Ongoing Novels

அரணாய் நீ வா! (பாகம் 2) - Epi 10

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 10 மூணாறில் இருந்து திரும்பி வந்ததும் முதல் வேலையாக , சுபத்ராவை பார்க்கச் சென்றாள் பார்கவி . அவளுக்காக சில பரிசுப் பொருட்களை வாங்கி வந்தவள் , அவளது வீடு தேடிச் சென்றாள் . அழைப்பு மணியை அவள் அழுத்தவும் , கதவை திறந்தார் சுபத்ராவின் தாய் தாமரை . பார்கவியைக் கண்டவர் , “ வாம்மா …” என்று அழைத்தாலும் , அவரது முகம் வாட்டமாக இருக்க , குழப்பமடைந்தாள் பார்கவி . உள்ளே சென்றவள் , “ என்னாச்சு ஆன்டி . ஏன் டல்லா இருக்கீங்க ?” என்று கேட்க , விக்கி அழ ஆரம்பித்து விட்டார் அவர் . பதறிப் போனவள் , “ ஐயோ ! என்னாச்சு ஆன்டி ? ஏன் அழறீங்க ?” என்று கேட்டவளிடம் , “ நம்ம சுபத்ரா …” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை . அவர் ஏங்கி ஏங்கி அழவும் , “ சுபத்ராவுக்கு என்னாச்சு ?” என்று கேட்டாள் . “ அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சும்மா !” என்ற தாமரையிடம் , “ ஆக்சிடென்டா ? எப்போ ? எப்படி ?” என்றபடி பதட்டமானாள் பார்கவி . “ இரண்டு நாள் முன்னாடி காலேஜூக்கு அவளோட டூ வீலர்ல கிளம்பிப் போனா … மதியம் எங்களுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் வந்தது . ஆக்சிடென்டுன

அரணாய் நீ வா - Epi 1

 அரணாய் நீ வா!


 

அத்தியாயம் - 1

அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை…

நள்ளிரவு பதினோரு மணி!

சாலையின் ஓரமாக சைரன் சத்தம் எதுவுமின்றி, அதன் விளக்கை மட்டுமே ஔிரவிட்டபடி நின்றிருந்தது அந்தக் காவல் வாகனம்.

கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டியபடி, கார் பேனட்டில் சாய்ந்து நின்றிருந்தான் அவன்.

காவல்துறையின் பிரத்யேகமான காக்கி சீருடையில், கச்சிதமான உடற்கட்டும், கரிய மீசையும், எதிராளியை எச்சரிக்கும்படியான துளைத்தெடுக்கும் பார்வையுமாக நின்றிருந்தான்.

அவன்… அரண் செழியன்!

அருப்புக்கோட்டை காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர்!

அன்று நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் கனரக வாகனங்களை சோதனை செய்வதற்கான இரவு நேரப் பணியில் இருந்தான்.

அவனுடன் மூன்று கான்ஸ்டபிள்களும் அந்தப் பணியில் இணைந்திருந்தனர்.

அப்பொழுது சாலையில் ஒரு லாரி வருவதைக் கண்டு, “சிதம்பரம்! அந்த லாரியை ஓரங்கட்டுங்க” என்றான் செழியன்.

“ஓகே சார்!” என்று அவனது கட்டளைக்கு பதிலளித்தவரும், சாலைக்குச் சென்று கையசைத்து அந்த லாரியை ஓரமாக நிறுத்தும்படி கூறினார்.

காவல்துறை அதிகாரியைக் கண்டதும் லாரி ஓட்டுனர், வாகனத்தின் வேகத்தைக் குறைத்து லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

அரண் செழியன் அந்த லாரியை சோதனை செய்வதற்காகச் சென்ற பொழுது, லாரிக்குப் பின்னால் நின்றிருந்த ஒரு கார் சட்டென வேகமெடுத்து சாலையில் சீறிப்பாய்ந்து சென்றது.

‘இந்த கார் ஏன் இவ்வளவு வேகமா போகுது?’ என்று நினைத்தபடியே அவன் திரும்பிப் பார்க்கவும், காருக்குள் இருந்து ஒருவனின் தலை வெளியே எட்டிப் பார்த்தது.

அவனது முகத்தில் தெரிந்த கலவரத்தைக் கண்ட செழியனுக்கு ஏதோ சரியில்லை என்று அவனது போலீஸ் மூளை சந்தேகிக்க, நொடியும் தாமதிக்காமல் தனது போலீஸ் காரின் முன் பக்க இருக்கையில் சென்று ஏறி அமர்ந்தான்.

ஒரு கான்ஸ்டபிளை மட்டும் சோதனையில் நிற்க வைத்து விட்டு மற்ற இருவரையும் தன்னுடன் வருமாறு பணித்தவன் கார் ஓட்டிய கான்ஸ்டபிளிடம், “அந்தக் காரை சேஸ் பண்ணுங்க!” என்றான் ஆளுமையான குரலில்.

அதன் பிறகு சைரன் சத்தத்துடன் அந்தப் போலீஸ் வாகனம் சாலையில் வேகமெடுத்து முன்னால் சென்ற காரை பின் தொடர்ந்தது.

காரின் அருகே சென்றதும், “இப்போ ஓவர்டேக் பண்ணுங்க” என்று செழியன் கூற, ஓட்டுனரும் அந்தக் காரை முந்தி சென்றார்.

இரவு நேரம் என்பதால் குறைவான வாகனங்களே சாலையில் சென்று கொண்டிருந்தன.

காவல்துறை வாகனம் அந்தக் காரின் பக்கவாட்டுக்கு சென்று அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து உடன் பயணிக்க, கார் ஓட்டுனர் பீதியுடன் திரும்பிப் பார்த்தான்.

அவனை பார்த்த செழியன், “ஏய்! மரியாதையா வண்டியை ஓரங்கட்டு. இல்லைன்னா விளைவுகள் விபரீதமா இருக்கும்!” என்று கர்ஜித்தான்.

ஆனால், அவனோ தன் காரை நிறுத்தவுமில்லை, அதன் வேகத்தை குறைக்கவுமில்லை!

அதை கண்டதும் தனது துப்பாக்கியை அதன் உறையில் இருந்து வெளியே எடுத்தவன், கார் ஓட்டுபவனை நோக்கி குறி வைத்தபடி, “இப்போ காரை நிறுத்துறியா… இல்லை உன்னை சுட்டு தள்ளட்டுமா?” என்று செழியன் கத்தவும், பயந்து போனான் அவன்.

சட்டென வண்டியின் வேகத்தைக் குறைத்தவன், காரின் ப்ரேக்கை அழுத்த, அந்த வாகனத்தின் டயர் தார் சாலையில் உராய்ந்து க்ரீச்சிடும் சத்தத்துடன் நின்றது.

அதே சமயத்தில் போலீஸ் வாகனமும் அந்தக் காருக்கு முன்னால் குறுக்காக நிறுத்தப்பட்டது.

போலீஸ் வாகனம் நின்ற மறுநொடியே அதிலிருந்து குதித்து வெளியே இறங்கினான் அரண் செழியன்.

அவன் துரத்தி வந்த காரில் பயணித்த இருவரும் கீழே இறங்கி சாலையில் வேகமாக ஓடிக் கொண்டிருக்க, சிறுத்தை வேகத்துடன் அவர்களை துரத்திச் சென்றான் அவன்.

செழியனுக்குப் பின்னால் அவனுடன் வந்த கான்ஸ்டபிள் இருவரும் ஓடி வந்து கொண்டிருந்தனர்.

தப்பித்து ஓடியவர்களில் ஒருவன் சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு காரில் மோதி கீழே விழுந்தான்.

நல்ல வேளையாக அந்தக் கார் இவர்களை கண்டு வேகத்தைக் குறைத்ததால் அவனுக்கு பெரிதாக எந்த அடியும் படவில்லை.

கீழே விழுந்தவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து தூக்கியவன், அவனை பின்னால் வந்த கான்ஸ்டபிள்களின் வசம் ஒப்படைத்துவிட்டு இன்னொருவனைப் பார்த்தான்.

அவனோ பின்னால் திரும்பி பார்த்தபடி சாலையில் இருந்து விலகி கீழே இருந்த ஒரு காலி கிரவுண்டில் ஓட ஆரம்பித்தான்.

அவன் சென்ற திசைக்கே செழியனும் ஓட, முன்னால் சென்றவனுக்குப் பீதி கிளம்பியது.

தனது வேகத்தை மேலும் அதிகரித்த செழியன், அவனை நெருங்கிச் சென்று அவனது பின்னங்காலில் எட்டி உதைத்தான்.

கால் மடங்கிப் போய் நிலத்தில் தடுமாறி விழுந்தவனின் சட்டை காலரைப் பற்றி இழுத்து அவனை எழுப்பினான்.

பிடிபட்டவனோ, “சார்… சார்… என்னை விட்ருங்க சார். நான் எந்தத் தப்பும் பண்ணல” என்று கெஞ்சவும்,

“தப்பு பண்ணலைன்னா… அப்புறம் எதுக்காக ஏதோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் ஜெயிக்கப் போறவன் மாதிரி அந்த ஓட்டம் ஓடுன?” என்று பற்களை கடித்தபடி கேட்டான் செழியன்.

பின்னர் அவனை இழுத்துக் கொண்டு சாலைக்கு அவன் வந்த போது மற்ற இரு போலீசாரும் அங்கே முதலாவதாகப் பிடிபட்டவனுடன் நின்றிருந்தனர்.

“பரணி! காரை முழுசா செக் பண்ணுங்க!” என்று செழியன் கட்டளை பிறப்பிக்க,

அவரும், “ஓகே சார்!” என்றபடி முன்பக்க இருக்கைகள் முழுவதும் சோதனை செய்தார். சந்தேகப்படும் விதமாக எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

பின்னர் கார் டிக்கியைத் திறந்து பார்த்த கான்ஸ்டபிள் பரணி, “சார்! இங்கே இரண்டு லக்கேஜ் பேக் இருக்கு” என்று கூறவும்,

இருவரையும் திரும்பி பார்த்தவன், “அந்த பேக்ல என்ன இருக்கு?” என்று கேட்டான்.

இருவரும் தொண்டை குழிக்குள் எச்சில் விழுங்கியபடி ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்தனர். 

அவர்களில் ஒருவன், “அது… வந்து… சார். அதுல எங்களோட துணிமணி தான் சார் இருக்கு. நாங்க இரண்டு பேரும் ஊருக்குப் போயிட்டு இருக்கோம்!” என்றான்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு புருவம் சுருக்கியவன் அந்த காரின் பதிவு எண்ணைப் பார்த்தான்.

அந்தக் கார் ராமாநாதபுரம் மாவட்டத்தின் பதிவெண்ணில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தது.

“பரணி… பேக்கை ஓப்பன் பண்ணுங்க!” என்று செழியன் கூறவும் அவர் பையை திறந்தார்.

பைக்குள் டார்ச் அடித்துப் பார்த்தவர், “சார்… இங்கே வந்து பாருங்க!” என்று கூறவும், செழியன் அங்கு சென்று அந்தப் பைகளை சோதனை செய்தான்.

இரண்டு பெரிய பைகளில் சிறிய அளவிலான அரிய வகை நட்சத்திர ஆமைகள் இருப்பதைக் கண்டதும் இருவரையும் கோபமாக திரும்பி பார்த்து முறைத்தான் செழியன்.

இந்தியாவில் காணப்படும் இந்த வகை ஆமைகளுக்கு சர்வதேச சந்தையில் மவுசு அதிகம். 

ஆமைகளின் எடை மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து சில லட்சங்களில் இருந்து பல கோடி ரூபாய் வரை விலை போகும்!

வெளிநாடுகளில் உணவிற்காகவும், இந்த ஆமைகளால் வீட்டில் அதிர்ஷ்டம் வரும் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் இவை கள்ள சந்தையில் சட்ட விரோதமாக விற்கப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வான் வழியாகவும், கடல் வழியாகவும் இவை சட்ட விரோதமாகக் கடத்தப்படுகின்றன.

பைகளில் உயிருடன் இருந்த ஆமைகளைப் பார்த்தபடி, “இதெல்லாம் எப்படி இங்கே வந்தது?” என்று அவன் கேட்க, இருவரும் தலைகுனிந்து பதில் சொல்லாமல் நின்றனர்.

“இந்த ஆமைகளை சட்ட விரோதமா கடத்துனா என்ன தண்டனைன்னு தெரியும்ல!” என்று அவன் கோபமாகக் கேட்க இருவரில் ஒருவன்,

“சார்… சார்… தெரியாம பண்ணிட்டோம் சார். தயவு செஞ்சு எங்க மேல கேஸ் எதுவும் போட்டுடாதீங்க சார். எங்களை விட்டுருங்க சார்” என்றபடி அழுதான்.

சாலையில் போலீசார் நிற்பதைக் கண்டதும் அந்த நெடுஞ்சாலை வழியாக சென்ற சில வாகனங்கள் வேகத்தை குறைத்து என்னவோ ஏதோ என்று நிற்க,

“வண்டியை நிறுத்தாதீங்க! போங்க போங்க!” என்று கூறி கான்ஸ்டபிள் சிதம்பரம் அங்கே நின்ற வாகனங்களை அனுப்பி வைத்தார்.

செழியனோ, “இரண்டு பேரையும் வண்டியில ஏத்துங்க!” என்றவன்,

“பரணி… நீங்க இந்தக் காரை சீஸ் பண்ணி கடத்தல் பொருளோட நேரா நம்ம ஸ்டேஷனுக்கு வந்துடுங்க!” என்று கூற, 

அவரும், “ஓகே சார்!” என்றபடி அவன் சொன்னதை செய்வதற்காக சென்று விட்டார்.

பின்னர் அந்த இருவரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றியவன், வண்டியை நேராக அருப்புக்கோட்டை காவல் நிலையத்திற்கு விட சொன்னான்.

நள்ளிரவு வேளையில் சைரன் விளக்கு ஒளிர, அந்த போலீஸ் வாகனம் காவல் நிலையம் நோக்கி சென்றது.

காவல் நிலையத்தை அடைந்ததும், குற்றவாளிகள் இருவரும் உள்ளே அழைத்து செல்லப்பட்டனர்.

ஹெட் கான்ஸ்டபிள் மூர்த்தியிடம், “இவங்க இரண்டு பேரோட டீட்யெில்ஸ் வாங்கிடுங்க ஏட்டய்யா!” என்றான் செழியன்.

தலை கவிழ்ந்து நின்றிருந்த அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தவர், “என்ன கேஸ் சார்?” என்று கேட்க,

தனது இருக்கையில் சென்று அமர்ந்தவன், “கடத்தல் தான். நட்சத்திர ஆமைங்களை கார்ல கடத்திட்டு போகப் பார்த்தாங்க!” என்று பதிலளித்தான்.

பின்னர் அந்த இருவரிடமும் மூர்த்தி அவர்களை குறித்த தகவல்களை விசாரிக்க, வனத்துறைக்கு அழைத்து கடத்தல் ஆமைகள் பிடிப்பட்ட விஷயத்தை அவர்களிடம் தெரிவித்தான் செழியன்.

மறுநாள் காலையில் தாங்கள் வந்து அந்த ஆமைகளை, எடுத்துச் செல்வதாக வனத்துறை அதிகாரி அவனிடம் தெரிவிக்க அழைப்பை துண்டித்தவன் தனது இருக்கையில் இருந்து எழுந்தான்.

மூர்த்தியிடம், “FIR க்கு ரெடி பண்ணுங்க ஏட்டய்யா!” என்று சொல்ல, குற்றவாளிகள் இருவரும் கலங்கிப் போய் நின்றனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த இருவரின் மீதும் FIR போடப்பட்டு, இருவரும் லாக் அப்புக்குள் அடைக்கப்பட்டனர்.

அதன் பிறகு செழியன் அன்றைய ட்யூட்டி முடிந்து வீட்டிற்கு கிளம்பினான்.

காருடன் ஸ்டேஷனுக்கு வந்திருந்த பரணியிடம், ஆமைகளை வனத்துறையிடம் ஒப்படைக்கும் வரை பாதுகாப்பாக அவற்றை பார்த்து கொள்ளும்படி கூறி சென்றான்.

அதன் பிறகு காவல் நிலையத்தில் இருந்த தனது பைக்கில் ஏறிய செழியன், தான் தங்கியிருக்கும் குவார்ட்டர்ஸ் நோக்கி பயணித்தான்.

குவார்டர்சுக்கு வந்து தனது வீட்டை திறந்து உள்ளே சென்றவன், கை கால் முகம் கழுவி உடை மாற்றிவிட்டு வந்தான்.

ஒரு கப் தண்ணீரை எடுத்து பருகியவனுக்கு உடல் மிகவும் சோர்வாக இருந்தது.

கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். நேரம் நள்ளிரவு ஒன்றரை மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

படுக்கையில் சென்று விழுந்தவன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டான்.

மறுநாள் காலை செழியனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. 

காரணம், அன்று தான் அவன் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராகப் பணியாற்றப் போகும் கடைசி நாள்!

சென்ற வாரம் தான் அவனுக்கு வேறு ஊருக்குப் பணி மாறுதலுடன் கூடவே பதவி உயர்வும் கிடைத்திருந்தது.

கடைசி நாள் காவல் நிலையத்தில் தான் செய்து முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்க, விரைவாகக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் பார்த்து அவனது அலைபேசி ஒலியெழுப்பவும், “ம்பச்…” என்று சலித்தபடியே சென்று போனை எடுத்தவன், தொடுதிரையில் தெரிந்த பெயரை கண்டதும் இதழ் விரித்து சிரித்தான்.

அவனது அன்னை ஆதிரை செல்வி தான் அழைத்திருந்தார்.

அழைப்பை ஏற்றவன், “ஹலோ… மா… என்ன விஷயம் காலையிலேயே போன் பண்ணியிருக்கீங்க?” என்றவனிடம்,

“ஏன் செழியா! விஷயம் இருந்தா தான் நான் உனக்கு போன் பண்ணணுமா? போனை எடுத்ததும் நான் எப்படி இருக்கேன்னு விசாரிக்கறதை விட்டுட்டு, குறுக்கு விசாரணை பண்ணுறியே! அது சரி… நீதான் போலீஸ்காரனாச்சே! விசாரணை பண்ணாமல் இருந்தா தான் ஆச்சர்யம்!” என்றார் அவர்.

செழியனோ உதட்டோரம் விரிந்த சிரிப்பு மாறாமல், “சரிம்மா… சொல்லுங்க. எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?” என்று கேட்க,

“ம்ம்ம்… எல்லாம் ஆச்சுப்பா. நீ எப்போ ஊருக்கு வர்ற?” என்றார்.

“இன்னைக்கு எல்லா ஃபார்மாலிட்டீசும் முடிச்சுட்டு அனேகமா நாளைக்கு கிளம்பி வந்துடுவேன் மா" என்று பதிலளித்தவனிடம்,

“அப்போ சரி… அப்படின்னா நாளான்னைக்கே உனக்கு பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணிடுறேன்” என்றார் ஆதிரை.

அதை கேட்டதும் ஆழ்ந்து மூச்செடுத்தவன், “ம்மா… நான் தான் எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருக்கேன்ல. அப்புறம் எதுக்காக இதையெல்லாம் ஏற்பாடு பண்ணுறீங்க?” என்று கேட்டான்.

“இன்னும் மூணு மாசத்துல உனக்கு முப்பது முடியப் போகுது. காலா காலத்துல நாங்க பெத்த பையனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா. உனக்கு அப்புறம் உன் தம்பி வேற கல்யாண வயசுல ரெடியா இருக்கான். இரண்டு வாலிப பசங்களை வீட்டுல வச்சுட்டு... ஒரு கல்யாணம் காட்சி பார்க்கலைன்னா எப்படி?” என்று ஆதிரை உணர்ச்சி வசப்பட, அவரிடமிருந்து போனை வாங்கினார் அவரது கணவர் சண்முகநாதன்.

“ஸ்டேஷன் கிளம்பும் போது ஏன் வீணா செழியனை டென்ஷன் பண்ணுற செல்வி?” என்று தன் தாயிடம் அவர் கேட்பது செழியனுக்கு நன்றாகக் கேட்டது.

தன் மகனிடம், “செழியா! நீ டியூட்டிக்கு கிளம்புப்பா. மற்றதை நீ ஊருக்கு வந்த பிறகு பேசிக்கலாம்” என்றார் அவர்.

செழியனும், “சரிப்பா… நான் வச்சுடறேன். அம்மாகிட்ட கோபப்படாதீங்க” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அதன் பிறகு குவார்டசின் அருகிலேயே இருந்த ஒரு மெஸ்சில் காலை உணவையும் முடித்துக் கொண்டு, ஸ்டேஷனுக்கு பைக்கில் வந்து இறங்கினான்.

அவன் அங்கே வந்த பொழுது காவல் நிலையத்தில் ஒரே கூட்டமும் கூச்சலுமாக இருந்தது.

ஸ்டேஷன் வாசலில் ஒரு நடுத்தர வயது பெண்மணி ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்க, அவரை உடன் இருந்த பெண்கள் சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

இறுகிய முகம் மாறாமல் அதை எல்லாம் கவனித்தபடி உள்ளே சென்றவன், தனது இருக்கையில் அமர்ந்தான்.

அப்பொழுது வெளியே நின்றவர்களிடம் பேசிவிட்டு உள்ளே வந்தார் மூர்த்தி.

"இன்னைக்கு நாள் அமோகமா இருக்கும் போல!" என்று புலம்பியவாறே தனது இருக்கையில் அமர்ந்தவரிடம்,

"வெளியே என்ன ஒரே கூட்டமா இருக்கு?" என்று கேட்டான் அரண் செழியன்.

"ரவுடி ரவியை இன்னைக்கு விடிய காலையில யாரோ வெட்டி கொலை பண்ணிட்டாங்களாம் சார். அதான் அவன் சம்சாரம் வந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்குது" என்றார் மூர்த்தி.

அப்பொழுது, "சார்..." என்றபடி இருவர் ஒரு வக்கீலுடன் சேர்ந்து உள்ளே வந்தனர்.

"கம்ப்ளெயின்ட் எப்போ எடுப்பீங்க சார்? நாங்க ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கோம்" என்று அந்த வக்கீல் மூர்த்தியிடம் கேட்க,

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார். இன்ஸ்பெக்டர் வர்ற நேரம் தான்" என்றார் அவர்.

தனது இருக்கையில் அமர்ந்து சில கோப்புகளில் கவனம் செலுத்தியிருந்த செழியனைப் பார்த்த அந்த வக்கீலோ, "அதான் எஸ்.ஐ சார் இருக்காரே. அவர் கம்ப்ளெயின்ட் எடுத்துக்க மாட்டாரா?" என்று கேட்க, சட்டென நிமிர்ந்து பார்த்த செழியன் பின்னர் எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல், தனது வேலையில் கவனமாக இருந்தான்.

"செழியன் சார் இன்னைக்கு ட்யூட்டியில் இருந்து ரீலீவ் ஆகுறாரு. அதனால, அவரை தொந்தரவு செய்ய முடியாது. இன்ஸ்பெக்டர் சார் வரட்டும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!" என்று சொல்லி அவர்களை அமர வைத்தார் மூர்த்தி.

அதன் பிறகு இன்ஸ்பெக்டரும் வந்துவிட, ரவுடி ரவி கொலை கேஸ் குறித்தான விசாரணையில் அந்த காவல் நிலையம் பரபரப்பானது.


அன்று மாலை தனது எஸ். ஐ பணியில் இருந்து ரிலீவ் ஆன அரண் செழியனை அங்கு வேலை செய்த அனைத்து காவலர்களும் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ரத்னமோ, "எனக்கு தான் இனிமே கொஞ்ச நாளைக்கு ஒரு கை உடைஞ்சது  போல இருக்கும்!" என்று சொல்ல அவரிடம் சிரித்தபடியே கை குலுக்கி விடைபெற்றான் செழியன்.

நேர்மை தவறாமல் தைரியமாக யாரை வேண்டுமானாலும் எதிர்த்து நீதிக்காக குரல் கொடுக்கும் செழியனின் இந்தப் புதிய பயணம் எப்படி இருக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

அரணாய் வருவான்...

படிச்சுட்டு கமென்ட் பண்ணுங்க மக்கா. ஒரு நாள் விட்டு ஒருநாள் எபி போடுறேன். நன்றி♥

பிரியமுடன்,

சௌஜன்யா...


Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 5

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi - 6