Ongoing Novels
அரணாய் நீ வா (பாகம் 2) - Epi 7
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
பாகம்
2
தனது மகன்
சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தார் ஆதிரை செல்வி.
அரண் செழியன், பார்கவியின் கரத்தை இறுக்கமாகப்
பிடித்து நின்றிருப்பதைப் பார்த்ததுமே, அவன் ஒரு முடிவுடன் தான்
இங்கே வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டார் அவர்.
பார்கவியின்
மீது அவருக்கு அளவிற்கு அதிகமாகக் கோபம் வந்தாலும், அதைக் கட்டுப்படுத்தியபடி, “என்ன செழியன் பேசுற நீ? இவளை இப்போ எதுக்காக இங்கே கூட்டிட்டு
வந்திருக்க?” என்று கேட்டார்.
“அம்மா!
வீட்டுக்கு வந்தவங்களை உள்ளே வான்னு ஒரு வார்த்தை கூப்பிட மாட்டீங்களா?”
என்று கேட்டவனிடம், “வர்றதா இருந்தா நீ மட்டும்
வா செழியா!” என்றார் அவர்.
“ம்மா…”
என்றவனை நிமிர்ந்து பார்த்த ஆதிரையிடம், “இந்த
ஜென்மத்துல பார்கவி தான் என்னுடைய மனைவி. என் முடிவில் எந்த மாற்றமும்
இல்ல” என்றவன், திரும்பி அவளைப் பார்த்தான்.
பார்கவியோ
தலைகவிழ்ந்தபடி நின்றிருக்க,
“பாரூ… நீ வா!” என்றபடி அவளது
கரத்தை விடாமலேயே தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் அவன்.
அதற்குள்
சத்தம் கேட்டு சண்முகநாதன், அவருடைய அறையில் இருந்து வெளியே வந்தார். இருவரையும்
மாற்றி மாற்றி பார்த்தவருக்கு, ஓரளவிற்கு விஷயம் புரிந்தது.
தன் மகனையும், பார்கவியையும் அங்கே ஒன்றாகப்
பார்த்ததில் அவருக்கு மகிழ்ச்சியே!
“செழியன்!
வாப்பா” என்றவர், அவனருகே
நின்றிருந்தவளைப் பார்த்து, “வாம்மா பார்கவி!” என்றார்.
“அப்பா…”
என்றபடி சண்முகநாதனிடம் வந்த செழியன், “உங்ககிட்ட
ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ஆனா, அதுக்கு
முன்னாடி இனியனும் ஷாரதாவும் வந்துரட்டும்” என்றான்.
பின்னர்
இனியனின் அலைபேசிக்கு அழைத்தவன்,
அவனையும் ஷாரதாவையும் கீழே வருமாறு கூறினான்.
அடுத்த இரண்டு
நிமிடங்களில் அவர்களும் ஹாலுக்கு வந்துவிட,
தன் அக்காவை அங்கே பார்த்த ஷாரதாவிற்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒன்றாக
வந்தது.
ஓடிச் சென்று
அவளை கட்டியணைத்துக் கொண்டவள்,
“அக்கா! எப்படி இருக்க?” என்று கேட்க, “நான் நல்லா இருக்கேன் ஷாரூ” என்றாள் பார்கவி.
இதைக் கண்ட
ஆதிரையோ, ‘க்கும்’
என்றபடி தனது மோவாயை தோளில் இடித்துக் கொண்டார்.
இனியனோ தன்
அண்ணனை ஆச்சர்யம் விலகாமல் பார்த்து நிற்க,
“நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நானும் பார்கவியும்
கல்யாணம் செஞ்சுக்க விரும்புறோம். அதுமட்டுமில்ல… இந்தக் கல்யாணம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு
சீக்கிரம் நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன்” என்றான் செழியன்.
அதைக் கேட்டதும்
தன்னருகே நின்றிருந்த ஷாரதாவிடம்,
“எங்க அண்ணனோட வேகத்தைப் பார்த்தியா ஷாரூ?” என்று
இனியன் கூற,
“இந்த
விஷயத்துல உன்னைவிட செழியன் மாமா தான் பெஸ்ட். நீயும் இருக்கியே!
நம்ம லவ் மேட்டரை உங்க வீட்டுல சொல்றதுக்கு ஐம்பது தடவை யோசிச்சவன் தானே!”
என்றாள் ஷாரதா.
“ஹலோ!
ஹலோ! ஐம்பது தடவை யோசிச்சாலும் எங்க அண்ணனுக்கு
முன்னாடி கல்யாணம் பண்ணி உன்னை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேனா இல்லையா?”
என்று, தனது சட்டைக் காலரை தூக்கி விட்டபடி அவன்
பதில் கூறவும்,
“வாயை
மூடிட்டு பேசாம நில்லு இனியன். இல்லைன்னா இன்னைக்கு நைட் நீ தனியா
வெளியில தூங்க வேண்டி வரும்” என்றாள் அவள்.
அதிர்ந்து
போனவனோ, “ஆ…
ஊன்னா… இது ஒண்ணை சொல்லியே என் வாயை அடைச்சுருவா!”
என்று முணுமுணுத்தபடி,
“தயவுசெஞ்சு
அந்த மாதிரி எதுவும் பண்ணி தொலைச்சுராத தாயே! உனக்குப் புண்ணியமா
போகும்” என்றுவிட்டு, அதற்கு மேல் எதுவும்
பேசாமல் அமைதியாக நின்றான்.
அரண் செழியனின்
பிடிவாதம் ஆதிரைக்குப் புரிந்தாலும்,
அவருமே தனது முடிவில் பிடிவாதமாகத் தான் நின்றிருந்தார்.
“நீ
என்ன தான் சொன்னாலும் என்னால இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது செழியா!”
என்றவரிடம்,
“ஏன்மா?
நாங்க தான் எங்களுக்குள்ள இருந்தப் பிரச்சனைகளைப் பேசி சரி பண்ணிட்டோமே”
என்று செழியன் கூற,
“அதெல்லாம்
எனக்குத் தேவையில்ல” என்றவர் பார்கவியைச் சுட்டிக் காட்டி,
“எனக்கு,
இவ இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா வர்றதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல”
என்றார்.
அங்கே ஒரு
பெரிய சண்டை வலுக்கும் அபாயம் தெரியவும்,
ஆதிரையிடம் சென்றார் சண்முகநாதன்.
“செல்வி!
நீ முதல்ல இப்படி வந்து உட்காரு. ஏற்கனவே உனக்கு
பிரஷர் அதிகமா இருக்கு, டென்ஷன் ஆகக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காருல்ல”
என்று அவர் கூற,
“எனக்கு
பிரஷர் ஏறி என்ன அசம்பாவிதம் ஆனாலும் பரவாயில்ல. இந்தக் கல்யாணத்துக்கு
நான் ஒத்துக்க மாட்டேங்க. இந்த சுயநலக்காரி என் மகனுக்கு மனைவியா
வந்தா, அவனோட வாழ்க்கையே நாசமாப் போயிரும்” என்று தனது முடிவில் உறுதியாக நின்றார் ஆதிரை.
அவர் பேசியதைக்
கேட்டதும், பார்கவிக்கு
அழுகை வருவது போலிருந்தது. அவளது முகத்தில் தெரிந்த கலக்கத்தைக்
கண்ட அரண் செழியன், பார்கவியின் கரத்தை இறுக்கமாகப் பற்றி அழுத்தி
அவளுக்கு ஆறுதலளித்தான்.
ஷாரதாவிற்கோ
மூக்கிற்கு மேல் கோபம் வந்தது.
“என்ன
இனியன் இது? உங்க அம்மா எங்க அக்காவைப் பத்தி வாய்க்கு வந்தபடி
பேசிட்டு இருக்காங்க. என்னால இதையெல்லாம் கேட்டுட்டு சும்மா இருக்க
முடியாது” என்றவள், நேராக ஆதிரையை நோக்கிச்
செல்லவும், அவளது கரம் பற்றி தடுத்து நிறுத்தினான் இனியன்.
“ஒரு
நிமிஷம் இரு ஷாரூ! ஏற்கனவே இங்கே ஒரு பூகம்பம் வெடிச்சுட்டு இருக்கு.
உன் பங்குக்கு நீயும் போய் தேவையில்லாம புதுசா எதையாவது பத்த வச்சுராத.
அம்மாகிட்ட நான் போய் பேசுறேன்” என்றான்.
பின்னர்
ஆதிரையிடம் சென்றவன், “அம்மா…” என்று அழைக்கவும், திரும்பி
அவனை வெட்டும் பார்வையுடன் முறைத்தார் அவர்.
“என்னடா?
நீயும் உங்க அண்ணனுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கியா?” என்றவர், அவனுக்கு பின்னால் நின்றிருந்த ஷாரதாவைப் பார்த்தபடி,
“இல்ல…
உன் பொண்டாட்டியோட குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேச வந்திருக்கியா?”
என்று கேட்டார்.
அதைக் கேட்ட
பார்கவிக்கு மிகவும் மனவருத்தமாக இருந்தது.
தன் கரத்தைப்
பற்றியிருந்தவனின் கரம் தொட்டவள்,
“செழியன்! என்னால வீணா எந்தப் பிரச்சனையும் வேண்டாம்.
நான் இங்கிருந்து போயிடுறேன்” என்று கூற,
பற்களைக் கடித்தான் அரண் செழியன்.
“என்னை
விட்டு நீ இப்போ போறதா இருந்தா… என்னை மொத்தமா விட்டுட்டு போறதா
அர்த்தம். ஒருவேளை உனக்கு அதுதான் விருப்பம்னா தாராளமா இங்கிருந்து
கிளம்பு பார்கவி” என்று கர்ஜனையானக் குரலில் அவன் கூறவும்,
அவள் அவனையே உறைந்து போய் பார்த்து நின்றாள்.
அப்படியொரு
வார்த்தையை அவன் சொன்ன பிறகு,
அங்கிருந்து செல்ல அவளுக்கும் தான் மனம் வருமா என்ன?
இன்னும்
இறுக்கமாகச் செழியனின் கரத்தைப் பற்றிக் கொண்டு தனக்குத் துணையாக அவன் இருக்கிறான்
என்கிற தைரியத்துடன் அங்கே நின்றிருந்தாள்.
ஒருபுறம்
அரண் செழியன்; மற்றொரு புறம் ஆதிரை செல்வி என்று, இருவரும் தங்கள் பக்க
நியாயங்களுடன் பிடிவாதமாக நின்றிருந்தனர்.
தன் அன்னையை
சமாதானம் செய்ய முயன்ற இனியனுக்கு,
அது தற்சமயம் சாத்தியமில்லை என்று தோன்றவும், வேகமாக
நடந்து வீட்டிற்கு வெளியே வந்தான்.
அவனை பின்
தொடர்ந்து வந்த ஷாரதா, “என்ன இனியன்! அத்தை எதுக்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்குறாங்க?”
என்று கேட்க,
“அதுதான்
எனக்கும் புரியல ஷாரதா. வழக்கமா அம்மாவுக்கு சில விஷயங்கள்ல கோவம்
வரும் தான். ஆனா, இந்த அளவுக்கு அவங்க பிடிவாதமா
இருந்து நான் பார்த்ததே இல்ல” என்றான்.
“இப்போ
என்ன பண்ணுறது இனியன்?” என்றவளிடம்,
“அம்மா
யார் பேச்சை கேட்குறாங்களோ இல்லையோ மரகதம் பெரியம்மாவோட பேச்சை கண்டிப்பா கேட்பாங்க.
நான் உடனே அவங்களுக்கு ஃபோன் பண்ணி இங்கே வரச் சொல்லுறேன்” என்றபடி, தனது அலைபேசியில் இருந்து மரகதத்திற்கு அழைத்து
நடந்த விஷயங்களைப் பற்றி அவரிடம் விபரமாகக் கூறினான்.
அனைத்தையும்
கேட்ட மரகதம், அடுத்த பத்தாவது நிமிடத்தில் தனது தங்கை வீட்டிற்கு வந்து விட்டார்.
பார்கவியின்
கரம் பற்றி நின்றிருந்த அரண் செழியனைப் பார்த்தபடியே ஆதிரை செல்வியிடம் சென்றார் அவர்.
கோபத்துடன்
ஆதிரை சோஃபாவில் அமர்ந்திருக்க,
அவரருகே அமர்ந்து, “செல்வி!” என்றபடி அவரது தோள் தொட்டார் மரகதம்.
உடனேயே ஆதிரையின்
விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
“பாருங்கக்கா…
நான் பேசுனா மறுத்து ஒரு வார்த்தை பேசாத என் புள்ள, இப்போ எவளோ ஒருத்திக்காக என்னையே எதிர்த்து நிக்கிறான். இதையெல்லாம் பார்த்துட்டு இன்னுமா நான் உயிரோட இருக்கணும்?” என்று அழுதவாறே பேச,
“ம்ப்ச்…”
என்ற மரகதம்,
“இங்கே
பாரு செல்வி! நாம தானே அந்தப் பொண்ணை செழியனுக்குப் பார்த்து
சம்பந்தம் பேசுனோம். என்ன காரணமோ? ஏதோ ஒரு
மனஸ்தாபத்துல இரண்டு பேரும் பிரிஞ்சு போயிட்டாங்க. இப்போ…
கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒண்ணா வந்து நிக்குறாங்கன்னா, அவங்களுக்குள்ள புரிதல் இல்லாமையா?”
“உன்
மகன் உன்னை எதிர்த்து நிக்குறான்னு நினைக்குறியா? நல்லா பாரு…
அவன் உன்னோட சம்மதத்துக்காத் தான் உன் முன்னாடி நின்னுட்டு இருக்கான்”
என்று அவர் கூறவும், ஆதிரையின் கோபம் சற்று குறைந்தது.
“நீங்க
எல்லாரும் என்ன சொன்னாலும், அந்தப் பொண்ணை என் மகனுக்கு கட்டி
வைக்க நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். அவ என் செழியனை வேண்டாம்னு
சொல்லி தூக்கி எறிஞ்சுட்டு போனவ. நாளைக்கும் ஏதாவது ஒரு பிரச்சனைன்னா
அதே மாதிரி அவனை விட்டுட்டு போக மாட்டான்னு என்ன நிச்சயம்?” என்றார்
ஆதிரை.
அதைக் கேட்டதும்
அரண் செழியனுக்கு, பார்கவியின் பக்கத்திலுள்ள நியாயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தியே ஆக வேண்டும்
என்று தோன்றியது.
“அம்மா…”
என்று அவன் அழைக்க, அனைவரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.
“நீங்க
நினைக்கற மாதிரி பார்கவி எதுவும்…” என்று அவன் பேச ஆரம்பித்ததுமே,
அவன் என்ன பேச வருகிறான் என்பதை புரிந்து கொண்டாள் அவள்.
சட்டென அவனது
கரம் பற்றி தடுத்து, வேண்டாம் என்று பார்கவி தலையசைக்க, அவளது கரத்தை பிரித்தெடுத்தவன்,
நேராக தன் அன்னையிடம் சென்றான்.
தரையில்
முட்டிக் கால் போட்டு அமர்ந்து,
அவரது கைகளைப் பற்றியவன், “உங்க எல்லார்கிட்டேயும்
இன்னைக்கு நான் ஒரு உண்மையைச் சொல்லணும்னு நினைக்கிறேன். நீங்க
நினைக்கிற மாதிரி பார்கவி என்னை வேண்டாம்னு சொல்லலை. எங்க இரண்டு
பேருக்கும் ஒத்து வராதுன்னு சொல்லி, நான் தான் நடக்க இருந்த கல்யாணத்தை
தடுத்து நிறுத்துனேன்” என்று அவன் கூற, ஆதிரை உட்பட அங்கு நின்றிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
செழியன்
சொன்னதைக் கேட்டதும், ஷாரதா வேகமாக தன் சகோதரியை நோக்கி விரைந்தாள்.
அவளது கரம்
பற்றி, “எனக்கு
அப்பவே தெரியும்கா. இந்தக் கல்யாணத்தை நீ வேண்டாம்னு சொல்ல வாய்ப்பே
இல்லைன்னு நான் இனியன்கிட்ட கூட சொன்னேன். ஆனா, அவன் என்னை நம்பவே இல்ல” என்றாள்.
இனியனோ செழியனிடம், “ஏண்ணா? இந்தக் கல்யாணத்தை நீ நிறுத்த என்ன காரணம்?” என்று கேட்க,
“அது…” என்று சில நொடிகள் யோசித்தவன், மேலோட்டமாக, அன்று குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகத் தான்
சென்ற போது, தனக்கு ஏற்பட்ட ஆபத்தைப் பார்த்து பயந்து போய்,
பார்கவி இந்தப் போலீஸ் வேலையை விட்டு விடுமாறு தன்னிடம் சொன்னதைப் பற்றி
மட்டும் அவர்களிடம் கூறினான்.
“எனக்குப்
பிடிச்ச போலீஸ் வேலையை விடச் சொன்னதால தான் எங்க இரண்டு பேருக்கும் ஒத்து வராதுன்னு
சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொன்னேன். ஆனா, அவ அப்படி சொன்னதுக்கு காரணம், என்மேல இருந்த அன்பினால
தானே ஒழிய, வேற எதுக்காகவும் இல்லைன்னு எனக்கு சமீபமா தான் புரிஞ்சது”
என்று எந்த இடத்திலும், யாரிடமும் பார்கவியை விட்டுக்
கொடுக்காமல் பேசினான் செழியன்.
“அப்படின்னா…
அவ சுயநலமா அவளைப் பத்தி மட்டும் தானே யோசிச்சிருக்கா? ஏன் நாம அவளை பொண்ணு பார்க்கப் போனப்போ அவளுக்கு நீ போலீஸ்னு தெரியலையாமா?
சும்மா அவளுக்காக சப்போர்ட் பண்ணி பேசாத செழியா!” என்றார் ஆதிரை.
அரண் செழியனோ
பெருமூச்சு விட்டபடி, “ம்மா… அவ சுயநலமா யோசிச்சா தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, எல்லாத்துக்கும்
மேல அவ என்னோட உயிரைப் பத்தி கவலைப்பட்டா. அதுல என்மேல அவ வச்சிருக்கற
அக்கறையும் மறைஞ்சிருக்கறதை நீங்க யோசிச்சு பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்”
என்றவன்,
“இந்த
உலகத்துல யாருதான்மா சுயநலமா இல்ல. எல்லாரும் சுயநலன் விடுத்து
பொதுநலனைப் பத்தி மட்டுமே தான் யோசிச்சுட்டு இருக்காங்களா, சொல்லுங்க!
நம்ம குடும்பம் நல்லபடியா இயங்குறதுக்கு சில இடங்கள்ல நாம சுயநலமா நடந்துக்கறது
தப்பில்ல” என்றான்.
அவன் பேசியதைக்
கேட்டதும் மரகதத்தைத் திரும்பிப் பார்த்த ஆதிரை, “பார்த்தீங்களாக்கா? என்
மகனை அவ எப்படி மாத்தி வச்சிருக்கான்னு பார்த்தீங்களா? இனிமே
நாம சொல்ற எதுவுமே அவன் மண்டையில ஏறாது” என்று சொல்லி மீண்டும்
அழ ஆரம்பிக்க, செழியனுக்கு என்ன சொல்லி அவரை சமாதானம் செய்வது
என்று புரியவில்லை.
அங்கே நடப்பதைப்
பார்த்த பார்கவிக்கு லேசாக தலை சுற்றுவது போலிருக்க, ஷாரதாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.
அவளது நிலை
புரிந்து ஷாரதாவும் அவளை அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர வைத்து, அவளுக்குத் தண்ணீர் பருகக்
கொடுத்தாள்.
அரவம் கேட்டு
திரும்பி பார்கவியைப் பார்த்தவனுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது.
ஆனால், முதலில் தன் அன்னையை சமாதானம்
செய்துவிட்டு அவளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன், “காலேஜ்
முடிச்சுட்டு நான் போலீசாகப் போறேன்னு சொன்னதும் நீங்க என்ன சொன்னீங்கன்னு உங்களுக்கு
ஞாபகம் இருக்காம்மா?” என்று செழியன் ஆதிரையிடம் கேட்க,
அவரது கண்கள் விரிந்தன.
அரண் செழியன்
தன் பெற்றோரிடம் தனது போலீஸ் கனவைப் பற்றி கூறவும், அதை முதலில் எதிர்த்தது ஆதிரை தான்!
‘அதெல்லாம்
உனக்கு வேண்டாம்பா. போலீஸ் வேலையில நிறைய ஆபத்துகள் இருக்கு.
கொலை பண்ணுறவனை எல்லாம் நீ தேடிப் போய் பிடிக்க வேண்டியது வரும்.
நேரங்காலம் பார்க்காம உழைக்க வேண்டியது வரும். பயங்கரமான குற்றவாளிங்க கூட சண்டை எல்லாம் போட வேண்டிய சூழ்நிலை வரும்.
அப்படி நீ போறப்போ உனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருச்சுன்னா… இந்த அம்மாவால அதை தாங்க முடியாதுப்பா’ என்று,
தான் சொன்னது அவருக்குத் தெளிவாக நினைவிருந்தது.
“தான்
பெத்த புள்ளைங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துடக் கூடாதுன்னு ஒரு அம்மா நினைக்குறது சுயநலமா?
இல்ல, அது தன் பிள்ளைங்க மேல அவங்க வச்சிருக்கற
அக்கறையும் பாசமுமா?” என்று செழியன் கேட்க, ஆதிரையிடம் பதில் இல்லை.
“நான்
போலீஸ் வேலைக்குப் போகக் கூடாதுன்னு கிட்டத்தட்ட நாலு மாசம் நீங்க எவ்வளவு பிடிவாதமா
இருந்தீங்க? அதுக்காக என்கிட்ட பேசாம கூட இருந்தீங்களே ஞாபகம்
இருக்காம்மா?” என்றவனை நிமிர்ந்து பார்த்தவர்,
“இப்போ
நீ என்ன சொல்ல வர்ற செழியா? நானும் ஒரு சுயநலக்காரிதான்னு சொல்றியா?”
என்றவர் கலங்கிய குரலில்,
“உனக்காக,
உன் நலனுக்காக யோசிச்சு தான் நான் அப்படி நடந்துகிட்டேன்பா” என்று கூறி அழுதார்.
அரண் செழியன்
எழுந்து ஆதிரையின் அருகே அமர்ந்து அவரது கண்ணீரை துடைத்து விட்டான்.
“இப்பவும்
உங்க மேல நான் குற்றம் சுமத்துறதுக்காக இதையெல்லாம் சொல்லலம்மா. நீங்க எப்பவும் எனக்கு நல்லது மட்டும் தான் நினைப்பீங்கன்னு நான் நூறு சதவீதம்
நம்புறேன். ஆனா, அன்னைக்கு இந்த போலீஸ்
வேலை உனக்கு வேண்டாம்னு நீங்க சொன்னதும், அதே காரணத்தை இப்போ
பார்கவி சொன்னதும் ஒரே விஷயத்துக்காகத் தான்! என்மேல இருக்கற
அன்புல தான் நீங்க இரண்டு பேருமே அப்படி யோசிச்சிருக்கீங்க” என்றவன்
அவரது கரம் பற்றி,
“சில
இடங்கள்ல பார்கவி சுயநலமா நடந்திருக்கலாம். அதுக்காக,
அவ கெட்டவன்னு அர்த்தம் இல்ல! அவ யாருக்கும் துரோகம்
பண்ணல. யார் முதுகுலயும் குத்தல. அவ தன்னோட
மனசுல நினைக்கிறதை முகத்துக்கு நேரா பேசிடுவா. பொய் சொல்ல மாட்டா.
மொத்தத்துல அவ ரொம்ப நல்ல பொண்ணும்மா” என்று,
அவளை பற்றி தான் சொல்ல வந்ததை முழுமையாக அவரிடம் பேசி முடித்தான் அரண்
செழியன்.
அவன் பேசியதைக்
கேட்டவர்கள் அனைவரும் ஒருவித உணர்ச்சிப் பெருக்குடன் இருந்தனர். முக்கியமாக ஆதிரையின் மனதில்
இருந்த சஞ்சலங்கள் ஓரளவிற்கு அகன்றிருந்தது.
பார்கவிக்கோ
அவன் தனக்காக தன் அன்னையிடம் வாதாடியது,
மிகுந்த மகிழ்வையும் பெருமையையும் கொடுத்தது.
தன்னை இந்த
அளவிற்கு ஆழமாக நேசிப்பவனுக்கு,
தான் இதுவரை எதையுமே செய்யவில்லை என்கிற குற்ற உணர்வு கூட அவளுக்குத்
தோன்றியது.
“நான்
என் பக்கத்துல இருந்து பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டேன்மா. இனிமே
நீங்க தான் சொல்லணும்” என்று செழியன் கூற, சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தார் ஆதிரை செல்வி.
பின்னர்
தன் கணவரைப் பார்த்து, “ஏங்க! சீக்கிரமே பார்கவி வீட்டுல பேசி, இரண்டு பேரோட கல்யாணத்துக்கும் நாள் குறிக்க ஏற்பாடு பண்ணுங்க” என்று கூற, அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
அரண் செழியன்
தன் அன்னையை கட்டியணைத்து, “தாங்கஸ்மா” என்று கூற, பார்கவி
எழுந்து வந்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்.
இருவரையும்
ஒன்றாகப் பார்த்த ஆதிரைக்கும் மனம் நிறைந்தது. மகிழ்வுடன் இருவரையும் வாழ்த்தியவர் இனியனிடம்
திரும்பி, “உனக்கு லவ் மேரேஜ் தானே? என்னைக்காவது
இப்படி தைரியமா என்கிட்ட வந்து ஷாரதாவுக்காகப் பேசியிருக்கியா? உங்க அண்ணனைப் பாரு. முதல் பால்லேயே சிக்சர் அடிச்சுட்டான்”
என்று கூற, இனியனுக்கு ஐயோ என்றிருந்தது.
ஷாரதா தன்னைப்
பார்த்து நக்கலாக சிரிப்பது தெரிய,
‘இவ வேற சிரிக்குறாளே! சும்மாவே ஒரு விஷயம் கிடைச்சா
என்னை ஓட்டுவா. இப்போ அம்மா சொன்னதை நாப்பது வருசத்துக்கு சொல்லி
காட்டப் போறா’ என்று நினைத்தாலும் வெளியே சிரித்தபடி தான் நின்றிருந்தான்.
ஷாரதா தனது
பெற்றோருக்கு அழைத்து அவர்களிடம் அங்கு நடந்ததைப் பற்றி கூற, அவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது. குறிப்பாக, நீலவேணி, தனது நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்தார்.
அதன் பிறகு
அனைவரிடமும் விடைபெற்று, பார்கவியை வீட்டில் ட்ராப் செய்வதற்காகத் தனது காரில் அழைத்துச் சென்றான் அரண்
செழியன்.
அவளது வீட்டு
காம்பவுன்டிற்கு முன்னால் காரை நிறுத்தியவனிடம், “உள்ளே வாங்க செழியன்” என்று
பார்கவி கூற,
“நாளைக்கு
எல்லாரோடவும் சேர்ந்து வர்றேன் பாரூ. இப்போ ரொம்ப லேட் ஆயிருச்சு!”
என்றான்.
அவளும் சரியென்று
தலையசைத்தபடி அவனையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தாள்.
“எல்லாம்
கனவு மாதிரி இருக்கு” என்றவள், “தேங்கஸ்
செழியன்” என்று கூற, புரியாமல் விழித்தான்
அவன்.
“எதுக்கு
தேங்க்ஸ்?” என்றவனிடம்,
“என்னை
மன்னிச்சு ஏத்துகிட்டதுக்கு” என்றாள் அவள்.
“ஹலோ
மேடம்! நான் மன்னிச்சு ஏத்துக்கற அளவுக்கு நீங்க ஒண்ணும் தேச
துரோக குற்றம் பண்ணிடல” என்றவன்,
“இந்தப்
பேச்சை இதோட விடு பாரூ. இனிமே பாசிட்டிவான விஷயங்களைப் பத்தி
மட்டும் தான் நாம பேசணும்” என்றான்.
அவளும் சரியென்று
புன்னகையுடன் தலையசைத்து, “சரி நான் கிளம்புறேன். குட் நைட்” என்றபடி தனது பையை எடுத்தாள்.
சட்டென அவளது
கரம் பற்றியவன், “பாரூ…” என்றபடி அவளது கண்களை ஆழமாகப் பார்க்கவும்,
அவளுக்கு இதயம் படபடத்தது.
“ஐ
லவ் யூ!” என்று அவன் உணர்வுப்பூர்வமான குரலில் கூற, அவளுக்கு பேச்சே வரவில்லை.
அவளது முகத்தை
அவன் நெருங்கிச் செல்ல, அவனது உஷ்ணமான மூச்சுகாற்று பட்டதும் தனது கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்
அவள்.
அவளது நாணமே
அவனுக்கு வேண்டிய சம்மதத்தை தெரிவித்துவிட,
மிக மிக மென்மையாக அவளது இதழில் தன் இதழ் ஒற்றினான் அவன்.
சட்டென கிளர்ந்தெழுந்த
உடலின் தேடலுக்கான இதழ் ஒற்றல் அல்ல அது!
மாறாக, இருவரது நேச உறவின் துவக்கத்திற்கான
இதழ் ஒற்றலே அது!
இந்த ஆழ்ந்த
இதழ் முத்தத்தில் தான், இருவரும் தங்கள் வாழ்க்கைக்கான
துவக்கப் புள்ளியை வைத்தனர்.
அரணாய் வருவான்…
மீண்டும்
சந்திப்போம்!
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- X
- Other Apps
Comments
Good going 👍👍🥳
ReplyDelete🤩🤩
Delete