவளது கையிலும், கழுத்திலும் தங்க நகைகள் அணிந்திருப்பதைக் கண்டு அதைக் கழற்றிக் கேட்டான்.

அவளும் வேறு வழியின்றி அதைக் கழற்றி கொடுத்தபடி, “அதான் நீ கேட்டதை கொடுத்துட்டோமே! தயவு செஞ்சு எங்களை விட்டுரு” என்று அவனிடம் கை கூப்பி கெஞ்சினாள்.

ஆனால், அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. கத்தியை துர்காவின் கழுத்தில் வைத்தபடி அவளுடன் அந்த வீட்டின் சமையலறைக்குச் சென்றான்.

அங்கே இருந்த ஒரு கயிறை எடுத்துக் கொண்டவன், அவளுடன் ஹாலுக்கு வந்த போது, செல்வன் தனது அலைபேசியை கையில் வைத்தபடி நின்றிருக்க,

“மரியாதையா ஃபோனை கீழே போடு. இல்லைன்னா, உன் பொண்டாட்டி கழுத்துல கத்தியை இறக்கிடுவேன்” என்று கத்தினான் அந்தக் கயவன். 

செல்வனும் பயந்தபடியே அலைபேசியை கீழே போட, “மண்டி போட்டு உட்காரு” என்றான்.

அவரும் அதன்படியே செய்ய, அடுத்ததாக துர்காவின் கைகளை அவளுக்குப் பின்பக்கமாக கொண்டு சென்று அதனை கயிற்றால் கட்டிப் போட்டான்.

அவளது கால்களையும் கட்டியவன், அவளது வாயை ஒரு துணியால் கட்டினான்.

பின்னர் நிகழ்ந்த சம்பவம் தான் அவள் சற்றும் எதிர்பார்க்காதது.

நேராக செல்வனிடம் சென்ற அந்தக் கொடியவன், அவனது கழுத்தில் கத்தியை வைத்து இழுக்க, இரத்தம் பீறிட்டு கீழே சரிந்தார் செல்வம்.

அதைக் கண்ட துர்கா அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட, வாயில் துணி கட்டி இருந்ததால் அவளது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

அந்தக் கொடூரனோ, மீண்டும் சிலமுறைகள் கத்தியால் செல்வனை பதம் பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.

தன் கணவர் தன் கண் முன்னே துடிதுடித்து இறந்து போவதைப் பார்த்து வேதனையுடன் கண்ணீர் வடிப்பதைத் தவிர, அவளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

அவள் சொன்ன அனைத்தையும் முழுமையாகக் கேட்ட செழியனுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

அந்தக் கொடூர சம்பவத்தை நினைவு கூர்ந்த துர்காவிடம், “நீங்க எப்படி தப்பிச்சீங்க? இந்த விஷயத்தை போலீசுக்கு எப்படி தெரியப்படுத்துனீங்க? ஏன்னா… அதிகாலையில கொலை நடந்ததா சொன்னீங்க. ஆனா, எங்களுக்கு பத்து மணிக்கு தான் தகவல் கிடைச்சது. இந்த இடைப்பட்ட நேரத்துல என்ன நடந்ததுன்னு உங்களால சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“என் வீட்டுக்காரர் இறந்து ரொம்ப நேரத்துக்குப் பிறகு…” என்றபடி சற்று யோசித்தவள்,

“எனக்கு டைம் சரியா ஞாபகம் இல்ல. கிட்டத்தட்ட ஏழு மணிக்கு என் மகன் ரூம் கதவை திறந்து, வெளியே வந்தான். அவங்க அப்பான்னா அவனுக்கு உயிர்!”

“அவர் இருந்த நிலைமையைப் பார்த்தவனால சரியா நிக்க கூட முடியல. பயந்து நடுங்கிட்டு இருந்தான். ஆனா, நான் அவனைப் பார்த்து அழவும் தான் எப்படியோ தைரியத்தை வரவழைச்சு கிச்சனுக்குப் போய் கத்திரிக்கோல் எடுத்துட்டு வந்து, என் கை, கால்ல கட்டியிருந்த கட்டை அவிழ்த்து விட்டு என்னை காப்பாத்தினான்”

“அதுக்கப்புறமா என் அக்காவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். என் மொத்த குடும்பமும் பதறியடிச்சுட்டு ஓடி வந்தாங்க” என்ற துர்காவை இடைமறித்த செழியன்,

“ஏழு மணிக்கு மேல உங்க ஃபேமிலி ஸ்பாட்டுக்கு வந்துட்டதா சொல்றீங்க! அப்பவே ஏன் போலீசுக்கு நீங்க தகவல் சொல்லலை?” என்று கேட்டான்.

“அது…” என்று துர்கா தயங்கவும், அவன் திரும்பி சப் – இன்ஸ்பெக்டர் ஜெகனை நோக்கினான்.

அவரும் அர்த்தம் பொதிந்த பார்வையுடன் செழியனை பார்க்க, “சொல்லுங்க மேடம். எதுக்காக போலீசுக்கு லேட்டா இன்ஃபார்ம் பண்ணீங்க?” என்றான் அழுத்தமான குரலில்.

துர்காவோ தயக்கத்துடன், “இல்ல சார்… அது வந்து. கொலை கேஸ்னா எப்படியும் போஸ்ட் மார்டம் பண்ணுவாங்க. எனக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. அவர் ஏற்கனவே துடிதுடிச்சு தான் இறந்து போனாரு. இன்னொரு முறை அவரோட உடம்பை கூறு போடுறதுல, எனக்கு விருப்பம் இல்ல!” என்று சொல்லி அழவும், செழியனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

ஒரு மனைவியாக தன் கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய நினைத்திருக்கிறாள் என்று யூகித்தவன், “ம்ம்ம்… புரியுது. மேல சொல்லுங்க!” என்றான்.

“ஆனா, எங்க அக்காவோட வீட்டுக்காரர் தான் போலீஸ் விதிமுறைப்படி தான் எல்லாம் செஞ்சாகணும்னு சொல்லி எங்களை சம்மதிக்க வச்சாரு. அவர் தான் ஸ்டேஷனுக்கும் தகவல் கொடுத்தாரு!” என்று முழுதாக சொல்லி முடித்தாள் துர்கா.

அனைத்தையும் கேட்டவன், “ஓகே ஃபைன். தேவைப்பட்டா திருப்பியும் உங்களை விசாரணைக்கு கூப்பிடுவோம்” என்றவனிடம் சரியென்று தலையசைத்தவள்,

“அந்த கொலைகாரனை சீக்கிரமா கண்டுபிடிச்சுருவீங்கல்ல சார்?” என்று கேட்க,

அவன் எழுந்தபடி, “நிச்சயமா!” என்றான்.

அங்கிருந்து செல்வதற்கு முன், “உங்க மகனையும் விசாரிக்கணும்” என்று கூற,

“அவன் எதுக்கு சார். சின்ன பையன்! ஏற்கனவே பயந்து போய் இருக்கான்” என்று மறுத்தாள் துர்கா.

“அது எனக்குப் புரியுது. உங்க கணவரோட இறுதிச் சடங்கு எல்லாம் முடியட்டும். அதுக்கப்புறமா விசாரணைக்கு கூப்பிடுறோம். நீங்க எங்களுக்கு கொஞ்சம் ஒத்துழைச்சீங்கன்னா நல்லா இருக்கும்” என்றுவிட்டு அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தான் செழியன்.

காவல்துறை வாகனத்தில் ஏறியவனிடம், “எனக்கென்னமோ அந்த அம்மா சொல்றது உண்மைன்னு தான் தோணுது சார். எவனோ திருடுறதுக்கு பல நாளா திட்டம் போட்டு தான் இந்த வேலையை செஞ்சிருக்கணும்” என்றார் ஜெகன்.

“இப்போதைக்கு நாம எந்த முடிவுக்கும் வர முடியாது ஜெகன் சார். ஆனா, உண்மையான கில்லரை பத்தி தகவல் கிடைக்குற வரைக்கும் ஒன் ஆஃப் த சஸ்பெக்டா  துர்காவோட பெயரை லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க!” என்றான் அரண் செழியன்.

அவன் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே, அந்த மாவட்ட எஸ்.பியிடம் இருந்து செழியனுக்கு அலைபேசி அழைப்பு வர, அழைப்பை ஏற்றான்.

“சார்!” என்றவனிடம்,

“கான்ட்ராக்டர் செல்வன் கொலை கேஸ் விசாரணை எந்த அளவுல இருக்கு செழியன்? கில்லரைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா?” என்று கேட்டார் எஸ்.பி வேலாயுதம்.

“கில்லர் பத்தி பெருசா எந்த க்ளூவும் கிடைக்கல சார். திருட்டுக்காக நடந்த கொலைன்னு தான் FIR போட்டு கேசை மூவ் பண்ணணும். ஃபாரன்சிக் டீம் அன்ட் அட்டாப்சி ரிப்போர்ட் வந்தா தான் அடுத்த கோணத்துக்கு கேசை கொண்டு போக முடியும் சார்!” என்று பதிலளித்தான் செழியன்.

“ஓகே மிஸ்டர் செழியன். செல்வன் ஊர்ல பெரிய புள்ளிங்கறதால, கலவரம் வர்றதுக்கு வாய்ப்புகள் இருக்கு. ஒருவேளை அப்படி நடந்தா, அதை கொஞ்சம் ஜாக்கிரதையா ஹேன்டில் பண்ணுங்க. அடிஷனல் போலீஸ் ஃபோர்ஸ் வேணும்னா உடனே எனக்குத் தகவல் கொடுங்க. ஐ ஹாவ் சம் இம்பார்டன்ட் ஒர்க் டுடே. இல்லைன்னா நானே நேரா அங்கே வந்திருப்பேன்” என்றவரிடம்,

“நோ ப்ராப்லம். இப்போதைக்கு எல்லாமே நம்ம கன்ட்ரோல்ல தான் சார் இருக்கு!” என்று செழியன் கூற, அவரும் பேசி முடித்துவிட்டு அழைப்பை துண்டித்தார்.

அதன் பிறகு தடயவியல் குழு வந்து கொலை நடந்த இடத்தில் ஆராய, செல்வனின் உடல், கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அன்றைய நாள் செழியனுக்கு இறக்கை கட்டி தான் பறந்து சென்றது.

ஆய்வாளராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பெரிய வழக்கு அவன் பக்கம் வந்திருக்க, உணவைக் கூட மறந்தவனாய் முழு மூச்சுடன் அந்த கேஸ் சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டிருந்தான் அவன்.

இங்கே இப்படி இருக்க, பார்கவி தான் கையில் ஃபோனை வைத்துக் கொண்டு தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

கடந்த இரு தினங்களாக, அரண் செழியனிடம் இருந்த அவளுக்கு குறுஞ்செய்திகளோ அல்லது அழைப்போ வரவே இல்லை!

அப்படியே அவன் அழைத்தாலும் பெயருக்கு ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பதில் பேசுபவளுக்கு, இப்பொழுது அவன் காட்டும் மௌனம் மிகவும் கொடுமையாக இருந்தது.

அவன் தனக்கு வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன மனமே, இப்பொழுது அவன் வேண்டும் என்று நினைக்க வைத்தது தான் அவளுக்கு விந்தையாக இருந்தது.

கையில் இருந்த ஃபோனையே பார்த்தவளுக்கு, ஒரு பக்கம், ‘பேசாம நாமளே கால் பண்ணி பேசினா என்ன?’ என்று தோன்றினாலும், மறுபக்கம்

‘வேண்டாம் வேண்டாம்! சும்மாவே நம்மளை கலாய்ப்பாரு. இப்போ நாம வாலன்டியரா போய் பேசுனா… அவரோட கலாய்க்கு தீனி போட்ட மாதிரி ஆயிடும். அவரே கூப்பிட்டு பேசட்டும்!’ என்று நினைத்து தனது எண்ணத்தை கை விட்டாள்.

அன்று!

களக்காடு ஜங்ஷனில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தான் அரண் செழியன்.

தடயவியல் நிபுணர்கள் கொடுத்த அறிக்கையின்படி, செல்வனின் வீட்டில் கிடைத்த கொலைகாரனின் தலை முடியை வைத்து ஆய்வு செய்த பொழுது, கொலையாளி இருபதுகளில் இருக்கும் நபர் என்பது நிரூபணமாகி இருந்தது.

அதனால், இந்த வழக்கை விசாரிக்கும் செழியனும் அவனது காவல்துறை குழுவும் தீவிரமாகக் கொலையாளியை கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி அவர்கள் ஆய்வு செய்த பொழுது, மதுரை மாவட்ட எண்ணில் பதிவாகியிருந்த ஒரு டெம்போ ட்ராவலரை  நோக்கிச் சென்றான் செழியன்.

அந்த வாகனத்தினுள் ஏறி ஆய்வு செய்தவனின் விழிகள், கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தவளை பார்த்ததும் ஆச்சர்யத்தில் விரிய, அங்கு அவனையே முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பார்கவி!

அரணாய் வருவான்…

மீண்டும் சந்திப்போம்♥

பிரியமுடன்,

சௌஜன்யா...

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 5

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi - 6