Ongoing Novels

அரணாய் நீ வா! (பாகம் 2) - Epi 10

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 10 மூணாறில் இருந்து திரும்பி வந்ததும் முதல் வேலையாக , சுபத்ராவை பார்க்கச் சென்றாள் பார்கவி . அவளுக்காக சில பரிசுப் பொருட்களை வாங்கி வந்தவள் , அவளது வீடு தேடிச் சென்றாள் . அழைப்பு மணியை அவள் அழுத்தவும் , கதவை திறந்தார் சுபத்ராவின் தாய் தாமரை . பார்கவியைக் கண்டவர் , “ வாம்மா …” என்று அழைத்தாலும் , அவரது முகம் வாட்டமாக இருக்க , குழப்பமடைந்தாள் பார்கவி . உள்ளே சென்றவள் , “ என்னாச்சு ஆன்டி . ஏன் டல்லா இருக்கீங்க ?” என்று கேட்க , விக்கி அழ ஆரம்பித்து விட்டார் அவர் . பதறிப் போனவள் , “ ஐயோ ! என்னாச்சு ஆன்டி ? ஏன் அழறீங்க ?” என்று கேட்டவளிடம் , “ நம்ம சுபத்ரா …” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை . அவர் ஏங்கி ஏங்கி அழவும் , “ சுபத்ராவுக்கு என்னாச்சு ?” என்று கேட்டாள் . “ அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சும்மா !” என்ற தாமரையிடம் , “ ஆக்சிடென்டா ? எப்போ ? எப்படி ?” என்றபடி பதட்டமானாள் பார்கவி . “ இரண்டு நாள் முன்னாடி காலேஜூக்கு அவளோட டூ வீலர்ல கிளம்பிப் போனா … மதியம் எங்களுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் வந்தது . ஆக்சிடென்டுன

அரணாய் நீ வா - Epi 10

 அரணாய் நீ வா!


 

அத்தியாயம் – 10

பார்கவி மற்றும் அவளது நண்பர்கள் தங்கியிருக்கும் தோட்டத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் நால்வரும்.

இனியன் – ஷாரதா ஜோடிக்குப் பின்னாலேயே செழியன் மற்றும் பார்கவியும் வந்து விட நான்கு பேரும் சேர்ந்து அங்கு சென்றனர்.

தென்னை, வாழை, பலாமரம் என்று ரம்மியமான எழில் கொஞ்சும் ஒரு அழகிய தோப்பிற்கு நடுவே தான் அந்த வீடு அமைந்திருந்தது.

நான்கு குடும்பங்கள் தங்கும் அளவிலான விசாலமான வீடு அது!

அந்த வீட்டின் உரிமையாளர் வேறு ஊருக்கு குடிபெயர்ந்து விட்டதால், இந்தத் தோட்டத்து வீட்டை வேலைக்கு ஆட்கள் வைத்து பராமரித்து, அதை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவது வழக்கம்.

தெரிந்தவர் ஒருவர் வழியாக, மல்லிகாவின் கணவன் தான் இந்த வீட்டை இரண்டு நாட்களுக்கு புக் செய்திருந்தான்.

நான்கு பேரும் அங்கே வரவும், வீட்டிற்கு பக்கவாட்டில் இருந்த ஒரு காலி இடத்தில் விறகுகளைக் குவித்து தீ போட்டு, கேம்ப் ஃபையர் வைத்திருந்தனர்.

அதை சுற்றி அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இவர்கள் வருவதைக் கண்டதும்,

“ஹாய்… வாங்க வாங்க!” என்றபடி ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.

மல்லிகாவின் கணவன் அர்ஜூன் எழுந்து சென்று, “நைஸ் மீட்டிங் யூ சார்!” என்றபடி அரண் செழியனுடன் கை குலுக்க, அவனும் சிரித்த முகமாக அவனுடன் கை குலுக்கினான்.

மரியாதை மார்கமாக மற்றவர்கள் எழுவதைக் கண்டதும், “ப்ளீஸ்… எல்லாரும் உட்காருங்க. நான் இங்கே ஒரு போலீஸ் ஆஃபிசரா வரல. உங்களில் ஒருவனா தான் வந்திருக்கேன்” என்றான் செழியன்.

அதைக் கேட்டதும் அனைவரும் சிரித்தபடி அமர, ‘பாருடா… சாருக்கு மரியாதை எல்லாம் பலமா தான் இருக்கு!’ என்று நினைத்தாலும், அந்த நேரத்தில் செழியனைப் பார்த்து பார்கவிக்கு பெருமையாகவே இருந்தது.

குழந்தைகள் வீட்டிற்குள் உறங்க, வெளியே பெரியவர்கள் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

“கைஸ்!” என்றபடி எழுந்த அர்ஜூன்,

“புதுசா கல்யாணமான நம்ம அஞ்சலி – சரவணன் ஜோடிக்கும், அடுத்து கல்யாணமாகப் போற நம்ம ப்ரெண்ட்சுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள்” என்றபடி ஒரு ஷாம்பெயின் பாட்டிலை கையில் எடுத்தான்.

“சார்! இஃப் யூ டோன்ட் மைன்ட்” என்று செழியனைப் பார்த்து அவன் கேட்க,

“நோ ப்ராப்லம். கோ அஹெட்” என்றான் செழியன்.

அதன் பிறகு அர்ஜூன் அந்த ஷாம்பெயின் பாட்டிலை குலுக்கித் திறக்கவும், அந்த பானம் நுரை பொங்கி பீய்ச்சி அடித்தது.

அனைவரும் பலத்த கரகொலி எழுப்ப, அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

பார்ட்டியில் மது அருந்த விரும்பியவர்கள் தனியாக எழுந்து செல்வதைக் கண்டதும்,

"அது… உங்களுக்கும் குடிக்கணும்னு தோணிச்சுன்னா” என்று சிறு இடைவெளி விட்டவள், “எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல” என்று சற்று தயக்கத்துடனே செழியனிடம் கூறினாள் பார்கவி.

அவனோ அவளை இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தபடி, “பொண்டாட்டின்னா… புருஷனுக்கு நல்லது சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ என்ன! அதுக்கு ஆப்போசிட்டா பேசுற?” என்றான் செழியன்.

அவனது நெருக்கம் தந்த சிலிர்ப்பை மறைத்தபடி, “பொண்டாட்டியா? நமக்கு தான் இன்னும் கல்யாணம் ஆகலையே!” என்றவளிடம்,

“அப்போ நீ எந்த உரிமையில என்கிட்ட குடிக்கணுமான்னு கேட்ட?” என்றான் அவன், அவளைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தபடி.

“அது…” என்றபடி தனது நெற்றியோரம் பறந்த கூந்தலை காதிற்கு பின்னால் ஒதுக்கி விட்டவளுக்கு வெட்கப்படுவதை தவிர, வேறொன்றும் செய்ய முடியவில்லை.

“நல்லா கேட்டுக்கோ பாரூ… ஐ டோன்ட் ட்ரிங்க். தண்ணி, தம்முன்னு எந்தப் பழக்கமும் எனக்கு கிடையாது” என்றவன்,

“மேடம் எப்படி?” என்று புருவம் உயர்த்தி அவளிடம் கேட்கவும்,

சட்டென நிமிர்ந்தவள், “என்ன?” என்றபடி அதிர்ந்து விழித்தாள்.

“இல்ல… இப்போ நிறைய பொண்ணுங்க இதையெல்லாம் சகஜமா பண்ணுறாங்க இல்லையா… அதனால தான் கேட்டேன். என்னோட போலீஸ் வாழ்க்கையில நான் இந்த மாதிரி நிறைய பார்த்திருக்கேன் பாரூ” என்றான்.

“அதுக்காக… என்னைப் பார்த்தா குடிகாரி மாதிரியா தெரியுது?” என்று பார்கவி கோபக் குரலில் கேட்கவும்,

“ஹேய்… சும்மா விளையாட்டா சொன்னதுக்கெல்லாம் கோச்சுப்பியா?” என்றான் செழியன்.

இங்கே இப்படி இருக்க, ஷாரதாவின் அருகில் அமர்ந்திருந்த இனியன், “பேபி! எனக்கு அவசரமா சுச்சா வருது. ஒரு நிமிஷம்… நான் போயிட்டு வந்துடறேன்” என்று சிறுபிள்ளைதனமாகக் கூற, ஒரு நொடி யோசித்தவள் அவனது பார்வை சென்ற இடத்தை நோட்டம் விட்டபடி,

“என்ன? என்னை ஏமாத்திட்டு போய் குடிக்கலாம்னு பார்க்குறியா!” என்று அவனிடம் கேட்டாள்.

‘ஆத்தி… இவ எப்படி கரெக்டா கண்டுபிடிச்சா?’ என்று நினைத்தவன்,

“ஐயோ… இல்ல பேபி. எனக்கு நிஜமாவே சுச்சா வருது” என்றான் அவன்.

ஷாரதாவோ பற்களை கடித்தபடி, “செருப்பு பிஞ்சுரும்! பேசாம உட்காரு!” என்று கூறி இனியனை முறைக்க,

“சரி சரி… கோபப்படாத. நான் பார்ட்டி முடியுற வரைக்கும் இங்கேயே இருக்கேன்!” என்றான்.

சிறிது நேரத்திற்கு முன்பு மது அருந்தச் சென்றவர்கள், மீண்டும் வந்து அனைவருடனும் இணைந்து கொண்டனர்.

“ஏதாவது கேம் விளையாடலாமா? ஜாலியா இருக்கும்!” என்று ரம்யா கேட்க,

“சூப்பர் ஐடியா! ஆனா, என்ன விளையாடுறது?” என்றாள் மல்லிகா.

சிலர் ஒருசில விளையாட்டுகளை பரிந்துரைக்க, இறுதியில் ட்ரூத் ஆர் டேர் (Truth or Dare) விளையாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனைவரும் வட்டமாக அமர்ந்திருக்க அவர்களுக்கு நடுவில் ஒரு பாட்டில் வைக்கப்பட்டது.

“முதல்ல சின்னவங்க கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம்” என்று அஞ்சலி கூற,

“அப்படின்னா… ஷாரதா நீயே பாட்டிலை சுத்து” என்றாள் ரம்யா.

அவளும் சரியென்றபடி பாட்டிலை சுற்ற, அது நேராக இனியனை அடையாளம் காட்டியது.

‘சுத்தம்! இன்னைக்கு நம்ம கதை கந்தல் தான்’ என்று தனக்குள்ளேயே புலம்பினான் இனியன்.

அவனிடம், “ட்ரூத் ஆர் டேர்!” என்று ஷாரதா கேட்க,

‘ஐயோ… இவ என்ன கேள்வி கேட்க போறான்னு தெரியலையே. எப்படியும் வில்லங்கமா தான் ஏதாவது கேட்பா. இப்போ நாம உண்மையை சொன்னாலும் பிரச்சனை… சொல்லலைன்னாலும் பிரச்சனை…’ என்று நினைத்தவன், பேசாமல் உண்மையைக் கூறி ஷாரதாவை தாஜா செய்ய எண்ணி,

“ட்ரூத்!” என்றான்.

அவளோ, “உன்னோட இன்ஸ்டா ஃபாலோயிங் லிஸ்ட்டை எனக்கு காட்டு. யாரை எல்லாம் நீ ஃபாலோ பண்ணுறேன்னு நான் பார்க்கணும்!” என்று வசதியாக வில்லங்கத்திலும் வில்லங்கமான கேள்வியை அவனிடம் கேட்டு வைக்க,

“பேபி! நோ…. என்ன இப்படியெல்லாம் கேட்கிற?” என்று பதறியே விட்டான் இனியன்.

“என்னது… நோ வா? நீதானே ட்ரூத் செலெக்ட் பண்ணுன!” என்று அவள் கேட்கவும்,

“செலெக்ட் பண்ணேன் தான். ஆனா, இப்போ அந்த அப்ஷனை மாத்திக்கலாம்னு நினைக்கிறேன்” என்றான் இனியன்.

“அதெல்லாம் முடியாது” என்று விடாப்பிடியாக அவள் கூறவும்,

“இனியன்! இன்ஸ்டா லிஸ்ட் தானே. எடுத்து காட்டுறதுல என்னடா உனக்கு பிரச்சனை?” என்றான் செழியன்.

‘ஐயோ… இவன் வேற நேரங்காலம் புரியாம பேசி நம்ம காலை வாருறானே! அந்த லிஸ்டை மட்டும் ஷாரூ பார்த்துட்டான்னா… என் அஞ்சு வருஷ காதல் வாழ்க்கையும் பஞ்சு பஞ்சா பறந்து போயிரும்!’ என்று நினைத்தவன்,

“எனக்கு அர்ஜென்டா சுச்சா போகணும். இப்போ வந்துடறேன்... நீங்க விளையாட்டை கன்டினியூ பண்ணுங்க” என்றபடி எழுந்து அங்கிருந்து ஓடியே விட்டான்.

அதைக் கண்டு மற்றவர்கள் அனைவரும் சிரிக்க, ஷாரதா தான், ‘உன்னை அப்புறமா கவனிச்சுக்குறேன்!’ என்று நினைத்தபடி கொலை வெறியுடன் அமர்ந்திருந்தாள்.

அடுத்ததாக, அந்த பாட்டிலை ரம்யா சுற்ற, அது செழியனை நோக்கி நின்றது.

அதைக் கண்டு அனைவரும் கைத்தட்ட, பார்கவி சுவாரஸ்யத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரம்யா, “ட்ரூத் ஆர் டேர்?” என்று கேட்க,

“ட்ரூத்!” என்றான் அரண் செழியன்.

இந்த இடைவெளியில் இனியன் திரும்பி வந்திருக்க, தன்னை முறைத்த ஷாரதாவை கண்டும் காணாதது போல அமர்ந்து கொண்டான்.

ரம்யாவோ, “பெர்சனல் அன்ட் ப்ரொபஷனல் லைஃப்ல ஏதாவது ஒண்ணை தான் நீங்க தேர்ந்தெடுக்கணும்ங்கற சந்தர்ப்பம் வந்தா நீங்க எதை தேர்ந்தெடுப்பீங்க?” என்று கேட்க, அனைவரிடமும் அப்படி ஒரு அமைதி.

செழியன் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவள் மறைமுகமாக உனக்கு முக்கியம், பார்கவியா? அல்லது போலீஸ் வேலையா? என்று கேட்டிருக்க, என்ன பதில் சொல்வது என்று ஒரு நொடி தடுமாறித் தான் போனான் அவன்.

இனியனோ, ‘மாட்டினியா?’ என்று அவனிடம் ஜாடை பேச, அவனை முறைத்துப் பார்த்தான் செழியன்.

“என்ன சார்? தெரியாம ட்ரூத் செலெக்ட் பண்ணிட்டோம்னு நினைச்சு வருத்தப்படுறீங்க போல!” என்ற அர்ஜூனிடம்,

“நோ… நோ… உண்மையை சொல்றதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல!” என்றபடி திரும்பி பார்கவியின் முகத்தைப் பார்த்தான்.

அவளும் அவனையே எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, “பெர்சனல் லைஃபா இல்ல போலீஸ் வாழ்க்கையான்னு ஒரு சந்தர்ப்பம் வர்றப்போ நான்….” என்றபடி ஒரு இடைவெளி விட்டவன்,

“என்னோட பெர்சனல் வாழ்க்கையைத் தான் தேர்ந்தெடுப்பேன்!” என்று சொல்ல, ஆச்சரியத்தில் விழி விரித்தாள் பார்கவி.

தொடர்ந்து அவன், “அஃப்கோர்ஸ்… சின்ன வயசுல இருந்தே போலீஸ் ஆகணும்ஙகறது தான் என் கனவு, லட்சியம் எல்லாமே! அதுவும் இப்போ நிறைவேறிடிச்சு. ஒரு காவல்துறை அதிகாரியா நம்ம ஊர் மக்களோட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது என்னோட கடமை. அதே சமயம், என்னை நம்பி இருக்கற என் குடும்பமும் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்!”

“நாளைக்கே நான் இந்தப் போலீஸ் வேலையை ராஜினாமா பண்ணாலும், என் இடத்துக்கு இன்னொரு அதிகாரி வந்து அந்த இடத்தை நிரப்பத் தான் போறாங்க”

“ஆனா, என்னோட குடும்பம் அப்படி இல்லையே. அவங்க முழுக்க முழுக்க என்னை மட்டுமே தான் நம்பி இருக்காங்க. அதனால, நான் உயர்வா மதிக்கற என் போலீஸ் வேலைக்கு ஒரு படி அதிகமாவே என் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைக்கிறேன்!” என்று செழியன் பேசி முடித்த மறுநொடியே அங்கு பலத்த கரகொலி எழுந்தது.

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தனக்காகத் தான் என்பதை பார்கவி உணர்ந்த வேளை, அவளது உடல் சிலிர்த்துப் போனது.

அந்த நேரத்தில் தான் பார்கவி, செழியனை எந்த அளவிற்கு காதலிக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள்.

அவனது நேசத்தின் ஆழத்தையும் புரிந்து கொண்டாள்!

பின்னர் அனைவரும் எழுந்து சென்று செழியனை வாழ்த்த, அவனும் புன்னகையுடன் அதனை ஏற்றுக் கொண்டான்.

“நல்லா பாரு இனியன்! போன வாரம் கல்யாணம் பிக்ஸ் ஆன உங்க அண்ணன் டாப் கியர்ல போயிட்டு இருக்காரு. ஆனா, என்னை அஞ்சு வருஷமா காதலிக்கற நீ… உன்னோட இன்ஸ்டாகிராம் லிஸ்டை கூட என்கிட்ட காட்ட தயங்குற. இரு உன்னை கவனிச்சுக்குறேன்!” என்று சொல்லி ஷாரதா முறைக்க, இனியன் தான் திருதிருவென முழித்துக் கொண்டு நின்றான்.

அதன் பிறகு விளையாட்டுகள் அனைத்தும் முடிந்து, அனைவரும் இரவு உணவு உண்டனர்.

தட்டில் உணவை எடுத்துக் கொண்ட செழியன், தோட்டத்து பக்கமாக இருந்த ஒரு மர பெஞ்சில் சென்று அமர, அவனுக்கு அருகே சென்று அமர்ந்தாள் பார்கவி.

தான் அழைக்காமலேயே தன்னருகில் வந்து அமர்ந்தவளை புன்னகையுடன் பார்த்தவன், “ஃபுட் நல்லா இருக்கு பாரூ!” என்றான்.

அவளோ குழப்பத்துடன், “இதையெல்லாம் நான் சமைக்கலையே!” என்று கூற,

“தெரியும்!” என்றபடி ஒரு வாய் உணவை எடுத்து சாப்பிட்டபடி,

“உன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடுறதால ஃபுட் டேஸ்ட் செமையா இருக்கு!” என்று சொல்லி அவளது கன்னங்களை வெட்கத்தில் சிவக்க வைத்தான் அரண் செழியன்.

வெட்கத்துடன் தலை கவிழ்ந்தபடியே, “நீங்க போலீஸ்னு தெரிஞ்சதும், நான் உங்களை என்னமோ நினைச்சேன்” என்றவளிடம்,

“என்ன நினைச்ச?” என்று கேட்டான் அவன்.

“இல்ல வேண்டாம்!” என்றவளிடம்,

“ஐ நோ… போலீஸ்காரன் ஆச்சே… இவனுக்கு இந்தக் காதல், ரொமான்ஸ் எல்லாம் வருமான்னு சந்தேகப்படிருப்ப… அப்படி தானே?” என்றான் அவன்.

அதைக் கேட்டவளுக்கு லேசாக சிரிப்பு வந்துவிட, “கல்யாணத்துக்கு அப்புறம் பாரு… ஐயாவோட பெர்ஃபாமன்சை!” என்றான், அவளை சற்று நெருங்கி அமர்ந்தபடி.

பார்கவிக்கோ வெட்கம் மேலும் அதிகரிக்க, அங்கிருந்து எழுந்து ஓடியே விட்டாள்.

அவனும் அவளையே புன்னகையுடன் பார்த்தபடி உண்டு முடித்தான்.இரவு விருந்து முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினர், செழியனும் இனியனும்.


பார்கவியிடம், “குட் நைட் பாரூ… வீட்டுக்கு போயிட்டு ஃபோன் பண்ணுறேன்!” என்று செழியன் கூற,


“ஃபோன் பண்ணுறேன்னு சொல்றதோட சரி. வேலைன்னு வந்துட்டா என்னை சுத்தமா மறந்துடுறீங்க!” என்றாள் அவள்.

இம்முறை தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகவே அவனிடம் கூறினாள்.

“சாரிம்மா… புது இடம்ல. அதான் செட் ஆகறதுக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. இனிமே உன்கிட்ட தினமும் பேசுறேன்…” என்றவன் சற்று தயங்கி, பின்னர் தடுமாற்றமின்றி அவளது தலையை மென்மையாகக் கோதி விட்டபடி,

“டேக் கேர்!” என்று கூறிவிட்டு அவளிடம் விடைபெற்று இனியனுடன் சேர்ந்து தனது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.

மறுநாள் காலை அரண் செழியன் காவல் நிலையத்திற்குச் சென்றிருக்க, இனியனோ, பார்கவியின் நண்பர்கள் குழுவோடு சுற்றுலாவில் இணைந்து கொண்டான்.

காவல் நிலையத்திற்குச் சென்றவன் சுயம்புலிங்கத்தை அழைத்து, முன்தினம் துர்கா ஏறிச் சென்ற ஆட்டோவின் பதிவெண்ணைக் கொடுத்து அந்த ஆட்டோ ஓட்டுனரைப் பற்றிய தகவலை சேகரிக்கச் சொன்னான்.

அவரும் சரியென்று கூறிச் சென்றுவிட, அடுத்ததாக சப் – இன்ஸ்பெக்டர் ஜெகனை தனது அறைக்கு அழைத்தான்.

“குட் மார்னிங் சார்!” என்றபடி தன் முன்பு வந்து நின்றவரிடம்,

“குட் மார்னிங்! செல்வன் கேஸ்ல எனி அப்டேட்ஸ்?” என்று செழியன் கேட்க,

“இல்ல சார்! புதுசா எந்தத் தகவலும் கிடைக்கல” என்றார் ஜெகன்.

“அங்கே மீடியா நம்மளைப் பத்தி நீயூஸ் போட்டு கிழிச்சுட்டு இருக்காங்க. நீங்க கேஸ்ல டெவலப்மென்டே இல்லைன்னு சொன்னா எப்படி சார்?” என்ற செழியன்,

“சரி… நீங்க போங்க!” என்றான்.

அவரோ, “சார்!” என்று ஏதோ சொல்ல வரவும்,

“என்ன விஷயம்? சொல்லுங்க” என்றான் செழியன்.

“எனக்கு ரொம்ப முக்கியமான பெர்சனல் ஒர்க் ஒண்ணு இருக்கு. டூ அவர்ஸ் பர்மிஷன் வேணும்!” என்று ஜெகன் கூற,

“சரி… போயிட்டு வாங்க” என்று அவருக்கு அனுமதி அளித்துவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தான்.

சுமார் அரைமணி நேரம் கழித்து, “சார்…” என்றபடியே செழியனின் அறைக்குள் பரபரப்பாக ஓடி வந்தார் ஹெட் கான்ஸ்டபிள் சுயம்புலிங்கம்.

“என்னாச்சு ஏட்டாய்யா?” என்றவனிடம்,

“சார்… கான்ட்ராக்டர் செல்வன் கொலை கேசைப் பத்தி ஒரு முக்கியமான தகவல் கிடைச்சிருக்கு!” என்று அவர் சொல்லவும், சட்டென தனது இருக்கையில் இருந்து எழுந்தான் செழியன்.

“என்ன தகவல் ஏட்டய்யா. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க” என்றவனிடம்,

“நம்ம துர்கா நகைகளோட ஃபோட்டேவை வச்சு விசாரிச்சோம்ல” என்று அவர் கூற,

“ஆமா… அது பற்றி ஏதாவது தகவல் கிடைச்சுதா?” என்று கேட்டான்.

“ஆமா சார்… வள்ளியூர் ஸ்டேஷன்ல இருந்து இப்போ தான் தகவல் வந்தது. அந்த நகை எல்லாம் வள்ளியூர்ல இருக்கற ஒரு அடகு கடையில இருக்கறதா தகவல் கிடைச்சிருக்கு சார்!” என்றவர் தனது அலைபேசிக்கு வள்ளியூர் காவல் நிலையத்தில் இருந்து வந்திருந்த புகைப்படம் ஒன்றைக் காட்டினார்.

அதைப் பார்த்தனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, அந்த நொடிப் பொழுதில் அவனது மனதில் ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருந்தது.

“இன்னும் இந்த கேஸ் நம்ம கையை விட்டு போகல ஏட்டய்யா… நாம உடனே வள்ளியூருக்குப் போயாகணும். கிளம்புங்க!” என்று அவரை அழைத்தான் செழியன்.

“அங்கே எதுக்கு சார்?” என்று கேட்டவரிடம்,

“அங்கே போய் விசாரிச்சா தானே நாம தேடுற ஆள் யாருன்னு தெரிய வரும்!” என்றான்.

“வள்ளியூர் போலீஸ் அந்தக் கடையில இருக்கற சிசிடிவி ஃபூட்டேஜை செக் பண்ணிட்டு இருக்காங்க சார். இன்னும் கொஞ்ச நேரத்துல நகையை அடகு வச்சவனோட டீட்டெயில்ஸ் எடுத்து அனுப்புறதா சொல்லி இருக்காங்க” என்று சுயம்புலிங்கம் கூற,

“ஓகே ஃபைன்…” என்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் நகையை அடகு வைத்தவனின் விபரங்கள், களக்காடு காவல் நிலையத்திற்கு வந்துவிட, அந்த நபரின் புகைப்படத்தையும் வீடியோ ஆதாரத்தையும் அலைபேசியில் பார்த்தான் செழியன்.

“இவன் யாருன்னு ஏதாவது விபரம் தெரியுமா ஏட்டய்யா?” என்று அவன் கேட்க, அவரோ அந்த வீடியோவை ஓரிரு முறைகள் ஓடவிட்டு பார்த்தபடி, 

“தெரியல சார். இவனை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல” என்று கூறினார்.

செழியனோ பலத்த யோசனைக்குப் பிறகு, “கண்டிப்பா இவன் கில்லரா இருக்கறதுக்கு வாய்ப்பு இல்ல!” என்றவனிடம்,

“எதை வச்சு சார் சொல்லுறீங்க?” என்றார் சுயம்புலிங்கம்.

“கொலை செஞ்சவன் கொஞ்ச நாளைக்காவது இப்படி தைரியமா ஊருக்குள்ள நடமாட மாட்டான். அதை வச்சு தான் சொல்லுறேன்” என்றவன்,

“ஆனா… இவன் தான் நமக்கு கிடைச்சிருக்கற துருப்புச் சீட்டு. இவனை வச்சு தான் கொலைகாரனை நாம நெருங்க முடியும். அதனால, இவனை இன்னைக்கே எப்படியாவது பிடிச்சாகணும்” என்று கூற, சுயம்புலிங்கமும் தங்கள் ஸ்டேஷன் போலீசாரை உஷார்படுத்தி, விசாரணையை முழு வேகத்தில் நகர்த்தினார்.

சில நிமிடங்களிலேயே செழியனைத் தேடி வந்தவர், “சார்! ஆள் யாருன்னு தெரிஞ்சுருச்சு” என்று கூற,

“யாரு ஏட்டய்யா…” என்று குரலில் எதிர்பார்ப்புடன் கேட்டான் செழியன்.

அவரோ, “பஸ் ஸ்டான்ட் பக்கத்துல இருக்கற சூப்பர் மார்க்கெட்ல வேலை செய்யுற பையன் தான் சார். நாம இப்போ போனா அவனை புடிச்சுரலாம்” என்று கூற,

“வண்டியை ரெடி பண்ணுங்க. கமான் க்விக்!” என்று தனது தொப்பியை எடுத்து அணிந்தபடி காவல் நிலையத்தில் இருந்து வெளியேறினான் அரண் செழியன்.

அரணாய் வருவான்…

தொடர்ந்து கருத்து பகிர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் எனது நன்றிகள்!

மீண்டும் சந்திப்போம்...

பிரியமுடன்,

சௌஜன்யா...


Comments

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 5

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi - 6