Ongoing Novels
அரணாய் நீ வா! - Epi 6
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
அத்தியாயம் – 6
அன்று ஞாயிற்றுக்கிழமை…
காவல் ஆய்வாளாராக பொறுப்பேற்பதற்காக, அன்று திருநெல்வேலிக்கு கிளம்பி வந்திருந்தான் அரண் செழியன்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தான் அவன் பணியாற்ற இருக்கிறான்.
பேருந்தில் வந்து இறங்கியவன், அந்த ஊரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தோளில் தனது துணிகள் இருந்த பையை மாட்டியடி, அந்த ஊரின் முக்கியமான ஒரு தெருவில் நடந்து சென்றான்.
சுற்றிலும் மலைகளும், தென்னந்தோப்பு, வயல்வெளி, அதற்கு நடுவே குளங்கள் என்று இயற்கை எழிலுடன் அழகாக இருந்தது அவ்வூர்.
கிராமம் என்றோ அல்லது நகரம் என்றோ சொல்ல முடியாத, இரண்டிற்கும் இடையே ஒரு சின்ன டவுன் என்று சொல்லும் அளவிலான ஊர் தான் களக்காடு.
பெரும்பாலும் விவசாயம், சொந்த தொழில் செய்பவர்கள் தான் அங்கே அதிகம்.
அந்த நண்பகல் வேளையில் வெயில் சற்று அதிகமாக இருந்தாலும், சுற்றிலும் மலைகளும் மரங்களும் இருந்ததால், வீசிய லேசான குளிர்ந்த காற்று செழியனை வந்து மோதி, அவனுக்கு இதத்தை அளித்தது.
ஏனோ, அவனுக்கு பார்த்ததுமே அந்த ஊர் மிகவும் பிடித்து விட்டது!
மதிய வேளை நெருங்கி இருந்தாலும் அந்த ஊரில் இருந்த ஒரு டீக்கடைக்குச் சென்றான் செழியன்.
பெரும்பாலும் இது போன்ற டீக்கடைகளில் இருந்து, அந்த சுற்று வட்டாரத்தைப் பற்றிய தகவல்களை சுலபமாகத் தெரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணத்தில் தான் அவன் அங்கு சென்றது.
செழியன் சென்ற டீக்கடை இரண்டு ஜோடி டேபிள் நாற்காலியுடன் சற்று விசாலமாகவே இருந்தது.
அவன் சென்று ஒரு மேஜையில் அமரவும், “சார்! என்ன சாப்பிடுறீங்க?” என்று அங்கு பணியில் இருந்த ஒரு சர்வர் கேட்க, “ஒரு டீ!” என்றான்.
அவரும் ஆர்டரை சொல்ல, டீ மாஸ்டர் போட்டுக் கொடுத்த டீயை வாங்கி வந்து அவனிடம் கொடுத்த சர்வர், “வேற ஏதாவது வேணுமா சார்?” என்று கேட்க, வேண்டாம் என்று தலையசைத்தான் அவன்.
உள்ளே அமர்ந்து டீ குடித்தபடி சாலையில் நடப்பவற்றை கண்காணித்துக் கொண்டிருந்தான் அரண் செழியன்.
அப்பொழுது, அதே டீக்கடைக்கு இரண்டு இளைஞர்கள் டீ குடிக்க வந்தனர்.
அவர்களில் ஒருவன் மிகவும் கோபமாகக் காணப்பட்டான். இன்னொருவன் அவனை சமாதானம் செய்வது போல செழியனுக்குத் தோன்றியது.
இருவரையும் பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற, அமைதியாக அவர்களுக்கு சந்தேகம் வராத வண்ணம் அமர்ந்திருந்தான்.
அப்பொழுது அந்த டீ கடைக்கு மற்றொரு நடுத்தர வயது இளைஞன் வந்தான்.
வந்தவன் நேராக, அந்த இருவரையும் நோக்கி தான் சென்றான்.
“என்னடா பிரச்சனை உனக்கு? ஒருமுறை சொன்னா புரியாதா. வீணா என் தங்கச்சி விஷயத்துல குறுக்கே வராத!” என்று புதிதாக வந்தவன் பேச ஆரம்பித்ததுமே, மற்றவர்களில் ஒருவன் தனது இடையில் கை வைத்தான்.
அந்த இடம் கனமாக இருக்க, அடுத்து நடக்கப் போவதை உணர்ந்து சுதாரித்த செழியன், தனது அலைபேசியில் இருந்து களக்காடு காவல் நிலைய ஹெட் கான்ஸ்டபிளுக்கு அழைத்தான்.
“சார்!” என்று மறுபுறம் குரல் கேட்கவும், “ஏட்டய்யா! உடனே நம்ம பஸ் ஸ்டான்டுக்கு பக்கத்துல இருக்கற டீ கடைக்கு ஸ்டேஷன் வண்டியில கிளம்பி வாங்க. அப்படியே உங்க கூட துணைக்கு இரண்டு பேரையும் கூட்டிட்டு வாங்க!” என்றான் செழியன்.
“ஏதாவது பிரச்சனையா சார்?” என்று கேட்டவரிடம்,
“பிரச்சனை ஆகும் போல தான் தெரியுது. சீக்கிரமா வாங்க!” என்றான் அவன்.
அவரும் சரியென்று சொல்லி அழைப்பை துண்டிக்க, செழியன் தான் குடித்து முடித்த டீ கப்பை மேஜையில் வைத்தான்.
அவர்கள் மூவருக்கும் வாக்குவாதம் வலுக்க, அவன் கணித்தது போலவே, தனது இடையில் சொருகி வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்தான் ஒருவன்.
“உன்னை இன்னைக்கு நான் கொல்லாம விட மாட்டேன்டா!” என்றபடி மற்றவனை நோக்கி அவன் பாய்ந்து வர, மின்னல் வேகத்தில் அவனது கையை வளைத்து அவனது முதுகிற்கு பின்னால் திருகி, கத்தியையும் அவனிடமிருந்து பறித்து, அவனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான் செழியன்.
“டேய்! என்னை விடுடா. யாருடா நீ?” என்று செழியனின் பிடியில் இருந்தவன் கேட்க,
“ம்ம்ம்… உன் அப்பன்டா!” என்றான்.
தொடர்ந்து அவன் செழியனின் பிடியில் இருந்து தப்பிக்கப் போராடவும், அவனது நண்பன் செழியனை தாக்க வந்தான்.
அதையும் சரியாக கணித்தவன் குனிந்து கொள்ள, அவனோ நிலைதடுமாறி கீழே விழுந்தான்.
அந்தக் கடையில் சர்வரும், டீ மாஸ்டரும் பயத்துடன் நடப்பதை பார்த்துக் கொண்டு நிற்க, “என்ன பார்த்துட்டே இருக்கீங்க? முதல்ல இவனை பிடியுங்க” என்றான் செழியன்.
அவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து நின்ற வேளையில், காவல்துறை வாகனம் அந்தக் கடையின் முன்பு வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய இரண்டு போலீசார் உள்ளே வரவும், அவர்களைக் கண்டு மற்ற இருவரும் தப்பித்து ஓடப் பார்த்தனர்.
சரியாக அந்த நேரத்தில் அவர்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் இரு போலீசாரும்.
“மூணு பேரையும் வண்டியில ஏத்துங்க!” என்று செழியன் கூற, அவர்களும் அவன் சொன்னபடியே செய்தனர்.
டீ கடை மாஸ்டர், “சார் யாரு?” என்று ஹெட் கான்ஸ்டபிள் சுயம்புலிங்கத்திடம் கேட்க,
“சார் தான் நம்ம ஸ்டேஷனுக்குப் புதுசா வந்திருக்கற இன்ஸ்பெக்டர்!” என்றார் அவர்.
அதை கேட்டதும் பயத்தில் எச்சில் விழுங்கியவர் அரண்டு போய் செழியனைப் பார்க்க, “இங்கே நடந்த பிரச்சனை சம்பந்தமா விசாரணைக்கு கூப்பிட்டா, நீங்க இரண்டு பேரும் ஸ்டேஷனுக்கு வரணும்!” என்றான் அவன்.
“சரிங்க சார்” என்று அவர்கள் கூற, பிடிபட்ட மூன்று பேருடனும், அந்த வாகனம், காவல் நிலையம் நோக்கிப் பயணித்தது.
ஸ்டேஷனுக்கு மூவரும் அழைத்து செல்லப்பட, சுயம்புலிங்கம் அவசரமாக காவல் நியைத்திற்குள் சென்று, “இன்ஸ்பெக்டர் சார் வர்றாங்க!” என்று அனைவரையும் உஷார் படுத்தினார்.
செழியன் உள்ளே வரவும், அங்கே அப்படி ஒரு பேரமைதி நிலவியது.
அனைவரும் மரியாதை நிமிர்த்தமாக எழுந்து நின்று செழியனுக்கு சல்யூட் அடிக்க, ஒரு சிறு தலை அசைவுடன் அதை ஏற்றுக் கொண்டான் அவன்.
சுயம்புலிங்கத்திடம் கூட, அவன் சிலமுறை ஃபோனில் பேசியிருக்கிறானே தவிர, நேரில் இப்பொழுது தான் பார்க்கிறான்.
அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தவன், “மூணு பேரையும் கூட்டிட்டு வாங்க!” என்றான்.
அவர்களும் அழைத்து வரப்பட்டு அவன் முன்பு நிறுத்தப்பட, “உங்க மூணு பேருக்கும் நடுவுல என்ன தகறாரு?” என்று விசாரிக்க ஆரம்பித்தான், அரண் செழியன்.
மூவருமே ஒன்றும் பேசாமல் அமைதியாக நிற்க, “என்ன தகறாருன்னு சொன்னீங்கன்னா… அதுக்கேத்த மாதிரி சுமூகமா விசாரணை நடக்கும். இல்லையா…. அட்டெம்பட் டு மர்டர், பப்ளிக் நியூசென்ஸ், அசால்ட், வயலன்சுன்னு இருக்குற மொத்த கேசையும் மூணு பேர் மேலேயும் போட்டு வெளியே வர முடியாத அளவுக்கு உள்ளே தள்ளிடுவேன்!” என்றான்.
அதைக் கேட்டதும் அவர்களை பயம் கவ்விக் கொள்ள, அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான்.
“சார்! நான் நடந்ததை எல்லாம் சொல்லிடுறேன் சார். ஆனா, இவங்க முன்னாடி என்னால பேச முடியாது” என்று அவன் கூற, சரியென்று தலையசைத்தவன், அவனை ஆய்வாளருக்காக ஒதுக்கப்படிருந்த தனது தனியறைக்கு அழைத்துச் சென்றான்.
தனது இருக்கையில் அமர்ந்தவன், “சொல்லு… உங்க மூணு பேருக்கும் என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
“சார்… என் தங்கச்சி ஆர்ட்ஸ் காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கிறா. இந்த இரண்டு பசங்களும் அவ காலேஜ் பக்கத்துல இருக்கற ஒரு பாலிடெக்னிக் காலேஜ்ல தான் படிக்குறாங்க. என்னை கத்தியால குத்த வந்தான்ல சார், அவன் என் தங்கச்சியை லவ் பண்ணுறேன்னு சொல்லி தினமும் டார்சர் பண்ணுறான். காலேஜூக்கு போகும் போதும், வரும் போதும் ரொம்ப தொந்தரவு செய்யுறான்னு என் தங்கச்சி வந்து என்கிட்ட அழுதுச்சு” என்று அவன் பேசப் பேச அனைத்தையும் மனதில் குறித்துக் கொண்டான் செழியன்.
“அதை கேட்டதும் மறுநாளே, அவனை சந்திச்சு என் தங்கச்சியை தொந்தரவு செய்ய கூடாதுன்னு சொல்லி அவனை எச்சரிச்சேன். ஆனா, அவன் அதை கேட்குற மாதிரி தெரியல. தொடர்ந்து என் தங்கச்சிக்கு தொல்லை கொடுத்துட்டே இருந்தான்”
“நேத்து அவளை வழிமறிச்சு, உனக்குத் தெரியாம உன்னை அசிங்கியமா ஃபோட்டோ, வீடியோ எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்னு மிரட்டினான். அது பொய்ன்னு எனக்கு தெரிஞ்சாலும், அது சம்பந்தமா கடைசியா ஒருமுறை அவனை எச்சரிக்கை பண்ணணும்னு தான் அந்த டீ கடைக்கு அவனை வரச் சொன்னேன். வேற எதுவும் இல்ல சார்!” என்று அனைத்தையும் கூறி முடித்தான் அவன்.
“நீ சொல்றதெல்லாம் உண்மை தானா?” என்று அரண் செழியன் சந்தேகப் பார்வையுடன் கேட்க,
“நூறு சதவீதம் உண்மை சார்! என் தங்கச்சி விஷயத்துல நான் பொய் சொல்ல மாட்டேன் சார்!” என்றான் அவன்.
“சரி! நீ போகலாம்” என்றவன், மற்ற இருவரையும் தனது அறைக்கு அழைத்து பேசினான்.
“உன் பெயர் என்ன?” என்று கத்தி வைத்திருந்தவனிடன் செழியன் கேட்க,
“மணிகண்டன் சார்!” என்றான் அவன்.
“உன் ஃபோனை அன்லாக் பண்ணி குடு” என்று செழியன் கூற, அவன் தனது நண்பனை பார்த்தபடி திருதிருவென முறைத்து நின்றான்.
“அங்க என்னடா பார்வை. நான் சொன்னதை செய்!” என்று கர்ஜனையான குரலில் அவன் பேச, மணிகண்டனுக்கு பயம் உச்சத்தைத் தொட்டது.
தனது சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசியை லாக் நீக்கி அரண் செழியனிடம் நீட்டினான்.
“சார்!” என்றவனை செழியன், பார்வை நிமிர்த்தி முறைக்கவும், வாயை கப்சிப்பென்று மூடிக் கொண்டான் அவன்.
அந்த அலைபேசியை ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆராய்ந்த செழியன், அதிலிருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து, “இது தான் அவனோட தங்கச்சியா?” என்று கேட்க, அவன் ஆமாம் என்று தலையசைத்தான்.
முதலில் பேசியவன் சொன்னது போல, அந்த அலைபேசியில் அப்பெண்ணின் தவறான புகைப்படங்கள் எதுவும் இருக்கவில்லை.
“இந்தப் பொண்ணை அசிங்கியமா ஃபோட்டோ எடுத்து வச்சிருக்கறதா மிரட்டுனியாமே?” என்ற செழியனிடம்,
“இல்ல சார் அது… அவ என்னை லவ் பண்ணலைன்னு சொன்ன கோபத்துல சும்மா அவளை மிரட்டுறதுக்காக சொன்னது சார்!” என்றவனை கோபமாக முறைத்தான் அரண் செழியன்.
“ஒரு பொண்ணை ப்ளாக் மெயில் பண்ணி மிரட்டி பணிய வச்சா, உடனே அவ லவ் பணணிடுவான்னு எவன்டா உனக்கு சொன்னது?” என்றான் கர்ஜனையாக.
மணிகண்டனுடன் நின்ற அவனது நண்பனிடம், “நீ என்ன இவனுக்கு துடுப்பா? உன் ஃபிரண்டு தப்பு பண்ணா, நீயும் அவன் கூட கூட்டு சேர்ந்து ரவுடியிசம் பண்ணுவியா?” என்றவன் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தபடி,
“தொலைச்சுருவேன்!” என்று அவர்களை விரல் நீட்டி எச்சரித்தான்.
“சார்… சார்… தயவு செஞ்சு எங்க மேல கேஸ் எதுவும் போட்டுராதீங்க சார். இனிமே அந்தப் பொண்ணு இருக்கற பக்கம் கூட தலை வச்சு படுக்க மாட்டோம்” என்று மணிகண்டன் கூற, வெளியே நின்றிருந்த அந்தப் பெண்ணின் அண்ணனை உள்ளே வரும்படி அழைத்தான் செழியன்.
“இவங்க மேல கம்ப்ளையின்ட் குடுக்குறியா?” என்று அவன் கேட்க, சில நொடிகள் யோசித்தவன்,
“இல்லை சார்! வேண்டாம். நான் இவங்க மேல கம்ப்ளையின்ட் எதுவும் கொடுக்க விரும்பல” என்றான்.
செழியனோ சிறு யோசனைக்குப் பிறகு, “ஏட்டய்யா!” என்று அழைக்க, சுயம்புலிங்கம் அந்த அறைக்குள் வந்தார்.
“சொல்லுங்க சார்!” என்றவரிடம்,
“இந்தப் பசங்களோட பேரன்ட்சை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க. அது வரைக்கும் இரண்டு பேரும் இங்கேயே இருக்கட்டும்!” என்று செழியன் கூற, அவர் இருவரையும் அழைத்துச் சென்று அங்கிருந்த இருக்கையில் இருவரையும் அமர வைத்தார்.
இடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்கு அழைத்து தான் நல்லபடியாக வந்து சேர்ந்த தகவலையும் தெரிவித்தான் செழியன்.
பின்னர் அந்த இளைஞர்களின் தந்தைகளும், அவர்களுடன் சேர்ந்து மூன்று பேரும் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
செழியனைப் பொறுத்தவரை அவன் உயர்ந்த பதவியில் இருந்தாலும், வீணாக யாரையும் காத்திருக்க வைக்க மாட்டான்.
தனது வேலைகளை சீக்கிரமே செய்து முடிக்க வேண்டும் என்பதே எப்பொழுதும் அவனது எண்ணமாக இருக்கும்.
“இரண்டு பேரோட பேரன்ட்சையும் வரச் சொல்லுங்க!” என்று சுயம்புவிடம் அவன் கூற, அவர்கள் செழியனின் அறைக்குள் அனுப்பபப்பட்டனர்.
அவர்களது மகன்கள் செய்த தவறை விளக்கமாக எடுத்து கூறியவன், “படிக்கற பசங்க, அவங்க வாழ்க்கை வீணா போயிர கூடாதேங்கற ஒரே காரணத்துக்காக தான் இரண்டு பேர் மேலேயும் கேஸ் போடாம விடுறேன். ஆனா, இதுவே தொடர்கதை ஆச்சுன்னா… அப்புறம் என் கையில எதுவும் இல்ல!” என்றார்.
“மன்னிச்சிருங்கய்யா… இனிமே எங்க பசங்க எந்த தப்பும் பண்ணாம நாங்க பார்த்துக்கறோம்” என்று அவர்கள் அங்கீகாரம் அளிக்க, எழுந்து முன்னறைக்குச் சென்றவன்,
“இவங்க மூணு பேர்கிட்டேயும் ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிட்டு அனுப்பி வையுங்க!” என்று ஹெட் கான்ஸ்டபிளிடம் கூறினான்.
பின்னர், “நீ வாரா வாரம் சனிக்கிழமை தவறாம ஸ்டேஷனுக்கு வந்து சைன் பண்ணிட்டு போகணும்” என்று மணிகண்டனிடம் கூற, அவனும் சரியென்று தலையசைத்தான்.
அவன் பயன்படுத்திய கத்தி மேஜை மீதிருக்க, அதைக் கண்டவன், “பேனா பிடிக்கற கை… கத்தியைப் பிடிக்கலாமா? இனிமே ஜாக்கிரதையா நடந்துக்கோ!” என்றவன் ஒரு வழியாக மூன்று பேரின் பிரச்சனையையும் முடித்து அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
சோர்வாகக் காணப்பட்டவனிடம், “டீ சொல்லட்டுமா சார்!” என்று சுயம்புலிங்கம் கேட்க,
“வேண்டாம்! நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றபடி எழுந்தான்.
பின்னர் செழியனும், சுயம்புலிங்கமும் ஸ்டேஷன் வாகனத்தில் ஏறி செழியனின் வீட்டிற்குச் சென்றனர்.
அவன் தங்குவதற்கான வீட்டை சுயம்பு தான் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.
செழியனின் வீடு, மற்ற அதிகாரிகள் தங்கியிருக்கும் குவாட்டர்சில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் டவுனை ஒட்டி இருந்தது.
நடுமுற்றத்துடன், பராமரிப்பு செய்யப்பட்டு அழகாக இருந்தது அவ்வீடு. ஓட்டு வீடு என்பதால் பழமை மாறாமல், அதே சமயம் எல்லா வசதிகளுடனும் இருந்தது.
வீட்டை சுற்றிப் பார்த்தபடியே நடந்து சென்றவனிடம், “வீடு பிடிச்சிருக்கா சார்?” என்று சுயம்பு கேட்க,
“ம்ம்ம்… வீடு ரொம்ப நல்லா இருக்கு ஏட்டய்யா! மனசுக்கு நெருக்கமா… என்னமோ என் சொந்த வீட்டிலேயே இருக்கற மாதிரி உணர்வை தருது” என்றான் புன்னகையுடன்.
“இன்னைக்கு மட்டும் சாப்பாடு ஹோட்டல்ல இருந்து வாங்கிக்கலாம் சார். நாளையில் இருந்து பக்கத்துலேயே ஒரு அம்மாகிட்ட சாப்பாடுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். அவங்க சமைச்சு கொடுத்து விடுவாங்க!” என்று அவர் கூற, செழியன் சரியென்று தலையசைத்தான்.
அதன் பிறகு அவரும் செழியனுக்கு உணவு வாங்கி வந்து கொடுத்து சென்றுவிட, அவன் உண்டு முடித்து ஓய்வெடுப்பதற்காகக் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
ஏதோ யோசனையுடன் இருந்தவன், ஒன்று தோன்றவும் தனது அலைபேசியை எடுத்து பார்கவிக்கு அழைத்தான்.
முதல் ரிங் முழுதாக போய் கட் ஆனது. இரண்டாவது முறை முயன்ற பிறகும் அவனது அழைப்பு ஏற்கப்படவில்லை.
ஒருவேளை வேலையில் எதுவும் பிசியாக இருக்கிறாளோ என்று நினைத்தவன், அவளது எண்ணுக்கு,
‘ஹாய் பாரூ பிசியா? 🤔’ என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
சில நிமிடங்களிலேயே, ‘என்னது பாரூ வா!🤨 யாரு நீங்க?’ என்று அவள் பதில் அனுப்ப,
‘நான் செழியன்😊’ என்று பதில் அனுப்பி வைத்தான் அவன்.
அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்த பிறகும் அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, பார்கவியின் எண்ணுக்கு அழைத்து விட்டான்.
பாதி ரிங் போனதும் எடுத்தவள், “ஹலோ!” என்றாள்.
குரலில் பெரிதாக எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாத சம்பிரதாயமான ஒரு ஹலோ அது!
“ஹலோ… நான் செழியன் பேசுறேன்!” என்றவனிடம்,
“ம்ம்ம்… தெரியுது” என்றாள் அதே உணர்ச்சிகள் வெளிப்படுத்தாத குரலில்.
‘மேடமை நம்ம வழிக்கு கொண்டு வர்றது கொஞ்சம் கஷ்டம் தான் போல’ என்று நினைத்தவன்,
“நான் திருநெல்வேலிக்கு வந்துட்டேன்” என்று கூற,
“ம்ம்ம்… சரி” என்றாள்.
“நாளைக்கு அஃபிஷியலி இன்ஸ்பெக்டரா பொறுப்பேத்துக்க போறேன்” என்று அவன் சொன்னதற்கும்,
“ம்ம்ம்…” என்கிற பதில் தான் வந்தது.
“வேலையில பிசி ஆயிட்டேன்னா… அப்புறம் இப்படி அடிக்கடி ஃபோன்ல பேசிக்க முடியாது”
“ம்ம்ம்…”
“நீ ம்ம்ம்… ம்ம்ம்னு பதில் சொல்றதை வச்சு பார்க்கறப்போ உனக்கு ஏதோ வாயில அடிப்பட்டிருக்குன்னு தோணுது”
“ம்ம்ம்…”
“அடிப்பட்ட இடத்துல மருந்து போட்டு சீக்கிரமா சரி பண்ணிடாத. ஏன்னா… நீ நார்மலா பேசுறதை விட, இப்படி ம்ம்ம் கொட்டுறதை கேட்கறது தான் என் காதுக்கு இதமா இருக்கு!” என்றவனிடம்,
“ம்ம்ம்…” என்றவள் மறுநொடியே,
“என்ன? என்ன சொன்னீங்க?” என்றாள் காட்டமான குரலில்.
அதைக் கேட்டதும் அரண் செழியன் சத்தமாக சிரித்துவிட, பார்கவி தான் மொத்த கோபத்தையும் விலைக்கு வாங்கியிருந்தாள்.
“என்ன மிஸ்டர்? என்னை வம்பு இழுக்கறதுக்காக தான் ஃபோன் பண்ணீங்களா?” என்றவளிடம்,
“உன்னோட இந்த மிஸ்டர் செழியன், உன்னை வம்பு இழுக்காம, வேற யாரை இழுக்கப் போறேன்!” என்று சட்டென அவனிடமிருந்து பதில் வந்தது.
ஆனால், அதைக் கேட்ட பார்கவிக்கு தான், அதே டெய்லர்! அதே வாடகை! என்பது போன்று மீண்டும் உள்ளே அதே பட்டர்ஃப்ளைகள் பறக்கும் உணர்வு தோன்றியது!
‘ச்ச… இவர்கிட்ட பேசும் போது மட்டும் நமக்கு ஏன் இப்படி வியர்டா ஃபீல் ஆகுது?’ என்று நினைத்தவள்,
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் ஃபோனை வச்சுடறேன்!” என்று கூறிவிட்டு அவனது பதிலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.
செழியனுக்கு அவளது செயலைக் கண்டு உதட்டோரம் புன்முறுவல் பூத்ததே தவிர, கோபம் எதுவும் வரவில்லை.
இப்படியாக, புதிய ஊரில் குடியேறியது, பார்கவியை வெறுப்பேற்றி அவளுடனான தனது உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது என்று அந்த நாளை ஒரு வழியாக நிறைவு செய்திருந்தான் அரண் செழியன்.
அரணாய் வருவான்…
இந்தக் கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
- Get link
- X
- Other Apps
Comments
Police appappo romance um pannraan yenna onnu opposite co operation thaan sari ella 😛😛😛
ReplyDelete😂🤣சரியா சொன்னீங்க கா♥
DeleteInteresting
ReplyDelete