அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11
அரணாய் நீ வா!
பாகம் 2
அத்தியாயம்
– 11
“கார்த்திகேயனா?
உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா!” என்று அதிர்ச்சி
மாறாமல் கேட்ட அரண் செழியனிடம்,
“ஆமா
சார்! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான்” என்றாள்
சுபத்ரா.
அதைக் கேட்டு
பெருமூச்சு விட்டவன், “சரி! சொல்லு சுபத்ரா. உனக்கு ஆக்சிடென்ட்
ஆன அன்னைக்கு என்ன நடந்தது?” என்று செழியன் கேட்க, அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள்.
அன்று சுபத்ராவிற்கு
மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க,
தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.
ரிஷியின்
வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும். அந்த வீட்டை அவள் கடந்து சென்ற
நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண்.
முகம் முழுக்க
வியர்த்துப் போயிருக்க, படபடப்பாகக் காணப்பட்டாள் அவள்.
சுபத்ரா
வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து, வண்டியை நிறுத்தும்படி கூறினாள்.
அந்தப் பெண்ணின்
முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும்,
யோசனையுடன் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள்.
“ப்ளீஸ்…
என்னை கொஞ்சம் எங்க வீட்டில் ட்ராப் பண்ணிடுறீங்களா?” என்று அந்தப் பெண் கெஞ்சுதலாகக் கேட்க, ஏதோ பிரச்சனை
என்பதை புரிந்து கொண்டவள், “சரி ஏறுங்க!” என்றாள்.
அந்தப் பெண்ணை
ஏற்றிக் கொண்டு அவளது இருச்சக்கர வாகனம் சிறிது தூரம் தான் சென்றிருக்கும்!
அதற்குள்
பின்னால் இருந்து வந்த கார் ஒன்று வேகமாக அவளது வண்டியில் மோத, சுபத்ராவும் அந்தப் பெண்ணும்
வண்டியில் இருந்து கீழே விழுந்தனர்.
பின்னால்
வண்டி வருவதை அறிந்து அந்தப் பெண் சுதாரித்ததாலோ என்னவோ, சற்று தன்னை நிலைப்படுத்திக்
கொண்டு கீழே விழுந்தாள். அதனால் அவளுக்கு சுபத்ரா அளவிற்கு காயம்
எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், இப்படி ஒரு சம்பவம் தனக்கு
நிகழப் போகிறது என்பதை சற்றும் எதிர்பார்க்காத சுபத்ரா தான் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில்
அவளுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
அவர்கள்
இருவரும் கீழே விழுந்து கிடந்த பொழுது,
அவர்களை இடித்து தள்ளிய காரில் இருந்து கோபமாக இறங்கி வந்தான் கார்த்திகேயன்.
சுபத்ராவை
ஏளனமாக ஒரு பார்வைப் பார்த்தவன்,
அவளருகே விழுந்து கிடந்தப் பெண்ணின் கரத்தைப் பற்றி எழுப்பினான்.
“பேசாம
வந்து வண்டியில ஏறு. இல்லைன்னா உனக்கு சேதாரம் இதை விட அதிகமா
இருக்கும்” என்று அவன் கூற, அழுது கொண்டே
எழுந்தாள் அந்தப் பெண்.
கீழே இரத்த
வெள்ளத்தில் கிடந்த சுபத்ராவைப் பார்த்தவள்,
“ப்ளீஸ்! அந்தப் பொண்ணுக்கு ரொம்ப அடிப்பட்டிருக்கு.
உடனே அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் சேர்த்துரலாம். அப்புறம் நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்” என்று
கூற,
அவனோ, “எல்லாம் எங்களுக்குத் தெரியும்.
நீ வாடி!” என்றபடி, அவளை
வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தனது காரில் ஏற்றினான்.
அவளை காருக்குள்
அமர வைத்தவன், நடந்து சென்று சுபத்ராவைப் பார்த்தான்.
அவளோ வலியில்
துடித்துக் கொண்டிருக்க, விரலால் தனது நாடியைத் தடவி சில நொடிகள் யோசித்தவன், சுபத்ராவின் இருச்சக்கர வாகனத்தை எடுத்துச் சென்று ரிஷியின் வீட்டிற்குள் நிறுத்தி
வைத்தான்.
பின்னர்
தனது காருக்குத் திரும்பி வந்தவன்,
சுபத்ராவை அந்த இடத்திலேயே விட்டு விட்டு, அந்தப்
பெண்ணையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அதன் பிறகு, அந்த வழியாக வேறொரு காரில்
வந்த இருவர் தான் தன்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக அரண் செழியனிடம் கூறினாள்
சுபத்ரா.
அனைத்தையும்
கேட்ட செழியனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
முதல் சந்திப்பிலேயே
கார்த்திகேயனைப் பற்றிய சந்தேகம் அவனது மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது.
இப்பொழுது
சுபத்ரா சொன்ன விஷயங்களைக் கேட்டதும் அவனது மனதில் சட்டென ஒன்று தோன்ற, தனது அலைபேசியை எடுத்து அதில்
எதையோ தேடியவன், “கார்த்திகேயன் கூட்டிட்டு போனதா நீ சொன்ன பொண்ணு
இவங்களா?” என்று ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி அவளிடம்
கேட்டான்.
அந்தப் புகைப்படத்தைப்
பார்த்தவளின் விழிகள் விரிய,
“ஆமா சார்! இவங்களே தான்” என்றவள், “இவங்க யாருன்னு உங்களுக்குத் தெரியமா சார்?”
என்று கேட்டாள்.
“ம்ம்ம்…
நல்லா தெரியும்” என்றவன், “நீ எதைப் பத்தியும் கவலைப்படாம நல்லா ரெஸ்ட் எடு சுபத்ரா. அந்தக் கார்த்திகேயன் கதையை நான் கவனிச்சுக்குறேன்” என்றான்.
அவளும் சரியென்று
தலையசைக்க, அவளிடம்
விடைபெற்று வெளியே வந்தான்.
பின்னர்
பார்கவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன், பலத்த யோசனையுடன் அமர்ந்திருக்க, அவனுக்கு சூடாக தேநீர் தயாரித்து எடுத்துச் சென்றாள் அவள்.
“செழியன்!”
என்று அழைத்தவளை நிமிர்ந்து பார்த்தவனிடம் தேநீர் நிரம்பிய கோப்பையைக்
கொடுத்தவள், அவனருகே அமர்ந்தாள்.
“சுபத்ராவை
பார்த்துட்டு வந்ததில் இருந்து ஏதோ யோசனையிலேயே இருக்கீங்களே!” என்றவளிடம்,
“சுபத்ரா
கேஸ் சாதாரணமா முடியும்னு எனக்குத் தோணல பாரூ!” என்றான் அவன்.
“ஏன்?”
என்று கேட்டவளிடம்,
“அவளுக்கு
நடந்த விபத்துல சம்பந்தப்பட்டிருக்கறது யார் தெரியுமா?” என்று
செழியன் கேட்க,
“யாரு?
நீங்க தயங்குறதைப் பார்த்தா… யாரோ பெரிய ஆளா இருக்கும்
போலிருக்கே!” என்றாள் பார்கவி.
அவனோ பெருமூச்சுவிட்டபடி, “நீ சொல்றது சரிதான் பாரூ.
சுபத்ராவோட இந்த நிலைமைக்குக் காரணம் அந்த MLAவோட
மகன் கார்த்திகேயன்” என்று அரண் செழியன் சொன்னதுமே,
“அவனா?”
என்று அதிர்ந்து போனாள் அவள்.
அவளது அதிர்ச்சி
அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்த,
“என்னாச்சு? கார்த்திகேயன் பெயரை கேட்டதுமே ஏன்
இந்த அளவுக்கு அதிர்ச்சி ஆகுற?” என்றான்.
“அது…
முன்னாடியே கார்த்திகேயன் சம்பந்தமா உங்ககிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன்
செழியன். ஆனா, ஏனோ அதை வேண்டாம்னு தவிர்த்துட்டேன்”
என்று அவள் கூற,
“எனக்குப்
புரியல பாரூ. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு” என்றான் அவன்.
அன்று கனகரத்தினத்தின்
வீட்டிற்குச் சென்ற பொழுது, அவன் தன்னிடம் நடந்து கொண்டதைப் பற்றியும், பின்னர் ஒருநாள்
பெட்ரோல் பங்கில் வைத்து தன்னிடமும் சுபத்ராவிடமும் அவன் மோசமாகப் பேசியதைப் பற்றியும்
முழுமையாக அவனிடம் கூறினாள் பார்கவி.
அதைக் கேட்டவனோ, “இதை ஏன் நீ என்கிட்ட அப்பவே
சொல்லலை?” என்று கேட்க,
“இல்ல…
நீங்களே ஆயிரம் வொர்க் பிரஷர்ல இருக்கீங்க. அதான்
எதுக்கு தேவையில்லாம இதையும் சொல்லி உங்களை தொந்தரவு பண்ணும்னு நினைச்சு சொல்லாம விட்டுட்டேன்”
என்றாள் அவள்.
அவளது கைகளைப்
பற்றியவனோ, “இங்கே
பார் பாரூ… இந்த ஊரோட பாதுகாப்பு மட்டுமில்ல, உன்னுடைய பாதுகாப்பும் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால இனிமே எதுவா இருந்தாலும் என்கிட்ட தயங்காம சொல்லு” என்று கூற, அவளும் சரியென்று அதற்கு சம்மதித்தாள்.
பின்னர், “அந்தக் கார்த்திகேயனுக்கு
நிச்சயமா தண்டனை வாங்கிக் கொடுக்கணும் செழியன். அவங்க அப்பாகிட்ட
அதிகாரம் இருக்கற திமிர்ல ஆடுறான். கண்டிப்பா அவனுக்கு ஒரு பாடம்
புகட்டியே ஆகணும்” என்று பார்கவி கூற,
“நிச்சயமா
பாரூ! இப்போ அவனோட குடுமி என் கையில இருக்கு. அவனை என்ன செய்யணும்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்” என்றான்.
மறுநாள்
காவல் நிலையத்திற்குக் கிளம்பிச் சென்றவன்,
சுயம்புலிங்கத்தை தனது அறைக்கு வருமாறு அழைத்தான்.
அவரிடம், “ஜெகன் சார் எங்கே?”
என்று அவன் கேட்க, “அவர் இன்னும் ட்யூட்டிக்கு
வரல சார்” என்றார் அவர்.
“நல்லதா
போச்சு!” என்றபடி, “நான் சொல்லப் போறதை
கவனமா கேளுங்க ஏட்டய்யா!” என்றவன், சுபத்ராவின்
விபத்து தொடர்பாகத் தனக்குத் தெரிந்த தகவல்களைப் பற்றி அவரிடம் கூறினான்.
அதைக் கேட்டு
அதிர்ந்து போனவரோ, “அவன் மோசமானவன்னு ஓரளவுக்குத் தெரியும் சார். ஆனா,
இரக்கமே இல்லாம இப்படியொரு காரியத்தை செஞ்சிருக்கான்னா, அவன் ரொம்ப கொடூரமானவனா தான் இருக்கணும்” என்றார் ஏட்டு.
“அதுமட்டுமில்ல
ஏட்டய்யா… இந்தக் கேஸ்ல நமக்கு முக்கியமான துருப்பு சீட்டு ஒண்ணு
கிடைச்சிருக்கு” என்று செழியன் கூற, புரியாமல்
விழித்தார் அவர்.
“சுபத்ராவுக்கு
ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு அவகிட்ட உதவி கேட்ட பொண்ணு யார் தெரியுமா?” என்று செழியன் கேட்க,
“யாரு
சார்?” என்றபடி சில நொடிகள் யோசித்தவர், “ஒருவேளை அந்தப் பொண்ணு துர்காவா?” என்றார்.
“யெஸ்…
அவங்க தான். துர்காவை பத்தி நம்மளோட கணிப்பு சரியா
தான் இருந்திருக்கு ஏட்டய்யா. அந்தக் கார்த்திகேயனுக்கும் துர்காவுக்கும்
நடுவுல ஏதோ ஒரு ரகசியம் ஔிஞ்சிருக்கு. அந்த ரகசியத்தை மட்டும்
நாம கண்டுபிடிச்சுட்டோம்னா… சுபத்ராவோட விபத்துக்கும் செல்வனோட
கொலைக்கும் நியாயம் கிடைச்சுரும்” என்றான் அரண் செழியன்.
ஆனால், அதைக் கேட்ட சுயம்புவிற்கு
தான் உடல் விறைத்தது.
“எப்படி
சார்? அந்தக் கார்த்திகேயன் தான் அவங்க அப்பாவோட நிழல்ல ஔிஞ்சுட்டு
இருக்கானே! நாம உண்மையைக் கண்டுபிடிச்சு அவனக்கு எதிரா ஆதாரம்
திரட்டினாலும், அந்த MLAவை மீறி நம்மளால
ஏதாவது செய்ய முடியும்னு நினைக்குறீங்களா?” என்றார் அவர்.
தனது இருக்கையில்
இருந்து எழுந்தவன், மேஜையில் சாய்ந்து நின்று கைகளைக் கட்டியபடி, “மனுஷங்க
வேணும்னா ஏழை பணக்காரன்னு பாகுபாடு பார்க்கலாம். ஆனா,
சட்டத்துக்கு முன்னாடி எல்லாரும் சமம் தான். அதை
நான் ஆணித்தரமா நம்புறேன். அந்தக் காரத்திகேயனும் சட்டத்தோட பிடியில்
இருந்து தப்பிக்க முடியாது. அவன் பண்ண தப்புக்கான தண்டனையை நிச்சயமா
அவன் அனுபவிச்சே தீரணும்!” என்றான்.
அவனது பேச்சில்
தெறித்த தைரியம் சுயம்புவிற்கும் தொற்றிக் கொள்ள, இந்தப் பணியில் தானும் செழியனுக்கு உறுதுணையாக
இருப்பதாக வாக்களித்தார் அவர்.
ஒரு வாரம்
கழித்து சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தாள் சுபத்ரா.
அவளது வழக்கை
ரகசியமாக விசாரிக்க ஆரம்பித்த செழியன்,
சில முக்கியமான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு துர்காவைத் தேடி அவளது
வீட்டிற்குச் சென்றான். யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் மஃப்டியில்
தான் அவளை சந்திக்கச் சென்றனர் அவனும் சுயம்புலிங்கமும்.
அரண் செழியனை
தனது வீட்டு வாசலில் கண்டதுமே பதற்றமானாள் துர்கா.
அவளது கைகளிலும், நெற்றியிலும் அடிப்பட்டதற்கான
காயங்கள் தென்பட்டன. அதை மனதில் குறித்துக் கொண்ட செழியனோ எதையும்
அவளிடம் காட்டிக் கொள்ளாமல் நின்றான்.
தங்களை பார்த்துப்
புரியாமல் விழித்தவளிடம், “உங்க ஹஸ்பன்ட் கொலை கேஸ் விஷயமா மேலிடத்துக்கு ஒரு ரிப்போர்ட் சமர்ப்பிக்கணும்.
அது சம்பந்தமா பேச வந்திருக்கோம்” என்று செழியன்
கூற, இருவரையும் உள்ளே அழைத்து அமர வைத்தாள் துர்கா.
“டீ,
காஃபி ஏதாவது?” என்றவளிடம்,
“அதெல்லாம்
வேண்டாம். ஒரு கப் தண்ணி மட்டும் குடுங்க” என்றான் செழியன்.
துர்கா தண்ணீர்
எடுத்து வருவதற்காகச் சென்ற இடைவெளியில் அந்த வீட்டை நோட்டம் விட்டான்.
இருக்கையில்
இருந்து எழுந்து சென்று, மேஜையில் இருந்த ஒரு மருத்துவ கோப்பை எடுத்துப் பார்த்தான். அதில் துர்கா ஏதோ ஸ்கேன் எடுத்திருப்பது தெரிந்தது.
சற்று நேரம்
கழித்து அவள் வரும் அரவம் கேட்கவும்,
சென்று சுயம்புலிங்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டான்.
துர்கா இருவருக்கும்
தண்ணீரை கொடுக்க, அதை வாங்கி அருந்தியவன் அவளை அமரச் சொல்லி தான் பேச வந்த விஷயத்தைக் குறித்து
அவளிடம் பேசினான்.
“நான்
நேரா விஷயத்துக்கு வர்றேன் துர்கா. உங்களுக்கும் கார்த்திகேயனுக்கும்
என்ன சம்பந்தம்?” என்று செழியன் வெளிப்படையாகவே அவளிடம் கேட்க,
பயத்தில் விழி பிதுங்கிப் போனாள் துர்கா.
ஓரிரு நொடிகள்
அவளுக்கு பேச்சே வரவில்லை!
“நீ..நீங்க எ…என்ன சார் சொல்றீங்க? எந்த
கார்த்திகேயன்? யார் அவரு?” என்று திக்கித்
திணறியவளிடம்,
“அப்படின்னா
உங்களுக்கு எந்த கார்த்திகேயனையும் தெரியாது இல்லையா?” என்று
கூர்மையான பார்வையுடன் அவளை பார்த்துக் கேட்டான் அரண் செழியன்.
தன் பயத்தை
மறைத்து இல்லை என்று பதிலளித்தவளிடம்,
“சரி! உங்களுக்குப் புரியுற மாதிரியே சொல்றேன்.
உங்க காலேஜ் டேய்ஸ்ல ஒருத்தரை உயிருக்கு உயிரா காதலிச்சீங்களே!
உங்க கல்யாணத்துக்கு அப்புறம் கூட அவர் கூட அஃபையர் வச்சுட்டு,
அவர் கூட சேர்ந்து திட்டம் போட்டு உங்க கணவரை கொலை செஞ்சீங்களே!
அந்த கார்த்திகேயனை பத்தி தான் கேட்குறேன்” என்று
அவன் கூற, துர்காவை முழுதாக பயம் ஆட்கொண்டது.
பயத்துடன்
சேர்ந்து அவளுக்கு கண்ணீரும் வந்துவிட,
ஏங்கி அழ ஆரம்பித்தாள்.
“இப்போ
அழுது என்ன பிரயோஜனம்? இந்த மாதிரி ஒரு நிலைமை வரும்னு யோசிச்சு
நீங்க தப்பு பண்ணாம இருந்திருக்கணும்” என்று செழியன் கூற,
அவளது அழுகை மேலும் அதிகரித்தது.
“இவங்க
பண்ண தப்புக்கு காலம் முழுக்க ஜெயில்ல கம்பி எண்ணட்டும் சார்! இரக்கமில்லாம அவங்க புருஷனையே ஆள் வச்சு கொலை பண்ணியிருக்காங்க” என்று சுயம்புலிங்கம் கூற,
“ப்ளீஸ்!
நான் உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன். தயவு செஞ்சு
நான் தான் என்னோட வீட்டுக்காரரை கொலை பண்ணேன்னு சொல்லாதீங்க. அவர்னா எனக்கு உயிர். நானே அவர் என்னை விட்டு போன துக்கத்துல
இருந்து வெளியே வர முடியாம தவிச்சுட்டு இருக்கேன். நீங்களும்
என்னை மேலும் மேலும் காயப்படுத்தாதீங்க ப்ளீஸ்” என்று கூறி அழுதாள்
அவள்.
செழியனோ, “நாங்க ஒண்ணும் சும்மா சொல்லலை
மேடம். போதிய ஆதாரத்தை சேகரிச்சுட்டு தான் உங்களை இங்கே சந்திக்கவே
வந்திருக்கோம்” என்றவன், சுயம்புலிங்கத்திடம்
இருந்த சில காகிதங்களை எடுத்து துர்காவிடம் நீட்டினான்.
அதை வாங்கிப்
பார்த்தவள் அதிர்ச்சியடைய, “இது நீங்களும் மிஸ்டர் கார்த்திகேயனும் ஃபோன்ல பேசுன கால் ஹிஸ்டரி பத்தின டீட்டெயில்ஸ்,
அப்புறம் அவர் கூட நீங்க பண்ண சேட்டிங்கோட ஸ்க்ரீன் ஷார்ட்ஸ்.
அதுமட்டுமில்ல… இன்னும் சில ஆதாரங்கள் எங்க கைக்கு
எட்டுற தூரத்துல தான் இருக்கு!” என்றான் செழியன்.
அவன் பேசப்
பேச துர்காவின் அழுகை அதிகரித்தது.
“சோ…
கள்ளக்காதலுக்காக கட்டின புருஷனையே கூலிப்படை ஏவி கொலை செஞ்சுட்டீங்க
அப்படித்தானே?” என்றவனைப் பார்த்து,
“இல்ல…
இல்ல… நான் என் புருஷனை கொலை பண்ணல. எனக்கும் அந்த கார்த்திகேயனுக்கும் எந்த விதமான கள்ளத் தொடர்பும் இல்ல.
இது நான் பெத்த என் மகன் மேல சத்தியம்” என்று துர்கா
உணர்ச்சிபெருக்கில் கதற, செழியனும் சுயம்புவும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டனர்.
பேசி முடித்துவிட்டு
துர்கா ஏங்கி ஏங்கி அழ, அவளது அழுகை ஓயும் வரை காத்திருந்தான் செழியன்.
பின்னர், “சரி! நான் உங்களை நம்புறேன் துர்கா. ஆனா, நீங்க எங்க விசாரணைக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்து, கார்த்திகேயன் பத்தின உண்மைகளை எங்ககிட்ட சொன்னீங்கன்னா நாங்க எந்தப் பிரச்சனையும்
பண்ணாம இங்கிருந்து கிளம்பிடுவோம்” என்று அவன் கூற, அவளும் அதற்கு சரியென்று சம்மதித்தாள்.
“உங்க
கணவர் செல்வனோட கொலை வழக்கு சம்பந்தமா இன்னும் நிறைய கேள்விகள் எங்களுக்கு இருக்கு.
ஆனா, இப்போ நாங்க உங்ககிட்ட விசாரிக்க வந்திருக்கறது
வேறு ஒரு வழக்கைப் பத்தி” என்று அவன் கூற, “வேற எந்த வழக்கு?” என்றாள் துர்கா.
தனது அலைபேசியில்
இருந்த சுபத்ராவின் புகைப்படத்தை அவளிடம் காட்டியவன், “இந்தப் பொண்ணை எங்கேயாவது
பார்த்திருக்கீங்களா?” என்று கேட்க, அந்த
படத்தைப் பார்த்த துர்கா அதிர்ந்து போனாள்.
“இவ…
இது” என்று ஏதோ கூற வந்தவளிடம்,
“இந்த
பொண்ணை பார்த்திருக்கீங்களா இல்லையா? யெஸ் ஆர் நோ! ஒரே பதில் தான் எனக்கு வேணும்” என்றான் செழியன்.
பெருமூச்சு
விட்டவளோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“இவங்களை எனக்குத் தெரியும் சார். கொஞ்ச நாள் முன்னாடி
இந்தப் பொண்ணுகிட்ட உதவி கேட்டு அவங்க பைக்கை நிறுத்தினேன்” என்றாள்
துர்கா.
அதைக் கேட்டவனோ, “ம்ம்ம்… சுபத்ராவும் அதே தான் சொன்னாங்க. அதுமட்டுமில்ல உங்களுக்காக
அவங்க பைக் மேல காரை ஏத்தி விபத்து ஏற்படுத்தினது கார்த்திகேயன்ங்கற தகவலையும் எங்ககிட்ட
வாக்குமூலமா பதிவு செஞ்சிருக்காங்க” என்றான்.
“உங்க
கணவர் இறந்த சமயத்துல நீங்க MLAவோட தோப்பு வீட்டுக்கு போயிருக்கீங்க.
அதுமட்டுமில்லாம, சிலமுறை நீங்க அவர் கூட பொது
இடத்துல நின்னு பேசுனதையும் நான் கவனிச்சிருக்கேன்” என்றவன்,
“எனக்குத்
தெரிஞ்சதை எல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டேன். இனிமே நீங்க தான்
சொல்லணும்!” என்றான்.
துர்காவிற்கு
தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
பின்னர்
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண் செழியனிடம் பேச ஆரம்பித்தாள்.
“நீங்க
சொன்னது உண்மை தான் சார். காலேஜ் படிக்கும் போது நானும் கார்த்திகேயனும்
ஒருத்தரை ஒருத்தர் விரும்புனோம். நான் என்னோட காதலுக்கு உண்மையா
தான் இருந்தேன். ஆனா, அவன் அப்படியில்ல…
என்னை லவ் பண்ணிட்டு வேற பொண்ணுங்களோட சுத்திட்டு இருந்தான்.
அந்த நேரத்துல தான் அவனோட அப்பாவும் அரசியல்ல பெரிய ஆளா வளர ஆரம்பிச்சார்.
அவங்க அப்பாவோட செல்வாக்கை பயன்படுத்தி அவன் நினைத்ததை எல்லாம் செஞ்சுட்டு
இருந்தான்”
“நாங்க
ஃபைனல் இயர் படிக்கும் போது, எங்க காலேஜ்ல வேலை பார்த்த ஒரு லெக்சரர்
மேடமை அசிங்கியமா ஃபோட்டோ எடுத்து அவங்களை மிரட்டியிருக்கான். அந்த மேடம் அவமானத்துலயும் பயத்துலயும் தற்கொலை செஞ்சுகிட்டாங்க. அவனோட அப்பா அரசியல்வாதிங்கறதால, எங்க காலேஜ் மேனேஜ்மென்ட்
அவன் மேல எந்த ஆக்ஷனும் எடுக்கல”
“இந்த
விஷயமெல்லாம் தெரிஞ்ச பிறகு, நான் அவன் கூட ப்ரேக் அப் பண்ணிகிட்டேன்.
அதுக்கப்புறம் பல வருஷமா அவனை நான் சந்திக்கவே இல்ல. என் ஹஸ்பன்ட் இறந்து போறதுக்கு இரண்டு மாசம் முன்னாடி நாங்க குடும்பமா எங்க
குலதெய்வ கோவிலுக்குப் போயிருந்தோம். அங்கே தான் அவனை நான் மறுபடியும்
சந்திச்சேன். அன்னைக்கு அவன் என்னைப் பார்த்த பார்வையில நிறைய
வன்மம் தெரிஞ்சது. நான் அவனை கண்டுக்காம கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்”
“ஆனா,
ஒரு வாரம் கழிச்சு ஒரு புது நம்பர்ல இருந்து எனக்கு மெசேஜ் வந்தது.
அதுல நானும் அந்தக் கார்த்திகேயனும் லவ் பண்ணப்போ ஒண்ணா எடுத்துகிட்ட
ஃபோட்டோஸ் இருந்தது. கடைசியா பார்த்தா அதையெல்லாம் எனக்கு அனுப்புனதே
அவன் தான். அதை வச்சு தான் அவன் என்னை மிரட்ட ஆரம்பிச்சான்”
என்றவள், அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் சிந்தினாள்.
அரண் செழியனுக்கோ
அவள் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்த,
“ரிலாக்ஸ் துர்கா. டேக் யூர் டைம்!” என்றான்.
அவள் சற்று
நேரம் அவகாசம் எடுத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.
“என்னை
அவன்… தப்பான உறவுக்கு வரச் சொல்லி கூப்பிட்டான். ஆனா, நான் அதுக்கு சம்மதிக்கவே இல்ல. நீ வரலைன்னா எல்லா ஃபோட்டோவையும் உன் வீட்டுக்காரனுக்கு அனுப்பி வச்சுருவேன்னு
சொல்லி தினமும் என்னை மிரட்ட ஆரம்பிச்சான்”
“ஆனா,
என் கணவருக்கு துரோகம் செய்ய என் மனசு ஒத்துக்கல. அதனால தான் நான் என்ன நடந்தாலும் பரவாயில்லன்னு அவர்கிட்ட கார்த்திகேயன் என்னை
மிரட்டுற விஷயத்தைப் பத்தி சொல்லி அழுதேன். அவரும் என்னை புரிஞ்சுகிட்டாரு.
எனக்காக அந்தப் பொறுக்கியை கூப்பிட்டு மிரட்டுனாரு. இனிமே எங்க வாழ்க்கையில குறுக்க வந்தா போலீசுக்கு போவேன்னு அவனை எச்சரிச்சாரு.
ஆனா, இந்த விஷயம் நடந்த அடுத்த மாசமே யாரோ அவரை
கொலை பண்ணிட்டாங்க” என்றாள் துர்கா.
அனைத்தையும்
கேட்ட செழியன், “ஓகே! செல்வனோட விஷயத்துக்கு நான் அப்புறமா வர்றேன்.
இப்போ நீங்க சுபத்ராவுக்கு நடந்த ஆக்சிடென்டை பத்தி சொல்லுங்க”
என்றான்.
“என்
கணவர் இறந்த பிறகு மறுபடியும் அவன் என்னை மிரட்ட ஆரம்பிச்சான் சார். நான் நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அவன் மேல கம்ப்லைன்ட் கொடுக்கலாம்னு தான்
நினைச்சேன். ஆனா, அவன் என் மகனை கொலை பண்ணிடுவேன்னு
சொல்லி என்னை பயமுறுத்தினான். ஒருநாள் என்னை அவனோட தோப்பு வீட்டுக்கு
வரச் சொன்னான். அங்கே வந்தா எல்லா ஆதாரங்களையும் என்கிட்ட ஒப்படைச்சுருவேன்னு
சொன்னான். நானும் அதை
நம்பி அங்கே போனேன். ஆனா, அவன் என்கிட்ட
தப்பா நடந்துக்குறதுக்கு முயற்சி பண்ணப்போ, எப்படியோ அங்கிருந்து
தப்பிச்சு வந்துட்டேன்” என்றாள் துர்கா.
“அப்படின்னா
அன்னைக்கு நீங்க ரிஷி வீட்டுக்குப் போனதுக்கு என்ன காரணம்?” என்று
செழியன் கேட்க,
“அன்னைக்கு
அவன் எனக்கு ஃபோன் பண்ணி என் மகனை கடத்தி வச்சிருக்கறதா சொன்னான். அந்த வீட்டுக்கு உடனே வந்தா உன் பையனை விட்டுடறேன்னு சொன்னான். அதனால தான் நான் அங்கே போனேன். ஆனா, அவன் சொன்ன மாதிரி என் மகன் அங்கே இல்ல. மறுபடியும் அவன்
என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சான். நான் அங்கிருந்து
தப்பிச்சு வெளியே ஓடி வந்தப்போ தான் சுபத்ரா அந்த வழியா வந்தாங்க. அதனால தான் அவங்ககிட்ட லிஃப்ட் கேட்டேன் சார்” என்று
அனைத்தையும் செழியனிடம் சொல்லி முடித்தாள் அவள்.
அனைத்தையும்
கேட்டவன் ஓரிரு நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை.
பலத்த யோசனையில்
இருந்தவன் துர்காவிடம், “நீங்க எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்திருக்கீங்கன்னு எனக்கு
நல்லா புரியுது” என்றவன்,
“ஆனா,
நான் உங்ககிட்ட உறுதியா சொல்றேன். இனிமே நீங்க
அந்தக் கார்த்திகேயனைப் பார்த்து ஓடி ஔியத் தேவையில்லை. அவனால
உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்குறேன். அதுமட்டுமில்ல மிஸ்டர் செல்வனோட கொலையில புதைஞ்சு இருக்கற சில ரகசியங்களை நான்
நிச்சயமா வெளியே கொண்டு வருவேன்” என்று அவளிடம் தீர்க்கமாகக்
கூற, துர்காவின் மனம் பல மாதங்களுக்குப் பிறகு நிம்மதியை உணர்ந்தது.
அதன் பிறகு, சுயம்புலிங்கத்துடன் சேர்ந்து
காவல் நிலையம் திரும்பினான் அரண் செழியன்.
அவனுக்குத்
தேநீர் கொண்டு வந்து கொடுத்தவர்,
“கடைசியில சுத்தி சுத்தி எல்லா பிரச்சனையிலும் அந்தக் கார்த்திகேயன்
பெயர் தான் சார் அடிப்படுது” என்று கூற,
“அவன்
ராஜா வீட்டு கன்னுக்குட்டில்ல. அதான் யாருக்கும் அடங்காம சுத்திட்டு
இருக்கான். ஆனா, இன்னையோட அவனோட ஆட்டமெல்லாம்
முடிஞ்சது. யாருக்கும் அடங்காதவனை நான் அடக்கி காட்டுறேன்”
என்றான் செழியன்.
அரணாய் வருவான்…
பிரியமுடன்,
சௌஜன்யா…
Nice 👍
ReplyDelete🤩🤩
Delete