Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 9

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 9 இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க , அரண் செழியனையும் பார்கவியையும் தனது வீட்டிற்கு விருந்திற்காக அழைத்திருந்தார் MLA கனகரத்தினம் . செழியனுக்கோ , அவரது வீட்டிற்கு செல்வதில் துளியளவும் விருப்பமில்லை . ஆனால் , தானும் அதே ஊரில் பணி செய்வதால் , கனகரத்தினத்தை பல்றேு சூழல்களில் சந்திக்க வேண்டி வரும் என்று நினைத்து அவரது வீட்டிற்குச் செல்ல ஒப்புக் கொண்டான் . நண்பகல் பன்னிரெண்டு மணியளவில் , கனகரத்தினத்தின் வீட்டிற்குச் சென்றனர் இருவரும் . அவனது புல்லட் சத்தம் கேட்டு வெளியே வந்த ஜீவானந்தம் , “ வாங்க வாங்க சார் ! நம்ம ஐயா உங்களை எதிர்பார்த்து தான் காத்துகிட்டு இருக்காங்க ” என்றான் . அரண் செழியனும் அவனிடம் சரியென்று தலையசைத்து , பார்கவியுடன் சேர்ந்து அவரது வீட்டிற்குச் சென்றான் . அந்த வீடே ஒரு மாளிகை போன்று பெரிதாகவும் , பிரம்மாண்டமாகவும் இருந்தது . ஹாலில் இருந்த பெரிய சோஃபாவில் கனகரத்தினம் அமர்ந்திருக்க , “ வணக்கம் சார் !” என்றபடியே அவரை நோக்கி சென்றான் செழியன் . அவரோ , “ வணக்கம் தம்பி ! வாங்க வாங்க !” என்றவர் , அவனருகே நின்ற பார்க

அரணாய் நீ வா - Epi 17

அரணாய் நீ வா!


 

அத்தியாயம் – 17

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அரண் செழியனுக்கு, பரிசோதனை மற்றும் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

அவனுக்கு சிகிச்சை நடைபெறும் அறைக்கு வெளியே, கலங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தாள் பார்கவி.

சில நிமிடங்கள் கழித்து மருத்துவரின் அறைக்கு செழியனின் குடும்பத்தினர் அழைக்கப்படவும், பார்கவி, இனியன் மற்றும் ஷாரதா வேகமாக அங்கு சென்றனர்.

மருத்துவரின் முன்பிருந்த இருக்கையில் அமர்ந்த பார்கவி, “செழியனுக்கு என்னாச்சு டாக்டர். பெருசா எதுவும் பிரச்சனை இல்லையே!” என்று கேட்டாள்.

அவர் கையில இருக்கற வெட்டுக்காயம் எப்படி ஏற்பட்டது?” என்று மருத்துவர் அவர்களிடம் விசாரிக்க, இனியன் செழியனைக் குறித்தத் தகல்களை அவரிடம் முழுமையாகக் கூறினான்.

ஓஹ்அவர் போலீஸ் ஆஃபிசரா?” என்ற மருத்துவர்,

காயத்தை சரியா கவனிக்காமல் விட்டதால, இன்ஃபெக்ஷன் ஆயிருக்கு. அதனால தான் உடம்பில் டெம்பரேச்சர் அதிகமாகி, காய்ச்சலும் வந்திருக்கு!” என்றார்.

இப்போ அவருக்கு ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு. இரண்டு நாள் பார்த்துட்டு, இன்ஃபெக்ஷன் சரியானதும் வீட்டுக்கு அனுப்பிடுறேன்!” என்றார் டாக்டர்.

அதைக் கேட்ட பார்கவியோ, “டாக்டர்! இப்போ நாங்க அவரை பார்க்கலாமா?” என்று கேட்க,

இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடுவோம். அப்புறமா நீங்க போய் பார்க்கலாம்என்றார் அவர்.

அதன் பிறகு, மூவரும் வெளியே வந்து மீண்டும் இருக்கையில் அமர்ந்தனர்.

அப்பொழுது அங்கே வந்த ஒரு செவிலியர், மருத்துவர் எழுதிக் கொடுத்த சில மருந்துகளை வாங்கி வருமாறு கூற, இனியனும் ஷாரதாவும் ஃபார்மசிக்குச் (Pharmacy) சென்றனர்.

அங்கிருந்த இருக்கையில் பார்கவி மட்டும் தனியாக, பலத்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள்.

நீ தப்பு பண்ணிட்ட பார்கவி! எந்தத் தப்புமே பண்ணாத செழியன் மனசை வீணா காயப்படுத்திட்ட!’ என்று, தனது மனசாட்சி சொல்வதை அவள் ஒப்புக் கொண்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருந்தாள்.

இப்படியான யோசனை ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே, “மிஸ்டர். செழியனோட ஃபேமிலி கொஞ்சம் வாங்க!” என்று, ஒரு செவிலியர் சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்து கூறவும், வேகமாக எழுந்து அவரிடம் விரைந்தாள் பார்கவி.

சிஸ்டர்இப்போ நான் செழியனைப் பார்க்கலாமா?” என்றவளிடம்,

அவரை ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணுறோம். வீல் செயர் (Wheelchair) வர்ற வரைக்கும் நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்கஎன்றார் அந்தச் செவிலியர்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த அறையில் இருந்து, சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு, வெளியே அழைத்து வரப்பட்டான் அரண் செழியன்.

அவனது காயம் பட்ட கைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு புதிதாகக் கட்டு போடப்பட்டு இருந்தது.

வெளியே அழைத்து வரப்பட்டவனிடம் விரைந்த பார்கவி கலங்கிய குரலில், “செழியன்! இப்போ பரவாயில்லையா?” என்று கேட்க, அவனோ, ஒரு நொடி நிமிர்ந்து அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தலைதாழ்த்திக் கொண்டான்.

அவனது அந்த ஒருநொடி பார்வையே அவளை தன்னிடமிருந்து தூரமாக நிறுத்தி வைப்பது போன்றிருந்தது.

அவனது பார்வை அவளுக்கு ஆயிரம் அர்த்தங்களை எடுத்துரைத்தது; அவன் தன்னிடம் இருந்து தூரமாகச் சென்று விட்டான் என்பது உட்பட!

திடீரென நெஞ்சில் பெரும் பாரம் ஏறியது போன்ற உணர்வு அவளுக்கு. கனத்த மனதுடன் அவனை பின் தொடர்ந்து சென்று லிஃப்டில் ஏறினாள் பார்கவி.

இரண்டாவது தளத்தில் இருந்த ஒரு அறை அரண் செழியனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அறைக்கு வந்ததும், அவன் சக்கர நாற்காலியில் இருந்து எழ முற்பட, பார்கவி அவனிடம் விரைந்து சென்று அவனது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

தன் மீதிருக்கும் அவளது கரத்தில் பார்வை பதித்தவன், அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், “யாரும் எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டிய அவசியமில்ல! எனக்கு இரண்டு காலும் நல்லா தான் இருக்கு. அடுத்தவங்களோட உதவியை எதிர்பார்த்து வாழுற அளவுக்கு இந்தச் செழியன் ஒண்ணும் கேவலமா போயிடலஎன்றான்.

அவனது குரலில் தெறித்த ஆத்திரம், அதிலிருந்த கோபம் மற்றும் ஏமாற்றம், பார்கவியின் உள்ளத்தில் பெரிய ரணத்தையே ஏற்படுத்தி விட்டது.

சரிஏதோ கோபத்தில் பேசுகிறான்என்றெண்ணி, அவன் பேசிய வார்த்தைகளை சாதாரணமாகக் கடந்து சென்று விடவும் அவளால் முடியவில்லை!

கண்ணீரையும் சோகத்தையும் அரும்பாடு பட்டு அவனிடம் இருந்து மறைத்து, முகத்தைச் சாதாரணமாக வைத்து நின்றிருந்தாள் அவள்.

கட்டிலில் படுத்தவனுக்கு, நரம்பு ஊசி செலுத்துவதற்காக வந்தார், அவனை கவனிக்கும் செவிலியர்.

ஊசியில் மருந்தை ஏற்றியபடி, “கொஞ்சம் வலிக்கும் சார்! பொறுத்துக்கோங்கஎன்றவர், செழியனுக்கு அந்த ஊசியைச் செலுத்தினார்.

மருந்து செலுத்தப்பட்ட மறு நொடியே, “ஆஆஆ!” என்று அவன் வலியில் கத்த, வேகமாக அவனருகே வந்தாள் பார்கவி.

சிஸ்டர்! பார்த்து கொஞ்சம் பொறுமையா போடுங்க. அவருக்கு வலிக்குது போலிருக்கு!” என்றாள் அவள்.

அதைக் கேட்டதும் விழி விரித்து அவளைப் பார்த்தவன், கோணலாக ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு, தனது முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டான்.

அவனது சிரிப்பிற்கான அர்த்தம் உணர்ந்தவள், இரண்டெட்டுகள் பின்னால் நகர்ந்து சென்றாள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவள் அவனை உதாசீனம் செய்துவிட்டு வந்த பொழுது, அவனுக்கு எப்படி வலித்திருக்கும் என்று இப்பொழுது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

இருப்பினும் தான் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை என்று நினைத்துப் பெருமூச்சுவிட்டபடி, அந்த அறைக்குள் நின்றிருந்தாள் பார்கவி.

அப்பொழுது அவளது அலைபேசிக்கு ஷாரதா அழைக்கவும், எடுத்து பேசினாள்.

ஹலோ! ஷாரதா

அக்கா! செழியன் மாமாவை ரூமுக்கு மாத்திட்டதா சொன்னாங்க. எந்த ஃப்ளோர்? ரூம் நம்பர் என்ன?” என்று ஷாரதா கேட்கவும், அவளுக்கு வேண்டிய தகவல்களைக் கூறினாள் பார்கவி.

அரண் செழியனுக்கு ஊசியை செலுத்திவிட்டு, பார்கவியிடம் திரும்பிய செவிலியர், “மருந்து ட்ரேயில் மாத்திரை இருக்கு. அதை சாப்பாட்டுக்கு முன்னாடி கொடுத்திடுங்க. சாப்பிட்ட பிறகு கொடுக்க வேண்டிய மாத்திரையை நான் வந்து கொடுத்துடறேன்என்று கூற, அவளும் சரியென்று தலையசைத்தாள்.

பின்னர் அந்த நர்ஸ் அங்கிருந்து சென்றுவிட, இப்பொழுது அவனும் அவளும் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தனர்.

அந்த அறையே மிகவும் அமைதியாக இருக்க, சற்று தயக்கத்துடனே செழியனை நோக்கி நடந்து சென்றாள் பார்கவி.

அவள் தன்னிடம் தான் வருகிறாள், என்பது அவனுக்குத் தெரிந்தாலும் வேறுபுறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்கள் மூடி படுத்திருந்தான் அரண் செழியன்.

அவனருகே வந்தவள், “செழியன்!” என்று சோகம் மேலோங்கிய குரலில் அவனை அழைத்தாள்.

அதைக் கேட்டதும், “ம்ப்ச்!” என்று சலித்துக் கொண்டவன், அவளை திரும்பிப் பார்த்து, “என்ன?” என்று கேட்டான்.

இப்போ கையில் வலி எப்படி இருக்கு?” என்று சற்று தயக்கத்துடனே அவள் கேட்க,

என்ன மேடமுக்கு புதுசா என் மேல அக்கறை எல்லாம் வந்திருக்கு?” என்றான் அவன்.

அதைக் கேட்டளுக்கோ கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தாலும், அதை மறைத்து அவனுக்கு பதிலளித்தாள்.

சாரி செழியன்!” என்று கலக்கத்துடன் கூறியவளிடம்,

ஐயோ! எதுக்குங்க என்கிட்ட போய் சாரி எல்லாம் கேட்குறீங்க? நான் தான் உங்ககிட்ட சாரி கேட்கணும்என்றான்.

அதைக் கேட்டு புரியாமல் விழித்தவளிடம், “முதல்ல உங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு நீங்க என்கிட்ட சொன்னப்பவே நான் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கணும். ஆனா, என்ன பண்ணுறது? மடையன் மாதிரி லவ் பண்ணி தொலைச்சுட்டேன்என்றவன் சற்று இடைவெளி விட்டு,

எல்லாம் என்னுடைய தப்பு தான்! ஆனா, இனிமே உங்க வாழ்க்கையில் சத்தியமா குறுக்கே வர மாட்டேன். நீங்க இனிமே என்னை நினைச்சு பயப்படாமல் சந்தோஷமா இருக்கலாம்என்று, தான் நினைத்ததை அவளிடம் சொல்லி முடித்தான் செழியன்.

அதைக் கேட்டவளுக்கோ நிம்மதி வருவதற்கு பதிலாக சோகம் தான் கரைப்புரண்டு ஓடியது.

தான் விலகிச் சென்ற போது தெரியாத வலிகளும் ரணங்களும், இப்பொழுது அவன் தன்னிடமிருந்து விலகிச் செல்கிறான் என்றதுமே ஓடி வந்து அவளோடு ஒட்டிக் கொண்டன.

செழியன் அவளுக்கு அளித்த அதிர்ச்சியில் இருந்த பார்கவி வெளியே வராமல் நின்றிருந்த வேளையில், ஷாரதாவும், இனியனும் அதைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினரும் அங்கே வந்தனர்.

அனைவரும் அந்த அறைக்குள் ஒன்றாக வர, தன்னை சமநிலைப்படுத்தி சுதாரித்து நின்றாள் பார்கவி.

தன் மகனருகே வந்தமர்ந்த ஆதிரை செல்வியோ, “ஏன் கண்ணா! உனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?” என்று சொல்லி கண்ணீர் விட,

ம்மாப்ளீஸ்! இப்போ எதுக்காக அழுதுட்டு இருக்கீங்க?” என்றான் செழியன்.

சண்முகநாதன் தன் மனைவியின் தோள் தொட்டு, “செல்வி! செழியன் முன்னாடி வச்சு அழாதே! அவன் வருத்தப்படுவான்என்று கூற, ஆதிரை தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டார்.

அங்கு நின்றிருந்த சுகுமாரையும் நீலவேணியையும் பார்த்தவன், மென்னையாக சிரித்தபடி, “எப்படி இருக்கீங்க?”  என்று பொதுவாகக் கேட்க,

நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை. உங்க உடம்பை பார்த்துக்கோங்கஎன்றார் சுகுமார்.

இனியன்! டாக்டர் என்ன சொன்னார்?” என்று சண்முகநாதன் வினவ,

அண்ணனுக்கு கையில் இன்ஃபெக்ஷன் ஆயிருக்காம்பா. அது சரியானதும் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு சொன்னார். எப்படியும் இரண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டி வரும்!” என்றான் இனியன்.

ஆதிரையோ, “ஏங்க! செழினுக்கு சாப்பாடு கொடுக்கணும். நான் வீட்டுக்கு போய் சமைச்சு எடுத்துட்டு வர்றேன். நீங்களும் இனியனும் இங்கேயே இருந்து அவனைப் பார்த்துக்கோங்கஎன்று தன் கணவரிடம் கூற,

அதெல்லாம் வேண்டாம்மா! இன்னைக்கு ஹாஸ்பிட்டல் கேன்டீன்லயே சாப்பாடு வாங்கிக்கலாம். நீங்க எதுக்கு வீணா இந்த வெயில்ல அலைஞ்சு சிரமப்படுறீங்கஎன்றான் அரண் செழியன்.

அதுக்கில்ல செழியா!” என்று ஏதோ சொல்ல வந்தவரிடம்,

ம்மாநான் தான் சொல்றேன்ல! இன்னைக்கு ஒரு நாள் கேன்டீன்லேயே சாப்பிட்டுக்கலாம்என்று அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவன் இனியனைப் பார்த்து,

நீ ஷாப்புக்கு கிளம்பிப் போடா! இங்கே இருந்து என்ன செய்யப் போற? கடையைப் போய் பார்த்து ரொம்ப நாளாச்சுல்லஎன்று அவன் கூற, இனியனும் அதற்கு சரியென்று தலையசைத்தான்.

சுற்றி நின்ற பார்கவியின் குடும்பத்தைப் பார்த்தவன், “நீங்களும் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லஎன்றான்.

அதன் பிறகு, பார்கவியின் குடும்பத்தினர் அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினர்.

செல்வதற்கு முன்னால் ஆதிரையிடம் வந்த பார்கவி, “அத்தைஅந்த மருந்து ட்ரேயில் இருக்கற மாத்திரையை சாப்பிடறதுக்கு முன்னாடி அவருக்கு கொடுக்கணும்என்றாள்.

ஆதிரையும், “சரிம்மா!” என்று புன்னகையுடனே அவளுக்கு பதிலளிக்க,

நான் கிளம்புறேன் அத்தை. அவரை பார்த்துக்கோங்க!” என்றுவிட்டு திரும்பி செழியனைப் பார்த்தாள்.

அவனோ, கண்கள் மூடிப் படுத்திருந்தாலும் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

அவனைக் கண்டு பெருமூச்சுவிட்டவள், தனது குடும்பத்தாருடன் சேர்ந்து அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.

வீடு வந்து சேரும் வரை பார்கவியின் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை. இப்பொழுது தனக்கு என்ன தான் வேண்டும் என்று அவளுக்கே தெரியவில்லை!

அரண் செழியனை திருமணம் செய்ய வேண்டாம் என்று பிடிவாதமாகத் தான் இருக்கிறாள். ஆனால், அதையே அவன் சொல்ல கேட்கும் பொழுது, மனம் கனத்துப் போய் அழுது கண்ணீர் விடுகிறாள்.

என்ன மானம் கெட்ட மனமிது என்று, அன்றிரவு முழுக்க தன்னையே திட்டித் தீர்த்து, விடிய விடிய உறங்காமலே விழித்துக் கிடந்தாள் பார்கவி!

இரவு முழுக்க புரண்டு புரண்டு படுத்தவளால், ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போகவும், எழுந்து ஹாலுக்கு வந்தாள்.

பொத்தென சோஃபாவில் சென்று அமர்ந்தவள், கால்கள் இரண்டையும் மடக்கி அமர்ந்து தனது கால் முட்டி மேல் தலைக்கவிழ்ந்து படுத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து தண்ணீர் அருந்துவதற்காக ஹாலுக்கு வந்த ஷாரதா, மின்விளக்கை எரிய விடவும், சோஃபாவில் அமர்ந்திருப்பவளைக் கண்டு பயந்து ஒரு நொடி நெஞ்சில் கை வைத்தபடி அப்படியே நின்று விட்டாள்.

அக்கா! இந்த நேரத்துல இங்கே உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்க?” என்றபடி வந்து பார்கவியின் அருகில் அமர்ந்தாள் அவள்.

ஆனால், பார்கவி இன்னும் அதே நிலையில் அமர்ந்திருக்க, குழப்பத்துடன் அவளது தோள் தொட்டவள், “அக்கா!” என்றழைத்தாள்.

அப்பொழுதும் பார்கவி தலை நிமிர்த்தாமல் அப்படியே அமர்ந்திருக்க, அவளது தோள்களைப் பற்றி நிமிர்த்தினாள் ஷாரதா.

பார்கவியின் விழிகளில் இருந்து தாரை தாரையாக விழிநீர் வழிந்தோட, அதைக் கண்டு பதறியவள், “என்னாச்சுக்கா? எதுக்காக அழுற?” என்று கேட்க, மறுநொடியே தன் தங்கையின் மடியில் படுத்து அழ ஆரம்பித்து விட்டாள் பார்கவி.

ஷாரதாவிற்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை!

இதற்கு முன்னால் பார்கவி அவளிடம் இப்படி நடந்து கொண்டதே இல்லை.

அக்கா, தங்கை என்றாலும் இருவரும் எலியும் பூனையுமாகத் தான் ஒரே வீட்டில் வளர்ந்து வந்தனர்.

தங்கள் துக்கங்களையோ அல்லது சந்தோஷங்களையோ பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு இருவரும் நெருக்கமானவர்களும் இல்லை!

பார்கவி’ ‘ஆம்என்றால் ஷாரதா, ‘இல்லைஎன்பாள். அப்படியான ஒரு உறவு தான் இதுவரைக்கும் அவர்களுக்கு நடுவே இருந்து வந்தது.

சமீபமாக அரண் செழியனை பார்கவிக்கு திருமணம் பேசி முடித்த பிறகு தான், இருவரும்  கொஞ்சம் நெருங்கிப் பழகிப் பேசுகின்றனர்.

ஆனால், இப்பொழுது பார்கவி தன் மடியில் படுத்து ஏங்கி ஏங்கி அழவும் ஒரு தாயாக தன் சகோதரியை அரவணைத்துக் கொண்டாள் ஷாரதா.

அவளது துக்கம் தீரும் வரை அழட்டும் என்று நினைத்தவள், அவளது முதுகை வருடிக் கொடுத்தபடியே அமர்ந்திருந்தாள்.

பத்து, பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு தான் பார்கவியின் அழுகை சற்று ஓய்ந்தது.

தங்கையின் மடியில் இருந்து எழுந்தவள், கன்னங்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொள்ள, அவளது முகத்தைப் பார்த்த ஷாரதாவிற்கு பக்கென்று இருந்தது.

அக்கா! நைட் முழுக்க நீ தூங்கவே இல்லையா?” என்று வீங்கிச் சிவந்திருந்த அவளது கண்களையும் முகத்தையும் பார்த்து அவள் கேட்க, இல்லை என்று தலையசைத்தாள் பார்கவி.

ஏன்கா? எதுக்காக தூங்காம இப்படி உடம்பை கெடுத்துக்குற?” என்று கேட்டவளிடம்,

என்னாலதூங்க முடியல ஷாரூஎன்றாள் அவள்.

அதுதான் ஏன்?” என்று ஷாரதா கேட்டதற்கு அவளிடம் பதில் இல்லை.

ஏன்னு நான் சொல்லட்டுமா?” என்று குரலில் அர்த்தம் பொதிந்து கேட்டவளை புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள் பார்கவி.

செழியன் மாமாவை காயப்படுத்தினதை நினைச்சு ஃபீல் பண்ணி வருத்தப்பட்டு அழுதுட்டு இருக்க. அப்படித் தானே?” என்று ஷாரதா கேட்க, மௌனமாகத் தலைகவிழ்ந்து கொண்டாள் பார்கவி.

நான் அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன். கோவத்துல எந்த முடிவும் எடுக்காத. அது சரியா இருக்காதுன்னு சொன்னேன். அன்னைக்கு என் பேச்சை கேட்காம அவசரப்பட்டு முடிவெடுத்துட்டு இப்போ வருத்துப்பட்டு என்ன பிரயோஜனம்?” என்று சற்று காட்டமாகவே கேட்டாள் ஷாரதா.

அவளோ தலைகவிழ்ந்தபடி, “தப்பு தான் ஷாரூ! நான் பண்ணது பெரிய தப்பு தான்என்று தனது நெற்றியில் அறைந்து கொண்டாள்.

அவளது மனநிலையை ஒரு பெண்ணாக ஷாரதாவால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

ஆதரவாகத் தன் சகோதரியின் தோள் தொட்டவள், “அக்கா! நான் உனக்கு அட்வைஸ் பண்றதா நினைச்சுக்காத. என் மனசுல தோணுறதை சொல்லிடறேன்என்று கூற, லேசாக மூக்கை உறிஞ்சியவள், “சொல்லு ஷாரூ!” என்றாள்.

செழியன் மாமாவோட உயிர் மேல அவரோட காதலியா, அவரோட வருங்கால மனைவியா உனக்கிருக்கிருக்கற அக்கறையையும் பயத்தையும் பத்தி என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடியுது. ஒருவேளை உன்னோட இடத்தில் நான் இருந்திருந்தா கூட, இதே மாதிரி ரியாக்ட் பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு. ஆனா, அதுக்காக செழியன் மாமா தன்னோட போலீஸ் வேலையை விடணும்னு நீ சொன்னது சரியில்லக்கா!” என்றவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்த பார்கவி, “புரியுது ஷாரூஎன்றாள்.

உனக்குப் பிடிச்ச மேக்கப் ஆர்டிஸ்ட் வேலையை யாராவது விட்டுட்டு வான்னு சொன்னா நீ அதுக்கு சம்மதிப்பியா?” என்று ஷாரதா கேட்டதற்கு, இல்லை என்று தலையசைத்தாள் அவள்.

உன்னோட இந்த பதிலே உனக்கு எல்லாத்தையும் தெளிவா உணர்த்தியிருக்கும்னு நினைக்கிறேன். நடந்து முடிஞ்சதை எல்லாம் விடு. நேற்றைய விஷயம் முடிஞ்சு போன ஒண்ணு. நாளைக்கு நடக்கப் போறது எதுவுமே நம்ம கையில இல்ல. நாம வாழுறது இன்னைக்காக மட்டும் தான்!” என்ற தன் தங்கையை பார்கவி புருவம் சுருக்கிப் பார்க்கவும், “எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்லஎன்றாள் ஷாரதா.

அதற்கு அவள் ஆம் என்று தலையசைக்கவும், “சினிமா பாட்டுல வர்றது தான். சொந்தமா யோசிச்சு கிழவி மாதிரி பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ணுற அளவுக்கு எனக்கு ஒண்ணும் அவ்வளவு வயசாகல்லம்மாஎன்று ஷாரதா விளையாட்டாகக் கூற, அவளுக்கு லேசாக சிரிப்பு வந்து விட்டது.

தன் துக்கம் மறந்து அக்கா சிரிக்கிறாள் என்றதும் தான் ஷாரதாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

வாழ்க்கைன்னா அவ்வளவு தான்கா! சில் பண்ணு. பெருசா எதையும் யோசிக்காத. மனசை ஃப்ரீயா வச்சுக்கோ. எல்லாம் நல்லதாகவே நடக்கும்என்றவளின் கரம் பற்றி, “தேங்க்ஸ் ஷாரூ. எனக்கு உன்னுடைய இந்த ஆறுதலானப் பேச்சு ரொம்பவே தேவைப்பட்டுச்சு!” என்றாள் பார்கவி.

பின்னர் அவளுக்கு குட் நைட் சொல்லிவிட்டு, ஷாரதா படுக்கச் சென்று விட்டாள்.

தங்கை பேசிச் சென்ற பிறகு, பார்கவியின் மனதில் இருந்த பாரம் முற்றிலுமாக விலகியிருந்தது.

நிஜமாகவே நாளையைப் பற்றிய கவலை எதுவுமின்றி, இறகைப் போன்று லேசாக இருந்த மனதுடன் உறங்கச் சென்றாள் அவள்.

அரணாய் வருவான்

மீண்டும் சந்திப்போம்

பிரியமுடன்,

சௌஜன்யா

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 5

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 2

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 4