அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 9
அரணாய் நீ வா!
பாகம் 2
அத்தியாயம் – 9
இப்படியே
ஒரு வாரம் கடந்திருக்க, அரண் செழியனையும் பார்கவியையும் தனது வீட்டிற்கு விருந்திற்காக அழைத்திருந்தார்
MLA கனகரத்தினம்.
செழியனுக்கோ, அவரது வீட்டிற்கு செல்வதில்
துளியளவும் விருப்பமில்லை.
ஆனால், தானும் அதே ஊரில் பணி செய்வதால்,
கனகரத்தினத்தை பல்றேு சூழல்களில் சந்திக்க வேண்டி வரும் என்று நினைத்து
அவரது வீட்டிற்குச் செல்ல ஒப்புக் கொண்டான்.
நண்பகல்
பன்னிரெண்டு மணியளவில், கனகரத்தினத்தின் வீட்டிற்குச் சென்றனர் இருவரும்.
அவனது புல்லட்
சத்தம் கேட்டு வெளியே வந்த ஜீவானந்தம்,
“வாங்க வாங்க சார்! நம்ம ஐயா உங்களை எதிர்பார்த்து
தான் காத்துகிட்டு இருக்காங்க” என்றான்.
அரண் செழியனும்
அவனிடம் சரியென்று தலையசைத்து,
பார்கவியுடன் சேர்ந்து அவரது வீட்டிற்குச் சென்றான்.
அந்த வீடே
ஒரு மாளிகை போன்று பெரிதாகவும்,
பிரம்மாண்டமாகவும் இருந்தது.
ஹாலில் இருந்த
பெரிய சோஃபாவில் கனகரத்தினம் அமர்ந்திருக்க,
“வணக்கம் சார்!” என்றபடியே அவரை நோக்கி சென்றான்
செழியன்.
அவரோ, “வணக்கம் தம்பி! வாங்க வாங்க!” என்றவர், அவனருகே
நின்ற பார்கவியிடம், “வணக்கம்மா… நல்லா
இருக்கீங்களா?” என்றார்.
அவளும், “நல்லா இருக்கேன் சார்”
என்று கூற, அவர்கள் இருவரையும் அமரும்படி கூறினார்.
அரண் செழியனின்
அருகில் அமர்ந்த பார்கவிக்கு,
அந்த இடம் ஒருவித அசௌகரியத்தைக் கொடுத்தது.
வீடு முழுவதும்
கனகரத்தினத்தின் கட்சிக்காரர்களும்,
வேலையாட்களும் ஆளுக்கொரு வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
இருவரிடமும்
புன்னகை மாறா முகத்துடன், “நீங்க இரண்டு பேரும் இங்கே வந்ததுல ரொம்ப சந்தோஷம்” என்றவர்,
“ஜீவா! போய் கமலாவை வரச் சொல்லு!” என்றார்.
அவனும் உள்ளே
சென்று அவரது மனைவியை அழைத்து வர,
“இது என்னுடைய சம்சாரம். பெயர் கமலா” என்று கூற, அரண் செழியன் அவருக்கும் வணக்கம் தெரிவித்தான்.
“கமலா!
வந்தவங்களை நல்லா கவனிக்கணும். சரியா?”
என்று கூற, அவரும் சரியென்றபடி சமையலை கவனிப்பதற்காக
உள்ளே சென்றார்.
இருவரையும்
மாற்றி மாற்றி பார்த்தவர், “அப்புறம் இன்ஸ்பெக்டர் தம்பி! கல்யாண வாழ்க்கை எல்லாம்
எப்படி போகுது?” என்று கேட்க, பார்கவியைப்
பார்த்து புன்னகைத்தவன், “நல்லா போகுது சார்” என்றான்.
அப்பொழுது
வெளியே ஏதோ கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சில நொடிகள் கழித்து உயரமான ஒருவன் உள்ளே வர,
அனைவரும் திரும்பி அவனைப் பார்த்தனர்.
அவனைப் பார்த்த
கனகரத்தினமோ, “இது என்னுடைய இளைய மகன் கார்த்திகேயன். என்னுடைய அரசியல்
பணியில எனக்கு ரொம்ப உதவியா இருக்கான். இப்போ எல்லாம் எனக்கு
அரசியல்ல அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டான்னா பாருங்க” என்றார்.
அவனைப் பார்த்த
அரண் செழியன், “ஹலோ!” என்று சொல்லி, அவனுடன் கைக்குலுக்க,
அவனும் பதிலுக்கு கைக்குலுக்கிவிட்டு உள்ளே சென்று விட்டான்.
பின்னர், அரண் செழியனுடன் பொதுவாக சில
விஷயங்களை கனகரத்தினம் பேச, பார்கவி மௌனமாக அமர்ந்திருந்தாள்.
அவளைக் கண்டவர், “நாம பாட்டுக்கு ஏதோ பேசிட்டு
இருக்கோம். பாவம் தங்கச்சிக்கு போர் அடிக்குது போலிருக்கு”
என்று கூற,
“ஐயோ!
அப்படி எல்லாம் இல்ல சார்” என்றாள் அவள்.
“இல்லம்மா…
நான் அரசியல் சம்பந்தமா ஏதாவது பேசிட்டு இருப்பேன். உனக்கும் பொழுது போகணும்ல” என்றவர் பின்னால் சுட்டிக்
காட்டி,
“இப்படியே
போனா, இரண்டு ரூம் தாண்டி ஒரு சின்ன லைப்ரரி இருக்கும்மா.
போய் பாரும்மா… உனக்கும் பொழுது போகும்!”
என்றார்.
அவள் திரும்பி
செழியனைப் பார்க்க, அவன் அவளைப் போகச் சொல்லி கண்ணசைத்தான்.
கனகரத்தினம்
சொன்ன திசை வழியாகச் சென்றவள்,
மற்றொரு பெரிய கூடத்தைக் கடந்து, அந்த வீட்டிலிருந்த
சிறிய நூலகத்தை அடைந்தாள்.
அந்த வீட்டின்
ஆடம்பரத்தைப் பார்த்து வியந்தபடியே உள்ளே சென்றவள், அங்கிருந்தப் புத்தகங்களை ஒவ்வென்றாகப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
தனக்கு மிகவும்
பிடித்த ஒரு தத்துவ மேதையின் புத்தகத்தை கையில் எடுத்தவள், அதைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தாள்.
இரண்டு பக்கங்கள்
புரட்டியதுமே சட்டென, “புக்ஸ் நிறைய ரீட் பண்ணுவீங்களா?” என்றொரு குரல் கேட்கவும்,
பயத்தில் பதறி விட்டாள் பார்கவி.
அந்த அறைக்குள்
வந்த கார்த்திகேயன், “ஹேய்! ரிலாக்ஸ்” என்றபடி அவளருகே
வர, அவனை திரும்பி பார்த்தவளுக்கு அவனிடம் என்ன பேசுவதென்று புரியவில்லை.
“சாரி!
சட்டுன்னு வந்து உங்களை பயமுறுத்திட்டேன்” என்று
அவன் கூற, “இல்ல! இட்ஸ் ஓகே” என்றாள் அவள்.
ஏனோ, கார்த்திகேயனுடன் பேசுவது
அவளுக்கு அசௌகரியமாக இருக்க, தன் கையில் இருத்த புத்தகத்தை மூடி
வைத்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே செல்ல எத்தனித்தாள்.
“ஒரு
நிமிஷம்!” என்று கார்த்திகேயன் கூற, நின்று
அவனை திரும்பிப் பார்த்தாள் பார்கவி.
“உங்களுக்கு
இப்போ தான் புதுசா கல்யாணமாச்சா?” என்று அவன் கேட்க,
“ஆமா! ஏன் கேட்குறீங்க?” என்று கேட்டாள் அவள்.
“இல்ல!
உங்க முகத்துல புதுப்பொண்ணுக்கான பூரிப்பு தெரியுது. அதான் கேட்டேன்” என்றவன் தொடர்ந்து, “இன்ஸ்பெக்டர் சார் எப்படி?” என்று கேட்க,
“எப்படின்னா?”
என்று புரியாமல் கேட்டாள் அவள்.
“இல்ல….
ஒரு இன்ஸ்பெக்டரா அவர் எப்படி டியூட்டி பார்ப்பாருன்னு தெரியும்.
ஆனா, உங்ககிட்ட ஒரு புருஷனா அவர் எப்படி டியூட்டி
பார்ப்பாருன்னு தெரிஞ்சுக்கறதுக்காக கேட்டேன்” என்றவன்,
அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி,
“வீட்ல
நைட் டியூட்டி எல்லாம் நல்லா பார்க்குறாரா?” என்று கேட்க,
பார்கவிக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.
அவன் இரட்டை
அர்த்தத்தில் பேசியது ஒருவித அருவருப்பை அளிக்க, அவனது முகம் பார்த்து, “பொறுக்கி!” என்று சற்று சத்தமாகவே முணுமுணுத்தபடி அந்த
இடத்தில் இருந்து வெளியேறினாள்.
கடுகடுத்த
முகத்துடன் ஹாலுக்கு வந்தவள்,
நேராக சோஃபாவில் சென்று அமர, அவளது முகத்தைப் பார்த்த
செழியன் புருவம் சுருக்கினான்.
அவளது முகமாற்றத்தை
வைத்தே ஏதோ சரியில்லை என்று அவனுக்குத் தோன்ற, “என்னாச்சு பாரூ?” என்று
மெதுவாக அவளிடம் கேட்டான்.
தன்னிடம்
கார்த்திகேயன் நடந்து கொண்டதைப் பற்றி சொல்லிவிடலாமா என்று யோசித்தவள், பின்னர் வேண்டாம் என்று நினைத்து,
“ஒண்ணுமில்ல செழியன்” என்றாள்.
அதன் பிறகு
அவர்களுக்கான விருந்து தயாரானதும்,
இருவரும் கனகரத்தினத்துடன் சேர்ந்து உணவு உண்டனர்.
கனகரத்தினம்
தன்னை, அவர் பக்கமாக
இழுப்பதற்காகத் தான் தங்கள் இருவரையும் இந்த விருந்திற்கு அழைத்திருக்கிறார் என்பதை
அவரது பேச்சை வைத்தே புரிந்து கொண்டான் அரண் செழியன்.
மூவரும்
உணவருந்திக் கொண்டிருந்த பொழுது,
அங்கு வந்த கார்த்திகேயன் பார்கவிக்கு எதிர்புறமாக இருந்த நாற்காலியில்
அமர்ந்தான்.
செழியனும், கனகரத்தினமும் சுவாரஸ்யமாக
ஏதோ பேசிக் கொண்டிருக்க, கார்த்திகேயனின் பார்வை முழுவதும் பார்கவியிடம்
தான் இருத்தது.
அவன் தன்னை
தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தாலும், உள்ளுக்குள் அவனை திட்டியபடியே
அவனை கண்டு கொள்ளாமல் உணவருந்திக் கொண்டிருந்தாள் அவள்.
பின்னர்
இருவரும் உண்டு முடித்து கனகரத்தினத்திடம் விடைபெற்றனர்.
“சாப்பாடு
ரொம்ப பிரமாதமா இருந்தது சார்! அப்போ நாங்க கிளம்புறோம்”
என்று செழியன் கூற,
“ரொம்ப
சந்தோஷம் தம்பி! இனிமே நம்ம உறவு பலப்படும்னு நம்புறேன்.
என்ன இருந்தாலும் நாம இரண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு இல்லையா?”
என்று பேச்சில் பொடி வைத்தார் அவர்.
“சரிங்க
சார்! நாங்க கிளம்புறோம்” என்றவன்,
அவரிடம் விடைபெற்று பார்கவியுடன் சேர்ந்து அந்த வீட்டிலிருந்து வெளியே
வந்தான்.
தனது புல்லட்டில்
ஏறப் போனவன், அங்கே
நின்றிருந்த ஒரு சிவப்பு நிறக் காரை கண்டதும் புருவம் சுருக்கினான்.
‘இந்தக்
காரை எங்கேயோ பார்த்திருக்கோமே…’ என்று யோசித்தவனுக்கு,
சட்டென அது எங்கே என்று நினைவு வந்தது.
அந்த சிவப்பு
நிறக் காரை தான், கொலை செய்யப்பட்ட செல்வனின் மனைவி துர்கா சென்ற தோப்பு வீட்டிலும் அவன் பார்த்திருக்கிறான்;
சாலையில் வைத்து ஒருநாள் அதன் ஓட்டுனரிடம் அவள் பேசிக் கொண்டிருந்த போதும்
பார்த்திருக்கிறான்.
‘அப்படின்னா…
இது MLAவோட காரா?’ என்று
யோசித்தவன், அவர் எப்பொழுதும் ஒரு வெள்ளை நிற பெரிய காரில் வருவதை
தான் பார்த்திருக்கிறான்.
அந்தக் கார்
மற்றொரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, குழப்பத்துடன் அங்கே நின்றிருந்த வீட்டு காவலாளியை
அழைத்தான்.
“சொல்லுங்க
சார்!” என்றபடி, தன்னருகே வந்தரிடம்,
“அந்த சிவப்பு கார் யாரோடது?” என்று செழியன் கேட்க,
“இது
நம்ம சின்னய்யாவோட காருங்க சார்!” என்றார் அந்தக் காவலாளி.
குழப்பத்துடன்
புருவம் சுருக்கியவன், “சின்னய்யான்னா யாரு… கார்த்திகேயனா?” என்று கேட்க, அவர் ஆமென்று தலையசைத்தார்.
“ஏன்
சார் கேட்குறீங்க?” என்று கேட்டவரிடம்,
“இல்ல…
நானும் இதே மாதிரி ஒரு கார் வாங்கலாம்னு இருக்கேன். அதனால தான் கேட்டேன். நான் கார்த்திகேயன்கிட்ட கார் சம்பந்தமா
பேசிக்குறேன். நீங்க போங்க” என்று அவருக்கு
சந்தேகம் வராத வண்ணம் பேசி அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தான்.
அவனருகே
வந்த பார்கவி, “என்னாச்சு செழியன்?” என்று கேட்க, “ஒண்ணுமில்ல பாரூ. வா போகலாம்” என்று
கூறி, அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து தனது வீட்டிற்குப் புறப்பட்டான்.
வழி முழுவதும்
அவனுக்கு யோசனையாகவே இருக்க,
அமைதியாக வண்டி ஓட்டிச் சென்றான்.
வீட்டை அடைந்ததும்
பார்கவியை இறங்கச் சொன்னவன்,
“எனக்கு ஸ்டேஷன்ல கொஞ்சம் வேலை இருக்கு பாரூ… நான்
போயிட்டு வந்துடறேன்” என்று கூற, அவளும்
சரியென்று தலையசைத்தாள்.
நேராக காவல்
நிலையத்திற்குச் சென்றவன், தனது தனியறைக்குச் சென்று சுயம்புலிங்கத்தை அழைத்தான்.
“ஏட்டய்யா!
அன்னைக்கு நாம பார்த்த சிவப்பு கார் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
என்று செழியன் கேட்க, புரியாமல் விழித்தவர்,
“எந்த
காரைப் பற்றி சொல்றீங்க சார்? புரியல” என்றார்
அவர்.
“அதுதான்,
அந்த செல்வனோட மனைவி துர்கா ஒரு கார்காரன்கிட்ட பேசிட்டு இருந்ததைப்
பார்த்தோமே!” என்று அவன் கூறவும்,
“ஆமா
சார். ஞாபகம் இருக்கு! அன்னைக்கு அந்தத்
தோப்பு வீட்டக்கு கூட போனோமே!” என்றவரிடம்,
“ஆமா…
அந்த வீடு யாரோடதுன்னு விசாரிச்சீங்களா?” என்று
செழியன் கேட்க, “சார்! அது வந்து…”
என்றபடி தயங்கினார் ஏட்டு.
குழப்பத்துடன்
அவரைப் பார்த்தவன், “என்னாச்சு? ஏன் இந்த விஷயத்தைப் பத்தி நான் பேசுனாலே
ஒரு மாதிரி குழப்பமாயிடுறீங்க?” என்று கேட்டவனிடம்,
“அப்படி
எல்லாம் இல்ல சார்! அந்த வீடு யாரோடதுன்னு நான் ஏற்கனவே விசாரிச்சுட்டேன்”
என்றார் அவர்.
“அப்படின்னா…
ஏன் அதை முன்னாடியே என்கிட்ட சொல்லலை?” என்றவனிடம்,
“அது…
வந்து… சார்” என்று அவர்
மீண்டும் தயங்க, “முதல்ல இப்படி பூசி மொழுகுறதை நிறுத்துங்க ஏட்டய்யா.
கிட்டத்தட்ட ஒரு வருஷமா இந்தக் கேசை நான் விசாரிச்சு அடுத்தக்கட்டத்துக்கு
கொண்டு போறதுக்காகப் போராடிட்டு இருக்கேன். ஆனா, நீங்க எனக்கு கொஞ்சம் கூட ஒத்துழைப்பு தர மாட்டேங்கறீங்க” என்றபடி, கோபத்துடன் இருக்கையில் இருந்து எழுந்தான்.
பின்னர், தனது கோபத்தைக் கட்டுப்படுத்த
எண்ணி தண்ணீரை எடுத்து அவன் பருகிய பொழுது, சுயம்புலிங்கம் சென்று
அந்த அறையின் கதவை சாற்றிவிட்டு வந்தார்.
புரியாமல்
அவரைப் பார்த்தவனிடம், “உங்ககிட்ட இதைப் பற்றி சொல்லக் கூடாதுன்னு எதுவும் இல்ல சார். ஆனா, நீங்க புதுசா இப்போ தான் கல்யாணம் பண்ணி வாழ்க்கையை
ஆரம்பிச்சிருக்கீங்க. வீணா எந்த ஆபத்துக்குள்ளேயும் உங்களை தள்ளிவிட
வேண்டாம்னு தான் நான் அமைதியாவே இருந்துட்டேன்” என்றவர்,
“ஆனா,
இப்போ நான் விசாரிச்ச விஷயங்களை உங்ககிட்ட முழுசா சொல்லிடுறேன் சார்”
என்றார்.
அரண் செழியனும்
தனது செவியைக் கூர்மையாக்கிக் கொண்டு அவர் சொல்வதை கவனிக்க ஆரம்பித்தான்.
“அந்தத்
தோப்பு வீடு நம்ம MLA கனகரத்தினத்தோடது தான் சார். நாம அன்னைக்கு பார்த்த அந்த சிவப்பு காரை MLA மகன் கார்த்திகேயன்
பயன்படுத்துறார். இது சம்பந்தமா நான் விசாரிக்குறேன்னு தெரிஞ்சதும்,
நம்ம சப் – இன்ஸ்பெக்டர் ஜெகன் சார், என்னை நேரடியாகவே தடுத்தாரு” என்று சுயம்புலிங்கம் கூற,
“என்ன
சொல்றீங்க ஏட்டய்யா?” என்று கேட்டவனிடம்,
“ஆமா
சார்! இந்த விஷயத்தை இதோட விடுங்க, இல்லைன்னா
உங்க வேலைக்கு மட்டுமில்ல... உங்க உயிருக்கே கூட ஆபத்து வரலாம்னு
ஜெகன் சார் என்னை எச்சரிக்கை பண்ணார்” என்றார் அவர்.
அதைக் கேட்டு
பற்களை கடித்தவனோ, “அப்படின்னா… எஸ்.ஐ ஜெகன் அந்த
MLAவுக்கும் அவரோட மகனுக்கும் தான் வேலை பார்க்குறாரா?” என்றவன்,
“ஆனா,
எனக்கு ஒண்ணு மட்டும் புரியவே இல்ல ஏட்டய்யா! அந்த
துர்காவுக்கும் MLA குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்?”
என்று கேட்க,
“அதுதான்
சார் எனக்கும் புரியல. செல்வன் கொலை செய்யப்பட்ட கொஞ்ச நாளிலேயே
துர்கா அந்த தோப்பு வீட்டுக்குப் போனாங்க. எனக்கென்னமோ இந்த விஷயம்
இன்னும் டீப்பா போகும்னு தோணுது” என்றார் சுயம்புலிங்கம்.
அதைக் கேட்டு
ஆமோதிப்பாகத் தலையசைத்தவனோ,
“சரி ஏட்டய்யா… இனிமே இந்த விஷயத்தை நான் பார்த்துக்குறேன்.
இந்த ரகசியங்கள் நமக்குள்ளேயே இருக்கட்டும். ஜெகன்
சாருக்கு மேற்கொண்டு எதுவும் தெரியாம பார்த்துக்கோங்க” என்று
கூற, சரியென்னு பதிலளித்தவர்,
“சார்!
மறுபடியும் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. இப்போ
தான் உங்க கல்யாண வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கீங்க. எதுவா இருந்தாலும்
கொஞ்சம் பார்த்து பொறுமையா பண்ணுங்க சார்” என்றார்.
அவரிடம்
ஆமோதிப்பாகத் தலையசைத்தவன்,
“நான் பார்த்துக்குறேன். நீங்க போய் வேலையை கவனிங்க”
என்றான்.
வெகு நேரம்
அந்த அறையில் அமர்ந்து யோசித்தவன்,
இந்த வழக்கில் சம்பந்தப்பட்வர்களின் முகமூடியை கிழித்தே ஆக வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தான்.
இப்படியே
சில நாட்கள் கடந்திருந்தது!
அன்று, செழியன் காவல் நிலையத்திற்குச்
சென்றிருக்க வீட்டில் சமையலை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பார்கவி.
அப்பொழுது
அவளைத் தேடி அங்கு வந்தாள் எதிர்வீட்டுப் பெண் சுபத்ரா. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு
ஆங்கிலம் பயில்கிறாள்.
பார்கவி
திருமணமாகி இந்த ஊருக்கு வந்த சில நட்களிலேயே அவளுடன் நட்பு வளர்த்துக் கொண்டாள்.
அவளைப் பார்க்கும்
பொழுதெல்லாம், பார்கவிக்கு ஷாரதாவின் நினைவு வந்துவிட, அவளுடன் நன்றாகப்
பேசிப் பழக ஆரம்பித்தாள்.
கதவை திறந்து
சுபத்ராவை உள்ளே அழைத்து வந்து சோஃபாவில் அமர வைத்தவள், “வா சுபா! இன்னைக்கு காலேஜ் போகலையா?” என்று கேட்க, “இன்னைக்கு சனிக்கிழமைக்கா. காலேஜ் லீவ்” என்றாள் அவள்.
“ஓஹ்…
ஆமால்ல மறந்தே போயிட்டேன். இங்கே வந்ததுல இருந்து
நாள், கிழமை எதுவுமே தெரியுறதில்ல. லைஃப்
ரொம்ப வேகமா ஒடுற மாதிரி தோணுது” என்றாள் பார்கவி.
“உங்களுக்கு
கல்யாணமாகி ஒரு மாசம் இருக்குமா?” என்று சுபத்ரா கேட்க,
“ம்ம்ம்…
நாளையோட ஒரு மாசம் முடியுது சுபா” என்றாள் பார்கவி.
“சூப்பர்…
அப்படின்னா! நாளைக்கு உங்களுக்கு ஸ்பெஷல் டேவா?
செழியன் சாருக்கு என்ன கிஃப்ட் தரப் போறீங்க?” என்று சுபத்ரா கேட்க,
“அதெல்லாம்
நான் யோசிக்கவே இல்ல சுபா. என்ன பண்ணுறதுன்னு எனக்கு சுத்தமா
ஐடியாவே இல்ல. எங்க ஊருன்னா சட்டுன்னு ஏதாவது யோசிச்சிருப்பேன்.
ஆனா, இந்த ஊரை பத்தி எனக்குத் தான் எதுவுமே தெரியாதே!”
என்றாள் பார்கவி.
“அதுதான்
நான் இருக்கேனேக்கா… என்ன பண்ணணும்னு மட்டும் யோசிச்சு சொல்லுங்க.
சிறப்பா பண்ணிடலாம்” என்று அவள் கூற, சில நொடிகள் யோசித்தவள்,
“நைட்
பன்னிரெண்டு மணிக்கு கேக் கட் பண்ணி அவருக்கு சர்பிரைஸ் தரலாம்னு நினைக்கிறேன்!
நீ என்ன சொல்ற?” என்றாள்.
“சூப்பர்…
அப்போ வாங்க. நாம இப்பவே போய் கேக் வாங்கிட்டு
வரலாம்” என்ற சுபத்ராவிடம்,
“ஆமா!
இப்பவே போய் வாங்கிட்டு வந்துரலாம். மதியம் ஒரு
மணிக்கெல்லாம் அவர் சாப்பிட வந்துடுவார். அப்புறம் போறது கஷ்டமாயிடும்”
என்றவள், சுபத்ராவுடன் சேர்ந்து கேக் வாங்கி வருவதற்காகத்
தயாரானாள்.
சுபத்ராவின்
இருச்சக்கர வாகனத்திலேயே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்து இருவரும் கிளம்பினர்.
களக்காடு
பஜாருக்குச் சென்று அங்கிருந்த பேக்கரி ஒன்றில் சின்னதாக ஒரு கேக் வாங்கிவிட்டு, வீடு திரும்பினர்.
அப்பொழுது, “வண்டியில பெட்ரோல் கம்மியா
இருக்குக்கா. போற வழியில பெட்ரோல் போட்டுட்டு போயிரலாம்”
என்று சுபத்ரா கூற, பார்கவியும் சரியென்று கூறினாள்.
அந்த ஊரில்
இருந்து சற்று தள்ளி இருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்றனர் இருவரும்.
அவர்கள்
அங்கு சென்ற பொழுது, ஒரு கார் ஏற்கனவே அங்கு நிறுத்தப்பட்டு, அதில் எரிபொருள்
நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
சுபத்ராவும், பார்கவியும் வரிசையில் காத்து
நின்ற வேளையில் அந்தக் காரில் இருந்து இறங்கி வந்தான் கார்த்திகேயன்.
உதட்டில்
சிரிப்புடன் அவர்கள் முன்பு வந்து நின்றவன்,
இருவரையும் மேலும் கீழுமாகப் பார்த்தான்.
அங்கு அவனைக்
கண்டதுமே பார்கவிக்கு எரிச்சலாக வந்தது.
முகத்தை வேறு புறமாகத் திருப்பியபடி நின்று கொண்டாள் அவள்.
“என்ன
மேடம்! என்னை ஞாபகம் இல்லையா? நான் தான்
கார்த்தியேன். MLA கனகரத்தினத்தோட மகன்” என்று அவன் கூற, அவளோ பதில் கூறாமல் அமைதியாகவே நின்றிருந்தாள்.
அதைக் கண்டு
கோணலாகச் சிரித்தவன், அவளுக்கு அருகே நின்றிருந்த சுபத்ராவைப் பார்த்து, “குட்டி
யாரு? புதுசா இருக்கு” என்று கூற,
“ஏய்!”
என்று அவனுக்கு முன்னால் விரல் நீட்டி எச்சரித்த பார்கவி,
“குட்டி
கிட்டின்னா… அவ்வளவு தான். பேசாம உன் வேலையைப்
பார்த்துட்டு போ” என்றாள்.
அப்பொழுது
கார்த்திகேயனுடன் வந்த மற்றொருவன் காரிலிருந்து இறங்கி வர அவனிடம், “பார்த்தியா மச்சான்!
இன்ஸ்பெக்டர் பொண்டாட்டிக்கு மூக்கு மேல கோபம் வருது. பரவாயில்ல… அந்த இன்சு அவன் பொண்டாட்டியை நல்லா தான்
ட்ரெயின் பண்ணி வச்சிருக்கான்” என்று அவன் கூற, அவனது நண்பன் ரிஷி, கார்த்திகேயனின் காதில் ஏதோ கூறினான்.
அதைக் கேட்டு
சத்தமாக சிரித்தவனோ, “பார்த்து மச்சான்! நீ சொன்னது அந்த மேடம் காதுல விழுந்தா,
அவங்க புருஷன்கிட்ட சொல்லி உன்னை உள்ளே தூக்கி போட்டுருவாங்க!”
என்றான்.
அதைக் கேட்ட
ரிஷி, “ஐயோ மச்சான்
பயமா இருக்கு மச்சான்” என்று போலியாக பயந்தபடி சிரிக்க,
பார்கவிக்கு எரிச்சலாக வந்தது.
அதற்குள்
சுபத்ராவின் வண்டிக்கு பெட்ரோல் நிரப்பப்பட,
பணத்தைக் கொடுத்துவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இருவரையும்
பார்த்துக் நின்ற கார்த்திகேயனிடம்,
“என்ன மச்சான்? நீ ஏதோ ஸ்கெட்ச் போடுறது போல தெரியுதே?”
என்று ரிஷி கேட்க,
“ஆமா
மச்சான்! கொஞ்ச நாளாவே லைஃப் ரொம்ப போரிங்கா போகுது. அதான் ஏதாவது என்டெர்டெயின்மென்ட் கிடைக்குமான்னு பார்க்குறேன்” என்ற கார்த்திகேயனிடம்,
“டேய்!
சீரியசா தான் சொல்றியா? அது இன்ஸ்பெக்டரோட பொண்டாட்டி
டா. அவருக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா, நீ காலி” என்றான் ரிஷி.
“என்ன
மச்சான் நீ? இத்தனை வருஷமா என்கூட பழகிட்டு என்னை தப்பாவே புரிஞ்சு
வச்சிருக்க! அந்த இன்ஸ் பொண்டாட்டியை அப்புறம் பார்த்துக்கலாம்.
ஆனா, இப்போதைக்கு என்னோட குறி வேறடா!” என்றான்.
அன்றிரவு
பதினோரு மணிக்கு தான் வீட்டிற்கு வந்தான் அரண் செழியன்.
அவனுக்காக
சாப்பிடாமல் காத்திருந்தவளிடம்,
“பாரூ… எத்தனை தடவை சொல்றது! எனக்காக காத்திருக்காம நேரத்தோட சாப்பிடுன்னு. சொன்னா
கேட்க மாட்டியா?” என்றவன், தட்டில் உணவைப்
போட்டு அவளுக்கு ஊட்டி விட்டான்.
அவளும் மகிழ்வுடனே
அவனது கையால் சாப்பிட்டாள். உணவை அவளுக்கு ஊட்டி விட்டபடியே, “பாரூ… நீ வேணா கொஞ்ச நாள் மதுரைக்கு போய் இருந்துட்டு வர்றியா?” என்றவனிடம்,
“திடீர்னு
ஏன் அப்படி கேட்குறீங்க செழியன்?” என்றாள் அவள்.
“இல்ல…
நானும் வேலை வேலைன்னு தினமும் டியூட்டிக்குப் போயிட்டு வீட்டுக்கு லேட்டா
தான் வர்றேன். உனக்கு தனியா இருக்க கஷ்டமா இருக்கும்ல.
அதுக்குத் தான் சொல்றேன்” என்றவனிடம்,
“அதெல்லாம்
எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. உங்களை பார்க்காம இருந்தா தான்
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்றாள் அவள்.
அதைக் கேட்டு
சிரித்தவனிடம், “வேணும்னா நாம இரண்டு பேரும் எங்கேயாவது ஹனிமூன் மாதிரி போயிட்டு வரலாமா?”
என்று வெட்கத்துடன் அவள் கேட்க,
“அதென்ன
ஹனிமூன் மாதிரி? ஹனிமூனே போகலாம்” என்றவன்,
“சரி நீயே சொல்லு! எங்கே போகலாம்?” என்று கேட்டான்.
“ஊட்டி
கொடைக்கானல் எல்லாம் நான் அல்ரெடி போயிட்டேன்” என்று கூறி யோசித்தவளிடம்,
“அப்படின்னா கேரளா பக்கமா போகலாம்” என்றான் செழியன்.
அவளும் சரியென்று
மகிழ்வுடனே கூற, இருவரும் கொஞ்சிப் பேசி, சிரித்து உண்டு முடிப்பதற்குள்
மணி இரவு பன்னிரெண்டு ஆகி விட்டது.
பார்கவி
சர்பிரைசாக கேக்கை எடுத்து வந்து செழியனிடம் நீட்ட, அகமகிழ்ந்து போனான் அவன்.
கேக் வெட்டி
உண்டு முடித்து, ஒருவர் மற்றவரது அரவணைப்பில் அன்றைய இரவை கழித்தனர் இருவரும்.
அதன் பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து தேநிலவிற்காக
இருவரும் மூணாருக்குச் சென்றனர்.
அங்கிருந்த
மூன்று நாட்களும், தாங்கள் இருவர் மட்டுமே இருந்த வேறொரு
இனிமையான உலகத்தைக் கண்டனர். முன்பு இருந்ததை விட, இப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் வந்திருந்தது.
தேநிலவு
முடிந்து இருவரும் களக்காட்டிற்குத் திரும்பி வந்த பொழுது, அவர்களுக்கு அங்கே ஒரு பேரதிர்ச்சி
காத்திருந்தது.
அரணாய் வருவான்…
மீண்டும்
சந்திப்போம்!
பிரியமுடன்,
சௌஜன்யா…
Super
ReplyDeleteThank you😊
Delete