Ongoing Novels
அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 1
- Get link
- Other Apps
அரணாய் நீ வா!
(பாகம் – 2)
அத்தியாயம் – 1
எட்டு மாதங்களுக்குப்
பிறகு…
மதுரை மாநகரின்
முக்கிய வீதியில் அமைந்திருந்தது அந்தப் பிரபலமான திருமண மண்டபம்.
வெளியே ‘இனியன் வெட்ஸ் ஷாரதா தேவி’
என்று மணமக்களின் பெயர் தாங்கிய ப்ளக்ஸ் போர்டுகளைப் பார்த்தபடியே விருந்தினர்கள்
அனைவரும் அந்தக் கல்யாண மண்டபத்திற்குள் சென்று கொண்டிருந்தனர்.
“அம்மா!
செழியன் அண்ணன் கல்யாணத்துக்கு வந்துருவான்ல” என்று
மணமகன் அறையில் தயாராகிக் கொண்டிருந்த இனியன் தன் தாய் ஆதிரையிடம் கேட்க, அவரோ பெருமூச்சுவிட்டபடி மௌனமாக அமர்ந்திருந்தார்.
தன் மூத்த
மகன் இந்தத் திருமணத்திற்கு வருவானா மாட்டானா என்பது அவருக்குமே ஆணித்தரமாகத் தெரியவில்லை.
எட்டு மாதங்களுக்கு
முன்பு, அரண் செழியனுக்கு
உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வீடு திரும்பி வந்த மறுதினமே, அவன் களக்காட்டிற்கு கிளம்பிச்
சென்று விட்டான்.
கடந்த எட்டு
மாதங்களில் ஒருமுறை கூட அவன் மதுரை பக்கம் செல்லவில்லை. எப்பொழுதாவது வீட்டிற்கு அழைத்துப்
பேசுவான். அவ்வளவு தான்!
அவனது பெற்றோரும்
இனியனும் தான், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் களக்காடிற்குச் சென்று அரண் செழியனைப் பார்த்துவிட்டு
வருவார்கள்.
வருத்தத்துடன்
அமர்ந்திருந்த தன் தாயிடம்,
“என்னம்மா? நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே
இல்லையே!” என்று இனியன் கேட்க,
“என்னை
என்ன செய்ய சொல்ற இனியன். எனக்கும் தான் செழியன் உன் கல்யாணத்துக்கு
வரணும்னு ஆசையா இருக்கு. ஆனா, நான் சொல்லி
கேட்கிற நிலமையா இங்கே இருக்கு. அவங்க இரண்டு பேருக்கும் நடுவில்
என்னாச்சு ஏதாச்சுன்னு தெரியல” என்றவர்,
பெருமூச்சுவிட்டபடி, “அந்த மகராசி என்னடான்னா அவ
இஷ்டத்துக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டடு அவ மட்டும் சந்தோஷமா இருக்கா!
ஆனா, என் புள்ளை தான் அவளால ஊருக்கு வர முடியாம
கஷ்டப்படுறான்” என்று கூறவும்,
“ம்ப்ச்”
என்று சலித்துக் கொண்ட இனியன், “ம்மா… இப்போ எதுக்கு பார்கவி அண்ணியை தேவையில்லாம நடுவில் இழுக்குறீங்க?”
என்றான்.
எழுந்து
வந்து அவன் முன்பு நின்றவர்,
“அண்ணியா! யாருடா உனக்கு அண்ணி? அவ நம்ம எல்லார் மூஞ்சியிலேயும் கரியைப் பூசுன கதை உனக்கு ஞாபகம் இருக்கா…
இல்லையா? காரணமே இல்லாம கல்யாணத்தை நிறுத்தி நம்ம
செழியன் மனசை உடைச்சுட்டா” என்றவர், சிறிது
இடைவெளிவிட்டு,
“அது
சரி! நீ அவளோட தங்கச்சியை தானே கல்யாணம் செஞ்சுக்கப் போற!
அப்போ அவளுக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசுவ. யாருக்குத்
தெரியும்? கல்யாணம் முடிஞ்ச கையோட உன் பொண்டாட்டி உன்னையும் எங்ககிட்ட
இருந்து பிரிச்சு கூட்டிட்டு போனாலும் போயிடுவா” என்று ஆதிரை
பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே
வந்தார் சண்முகநாதன்.
“என்ன
செல்வி பிரச்சனை உனக்கு? நீ போடுற சத்தம் வெளியே நல்லா கேட்குது”
என்று, சற்றே கண்டிப்பான குரலில் அவர் கூறவும்,
கண்கள் கலங்கிப் போய் நின்றவர்,
“நான்
என்னங்க பண்ணுறது? நம்ம செழியன், கல்யாணத்துக்கு
வருவானா இல்லையான்னே தெரியலையே! ரொம்ப நாளைக்குப் பிறகு நம்ம
குடும்பத்துல நடக்கப் போற முக்கியமான ஃபங்கஷன்ல அவன் இல்லைன்னா எப்படிங்க? நம்ம சொந்தக்காரங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். நேத்து நலங்கு வைக்கும் போதே ஆளாளுக்குச் செழியனைப் பத்தி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க”
என்றார்.
மனைவியின்
தோள்களைப் பற்றிய சண்முகநாதன்,
“இங்கே பாரு செல்வி! செழியனைப் பத்தி கவலைப்படுறதை
முதல்ல நிறுத்து. அவன் நிச்சயமா நம்ம இனியனோட கல்யாணத்துக்கு
வருவான். ஆனா, இப்போ நீ கவனிக்க வேண்டியது
இனியனைத் தான். இது அவனோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள்.
செழியன் விஷயத்தை நான் பார்த்துக்கறேன்” என்றார்.
அவர் சொன்னதைக்
கேட்ட பிறகே ஆதிரை சற்று ஆசுவாசப்படவும்,
“நீ போய் வந்திருக்கறவங்களை கவனி செல்வி” என்றார்
சண்முகநாதன்.
விழிநீரை
துடைத்தபடி ஆதிரை அந்த அறையில் இருந்து வெளியேற, கலக்கத்துடன் நின்றிருந்த தனது இளைய மகனிடம் சென்றார்
அவர்.
“என்ன
இனியன்! ஏன் டல்லா இருக்க? இன்னைக்கு உனக்கு
கல்யாணம்பா. சந்தோஷமா இரு” என்ற தன் தந்தையிடம்,
“எப்படிப்பா
சந்தோஷப்படுறது? அம்மா பேசுனதை கேட்டீங்கல்ல. நாளைக்கு ஷாரதாகிட்டேயும் இதே மாதிரி அவங்க நடந்துகிட்டா நான் என்ன செய்யுறதுப்பா?”
என்றான் இனியன்.
“அவ
ஏதோ உன் அண்ணனைப் பார்க்காத டென்ஷன்ல பேசிட்டு போறா. எப்பவும்
நிலமை ஒரே மாதிரி இருக்காது இனியன். நீ தேவையில்லாத விஷயங்களை
உன் தலையில ஏத்திக்காம, கல்யாணத்துக்கு ரெடியாகு” என்றார்.
அவனும் சரியென்று
தலையசைத்தபடி தயாராகச் சென்றான்.
மணமகள் அறையில், தன் தங்கைக்குத் திருமணத்திற்கான
ஒப்பனை அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தாள் பார்கவி.
அவளது கரம், அதன் போக்கில் வேலை செய்து
கொண்டிருக்க, அவளது முகத்திலோ எவ்வித உணர்ச்சியும் தென்படவில்லை.
ஆனால், அவளையே பார்த்துக் கொண்டிருந்த
ஷாரதாவிற்குத் தான் மிகவும் வருத்தமாக இருந்தது.
தன் மூத்த
சகோதரிக்கு முன்னால், தான் மணம் முடித்துக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் அவள்.
ஆனால், இன்று எல்லாம் தலைகீழாக நடப்பதை நினைத்து
அவளுக்கு பெருமூச்சு தான் வந்தது.
தன்னையே
பார்த்துக் கொண்டிருந்தவளிடம்,
“கண்ணை மூடிக்கோ ஷாரூ. ஐ ஷேடோ போடணும்!”
என்று பார்கவி கூற,
“அக்கா!
நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்” என்றாள் ஷாரதா.
“ம்ம்ம்…
கேளு!” என்றவளிடம்,
“அன்னைக்கு
நைட் செழியன் மாமாவை காயப்படுத்திட்டேன்னு நினைச்சு நீ எவ்வளவு ஃபீல் பண்ணி அழுதேன்னு
எனக்குத் தெரியும். உன்கிட்ட பேசிட்டு போன பிறகு, உங்களுக்குள்ள இருந்த பிரச்சனை சரியாகிடும்னு தான் நான் நினைச்சேன்.
ஆனா, ஏன் அடுத்த நாளே இந்த கல்யாணத்துல விருப்பம்
இல்லைன்னு எல்லார்கிட்டேயும் சொன்ன? இதுல எனக்குத் தெரியாம வேற
ஏதாவது விஷயம் இருக்கா?” என்று, வெகு நாட்களாக
தான் நினைத்ததை அவளிடம் கேட்டு முடித்தாள் ஷாரதா.
அதைக் கேட்ட
பார்கவியின் மனக்கண் முன்பு,
அன்று மருத்துவமனையில் வைத்து செழியன் பேசியவை அனைத்தும் மின்னல் போன்று
தோன்றி மறைந்தன.
‘யூ
அர் அ செல்ஃபிஷ் பெர்சன் பாரூ… லெட் அஸ் என்ட் திஸ் ரிலேஷன்ஷிப்’
என்று அரண் செழியனின் குரல் அவளது காதில் ஒலிப்பது போன்றிருந்தது.
யோசனையிலேயே
நின்றிருந்தவளை, “அக்கா….” என்று அவள் அழைக்கவும், “ஆங்…” என்றபடி தன் தங்கையைப் பார்த்தவள்,
“இதுல
உனக்குத் தெரியாத விஷயம் என்ன இருக்கு ஷாரதா? எனக்கும் செழியனுக்கும்
ஒத்து வரல. அதான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நான் நினைச்சேன்”
என்றாள் பார்கவி.
“இல்லக்கா…
எனக்கு தெரியும் நீ…” என்று ஏதோ சொல்ல வந்தவளைத்
தடுத்தவள்,
“இங்கே
பாரு ஷாரதா! ஒரு தங்கையா என்னைப் பத்தி உனக்கிருக்கற கவலை என்னங்கறது
எனக்குப் புரியுது. ஆனா, இனிமே நீ உன்னோட
வாழ்க்கையைப் பத்தி மட்டும் தான் யோசிக்கணும். புதுசா ஒரு உறவுக்குள்ள
போகப் போற… அதனால என்னைப் பத்தி கவலைப்படுறதை விட்டுட்டு இனியன்
கூட வாழப் போறதை நினைச்சு சந்தோஷமா இரு” என்றவள்,
“இப்போ
கண்ணை மூடு. ஐ ஷேடோ போடணும்!” என்றாள்.
அதற்கு மேல், ஷாரதாவும் அவளிடம் எந்தக்
கேள்வியும் கேட்கவில்லை.
சரண்யாவுடன்
சேர்ந்து தன் தங்கைக்கு முழுமையாக அலங்காரம் செய்து முடித்தவள், அவளை மேலிருந்து கீழ் ரசித்துப்
பார்த்தாள்.
“உன்னை
இந்தக் கல்யாண கோலத்துல பார்க்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
ரொம்ப அழகா இருக்க ஷாரூ” என்றவள்,
“இரு!
உனக்கு திருஷ்டி பொட்டு வச்சு விடுறேன்” என்றபடி,
அவளது தாடையின் ஓரமாக ஒரு சிறிய திருஷ்டி பொட்டை வைத்து விட்டாள்.
அப்பொழுது
அறைக்குள் வந்த நீலவேணி, “ஷாரதா… ரெடியாம்மா? மாப்பிள்ளையை
மணமேடைக்கு கூட்டிட்டு போயிட்டாங்க” என்றவர், தன் இளைய மகள் ஏற்கனவே தயாராக நிற்பதைக் கண்டு திருப்தியடைந்தார்.
அவளுக்கு
அருகிலேயே நின்றிருந்த பார்கவியைக் கண்டவர்,
“உங்க அக்கா ஏன் இன்னும் கிளம்பாம இருக்கா? அவளையும்
சீக்கிரமா தயாராகி வரச் சொல்லு” என்று ஷாரதாவிடம் கூற,
அவளோ பார்கவியைத் திரும்பிப் பார்த்தாள்.
“நான்
பக்கத்து ரூம்ல போய் ரெடியாகுறேன் ஷாரூ” என்ற பார்கவியும் தனது
பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றாள்.
அவள் செழியனை
திருமணம் செய்யப் போவதில்லை என்பதை அறிவித்ததில் இருந்து அவளது அன்னை அவளிடம் சரியாகப்
பேசுவதில்லை.
அவருக்கு
தன் மகள் மீது கோபம் ஒரு பக்கம் இருந்தாலும்,
நல்ல சம்பந்தத்தை வேண்டாம் என்று கூறிவிட்டாளே; அவளுக்கும் திருமண வயது கடந்து செல்கிறதே! என்கிற பரிதவிப்பு
தான் அதிகமாக இருந்தது.
அந்தப் பரிதவிப்பின்
வெளிப்பாடு தான் அவரை அவளிடம் நேரடியாகப் பேச விடாமல் செய்கிறது, என்பது பார்கவிக்கும் நன்றாகவே
தெரியும்.
அதனால் தான், தன் அன்னை தன்னை கடிந்து பேசினாலும்
அதைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுகிறாள் அவள்.
பதினைந்து
நிமிடங்களில் பார்கவி தயாராகி வந்திருக்க,
ஷாரதாவை மணமேடைக்கு அழைத்து வரச் சொன்னார்கள்.
பெருமூச்சுவிட்ட
தன் தங்கையின் கரத்தை ஆதரவாகப் பற்றிய பார்கவி, “ரிலாக்சா இரு ஷாரூ. நீ
சிரிச்ச மாதிரி இருந்தா தான் ஃபோட்டோவுக்கு நல்லா இருக்கும்” என்று கூற, அவளும் சரியென்று தலையசைத்தாள்.
பார்கவியுடன்
சேர்ந்து மணமேடைக்கு வந்த ஷாரதா,
இனியனின் அருகில் அமர, அவனோ அவளைப் பார்த்து மென்மையாகப்
புன்னகைத்தான்.
ஷாரதாவை
திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்பது அவனது பல ஆண்டு கனவு. ஆனால், அந்தக் கனவு இன்று நிறைவேறுகிறது என்கிற மகிழ்ச்சியை அவனால் நூறு சதவீதம் முழுமையாக
அனுபவிக்க முவியவில்லை.
அவனது மனதின்
ஓரத்தில், தன்
அண்ணன் இன்னும் வரவில்லையே என்கிற ஏக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது.
மேடையில்
நின்றிருந்த ஆதிரை செல்வி தன் கணவரை கலக்கத்துடன் பார்க்க, அவரோ தனது கண்களை மூடித் திறந்து
தன் மனைவியை ஆறுதல்படுத்தினார்.
பார்கவியோ
உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முக பாவனையுடன் நின்றிருக்க, அதே நேரத்தில் அந்த மண்டபத்திற்குள்
கம்பீரமாக நுழைந்தான் அரண் செழியன்.
பச்சை வண்ண
சட்டையும் வெள்ளை வேஷ்டியும் அணிந்தபடி அவன் நடந்து வரவும், “என்னங்க… நம்ம செழியன் வந்துட்டான்!” என்று, அகமகிழ்ந்து போய் ஆதிரை சத்தமாகக் கூற, அங்கு நின்றிருந்த
அனைவரது கவனமும் செழியனிடம் திரும்பியது.
அவனைக் கண்டு
அனைவரும் மகிழ்ச்சியடைய, பார்கவிக்குத் தான் தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போன்று இருந்தது.
மருத்துவமனையில்
அவனிடம் பேசிவிட்டு சென்ற பிறகு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து இன்று தான் அவனைப்
பார்க்கிறாள்.
முன்பை விட
இப்பொழுது இன்னும் அதிக கம்பீரத்துடன் இருந்தான். அவனையே அவள் இமைக்காமல் பார்த்து நிற்க,
அவனோ யாரிடமும் பார்வை செலுத்தாமல் நேராக மேடை ஏறிச் சென்றான்.
விரைந்து
தன் மகனிடம் சென்ற ஆதிரையோ,
“கண்ணா!” என்றபடி அவனது தோள்களை பற்ற, அவரது கையைப் பிடித்தவன், “எப்படி இருக்கீங்கம்மா?”
என்று கேட்டான்.
“நல்லா
இருக்கேன் செழியா! நீ ஏன்பா இவ்வளவு லேட்டா வந்த?” என்று கேட்டார் ஆதிரை.
அவனோ அதற்கு
ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுக்க,
கீழே அமர்ந்திருந்த இனியன் தன் சகோதரனைக் கண்டதும் எழ முற்பட்டான்.
அவனை கரம்
நீட்டித் தடுத்து, உட்காரும்படி செழியன் கூற, இனியனும் அகமகிழ்வுடன் மணமேடையில்
அமர்ந்து கொண்டான்.
அரண் செழியன்
அங்கு வந்த உடனேயே பார்கவியைத் தான் திரும்பிப் பார்த்தாள் ஷாரதா.
அவளது முகத்தில்
தென்படாவிட்டாலும் பார்கவியின் கண்கள்,
அவளது உள்ளத்தில் தென்பட்ட கலவரத்தை ஷாரதாவிற்கு நன்றாகவே காட்டிக் கொடுத்தது.
இருவரது
விஷயத்திலும் தான் அறிந்திராத ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்று ஷாரதாவிற்கு எப்பொழுதுமே
ஒரு சந்தேகம் உண்டு.
இப்பொழுது
பார்கவியின் கண்களில் தெரிந்தக் கலவரத்தைக் கண்டதும் அவளது சந்தேகம் உறுதியானது.
மணமேடையில்
இனியனின் நெருங்கிய உறவினர்களும்,
ஷாரதாவின் குடும்பமும் நின்றிருந்தனர்.
மாங்கல்யத்தை
ஆசீர்வாதம் வாங்கச் சொல்லி புரோகிதர் அது வைக்கப்பட்டிருந்த தட்டை பார்கவியிடம் நீட்ட, ஒரு கணம் தயங்கியவள் பின்னர்
அதை தனது கைகளில் வாங்கிக் கொண்டாள்.
தனது பெற்றோரிடம்
ஆசீர்வாதம் வாங்கி அட்சதை கொடுத்த பிறகு,
இனியனின் பெற்றோரை நோக்கிச் சென்றாள் அவள்.
சண்முகநாதன்
புன்னகையுடன் அட்சதையை எடுத்துக் கொள்ள,
ஆதிரை செல்வியோ அவளை முறைத்தபடி கோபத்துடன் நின்றிருந்தார்.
“அவர்
தட்டை உன்கிட்ட நீட்டுனா உடனே வாங்கிட்டு வந்து எங்க முன்னாடி நிற்பியா? உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாதா?” என்று
அவர் காட்டமாக அவளிடம் பேச, பார்கவிக்கு கண்கள் கலங்கிப் போய்
விட்டது.
“என்ன
பேசுற செல்வி? அந்தப் பொண்ணை திட்டுற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?”
என்று சண்முகநாதன் கேட்க, “அதில்லைங்க!”
என்று ஏதோ சொல்ல வந்தவரை தடுத்தார் அவர்.
“இனியனோட
கல்யாணம் முடியுற வரைக்கும் நீ வாயே திறக்கக் கூடாது!” என்று
அவர் கண்டிப்படன் கூற, ஆதிரை அமைதியாக அட்சதையை எடுத்துக் கொண்டார்.
கனத்த மனதுடன்
அவருக்கு அடுத்தபடியாக நின்றிருந்த அரண் செழியனிடம் சென்றவள் அவனிடம் தட்டை நீட்டவும், முதலில் தட்டில் பார்வை பதித்தபடி
அட்சதையை எடுத்துக் கொண்டவன், புருவங்கள் உயர்த்தி அவளைப் பார்த்தான்.
ஆனால், அவளது பார்வையோ நிலத்தில்
நிலையாக இருக்க, அவன் அட்சதையை எடுத்த மறுகணமே அங்கிருந்து நகர்ந்து
விட்டாள் பார்கவி.
இறுதியாக, அனைவரது ஆசீருடனும் இனியன்,
ஷாரதா தேவியின் கழுத்தில் மாங்கல்யத்தைப் பூட்டினான்.
அதன் பிறகு, திருமணம் முடிந்து ஒவ்வொருவராக
வந்து மணமக்களை வாழ்த்த, பார்கவி மணமகளுக்கான அறைக்குள் சென்று
அடைந்து கொண்டாள்.
அவளது பெற்றோரும்
நெருங்கிய சொந்த பந்தங்களும் விருந்தினர்களை கவனிப்பதில் பிசியாக இருக்க, பார்கவி அங்கு இல்லாதது பெரிதாக
யாருக்கும் தெரியவில்லை.
முடிந்த
வரை செழியனின் கண்களில் படமால் இருந்துவிட வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த
வேளையில் அவளது அலைபேசி ஒலியெழுப்பியது.
அவளது தோழி
ரம்யா தான் அழைத்திருந்தாள்.
“ஹலோ
ரம்யா!” என்று அழைப்பை ஏற்றவளிடம்,
“பாரூ…
எங்கடி இருக்க. நாங்க மண்டபத்துக்கு வந்துட்டோம்”
என்று அவள் கூற,
“இதோ
வர்றேன் ரம்யா” என்று பதிலளித்தவள், எழுந்து
அந்த அறையில் இருந்து வெளியே சென்றாள்.
தன் தோழிகள்
எங்கே என்று அந்த மண்டபத்தை அலசியவள்,
அவர்கள் நின்றிருந்த இடத்தையும் பேசிக் கொண்டிருந்த நபரையும் கண்டு அதிர்ச்சியில்
விழி விரித்தாள்.
அவர்கள்
மூவரும் அரண் செழியனிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்க, பார்கவிக்கு மயக்கமே வந்து
விடும் போலிருந்தது.
சில நொடிகள்
அப்படியே உறைந்து போய் நின்றவளுக்கு,
தான் எதையும் கண்டு பயந்து ஓடி ஔிந்து கொள்பவள் இல்லையே என்பது புத்தியில்
உறைக்கவும், மனதை சமன்படுத்திக் கொண்டாள்.
இப்படியான
சூழ்நிலைகளை இனி வரும் காலங்களில் தான் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்; அதற்காக தன் மனதை தயார்படுத்திக்
கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள், பெருமூச்சுடன் நடந்து தன் தோழியரிடம் சென்றாள்.
பார்கவியைக்
கண்டதும், “கல்யாண
பொண்ணோட அக்கா ரொம்ப பிசி போல!” என்று ரம்யா கேட்க,
“அதெல்லாம்
இல்ல ரம்யா” என்றவள்,
“வாங்க…
மேடைக்குப் போய் ஃபோட்டோ எடுத்துட்டு வரலாம்” என்றாள்.
அரண் செழியன்
என்பவன் அங்கு நிற்பதையே நினைவில் கொள்ளாதது போன்று தான் அவர்களிடம் பேசினாள் பார்கவி.
அவனும் பெரிதாக
அவளை சட்டை செய்யாமல் தான் நின்றிருந்தான்.
“இவங்க
இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியிருந்தா, இந்நேரம் நம்ம பாரூவுக்கு
வளைகாப்பு முடிஞ்சிருக்க வாய்ப்பிருக்குல்ல” என்று சட்டென மல்லிகா
யோசிக்காமல் பேசிவிட, அனைவரும் ஒருகணம் அதிர்ந்து போய் நின்றனர்.
பார்கவிக்கு
மிகவும் தர்மசங்கடமாகப் போய் விட,
மெதுவாக விழி உயர்த்தி செழியனைப் பார்த்தாள்.
அந்த நேரத்தில்
அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பார்வையை
வைத்து, அவனது
மனதில் என்ன நினைக்கிறான் என்பதை பார்கவியால் யூகிக்க முடியவில்லை.
ஆனால், அவனது பார்வையை மட்டும் அவளால்
எதிர்கொள்ளவே முடியவில்லை.
அதற்கு மேல்
அங்கே நிற்க முடியாமல், வேகமாக நடந்து அறைக்குள் சென்று விட்டாள் அவள்.
செழியனிடம்
என்ன சொல்வதென்று புரியாமல் விழித்த ரம்யா,
சிரித்து சமாளித்தபடி தனது தோழிகளுடன் சேர்ந்து பார்கவியைத் தேடிச் சென்றாள்.
அறையின்
கதவு திறந்தே இருக்க உள்ளே சென்றதும்,
“அறிவிருக்கா மல்லி உனக்கு?” என்று மல்லிகாவை திட்டினாள்
ரம்யா.
“நான்
என்னடி பண்ணுனேன்?” என்றவளிடம்,
“தெரிஞ்சவராச்சேன்னு
ஒரு கர்டசிக்காக செழியன் சார்கிட்ட பேசப் போனா… நீ ஏன் வளைகாப்பு
அது… இதுன்னு… தேவையில்லாம பேசுன?”
என்று கேட்டாள் ஜெஸ்சி.
மல்லிகாவோ, “அது நான் வேணும்னு சொல்லல.
பார்கவியைப் பார்த்ததும் என்னை அறியாம ஆட்டோமேட்டிக்கா வந்துருச்சு”
என்றவள்,
பார்கவியிடம்
சென்று அவளது கரம் பற்றி, “சாரி பாரூ… நான் அப்படி பேசியிருக்கக் கூடாது.
நான் பேசுனது உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா ரியலி சாரிடி” என்றாள்.
அவளோ, “சரி மல்லி…. விடு! உன்னை பத்தி எனக்குத் தெரியாதா? நான் எதையும் பெருசா எடுத்துக்கல” என்று கூறி,
புன்னகைக்க, அவளது தோழியரின் முகத்திலும் புன்னகை.
பின்னர்
அவர்களை மேடைக்கு அழைத்துச் சென்றவள்,
தன் தோழிகளுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டாள்.
பெரும்பால
விருந்தினர்கள் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு சென்ற பிறகு இரு வீட்டாரும் உணவருந்தச்
சென்றனர்.
இனியனையும்
ஷாரதாவையும் மாற்றி மாற்றி உணவு ஊட்டச் சொல்லி ஃபோட்டோகிராபர் புகைப்படமெடுத்துக் கொண்டிருக்க, அவர்கள் இருவரையும் அருகில்
இருந்து ரசித்தபடியே உணவு உண்டாள் பார்கவி.
உணவை எடுத்து
உண்டபடியே நிமிர்ந்தவளுக்கு,
தனக்கு எதிரே இருந்த பந்தி வரிசையில் அமர்ந்திருந்த அரண் செழியனைக் கண்டதும்
உதட்டில் இருந்த சிரிப்பு காணாமல் போய் விட்டது.
முதல் முறையாக
அவனை சந்தித்த தருணம் அவளுக்கு நினைவு வந்தது.
இதே போன்றதொரு
திருமண விழாவில் வைத்து அவனை சந்தித்ததும்,
அதன் பின்னர் அவனுடன் நடந்த உரையாடல்களும் நினைவிற்கு வந்து அவளை கலங்கடித்தன.
அரண் செழியனுக்கும்
ஒருவேளை அதே எண்ணம் தான் தோன்றியிருக்குமோ என்னவோ?
அவனும் உண்ண
மறந்து போய் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அரணாய் வருவான்…
மீண்டும்
சந்திப்போம்!
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- Other Apps
Comments
Nice
ReplyDelete🥰🥰
DeleteSuper story
ReplyDelete