Ongoing Novels
அரணாய் நீ வா - Epi 18
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
அத்தியாயம் – 18
மறுநாள்
பார்கவிக்கு ஒரு மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்கான மேக்கப் புக்கிங் இருக்க, விடியற்காலையிலேயே திருமணம்
நடைபெறும் மண்டபத்திற்குக் கிளம்பிச் சென்று விட்டாள்.
தனது அசிஸ்டென்ட்
சரண்யாவுடன் சேர்ந்து, அந்த மணப்பெண்ணுக்கான ஒப்பனையைச் செய்து முடித்தவளை மணப்பெண் வீட்டார் காலை
உணவருந்திவிட்டு செல்லுமாறு கூறவும், அங்கேயே காலை உணவை முடித்துக்
கொண்டு வீட்டிற்குச் செல்லத் தயாரானாள்.
ஆட்டோவில்
சரண்யாவுடன் சேர்ந்து ஏறியவளுக்கு ஒன்று தோன்ற, அருகில் இருந்த ஒரு பழக்கடையில் வண்டியை நிறுத்தச்
சொல்லி இறங்கியவள், தனக்கு வேண்டிய பழங்களை வாங்கிவிட்டு மீண்டும்
ஆட்டோவில் ஏறி அவளுடன் சேர்ந்து பயணப்பட்டாள்.
அரண் செழியன்
அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு முன்னால் ஆட்டோவை நிறுத்தச் சொன்னவள், “சரண்! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ பத்திரமா வீட்டுக்குப்
போயிடு” என்றவள், ஆட்டோவிற்கான பணத்தை அவளிடம்
கொடுத்துவிட்டு மருத்துவமனைக்குள் சென்றாள்.
லிஃப்டில்
ஏறி, மேல் தளத்திற்குச்
சென்றவளுக்கு கொஞ்சம் படபடப்பாகத் தான் இருந்தது. தான் செய்த
தவறை தான் தான், சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தவள்,
‘உஃப்’ என்று பெருமூச்சுவிட்டபடி செழியனைத் தேடிச்
சென்றாள்.
கதவை இரண்டு
முறை தட்டிவிட்டு திறந்து உள்ளே சென்றவளை,
“பார்கவி! வாம்மா… என்ன காலையிலேயே
கிளம்பி வந்திருக்க!” என்று கேட்டார் ஆதிரை செல்வி.
ஹேன்ட் பேக்கை
கழற்றி அங்கிருந்த மேசை மீது வைத்துவிட்டு,
தான் வாங்கி வந்த பழங்களையும் அதனருகே வைத்தவள், “இன்னைக்கு ஒரு முகூர்த்தம் புக்கிங் இருந்தது அத்தை. அதை முடிச்சுட்டு நேரா இங்கே தான் வர்றேன்” என்றவள்,
அரண் செழியனின் படுக்கை காலியாக இருப்பதைக் கண்டு,
“அவரை
எங்கே அத்தை காணோம்?” என்று கேட்டாள்.
“பாத்ரூம்
போயிருக்கான்மா. நீ உட்காரு” என்று அவர்
கூற, செழியனது கட்டிலில் ஓரமாக அமர்ந்து கொண்டாள் அவள்.
“கேன்டீன்ல
உனக்கு டிபன் வாங்கிட்டு வரட்டுமா?” என்று ஆதிரை கேட்க,
“வேண்டாம்
அத்தை. நான் கல்யாண மண்டபத்திலேயே சாப்பிட்டு வந்துட்டேன்”
என்றாள் பார்கவி.
“ஓஹ்…
சரிம்மா!” என்றபடி புன்னகைத்தவர்,
“நீ
வந்ததும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. மதிய சாப்பாடு செய்ய வீட்டுக்குப்
போகணுமே! செழியன் தனியா இருப்பானேன்னு யோசனையிலேயே இருந்தேன்.
நல்ல வேளையா நீ இங்கே வந்துட்ட” என்றார்.
அவளோ அதைக்
கேட்டு மெலிதாகப் புன்னகைக்க,
“உனக்கு வேற எதுவும் முக்கியமான வேலை இருக்காம்மா?” என்ற ஆதிரையிடம்,
“இல்லைங்க
அத்தை! இன்னைக்கு முழுக்க நான் ஃப்ரீ தான்” என்றாள் பார்கவி.
இவர்கள்
பேசிக் கொண்டிருந்த வேளையில்,
பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான் அரண் செழியன்.
அவனைக் கண்டதுமே
அனிச்சை செயலாக எழுந்து நின்றாள் பார்கவி.
அவளை அங்கே, அந்த நேரத்தில் எதிர்பாராதவனோ,
ஒருநொடி அதிர்ந்து, பின்னர் சுதாரித்து,
முகத்தைச் சாதாரணமாக வைத்தபடியே வந்து கட்டிலில் அமர்ந்தான்.
“பாருடா!
என் மூத்த மருமக காலையிலேயே உன்னைப் பார்க்க ஓடி வந்துட்டா!”
என்று ஆதிரை சிரித்தவாறே தன் மகனிடம் கூறவும்,
“ஏன்?
உட்கார்ந்து வர்றதுக்கு ஆட்டோ எதுவும் கிடைக்கலையாமா?” என்று, சற்று சீரியசான குரலில் செழியன் கேட்க,
பார்கவிக்கு சட்டென சிரிப்பு வந்து விட்டது.
ஆதிரையும்
அதைக் கேட்டு சிரித்தபடி, “நேற்று முழுக்க சிடுமூஞ்சி மாதிரி முகத்தை வச்சுட்டு இருந்தான்மா. இப்போ உன்னைப் பார்த்த பிறகு தான் ஐயாவுக்கு உஷார் வந்திருக்கு” என்றார்.
அதைக் கேட்டதும்
செழியனின் பார்வை பார்கவியிடம் பதிய,
அவளோ தன் பார்வையை வேறு திசைக்கு மாற்றி விட்டாள்.
அப்பொழுது
ஆதிரையின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வரவும் அழைப்பை ஏற்று பேசிவிட்டு வைத்தவர், “இனியன் கீழே வெயிட் பண்ணுறானாம்
செழியா. நான் வீட்டுக்குப் போய் உனக்கு சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு
வர்றேன். நம்ம பார்கவி உனக்கு துணைக்கு இருப்பா” என்றவர், தன் மகனின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல்,
“பார்த்துக்கோம்மா!”
என்று பார்கவியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச்
சென்று விட்டார்.
அவர் சட்டென
அவ்வாறு கூறிவிட்டு சென்று விடவும்,
பார்கவிக்குத் தான் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.
சுடிதார்
துப்பட்டாவின் நுனியை சுற்றியபடியே அவள் நாற்காலியில் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்க, “நீ இப்போ என்ன ட்ரை பண்ணுற
பார்கவி?” என்று
கேட்டான் செழியன்.
திடீரென
அவன் கணீர் குரலில் பேசவும் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், “ஆங்…” என்று குழம்பிப் போய் அவனைப் பார்த்தாள்.
“இல்ல…
அன்னைக்கு நான் வேண்டாம்னு சொல்லிட்டு தானே கிளம்பிப் போன! அப்புறம் எதுக்காக என்னை இப்போ தேடி வந்திருக்கேன்னு கேட்டேன்” என்றவனிடம்,
“நீங்க
வேண்டாம்னு நான் சொல்லலை. நீங்க பார்க்கிற போலீஸ் வேலை வேண்டாம்னு
தான் சொன்னேன்” என்று சற்றே ஹஸ்கியான குரலில் அவள் பதில் கூறவும்,
“ஏதோ
ஒண்ணு! நீ என்னோட வேலைக்கு நோ சொன்னாலும், எனக்கு நோ சொன்னதா தான் அர்த்தம்” என்றான் அவன்,
அழுத்தந் திருத்தமாக.
இப்பொழுது
பெருமூச்சுவிட்டபடி எழுந்து வந்து அவனருகே நின்றவள், “தப்பு தான் செழியன். அன்னைக்கு
ஏதோ ஒரு யோசனையில உங்ககிட்ட மடத்தனமா பேசி தொலைச்சுட்டேன். தப்பை
திருத்திக்கறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு தரக் கூடாதா?” என்று
கெஞ்சுதலாக அவனிடம் கேட்டாள்.
அவளையே சில
நொடிகள் மௌனமாகப் பார்த்தவன்,
“அப்படின்னா… அதுமட்டும் தான் தப்பா பார்கவி.
நீ வேற எந்தத் தப்புமே செய்யலையா?” என்று கேட்க,
“புரியல
செழியன்! நான் வேறென்ன தப்பு செஞ்சேன்?” என்று புரியாமல் கேட்டாள் அவள்.
“உனக்கு
புரியுற மாதிரியே சொல்லட்டுமா?” என்றவன், எழுந்து அந்த அறையில் இருந்த ஜன்னல் ஓரமாகச் சென்று நின்று கொண்டான்.
இரு கைகளையும்
மார்பிற்குக் குறுக்கே கட்டி நின்று அவளைப் பார்த்தவன், “அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல எந்த
மாதிரி ஒரு நிலமையில நீ என்னை விட்டுட்டு போனேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?”
என்று அவளிடம் கேட்கவும், அவனது கேள்விக்கான அர்த்தம்
புரிந்து தலைகவிழ்ந்து நின்றாள் அவள்.
“ஆயிரம்
தான் என்மேல கோபம் இருந்தாலும், நான் அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல
படுத்திருக்கும் போது, என்கிட்ட சண்டை போட்டுட்டு கிளம்பி போனதை
உன்னால எந்த வகையிலாவது நியாயப்படுத்த முடியுமா?” என்று செழியன்
கேட்கவும் இல்லை என்று தலையசைத்தவள்,
“ஆனா,
அன்னைக்கு!” என்று ஏதோ சொல்ல வரவும், அவளை பேச வேண்டாம் என்று கைநீட்டித் தடுத்தான் அரண் செழியன்.
“ஒரு
நிமிஷம்! முதல்ல நான் முழுசா பேசி முடிச்சுடறேன்!” என்றான்.
அதன் பிறகு, செழியன் பேசி முடிக்கும் வரை,
அவள் தன் வாயைத் திறக்கவே இல்லை.
“சரி…
அன்னைக்கு எனக்கு அடிப்பட்டதைப் பார்த்த பதட்டத்துல, நீ அப்படி நடந்துகிட்டதாகவே வச்சுப்போம். ஆனா,
அதுக்கப்புறம் ஊருக்குப் போனதும் எனக்கு ஒரு ஃபோன் பண்ணி நலம் விசாரிக்கணும்னு
கூட உனக்குத் தோணல இல்ல!”
“ஓகே
ஃபைன்! அதையுமே விட்டுரலாம். நான் உனக்கு
எத்தனை தடவை கால் பண்ணேன்; அதுமட்டுமா? மெசேஜ் கூட பண்ணேன்! ஆனா, அப்போ
கூட என்கிட்ட பேச நீ தயாரா இல்ல. அவ்வளவு ஏன்? நேத்து எங்க வீட்டுக்கு வந்திருந்த…” என்றவன்,
சற்று இடைவெளிவிட்டு,
“அதுவும்
உங்க அப்பா சொன்னதால தான் வந்திருப்ப! எனக்குத் தெரியாதா?”
என்று அவன் பேசப் பேச பார்கவிக்கு அவனது இந்தப் பேச்சு எதை நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறது என்று நன்றாகவே புரிந்தது.
விழிகளில்
திரண்ட நீரை முயன்று அணைப்போட்டு தடுத்தபடி,
அவன் பேசுவதை முழுதாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“எங்க
வீட்டுக்கு வந்தும் கூட, உனக்கா என்னை வந்து பார்க்கணும்னு தோணல
இல்ல! இனியனும், ஷாரதாவும் உன்னை கன்வின்ஸ் பண்ணி என்னை பார்க்க வைக்கிற அளவுக்கு
நிலைமை இருக்குதுன்னா… அப்புறம், வீணா நான்
மட்டும் இந்த உறவை தூக்கி சுமந்து என்ன பிரயோஜனம்?” என்று செழியன்
கூறவும், வேகமாக அவனருகே வந்தாள் பார்கவி.
“ஐ
ஆம் சாரி செழியன்! நான் பண்ணதெல்லாம் தப்பு தான். உங்களை தேவையில்லாம காயப்படுத்திட்டேன். ரியலி சாரி செழியன்.
ஆனா, என் மனசை உடைக்கிற மாதிரி இதுக்கு மேல எதுவும்
சொல்லீடாதீங்க ப்ளீஸ்!” என்று கண்ணீர் மல்க பேசியவளைப் பார்த்து,
“இப்போ
கூட என் மனசு, நான், எனக்குன்னு நீ உன்னைப்
பத்தி மட்டுமே தான் யோசிக்குற. என்னை பத்தி… என் மனசைப் பத்தி… அதுல இருக்கற ரணத்தைப் பத்தி…
நீ கொஞ்சம் கூட யோசிச்சு பார்த்ததே இல்லை” என்றவன்,
தனது ஆள்காட்டி விரலை அவளை நோக்கி சுட்டிக் காட்டியபடி,
“யூ
ஆர் அ செல்ஃபிஷ் பெர்சன் பாரூ!” என்றான்.
அதைக் கேட்ட
பார்கவிக்கோ தலை கிருகிருவென சுற்றுவது போன்றிருக்க, அருகில் இருந்த கட்டில் கம்பியைப் பிடித்துக்
கொண்டாள்.
அன்றொரு
நாள், செழியன்
தன்னைப் பெண் பார்க்க வருவதற்கு முன்னால், தன்னைப் பார்த்து ஷாரதா
சொன்ன அதே வார்த்தை, ‘உன்னை மாதிரி ஒரு பக்கா சுயநலக்காரியை நான்
பார்த்ததே இல்ல!’ என்பது, இன்றும் தன்னை
பின் தொடர்ந்து வருகிறதென்றால், தான் சுயநலமாகத் தான் நடந்து
கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டாள் அவள்.
அவனது வார்த்தைகளில்
தெறித்த ‘உண்மை
தீ!’ அவளது மனசாட்சியை சுட்டது!
அனைத்தையும்
உள்வாங்கிய அவளது மனதில் மலையளவிற்கு பாரம் ஏறிக் கொள்ள, கை கால்கள் துவண்டு போய் அப்படியே
கட்டிலில் பொத்தென அமர்ந்து விட்டாள்.
தொடர்ந்து
செழியன், தான்
சொல்ல வந்த அனைத்தையும் வரிசையாக அவளிடம் கூறினான்.
“என்னோட
வருங்கால மனைவியா என்னோட உயிர் மேல உனக்கிருந்த அக்கறை, ஒரு மனிதாபிமானம்
உள்ள மனுஷியா என் உடம்பு மேல இருக்கலையே! அப்படி இருந்திருந்தா…
இந்த மூணு நாள்ல ஒரு முறையாவது என்னோட ஹெல்த் எப்படி இருக்குன்னு ஒரு
வார்த்தை கேட்டிருப்ப. ஆனா, நீ அப்படி எதுவுமே
செய்யல!” என்று செழியன் கூற, கூனிக் குறுகிப்
போனாள் அவள்.
அவளது நிலை
அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும்,
தான் சொல்ல வந்த விஷயங்களை முழுதாக அவளிடம் சொல்லிவிடும் நோக்கத்தில்
உறுதியாக இருந்தான் அரண் செழியன்.
“ஆனா,
இப்போ எதுக்காக இங்கே வந்து உட்கார்ந்து இருக்கேன்னு தான் எனக்குப் புரியல.
இதை நான் என்னன்னு எடுத்துக்கறது பாரூ?” என்றவனை
நீர் நிறைந்த விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தவள்,
“சத்தியமா
உங்ககிட்ட மன்னிப்பு கேட்டு, சமாதானம் செய்யணும்னு தான் வந்தேன்
செழியன். என்னை நம்புங்க” என்று கூறி அழ,
“நான்
தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் பார்கவி. விருப்பம் இல்லாம
இருந்தவளை ஒருவகையில இந்த உறவுக்குள்ள இழுத்துட்டு வந்ததுல எனக்கும் பங்கிருக்கு.
அதுக்காக நான் உன்கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன்!” என்றான் அவன்.
அதைக் கேட்டவளுக்கு
என்ன சொல்வதென்றே புரியவில்லை.
ஆனால், அரையடி தூரத்தில் நின்றிருந்தாலும்,
நீண்ட தூரம் தன்னைவிட்டு அவன் விலகிச் சென்றுவிட்டான் என்பது மட்டும்
அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
கண்ணீரை
துடைத்தபடி எழுந்தவள், அவனருகே சென்று, “இப்போ என்ன முடிவெடுத்திருக்கீங்க செழியன்?”
என்று கேட்க,
“அர்த்தமில்லாத
இந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வச்சுரலாம்னு முடிவெடுத்திருக்கேன் பார்கவி. ஒருவேளை இன்னைக்கு ஏதோ ஒரு வகையில கன்வின்ஸ் ஆகி நாம கல்யாணம் பண்ணிட்டு,
நாளைக்கே ஏன்டா கல்யாணம் பண்ணிகிட்டோம்னு யோசிக்குற அளவுக்கு ஒரு நிலைமை
வந்துச்சுன்னா… அது நம்ம இரண்டு பேரோட வாழ்க்கைக்குமே பாதகமா
முடிஞ்சுரும். சோ… லெட் அஸ் என்ட் திஸ்
ரிலேஷன்ஷிப்!” என்றான் செழியன்.
அதைக் கேட்டு
அதிர்ச்சியடைந்த பார்கவி, முழுதாக இரண்டு நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை.
திடீரென
அந்த அறைக்கதவை திறந்து கொண்டு நர்ஸ் ஒருவர் உள்ளே வரவும் தான், தனது யோசனை விடுத்து நிகழ்காலத்திற்கு
வந்தாள் அவள்.
உள்ளே வந்த
செவிலியர், “ப்ரேக்ஃபாஸ்ட்
சாப்பிட்டாச்சா சார்?” என்று செழியனிடம் கேட்க, அவன், ஆமாம் என்று தலையசைத்தான்.
பின்பு, அவனை கட்டிலில் அமரச் சொல்லி
அவனது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார் அவர்.
“என்ன
சார் பிபி அதிகமா இருக்கு? உங்களுக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப்
போகணும்னு ஆசை இருக்கா இல்லையா?” என்று அந்த நர்ஸ் கேட்க,
அவனோ பார்கவியிடம் பார்வை பதித்தபடி,
“எனக்கு
சமீபமா கொஞ்சம் டென்ஷன் இருந்தது சிஸ்டர். ஆனா, இனிமே அப்படி எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன்!” என்றான்
அவன்.
அதைக் கேட்டவரோ, “பிபியை கன்ட்ரோல்ல வச்சுக்கோங்க
சார்” என்றபடி, அவனுக்கு கொடுக்க வேண்டிய
மாத்திரைகளையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அரண் செழியன்
சொன்னதைக் கேட்டவளோ தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனருகே சென்றாள்.
அவனோ லேசாக
விழிகள் கலங்கியபடி அவளைப் பார்க்கவும்,
அவளுக்கு பேச்சே வரவில்லை!
இம்முறையும்
அவனே தான் பேச்சை ஆரம்பித்தான்.
“நம்ம
பிரியுறதால இனியன் – ஷாரதாவோட கல்யாண விஷயத்துல எந்தப் பிரச்சனையும்
வராது. அதை நினைச்சு நீ கவலைப்பட வேண்டாம்” என்று செழியன் கூற, அவள் சரியென்று தலையசைத்தாள்.
தொடர்ந்து
அவன், “இந்த விஷயத்தைப்
பத்தி நானே வீட்ல பேசுறேன்!” என்று கூற, அதை உடனடியாக மறுத்தவள்,
“இல்ல!
இதைப் பற்றி எல்லார்கிட்டேயும் நானே பேசுறேன். இந்தக் கல்யாணம் எனக்குப் பிடிக்காம நின்னு போனதாகவே இருக்கட்டும்.
யார் என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்ல. நான்
செஞ்ச தப்புக்கு கிடைக்கிற தண்டனையா அது இருக்கட்டும்!” என்றாள்.
அரண் செழியனும்
அதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை!
“எனிவே!
உன்கூட பழகின இந்த நாட்களை நான் நிச்சயமா மறக்க மாட்டேன் பார்கவி.
ஈசலோட வாழ்க்கை மாதிரி நம்ம உறவுக்கு ஆயுசு கம்மியா இருந்தாலும்,
நான் மனசார உன்னை காதலிச்சதென்னவோ உண்மை!” என்று
அவன் கூறவும், தனது கீழுதட்டை கடித்து தனது உணர்வு பிரளயத்தைக்
கடினப்பட்டு கட்டுப்படுத்தி நின்றாள் அவள்.
“என்
மனசுல இருக்கற எல்லாத்தையும் முழுசா உன்கிட்ட கன்ஃபெஸ் பண்ணிட்டேன். இனிமே எந்த வகையிலேயும் என்னால உனக்குத் தொந்தரவு இருக்காது!” என்றவன், அவளைப் பார்த்து கரம் நீட்ட, அவளும் தயக்கத்துடன் அவனிடத்தில் தன் கரம் நீட்டினாள்.
அவளது கையைப்
பற்றி குலுக்கியவன், “என்னைவிட எல்லா விதத்திலேயும் பெஸ்டான ஒரு வாழ்க்கைத் துணை உனக்கு அமைய வாழ்த்துகள்!”
என்று கூற, சட்டென அவனது கரத்தில் இருந்து தனது
கையை உருவிக் கொண்டவள், தனது கைப்பையையும் எடுத்துக் கொண்டு,
வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.
புயல் வேகத்தில்
ஓடியவள், லிஃப்டிற்குக்
கூட காத்திருக்காமல் படிக்கட்டு வழியாக இறங்கி, அந்த மருத்துவமனையில்
இருந்து வெளியே ஓடினாள்.
மருத்துவமனைக்கு
பக்கவாட்டில், ஒரு மரத்தடியில் இருந்த மர பெஞ்சில் சென்று அமர்ந்தவள், தனது இரு கரங்களாலும் முகத்தை மூடிக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுதாள்.
தான் செய்த
தவறை நினைத்து அழுதாள்!
செழியனின்
நினைவுகளை முழுதாக தன் மனதில் இருந்து அகற்ற எண்ணி அழுதாள்!
தன் துக்கம்
தீரும் மட்டும் அழுது கரைந்தாள்!!!
அங்கே வெகுநேரம்
அமர்ந்து அழுபவளையே தனது அறையின் ஜன்னலருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அரண்
செழியன்.
அவளில் பார்வை
பதித்திருந்த அவனது விழிகளிலும் கண்ணீர்!
அன்பிற்கும்
உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்,
புன்கணீர் பூசல் தரும்!
(அன்புடைமை
8 – குறள் 71)
(உள்ளத்தில்
இருக்கும் அன்பை யாராலும் தாழ்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பம் காணுமிடத்தில் கண்ணீர்துளி வாயிலாக அந்த அன்பு வெளிப்பட்டு
விடும்)
இவர்களின்
இந்தக் கண்ணீர், இருவரின் சோகத்தையும் குறைக்கும் மருந்தாகுமா?
அதுவே, இவர்களின் காயங்களுக்குத்
தீர்வாகுமா?
இக்கண்ணீர்
துளிகள் காட்டிக் கொடுத்த இவர்களின் அன்பு கை கூடுமா?
காத்திருந்து
தெரிந்து கொள்வோம் பாகம் இரண்டில்!
அரணாய் நீ
வா! பாகம் ஒன்று
நிறைவு பெற்றது…
வரும் திங்கள்
முதல் பாகம் இரண்டில் இவர்களுடன் நமது அடுத்தப் பயணம் ஆரம்பமாகும்.
மீண்டும்
சந்திப்போம்…
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- X
- Other Apps
Comments
Intresting update 👍👍🥳
ReplyDeleteThanks a lot ka♥♥
Delete