Ongoing Novels

அரணாய் நீ வா! (பாகம் 2) - Epi 10

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 10 மூணாறில் இருந்து திரும்பி வந்ததும் முதல் வேலையாக , சுபத்ராவை பார்க்கச் சென்றாள் பார்கவி . அவளுக்காக சில பரிசுப் பொருட்களை வாங்கி வந்தவள் , அவளது வீடு தேடிச் சென்றாள் . அழைப்பு மணியை அவள் அழுத்தவும் , கதவை திறந்தார் சுபத்ராவின் தாய் தாமரை . பார்கவியைக் கண்டவர் , “ வாம்மா …” என்று அழைத்தாலும் , அவரது முகம் வாட்டமாக இருக்க , குழப்பமடைந்தாள் பார்கவி . உள்ளே சென்றவள் , “ என்னாச்சு ஆன்டி . ஏன் டல்லா இருக்கீங்க ?” என்று கேட்க , விக்கி அழ ஆரம்பித்து விட்டார் அவர் . பதறிப் போனவள் , “ ஐயோ ! என்னாச்சு ஆன்டி ? ஏன் அழறீங்க ?” என்று கேட்டவளிடம் , “ நம்ம சுபத்ரா …” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை . அவர் ஏங்கி ஏங்கி அழவும் , “ சுபத்ராவுக்கு என்னாச்சு ?” என்று கேட்டாள் . “ அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சும்மா !” என்ற தாமரையிடம் , “ ஆக்சிடென்டா ? எப்போ ? எப்படி ?” என்றபடி பதட்டமானாள் பார்கவி . “ இரண்டு நாள் முன்னாடி காலேஜூக்கு அவளோட டூ வீலர்ல கிளம்பிப் போனா … மதியம் எங்களுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் வந்தது . ஆக்சிடென்டுன

அரணாய் நீ வா - Epi 4

 அரணாய் நீ வா!


 

அத்தியாயம் – 4

பார்த்த உடனேயே பார்கவி இப்படி முகத்தில் அடித்தாற் போன்று தன்னிடம் பேசுவாள் என்று செழியன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவளது விழிகளை துளைக்கும் பார்வை பார்த்தபடி, “முதல் முறை பார்க்கறவங்க கிட்ட இப்படி தான் முகத்துல அடிச்ச மாதிரி பேசுவீங்களா? நான் மோதினது… இட்ஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட். அதுக்காக உங்ககிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். இதுக்கு மேலயும் உங்களுக்கு கோபம் போகலைன்னா… வாட் கேன் ஐ டு?” என்றான் தனது தோள்களை குலுக்கியபடி.

அவன் பேசியதை கேட்டவளுக்கு மேலும் கோபம் அதிகரிக்க, “வாட் கேன் ஐ டுன்னா! குடும்பமா என் முன்னாடி வந்து நின்னு மன்னிப்பு கேளுங்க. அப்போ வேணா என் கோபம் குறையுதா, உங்களை மன்னிக்கிறேனான்னு பார்க்கலாம்!” என்றாள்.

ஒரு கையை இடுப்பில் வைத்து, மறு கையின் விரலை நெற்றியில் தடவி யோசித்தவன், ‘சும்மா என்ன? நாளைக்கு குடும்பமா வெத்தலை பாக்கு தட்டோடவே உன்னை பார்க்க வர்றேன்!’ என்று நினைத்தபடி அவளிடம்,

“இப்போ நீங்க சொன்ன மாதிரி நடந்தா என்னை மன்னிச்சிருவீங்களா மேடம்!” என்று செழியன் கேட்க, புருவம் சுருக்கினாள் பார்கவி.

‘என்ன இவன்? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா குடும்பமா வந்து நிக்குறேங்குறான். ஆள் பார்க்க கெத்தா தானே இருக்கான். ஆனா, ஏன் இப்படி வெத்தா பிகேவ் பண்ணுறான்!’ என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவளது முகத்திற்கு முன்னால் சொடுக்கிட்டவன்,

“ஹலோ… மேடம்! நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலையே” என்றான்.

அப்பொழுது பார்கவியைத் தேடிக் கொண்டு அங்கே வந்தாள் ரம்யா.

“ஹேய் பாரூ… இங்க என்னடி பண்ணிட்டு இருக்க? உள்ளே நம்மளை க்ரூப் போட்டோ எடுக்க கூப்பிடுறாங்க… வா!” என்று அவளது கரம் பற்றி அழைக்க, செழியனை குழப்பமாகத் திரும்பி திரும்பிப் பார்த்தபடியே மண்டபத்திற்குள் சென்றாள் பார்கவி.

பேன்ட் பாக்கெட்டுக்குள் கைகளை நுழைத்தபடியே அவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்து நின்ற அரண் செழியனின் மனநிலை இதுவரை அவன் அனுபவித்திராத ஒரு புதிய உணர்வினை அவனுள் உருவாக்கி இருந்தது!

அதன் பிறகு உணவருந்துதற்காக அவன் சாப்பாட்டு அறைக்குச் சென்றுவிட்டான்.

செழியன் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் தனது தோழியருடன் அங்கு வந்தாள் பார்கவி.

அவனுக்கு எதிரே இருந்த பந்தி வரிசையில் அமர்ந்தவள் யதார்த்தமாக திரும்பி முன்னால் பார்க்க, அங்கு உணவருந்திக் கொண்டிருந்த செழியன், அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இவன் எதுக்காக நம்மளையே குறுகுறுன்னு பார்க்கறான்!’ என்று நினைத்தவள், அவனை கண்டு கொள்ளாதது போன்று உணவருந்தினாள்.

அப்பொழுது அஞ்சலியும் அவளது கணவனும் உணவருந்துவதற்காக அங்கு வந்தனர்.

செழியன் அமர்ந்திருந்த வரிசையில் இடம் காலியாக இருக்க, அவனருகே அவர்களும் அமர்ந்து கொண்டனர்.

அவர்களுடனே வந்த தயாளன், செழியன் அங்கே அமர்ந்து உணவருந்துவதைக் கண்டு புன்னகையுடன் அவனருகே சென்றார்.

“சாப்பாடெல்லாம் எப்படி இருக்கு செழியன்?” என்று அவர் கேட்க,

“டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு சார். சாப்பாடு கான்டிராக்ட் யாரு?” என்று அவரிடம் வினவினான்.

அவரும் அந்த கேட்டரிங் நிறுவனத்தின் விபரங்களை அவனிடம் கூறியபடி, “என்ன யங் மேன்? நீங்க எப்போ எங்களுக்கெல்லாம் கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?” என்று சிரித்தவாறே கேட்க,

“கூடிய சீக்கிரமே சார்” என்று பார்கவியிடம் பார்வை பதித்தபடியே கூறினான் அவன்.

“ம்ம்ம்… வெரி குட்!” என்ற தயாளன்,

“இன்ஸ்பெக்டரா வேற புரமோஷன் வாங்கியிருக்கீங்க. இந்த நல்ல நேரத்துல கல்யாணமும் கை கூடி வர எனது வாழ்த்துகள்!” என்றார்.

அவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என்பதால் இயல்பாகவே சற்று சத்தமாகப் பேசவும், அதைக் கேட்ட பார்கவிக்குத் தான் புறை ஏறியது.

‘என்னது இன்ஸ்பெக்டரா? இது தெரியாம அந்த ஆள்கிட்ட கன்னா பின்னான்னு பேசி தொலைச்சிருக்கோமே. அடியே பாரூ… உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லடி’ என்று நினைத்தபடி தனது இருமலை கட்டுப்படுத்த அரும்பாடு பட்டாள்.

அவளருகே அமர்ந்திருந்த ரம்யா, “பார்த்து பாரூ… இந்தா  தண்ணி குடி” என்று பார்கவிக்கு நீரை அருந்தக் கொடுத்தாள்.

அவளுக்கு எதனால் புறை ஏறியது என்பதை புரிந்து கொண்ட செழியனுக்கு உள்ளே சிரிப்பாக வர, முயன்று அதைக் கட்டுப்படுத்தியபடி உணவு உண்டான்.

உணவருந்தி முடித்து விட்டு கை கழுவி வந்தவன், தூரத்தில் நின்று பார்கவியைப் பார்த்து, ‘சீ யூ டுமாரோ!’ என்று நினைத்தபடி மனதால் அவளிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

அதன் பிறகு உணவருந்தி விட்டு வந்த பார்கவிக்கு உள்ளே ஏதோ செய்ய, விழிகளால் அந்த மண்டபம் முழுவதும் செழியனைத் தேடினாள்.

அவனை எங்கும் காணாமல் போக, கிளம்பிச் சென்று விட்டான் போலும் என்று நினைத்தவாறு அவளும் தனது ஒப்பனை பொருட்களை எடுத்துக் கொண்டு தனது தோழியரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

மறுநாள் காலை செழியனுக்கு உற்சாகமாக விடிந்திருக்க, பார்கவியின் வீடு தான் ஒரே கலவரமாக இருந்தது.

காலையில் எழுந்து ஹாலுக்கு வந்தவளிடம், “சீக்கிரமா குளிச்சு தயாராகும்மா!” என்றார் சுகுமார்.

“ஏன்பா? எல்லாரும் எங்கேயாவது வெளியே போகப் போறோமா?” என்று குழப்பத்துடன் அவள் கேட்ட வேளையில் நீலவேணியும், ஷாரதாவும் அங்கே வந்தனர்.

திரும்பி தனது மனைவியைப் பார்த்த சுகுமார், ‘நீயே சொல்லு!’ என்று கண்களால் ஜாடை பேச, அவரோ,

‘இல்ல… இல்ல… என்னால முடியாது. நீங்களே அவகிட்ட பேசுங்க’ என்று அவரும் விழிகளாலே அவருக்கு பதிலளித்தார்.

இதையெல்லாம் கவனித்த பார்கவியோ, “என்ன! இரண்டு பேரும் ஏதோ ரகசியம் பேசுறது போல தெரியுது!” என்று புருவம் சுருங்கக் கேட்டாள்.

“அ…து… வேற எதுவும் இல்லம்மா. உனக்கு ஒரு நல்ல இடத்துல இருந்து சம்பந்தம் வந்திருக்கு! இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றதா சொல்லியிருக்காங்க. அதான் உன்னை தயாராகச் சொன்னேன்” என்று தான் சொல்ல வந்த விஷயத்தை மகளிடம் கடகடவென கூறி முடித்தார் சுகுமார்.

அதைக் கேட்ட பார்கவியின் காதில் புகை வராத குறைதான்.

“யாரை கேட்டு இதையெல்லாம் முடிவு செஞ்சீங்க. நீங்க போடுற தாளத்துக்கெல்லாம் ஆடுறதுக்கு நான் என்ன நீங்க வளர்க்கிற ஆடா இல்ல மாடா?” என்று கோபத்தில் முகம் சிவக்கப் பேசினாள்.

அவளுக்கு பக்கவாட்டில் நின்றிருந்த ஷாரதாவோ, “நாலு நாள் சோறு போட்டா அந்த ஆடு மாடு கூட விசுவாசத்தோட, நாம சொன்ன பேச்சை கேட்கும்!” என்று எங்கோ பார்த்தபடி கூற,

வெடுக்கென தலையைத் திருப்பி அவளைப் பார்த்தவள், “என்ன மேடம்! என்னைப் பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்கா?” என்று கேட்டாள்.

இப்பொழுது தனது அக்காவின் முகத்தைப் பார்த்தவளோ, “கிண்டலும் இல்ல… சுண்டலும் இல்ல! உன்கிட்ட நம்ம அப்பா அப்படி என்ன கேட்டுட்டாங்க. பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு உன்னை தயாராக தானே சொன்னாங்க. அதுக்கு ஏன் இவ்வளவு கலாட்டா பண்ணுற?” என்றாள்.

“யாரு! நான் கலாட்டா பண்ணுறேனா? உன் பேச்சு அளவுக்கு மீறி போகுது சாரதா” என்று பார்கவி கூற,

“சாரதா இல்ல ஷாரதா!” என்று அந்த களேபரத்திலும் அவளை திருத்தினாள்.

“க்கும்… ரொம்ப முக்கியம்!” என்று முணுமுணுத்த பார்கவி,

“என்னால நீங்க சொல்றதை எல்லாம் செய்ய முடியாது” என்று கூறி கைகளை கட்டியபடி நின்றிருந்தாள்.

நீலவேணியோ எதுவும் பேசத் தோன்றாமல் மௌனமாகவே நின்றிருக்க, ஷாரதாவின் ரத்த அழுத்தம் தான் பல மடங்கு ஏறியது.

“என் இஷ்டத்துக்கு தான் நடப்பேன்… எனக்கு தோணுறதை தான் செய்வேன்னா… அப்புறம் இந்த வீடு எதுக்கு? குடும்பம் எதுக்கு!” என்று மூச்சு வாங்கப் பேசிவிட்டு சற்று இடைவெளி விட்டவள்,

“உன்னை மாதிரி ஒரு பக்கா சுயநலக்காரியை நான் பார்த்ததே இல்ல” என்றாள்.

அதைக் கேட்டதும் சட்டென தன் தங்கையைத் திரும்பிப் பார்த்த பார்கவி, “என்ன சொன்ன? சுயநலக்காரியா! நான் சுயநலக்காரியா?” என்று சற்றே குரல் கமற கேட்டாள்.

ஷாரதாவோ, “பின்ன… இல்லைன்னு சொல்றியா? பெத்தவங்களா தன் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நம்ம அப்பா அம்மா நினைக்குறதுல என்ன தப்பு இருக்கு? வர்ற மாப்பிள்ளைகளை பிடிக்கலைன்னு ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்குற!”

“அதுக்காக நாங்க உன்னை எப்படியோ போன்னு சொல்லி விட முடியுமா? நாலு இடம் பார்த்தா தானே ஒண்ணு நல்லதா அமையும். அட்லீஸ்ட் என்னை பத்தியாவது கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா? எனக்கும் கல்யாண வயசு தான். சொந்தக்காரங்க எல்லாம் நம்ம அம்மா அப்பாவை கேள்வி கேட்கிறப்போ அவங்க எவ்வளவு நொந்து போறாங்க தெரியுமா?” என்று நீளமாக பேசி முடித்தாள்.

ஷாரதா தனக்கும் திருமண வயதாகிறது; நானும் உனக்கு அடுத்தபடியாக மணம் முடிக்க காத்திருக்கிறேன் என்று வெளிப்படையாகவே சொன்னது பார்கவியின் மனதை ஏனோ பிசைந்தது.

இதுவரை தனக்குப் பிடிக்கவில்லை, அதனால் திருமணம் வேண்டாம் என்று நினைத்திருந்தவள், தன் தங்கையும் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற கோணத்தில் யோசிக்கவே இல்லை.

ஒருவேளை ஷாரதா சொன்னது போல தான் சுயநலக்காரி தானோ! என்று நினைத்து வருந்தியபடி ஓரிரு நொடிகள் மௌனமாக நின்றாள்.

அந்த வீடு முழுவதும் சத்தம் எதுவுமின்றி மௌனமாகவே இருக்க, அந்த மௌனத்தைக் கலைத்தது என்னவோ பார்கவி தான்.

ஷாரதாவிடம், “சொந்தக்காரங்க என்ன பேசுவாங்க, அப்படிங்கறதைப் பத்தி ஐ டோன்ட் கேர். ஆனா, எனக்கு பிறகு நீயும் கல்யாண வயசுல இருக்கேன்னு சொன்ன பார்த்தியா… அதுக்காக மட்டும் தான் இந்தப் பொண்ணு பார்க்கற விஷயத்துக்கு நான் சம்மதிக்குறேன்!” என்று கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்ட மூவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நீலவேணியோ விழிகளில் நீர் கோர்க்க நின்றிருக்க, அவரருகே சென்று அவரை ஆறுதல்படுத்திய ஷாரதா, “எல்லாம் நல்லபடியா நடக்கும்மா. நீங்க அடுத்து ஆக வேண்டியதைப் பாருங்க” என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டாள்.

அவளையே பார்த்து நின்ற நீலவேணி தன் கணவரிடம், “நம்ம ஷாரதா எவ்வளவு பொறுப்பான பொண்ணா இருக்கா! கூட பிறந்தவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எவ்வளவு மெனக்கிடுறா. அவளை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க” என்று தன் கணவரிடம் கூற, அவரது அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்தார்.

இங்கே இப்படி இருக்க, அரண் செழியனின் வீட்டில் அனைவரும் தயாராகி இருந்தனர்.

டக் இன் செய்த மெரூன் நிற சட்டையும், காக்கி நிற பேன்டும் அணிந்து கச்சிதமாக தயாராகி வந்த செழியனை மேலும் கீழுமாகப் பார்த்த இனியன், “ஏண்ணா… நீ காக்கி டச் இல்லாம ட்ரெஸ் பண்ணவே மாட்டியா?” என்று கேட்க,

கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடி, “ஏன்டா இந்த ட்ரெஸ் நல்லா இல்லையா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இல்லண்ணா. ட்ரெஸ் சூப்பரா இருக்கு. டைம் ஆச்சு. இப்போ கிளம்பி போனா தான் சரியா இருக்கும்!” என்றவன், ஷாரதாவிற்கு அழைத்து தாங்கள் கிளம்பி விட்டோம் என்கிற செய்தியைக் கூறினான்.

ஆதிரை செல்வி இரண்டு தெருக்கள் தள்ளி வசிக்கும் தனது அக்கா மரகதத்தையும் உடன் அழைத்திருக்க, ஐந்து பேரும்  காரில் ஏறி பார்கவியின் வீடு நோக்கிப் பயணித்தனர். 

பார்கவியின் வீட்டை அடைந்ததும் அவர்களை வாசலுக்கே வந்து வரவேற்றார் சுகுமார்.

அவர் பின்னாலேயே நீலவேணியும் வந்து, “வாங்க… வாங்க…” என்று சிரித்த முகமாக வரவேற்றார்.

வீட்டிற்குள் நுழைந்ததும் பார்வையால் ஒருமுறை வீட்டை சுற்றிப் பார்த்த மரகதம்,

“பரவாயில்லையே! வீட்டை மேலேயும் கீழேயுமா நல்ல விசாலமாத் தான் கட்டியிருக்காங்க. பொண்ணு குடும்பம் வசதியானவங்க தான் போல!” என்றார்.

“ஆமாக்கா… பொண்ணோட அப்பா நம்ம ஊரிலேயே பிரபலமான ஒரு ஹோட்டல் வச்சு நடத்திட்டு இருக்காராம். கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷமா இந்த ஹோட்டல் தொழிலை நடத்திட்டு வர்றதா நம்ம இனியன் சொன்னான்!” என்று அவரது காதில் ரகசியமாகக் கூறினார் ஆதிரை.

விசாலமான ஹாலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அனைவரும் அமர, அவர்களுக்கு பக்கவாட்டில் இருந்த ஒரு ஒற்றை நாற்காலியில் அமர்ந்தார் சுகுமார்.

இனியனோ விழிகளால் தன் காதலியைத் தேட, ஃபோனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த செழியன், “டேய்… பொண்ணு பார்க்க வந்திருக்கறது எனக்கு. ஞாபகம் இருக்கட்டும்!” என்றான்.

“அண்ணா… அதெல்லாம் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு. நம்ம அண்ணி எப்போ வருவாங்கன்னு தான் நானும் பார்த்துட்டு இருந்தேன்!” என்று சமாளித்தான்.

அங்கே சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய, அந்த மௌனத்தை கலைத்தது மரகதம் தான்.

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணை பார்த்துடலாமே!” என்று அவர் கூற, சுகுமார் தன் மனைவியிடம் பார்கவியை அழைத்து வரும்படி கூறினார்.

அவரும் ஒரு அறைக்குள் சென்று ஒரு சில நிமிடங்கள் கழித்து திரும்பி வர, அவருக்குப் பின்னால் பார்கவியும் அவளுடன் சேர்ந்து ஷாரதாவும் வந்தனர்.

மெஜென்டா நிற சில்க் காட்டன் சேலையில் அளவான ஒப்பனையுடன் அம்சமாக வந்து நின்றாள் பார்கவி.

அரண் செழியன் அவளையே சில நொடிகள் விழி விலக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், இன்னும் பார்கவி அவனை பார்த்திருக்கவில்லை.

இனியனோ யாரும் அறியாமல் ஷாரதாவைப் பார்த்து கண் சிமிட்ட, அவளோ அதிர்ந்து போய், அவனுக்கு மட்டுமே புரியும்படியான கண்டிப்பு பார்வையைச் செலுத்தினாள்.

பார்கவியைப் பார்த்த ஆதிரை செல்வி, “பொண்ணு பார்க்க அம்சமா இருக்கால்லக்கா. நம்ம செழியனுக்கு ஏத்த உயரத்துல, அவனுக்கேத்த வெயிட்ல அழகா இருக்கா!” என்று மரகத்தின் காதில் கிசுகிசுக்க,

“என்ன செல்வி! நீ ஏதாவது மிலிட்டரிக்கு ஆள் எடுக்கப் போறியா? உயரம், வெயிட்னு கணக்கு போட்டுட்டு இருக்க. பொண்ணு வெளியே பார்க்குறதுக்கு எப்படி இருக்காங்கறது முக்கியமில்ல. அவ குணம் எப்படி? நம்ம செழியனை அனுசரிச்சு போற அளவுக்கு சாமர்த்தியமும் பொறுமையும் உள்ள பொண்ணான்னு தான் பார்க்கணும்” என்று விவரமாகப் பேச, ஆதிரை செல்வியோ கிரிக்கெட்டில் டக்கவுட் ஆன பேட்ஸ்மேன் போன்று அமைதியாகி விட்டார்.

அப்பொழுது நீலவேணி ஜூஸ் நிரம்பிய கப்புகள் இருந்த தட்டுடன் அங்கே வந்தார்.

அதை தன் மகளிடம் கொடுத்து, “எல்லாருக்கும் குடும்மா!” என்று சொல்ல, யாரும் அறியாமல் தன் அன்னையை முறைத்தவள், அதை அவரிடமிருந்து பிடுங்காத குறையாக வாங்கினாள்.

அவளது இந்தச் செயல் முழுவதையும் செழியன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

தட்டுடன் வந்தவள், சண்முகநாதனிடம் இருத்து ஆரம்பித்து, வரிசையாக ஜூசை கொடுத்துக் கொண்டே வந்தாள்.

ஆதிரைக்கு அடுத்ததாக அமர்ந்திருந்த செழியனிடம் அவள் வந்த போது, “இவன் தான்மா என் பையன் அரண் செழியன். ஃபோட்டோவுல கூட பார்த்திருப்பியே! இப்போ நேரிலேயே உன் கண் முன்னாடி உட்கார்ந்திருக்கான். நல்லா பார்த்துக்கோ!” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு அவரிடம் ஒரு சிரிப்பை உதிர்த்தவள், அப்படியே திரும்பி செழியனை நோக்கினாள்.

அவனோ அர்த்தம் பொதிந்த பார்வையுடன் அவளைப் பார்த்து புன்னகைக்க, பார்கவியோ விழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்துவிடும் அளவிற்கு அதிர்ந்து போய் நின்றாள்.

நிஜமாகவே அவள் அரண் செழியனை அங்கு மாப்பிள்ளையாக எதிர்பார்க்கவே இல்லை.

சற்று நேரத்திற்கு முன்பு கூட, ஷாரதா, ‘மாப்பிள்ளை போட்டோ பார்க்குறியா?’ என்று கேட்ட பொழுதும் கூட, பெரிதாக விருப்பம் எதுவும் இல்லாமல் வேண்டாம் என்று பார்க்க மறுத்து விட்டாள்.

ஒருவேளை அப்பொழுதே அந்தப் புகைப்படத்தை பார்த்திருந்தால், ‘தப்பித்தது கடவுள் புண்ணியம்!’ என்று நினைத்து வீட்டின் பின் வாசல் வழியாக அந்த இடத்தை விட்டே ஓடிப் போயிருப்பாள் அவள்.

அதிர்ச்சி மாறாமல் நின்றவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது மரகதத்தின் குரல் தான்.

“என்னம்மா… எங்க செழியனை உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்கவும் அவரை திரும்பிப் பார்த்தவள், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக நின்றாள்.

சண்முகநாதனோ, “நம்ம பிள்ளைகளை அவசரப்படுத்த வேண்டாம் அண்ணி! முதல்ல இரண்டு பேரும் மனசு விட்டு பேசட்டும். அப்புறமா மற்றதை முடிவு பண்ணிக்கலாம்!” என்றபடி சுகுமாரிடம் திரும்பியவர்,

“என்ன சார் சொல்றீங்க?” என்று கேட்டார்.

“நீங்க சொல்றதும் சரிதாங்க. முதல்ல இரண்டு பேரும் மனசுவிட்டு பேசட்டும்” என்று பதிலளித்தவர், 

ஷாரதாவிடம் திரும்பி, “இரண்டு பேரையும் தோட்டத்துக்கு கூட்டிட்டு போ பாப்பா!” என்றார்.

அவளும் தன் தந்தை சொன்னதற்கு சரியென்று தலையாட்டியபடி பார்கவியை விழிகளால் வா என்றழைக்க, அங்கு வீணாக ஒரு காட்சியை உருவாக்க வேண்டாம் என்று கருதி, பல்லை கடித்தபடி ஷாரதாவை பின் தொடர்ந்து சென்றாள்.

செழியனிடம், “ஆல் த பெஸ்ட் அண்ணா!” என்று இனியன் கூற, அவனோ விழிகளை முடித் திறந்து அவனுக்கு பதிலளித்துவிட்டு தானும் தோட்டத்திற்குச் சென்றான்.

செழியன் வரவும் ஷாரதா அங்கிருந்து சென்றுவிட, பார்கவி தான் மொத்த கோபத்தையும் பதட்டத்தையும் குத்தகைக்கு எடுத்தவள் போன்று கைகளை கட்டியபடி நின்றிருந்தான்.

அவளுக்கு முன்பாக பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்து நின்றிருந்த செழியன், அவளது விழிகளைப் பார்த்தபடி, “நீங்க சொன்ன மாதிரியே குடும்பத்தோட உங்க முன்னாடி வந்து நின்னுட்டேன். இப்போ என்னை மன்னிச்சுட்டீங்க தானே!” என்று கேட்கவும்,

சட்டென, “மண்ணாங்கட்டி!” என்று அவனுக்கு பதிலளித்தாள் பார்கவி.

“மண்ணாங்கட்டி இல்லங்க! மன்னிப்பு. இங்க்லீஷ்ல கூட சாரின்னு சொல்லுவாங்களே! S.O.R.R.Y” என்று ஒவ்வொரு எழுத்தாக சொல்லி அவளுக்கு அவன் விளக்கம் கூற, பொறுமையிழந்து போனாள் அவள்.

“ஸ்டாப் இட்!” என்று அவனது முகத்திற்கு முன்னால் கரம் நீட்டி தடுத்தவள்,

“இன்னைக்கு நீங்க கல்யாணத்துக்காக பொண்ணு பார்க்க போற இடத்துல நான் தான் இருப்பேன்னு… நேற்றே உங்களுக்குத் தெரியுமா?” என்று அவனிடம் கேட்டாள்.

அவனும் அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்தபடி, “மிஸ்.பார்கவி… B.com, MBA முடிச்சுட்டு நைன் டு ஃபைவ் வேலையில் பெருசா ஈடுபாடு இல்லாததால, உங்க பேஷனான மேக்கப்பை புரொஃபஷனா மாத்திகிட்டு இப்போ freelance bridal makeup artist ஆஹ் இருக்கீங்க. ஆம் ஐ ரைட்?” என்று கேட்க, பார்கவியோ வாயடைத்து போனாள்.

‘எல்லாமே தெரிஞ்சு வச்சுட்டு தான் நேத்து நம்மளை வெறுப்பேத்தி இருக்கான்!’ என்று நினைத்தவள்,

“பரவாயில்லையே! என்னைப் பற்றி எல்லா விஷயமும் விவரமா தெரிஞ்சு வச்சிருக்கீங்களே” என்றவள்,

ஒரு இடைவெளிவிட்டு, “ஓஹ்… சாரி சாரி. நீங்க தான் போலீஸ்காரர் ஆச்சே! சோ இதுல நான் ஆச்சர்யப்படுறதுக்கு எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்” என்றாள் கோணலான நக்கல் சிரிப்புடன்.

அரண் செழியனும் புன்னகை ததும்பிய முகத்துடன், “பரவாயில்லை! உங்க சென்ஸ் ஆஃப் ஹியூமர் என் அளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு நல்லாவே இருக்கு!” என்று கூற,

“என்ன கிண்டலா?” என்றவள்,

“எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கறதுல சுத்தமா விருப்பம் இல்ல. சோ…” என்று இழுக்கவும்,

“சோ வாட்?” என்றான் அவன் புருவங்கள் சுருங்க.

“என்னை பிடிக்கலைன்னு நீங்களே உங்க வீட்ல சொல்லி இந்தக் கல்யாணப் பேச்சை நிறுத்திடுங்க!” என்றாள் எங்கோ பார்த்தபடி.

அதை கேட்டதும், “ஹலோ…” என்று அவளது முகத்திற்கு முன்பாக சொடுக்கிட்டவன்,

“உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா… நீங்க தான் இந்த விஷயத்தைப் பற்றி உங்க ஃபேமிலிகிட்ட பேசணும். ஆனா, என்னால நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் செய்ய முடியாது!” என்றான்.

அவளுக்கு அவனது பேச்சு எரிச்சலைக் கொடுக்க, “ஓ காட்! உங்களால புரிஞ்சுக்க முடியுதா இல்லையா. எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கல” என்று கிட்டத்தட்ட அவள் கத்தவும்,

“ஆனா, எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லைக் எவ்ரிதிங் அபௌட் யூ” என்றான் செழியன், கண்களில் காதல் தெறிக்கும் பார்வையுடன்.

அவ்வளவு நேரமும் வாய் ஓயாமல் பேசியவளை அவனது வார்த்தைகள் கட்டித் தான் போட்டன.

கல்லூரி காலத்தில் அவள் ஒருதலையாக அபிஷேக்கை காதலித்த போது தோன்றிய அதே பட்டாம்பூச்சி உணர்வு, மீண்டும் அவளுள் தோன்றி இம்சிக்க, அதிர்ந்தே விட்டாள்! 

‘என்ன பாரூ… அதுக்குள்ள இவன் மேல உனக்கு ஈர்ப்பு வந்திருச்சா என்ன?’ என்று நினைத்தபடி யோசனையிலேயே அவள் நின்றிருக்க,

“பார்கவி…” என்று அவளை அழைத்தான் செழியன்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளிடம், “உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயமும் நான் சொல்லணும்!” என்று கூற, என்னவென்று அவனிடம் கேட்டாள்.

“உங்க தங்கச்சியோட லவ் மேட்டர் பத்தி உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்!” என்று அவன் விஷயத்தை பட்டென போட்டு உடைக்க,

“வாட்?” என்று விழி விரித்தாள் அவள்.

அவளது முக பாவனையைக் கண்டு, “அப்போ… அவங்க உங்ககிட்ட எதுவும் சொல்லலையா?” என்று தாடையைத் தேய்த்து யோசித்தான் செழியன்.

அப்பொழுது பார்கவியின் மனதில் ஒரு சந்தேகம் எழ, “வெயிட் வெயிட்! என் தங்கச்சி லவ் பண்ணுற விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.

“ஏன்னா… உங்க தங்கச்சி லவ் பண்ணுறது என்னோட தம்பி இனியனைத் தானே!” என்று செழியன் கூற, அவளுக்கு ஒரு நொடி மூளை மரத்து போனது போலானது!

அரணாய் வருவான்…

கதைக்கு ஆதரவு தரும் அனைத்து தோழமைகளுக்கும் மிக்க நன்றி!

அடுத்த எபி வெள்ளி அன்று பதியப்படும்.

பிரியமுடன்,

சௌஜன்யா... 

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 5

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi - 6