Ongoing Novels
அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 5
- Get link
- Other Apps
அரணாய் நீ வா!
பாகம் – 2
அத்தியாயம்
– 5
மறுநாள்
காலையில் தனது பபிற்சிக்காக ஆயுதப்படை வளாகத்திற்கு கிளம்பிச் சென்றான் அரண் செழியன்.
வெளியே வண்டியை
நிறுத்திவிட்டு, பார்கவியின் ஒப்பனை வகுப்பு நடைபெறும் ஹோட்டலைப் பார்த்தவன், தனது பயிற்சிக்காக உள்ளே செல்ல நினைத்த பொழுது, அந்த
வழியாக நடந்து வருபவளைப் பார்த்தான்.
அவள் அருகில்
வந்ததும், “குட்மார்னிங்!”
என்று செழியன் கூற, அவளோ அவனது குரல் கேட்டு சட்டென
நின்று விட்டாள்.
“குட்மார்னிங்!”
என்று புன்னகையுடன் அவள் பதிலளிக்க, “ப்ரேக்ஃபாஸ்ட்
முடிச்சாச்சா?” என்று கேட்டான்.
அதற்கு ஆம்
என்று தலையசைத்தவள், “நீங்க சாப்பிடாச்சா?” என்று கேட்க, “இனிமே தான். கேம்ப்ல குடுப்பாங்க” என்றான்.
அதன் பிறகு
என்ன பேசுவது என்று இருவரும் புரியாமல் நிற்க, “மதியம் ஃப்ரீயா?” என்று
கேட்டான் செழியன்.
அவளோ ஏன்
கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாலும்,
“ஃப்ரீ தான். இன்னைக்கு மதியம் வரை தான் க்ளாஸ்”
என்றாள்.
அவளது பதிலைக்
கேட்டு திருப்தியடைந்தவன், “அப்படின்னா… இன்னைக்கு லஞ்ச் ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்.
மதியம் நானே வந்து உன்னை பிக் அப் பண்ணிக்குறேன்” என்று கூற, பார்கவிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவன் சொன்னதைக்
கேட்டு அவளது மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும், சரியென்று கூறிவிட்டு அவனிடம் விடைபெற்று,
ஹோட்டல் நோக்கி நடந்தாள்.
மேக்கப் வகுப்பில் கலந்து கொண்டவளின் மனம் அரண் செழியனையே தான் சுற்றி வந்தது.
அவனது இந்த தீடீர் அக்கறை
அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதை அளவோடு அனுபவித்துக்
கொள்ள வேண்டுமென்றே நினைத்தாள் அவள்.
மதியம் வகுப்பு
முடிந்து வந்தவளை ஆச்சர்யப்படுத்தும் விதமாக,
அவளுக்காக அந்த ஹோட்டலின் வாசலில் காத்து நின்றான் அரண் செழியன்.
அவனைப் பார்த்ததும்
ஸ்நேகமாகப் புன்னகைத்தவள், விரைவாக அவனிடம் சென்றாள்.
“எங்கே
சாப்பிடப் போகலாம்? வெஜ்ஜா? நான் வெஜ்ஜா?”
என்று அவன் கேட்க,
“உங்க
விருப்பம். எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே!” என்றாள் அவள்.
“சரி
வண்டியில் ஏறு” என்று அவன் கூற, அவளும்
அவனது இருச்சக்கர வாகனத்தில் ஏறிக் கொண்டாள்.
தலைக்கவசம்
அணிந்து, வண்டி
ஓட்டுபனை அந்த பைக்கின் கண்ணாடி வழியாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
எட்டு மாதங்களுக்கு
முன்பு களக்காட்டில் வைத்து,
செழியனுடன் பைக்கில் சென்ற பொழுது, அவளது மனதில்
இருந்த சந்தோஷம் இப்போதும் அதே அளவிற்கு இருக்கிறதா என்றால் இல்லை தான்!
ஆனால், அவன் தன்னருகே இருக்கும் பொழுது
தான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
என்பதை மட்டும் அவளால் நூறு சதவீதம் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அந்தப் பகுதியில்
இருந்த ஒரு உயர்தர சைவ உணவகத்திற்கு முன்னால் வண்டியை நிறுத்தினான் அரண் செழியன்.
கீழே இறங்கியவளிடம், “இந்த ஹோட்டல்ல சாப்பாடு ரொம்ப
நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன்” என்று அவன் கூற, அவளும் சிரித்தபடியே சரியென்று தலையசைத்தாள்.
பின்னர்
இருவரும் உள்ளே சென்று கைக் கழுவிவிட்டு வந்து ஒரு மேஜையில் அமர்ந்தனர். மதிய வேளை என்பதால்,
அந்த ஹோட்டலில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
“என்ன
சாப்பிடுற பார்கவி?” என்று கேட்டவனிடம்,
“மீல்ஸ்
ஓகே!” என்று அவள் பதில் கூற, அவனுக்கும்
சேர்த்து இரண்டு சைவ சாப்பாடுகளை ஆர்டர் செய்தான்.
உணவு வருவதற்காக
இருவரும் காத்திருந்த வேளையில் அரண் செழியனின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
தொடுதிரையில்
பெயரைப் பார்த்தவன் புன்முறுவலுடன் அழைப்பை ஏற்றான்.
“ஹலோ…
ம்மா… எப்படி இருக்கீங்க?” என்று செழியன் கேட்க, மறுபுறம் பேசிய ஆதிரை செல்வி,
“நான் நல்லா இருக்கேன் செழியா” என்றவர்,
“ஆமா, இப்போ நீ எங்கே இருக்க?” என்று கேட்டார்.
பார்கவியைப்
பார்த்தபடியே, “பக்கத்துல ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட வந்திருக்கோம்மா” என்று அவன் பதில் கூற, அவளோ விலுக்கென நிமிர்ந்து செழியனைப்
பார்த்தாள்.
“சாப்பிட
வந்திருக்கோம்னா? உன்கூட வேற யாராச்சும் இருக்காங்களாப்பா?”
என்று கேட்டார் ஆதிரை.
“ஆமாம்மா…”
என்றவனிடம், அது யார் என்று அவர் கேட்க,
“அது வந்து… பார்…” என்று
செழியன் கூற வரவும், பார்கவி கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
“பார்த்திபன்னு
என் கூட ட்ரெயினிங் வந்த ஒரு இன்ஸ்பெக்டர் கூட தான் சாப்பிட வந்திருக்கேன்மா”
என்று அவன் சொன்ன பிறகு தான் அவளுக்கு அப்பாடா என்றிருந்தது.
ஆதிரையோ, “சரி… சரி… நீ இப்போ இருக்கற ஹோட்டல் பெயர் சொல்லு”
என்று கேட்க, புரியாமல் விழித்தவன், “எதுக்கும்மா?” என்று கேட்டான்.
“நீ
முதல்ல எந்த ஹோட்டல்னு சொல்லுப்பா. விஷயத்தை அப்புறமா சொல்றேன்”
என்றார் அவர்.
அரண் செழியனும்
குழப்பத்துடனே தான் உணவருந்த வந்திருக்கும் ஹோட்டலின் பெயரை அவரிடம் கூற, “சரிப்பா… இன்னும் கொஞ்ச நேரத்துல
ஒரு பொண்ணு உன்னைப் பார்க்க வருவா! அவகிட்ட நல்லவிதமா பேசு”
என்று ஆதிரை கூறவும் குழப்பமடைந்தான் அவன்.
“எந்தப்
பொண்ணும்மா? எதுக்காக இங்கே என்னைப் பார்க்க வர்றாங்க.
ஒருவேளை அவங்களுக்கு கேஸ் விஷயமா ஏதாவது உதவி தேவைப்படுதா?” என்று செழியன் கேட்க,
“அதெல்லாம்
இல்லப்பா. திருநெல்வேலியில் இருந்து உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு.
பொண்ணு உன்னை சந்திச்சுப் பேச விருப்பப்படுறா. அதான் உன்னோட கேம்புக்கு போகச் சொன்னேன்” என்றவர்,
“சரி
பரவாயில்ல… இப்பவே அவளுக்கு ஃபோன் பண்ணி நேரா அந்த ஹோட்டலுக்கே
வரச் சொல்லிடுறேன்” என்றார்.
அதைக் கேட்ட
அரண் செழியனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“அதெல்லாம்
ஒண்ணும் வேண்டாம்மா… நீங்க எதுக்காக என்னைக் கேட்காமல் உங்க இஷ்டத்துக்கு
முடிவெடுக்குறீங்க? இப்போ எனக்கு பொண்ணு பார்த்தே ஆகணும்னு நான்
உங்ககிட்ட கேட்டேனா?” என்று கோபமாக அவன் பேச, பார்கவி அதிர்ந்து விழித்தபடி அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அதுக்கில்லப்பா…
நான் என்ன சொல்றேன்னா” என்றவரிடம்,
“ம்மா…
இப்போதைக்கு இந்தப் பேச்சை விடுங்க. அந்தப் பொண்ணை
திரும்பிப் போகச் சொல்லுங்க” என்று திட்டவட்டமாகக் கூறியவனிடம்,
“என்ன
செழியா? நீ இன்னும் அந்த அடங்காப்பிடாரியை தான் மனசுல நினைச்சுட்டு
இருக்கியா? அவளையே நினைச்சு உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காத.
அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்!” என்று அவர்
ஆத்திரமாகப் பேச, கோபத்தில் அழைப்பைத் துண்டித்து விட்டான் அவன்.
கேமாக மூச்சு
வாங்கியவன், தன்
முன்னால் இருந்த நீரை எடுத்து கடகடவென அருந்தி தனது ஆத்திரத்தை சற்றுக் குறைத்துக்
கொண்டான்.
அவன் பேசியதை
முழுமையாகக் கேட்ட பார்கவிக்கு அனைத்தும் தெளிவாகப் புரிந்தது.
யோசனையுடன்
அமர்ந்திருந்தவனை, “செழியன்!” என்று அவள் அழைக்க, அவளை
நிமிர்ந்து பார்த்தான் அவன்.
“நான்
கிளம்புறேன்!” என்றவளைப் பார்த்து பெருமூச்சு விட்டவன்,
“ஏன்? எதுக்காக கிளம்பணும்னு சொல்ற?” என்று கேட்டான்.
“இல்ல!
உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கும். அதான்…” என்று இழுத்தவளிடம்,
“அப்படி
எந்தத் தலை போற காரியமும் இல்ல. நீ பேசாம உட்காரு” என்றான்.
அதற்குள்
வெயிட்டர் வந்து அவர்களுக்கான உணவினை பரிமாறிச் செல்ல, “சாப்பிடு பார்கவி!”
என்றான்.
அவளும் மறுபேச்சு
பேசாமல் அவனுடன் சேர்ந்து உணவினை உண்டு கொண்டிருந்த நேரம், செழியனின் அலைபேசிக்கு மீண்டும்
ஒரு அழைப்பு வந்தது.
ஏதோ ஒரு
புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர,
அதை ஏற்று அவன் காதில் வைத்த நொடி, அந்த அழைப்பு
துண்டிக்கப்பட்டது.
என்னவென்று
புரியாமல் அவன் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்ந வேளை, “ஹாய் மிஸ்டர் செழியன்!” என்றபடி அவன் முன்பு வந்து நின்றாள் பெண்ணொருத்தி.
நவ நாகரிக
உடையணிந்து தன் முன்னால் நிற்பவளை நிமிர்ந்து பார்த்தவன், “நீங்க?” என்று புரியாமல் கேட்க, “ஆதிரை ஆன்டி சொல்லலையா?
என் பேரு தாரா! உங்களை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கேன்”
என்று அவள் கூற, தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த
பார்கவிக்கு புரை ஏறியது.
பலமாக இருமியவளுக்கு
தண்ணீரை அருந்தக் கொடுத்தவன்,
அவளது தலையில் தட்டி ஆசுவாசப்படுத்த, இருவரையும்
மாற்றி மாற்றிப் பார்த்து புரியாமல் விழித்தாள் தாரா.
பார்கவியின்
இருமல் குறைந்து அவள் சற்று ஆசுவாசப்படவும்,
அந்தப் புதியவளிடம் திரும்பியவன், “உட்காருங்க
தாரா” என்று பார்கவிக்கு அருகே இருந்த இருக்கையைச் சுட்டிக் காட்டினான்.
அவளும் அவன்
காட்டிய இருக்கையில் அமர்ந்து கொள்ள,
“சொல்லுங்க தாரா. என்னை முதன் முதல்ல மாப்பிள்ளை
பார்க்க வந்த பொண்ணு நீங்க தான். என்ன சாப்பிடுறீங்க?
டீ, காஃபி…” என்றவன்,
“வேண்டாம்…
லஞ்ச் டைம்ல எதுக்கு அதெல்லாம். பேசாம உங்களுக்கும்
ஒரு ஃபுல் மீல்ஸ் சொல்லட்டுமா?” என்று அவளிடம் கேட்டான்.
பார்கவியோ
அவர்களைத் தொந்தரவு செய்யாமல் மௌனமாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தாள்.
செழியன்
அவ்வாறு கேட்கவும், “நோ நோ… அதெல்லாம் வேண்டாம். நான்
டயட்ல இருக்கேன்” என்று தாரா கூற, “ஓ…
சரி” என்றான் அவன்.
தன்னருகே
அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த பார்கவியைப் பார்த்தவள், “உங்ககிட்ட தனியா பேசணும்னு
தான் வந்தேன்” என்றபடி அவளை திரும்பிப் பார்க்க, “இட்ஸ் ஓகே. இங்கேயே பேசலாம். சொல்லுங்க”
என்றான் செழியன்.
“எங்க
வீட்ல உங்க ஃபோட்டோ காமிச்சதும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. நீங்க பார்க்க சிங்கம் படத்துல வர்ற சூர்யா மாதிரியே இருந்தீங்களா.
அதான் பார்த்த உடனே ஓகே சொல்லிட்டேன்” என்று அவள்
கூற, செழியன் திரும்பி பார்கவியைப் பார்த்தான்.
அவளோ தலைகவிழ்ந்தபடி
உணவருந்திக் கொண்டிருக்க, தாராவிடம், “சினிமா நிறைய பார்ப்பீங்களோ?” என்று கேட்டான்.
“ஆமா!
என்ன படம் ரிலீஸ் ஆனாலும், தியேட்டருக்குப் போய்
பார்த்துடுவேன். அதுவும் எனக்குப் பிடிச்ச தளபதி படம்னா பர்ஸ்ட்
டே பர்ஸ்ட் ஷோ பார்த்துடுவேன்” என்றாள் தாரா.
“ம்ம்ம்…”
என்றபடி தலையசைத்தவன், “ஒருவேளை என்னை கல்யாணம்
பண்ணிக்குறீங்கன்னா… என்கிட்ட உங்களோட எதிர்பார்ப்பு என்ன?”
என்று கேட்க,
“என்னோட
பெரிய ஆசையே கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட ஹஸ்பன்ட் கூட தளபதி படத்தோட பர்ஸ்ட் டே,
பர்ஸ்ட் ஷோ பார்க்குறது தான்!” என்று தாரா கூறவும்,
மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான் செழியன்.
அவனது முக
மாறுதல்களை எதிரே அமர்ந்து பார்த்த பார்கவிக்கு சிரிப்பு வந்துவிட, முயன்று அதைக் கட்டுப்படுத்தியபடி
அமர்ந்திருந்தாள்.
அவளையே ஓரக்கண்களால்
பார்த்தபடி தாராவிடம், “வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லையா உங்களுக்கு?” என்று
கேட்க,
“நான்
இன்னும் கார் லைசன்ஸ் வாங்கல. ஆஃபிசர்கிட்ட கார் ஓட்டிக் காமிச்சு
லைசன்ஸ் வாங்குறதுக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள் தாரா.
அதைக் கேட்டு
புரியாமல் விழித்தவனோ, “அதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்க,
“அது…
நான் மட்டும் உங்க வைஃப் ஆயிட்டேன்னா… கஷ்டப்படாம
கார் லைசன்ஸ் எடுத்துரலாம். நீங்க சொன்னா எல்லாமே வீடு தேடி வரும்
இல்லையா?” என்றாள் தாரா.
அவள் பேசியதைக்
கேட்ட அரண் செழியனுக்கு கடுப்பாக இருந்தது.
கொஞ்சமும் மன முதிர்ச்சி இல்லாமல் பேசிக் கொண்டிருந்த தாராவை அவனால்
திட்டவும் முடியவில்லை.
அவளிடம், “அவ்வளவு தானா?” என்று அவன் கேட்க, “இன்னும் நிறைய இருக்கு. எல்லாம் நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு சொல்றேன்” என்று
அவள் கூற, ‘முதல்ல அப்படி ஒரு விஷயம் நடந்தா தானே!’ என்று நினைத்துக் கொண்டான் செழியன்.
“சரி…
உங்களோட எதிர்பார்ப்பை என்கிட்ட சொல்லிட்டீங்க. நான் என்னோட எதிர்பார்ப்பை பத்தி இப்போ சொல்லட்டுமா?” என்று அவன் கூற, தாரா சரியென்று தலையசைத்தாள்.
அதைக் கேட்ட
பார்கவியும் தனது செவியைக் கூர்மையாக்கிக் கொண்டாள்.
“போலீஸ்
வேலைங்கறது நீங்க சினிமாவில் பார்க்கிற மாதிரி நாலு ரவுடிங்களை அடிச்சு மாஸ் காட்டுறதோ,
ஹீரோயின் கூட டான்ஸ் ஆடுறதோ இல்ல குறுக்கு வழியில நமக்கு தேவையானதை வர
வைக்கறதோ இல்ல”
“ஒவ்வொரு
நாளும் எங்க வாழ்க்கையை பணயம் வச்சு தான் இந்த நாட்டு மக்களுக்கு நாங்க பாதுகாப்பு
கொடுக்குறோம். தினம் தினம் பலவிதமான குற்ற செயல் செய்யுற மனுஷங்களை
நாங்க சந்திக்க வேண்டி வரும்; அவங்களை அரெஸ்ட் பண்ணி கோர்ட்ல
நிறுத்த வேண்டியது வரும். எங்களோட இந்த வேலையில நிறைய ஆபத்துகளும்
இருக்கு. எங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு வேலை தான் இந்த
போலீஸ் வேலை” என்று அரண் செழியன் பேச, அவனையே
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
அவனது சந்தர்ப்ப
சூழ்நிலையையும், மனநிலையையும் புரிந்து கொள்ளாமல், அவனிடம் தான் சுயநலமாக
நடந்து கொண்டதை நினைத்து அவளுக்கே குற்ற உணர்ச்சியாக இருந்தது.
இவ்வாறு
அவள் சிந்தித்துக் கொண்டே இருக்க,
செழியனது பார்வை அவள் மீது தான் இருந்தது.
உண்ணாமல்
யோசித்துக் கொண்டிருந்தவளை,
“பார்கவி!” என்று அவன் அழைக்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“சாப்பிடு”
என்று அவன் கூற, அவளும் சரியென்று தலையசைத்தாள்.
இருவரையும்
மாற்றி மாற்றி பார்த்த தாரா,
“அப்பவே கேட்கணும்னு நினைச்சேன்! இவங்க யாரு?”
என்று பார்கவியைப் பார்த்துக் கேட்டாள்.
பார்கவி
செழியனைப் பார்க்க, அவனோ, “இவங்க என்னோட ரிலேட்டிவ்” என்றான்.
“ரிலேட்டிவ்னா?”
என்று மீண்டும் கேள்வி எழுப்பியவளிடம்,
“இவங்களோட
தங்கையைத் தான் என்னோட தம்பி இனியன் கல்யாணம் பண்ணியிருக்கான்” என்று செழியன் விளக்கம் கூற,
“ஓஹ்…
ஓகே ஓகே… நான் கூட ஒருவேளை நீங்க லவ்வர்சா இருப்பீங்களோன்னு
நினைச்சேன்” என்றாள் தாரா.
அதைக் கேட்டு
பார்கவியின் கண்கள் விரிய, அரண் செழியன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பார்கவி
உண்டு முடித்து கை கழுவுவதற்காகச் சென்றுவிட,
தாராவிடம், “என்னைப் பத்தி கொஞ்சம் புரிஞ்சிருப்பீங்கன்னு
நினைக்கிறேன்” என்று அவன் கூற,
“ம்ம்ம்…
நீங்க சொல்றதை வச்சு பார்க்கும் போது உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு
நினைக்கிறேன்” என்றவள் எழுந்து நின்று,
“நைஸ்
மீட்டிங் யூ. அப்போ நான் கிளம்புறேன்” என்று
கூறி அவனிடம் விடைபெற்று அங்கிருந்து சென்று விட்டாள்.
பார்கவி
திரும்பி வந்த போது, செழியன் தனியாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, சுற்றும்
முற்றும் பார்த்தபடி தாராவைத் தேடினாள்.
“அவங்க
கிளம்பி போயிட்டாங்க” என்று அவன் கூற, “ஓஹ்… சரி!” என்றவள், அவன் உணவருந்தி முடிக்கும் வரை அவனுடன் அமர்ந்திருந்தாள்.
உண்டு முடித்து
பில் தொகையை செலுத்திவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.
“அப்போ
நான் கிளம்புறேன்” என்று பார்கவி கூற, “மதியத்துக்கு மேல ஃப்ரீன்னு சொன்னதா ஞாபகம்” என்றான்
செழியன்.
அவளும் ஆமோதிப்பாக
தலையசைக்க, “வண்டியில
ஏறு” என்றான். அவளும் மறு பேச்சு பேசாமல்
அவனுடன் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
இருவரும்
மனதிற்குள் ஆயிரம் எண்ணங்களை புதைத்து வைத்திருந்தாலும், இருவருக்கும் நடுவில் கோப
தாபங்கள் இருந்தாலும், ஒருவர் மற்றவர் மீதிருக்கும் எதிர்மறை
சிந்தனைகளைப் புறம் தள்ளிவிட்டு அந்த நொடிப் பொழுதை ஒன்றாக கழிப்பதில் மகிழ்வை கண்டார்கள்.
அவளை வண்டியில்
ஏற்றியவன் அவளை நேராக ஆயுதப்படை வளாக மைதானத்திற்கு அழைத்துச் சென்றான்.
பைக்கை நிறுத்திவிட்டு
அவனுடன் சென்றவள், எதற்காக தன்னை அவன் இங்கு அழைத்து வந்திருக்கிறான் என்று அவளை ஒரு கேள்வி கூட
கேட்கவில்லை.
அவனுடன்
சேர்ந்து நடந்து சென்றவளை ஒரு மரத்தடியில் இருந்த பெஞ்சில் அமர வைத்து அவளருகே தானும்
அமர்ந்து கொண்டான்.
அந்த மைதானத்தில்
காவல்துறையில் பணிபுரிவோர் பல்வேறு வகையான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்தையும்
ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த பார்கவி,
“உங்களுக்கு அடிக்கடி இந்த மாதிரி ட்ரெயினிங் இருக்குமா?” என்று கேட்டாள்.
“ஆமா!
உடம்பையும் மனசையும் நாங்க எப்பவுமே ஃபிட்டா வச்சுக்கணும். அதுக்காக அப்பப்போ இப்படிப்பட்ட பயிற்சியை எடுத்துட்டே இருக்கணும்”
என்றான்.
அந்த மைதானத்தில்
பயிற்சி மேற்கொண்டவர்களை சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, ஆயுதப்பயிற்சி என்று தங்கள் உடம்பை வருத்தி அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் விதம்
அவளுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியது.
அவர்கள்
மீது பார்வை பதித்தபடியே, “என் வாழ்க்கையில முதல் முறையா இப்போ தான் போலீஸ் ஆஃபிசர்ஸ் ட்ரெயினிங் எடுக்கறதை
கண் கூடா பார்க்குறேன்.”
“ட்ராஃபிக்
போலீசை எடுத்துகிட்டா வெயில், மழைன்னு பார்க்காம நாள் முழுக்க
ரோட்ல நின்னு வேலை செய்யுறாங்க. க்ரைம் ப்ராஞ்ச்னா ஒரு நாளைக்கு
எத்தனையோ கேஸ் வரும்; பல பேரை சமாளிக்கணும், ஒரு பொதுக்கூட்டம்னா பந்தோபஸ்து கொடுக்கணும்; இடி மழை
புயல்னு வந்தா அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்” என்றவள் அவனை
திரும்பி பார்த்து,
“உண்மையிலேயே
நீ்ங்க எல்லாரும் க்ரேட் செழியன். உங்களோட வேலைக்குப் பின்னாடி
இவ்வளவு உழைப்பிருக்கும்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்ல” என்றாள்.
அவனோ, “இப்பவாவது புரிஞ்சுதே!”
என்று கூற, அவனுக்கு சிரிப்பையே பதிலாக அளித்தாள்
அவள்.
இப்படியே
நாட்கள் கடந்திருக்க, பார்கவியின் ஒப்பனை வகுப்பும், அரண் செழியனின் போலீஸ்
பயிற்சியும் முடியும் நாள் வந்தது.
கடந்த வாரம்
முழுவதும் இருவரும், ஒருவரை ஒருவர் சந்திக்காத நாளே இல்லை. எதை எதையோ பேசி,
முகவரி தெரியாத தங்கள் உறவை வலுப்படுத்திக் கொண்டனர் இருவரும்.
பார்கவி
அன்று மாலை மதுரைக்கு கிளம்பிச் செல்வதாகக் கூற, அவளை தானே பஸ் ஏற்றி விட வருவதாகக் கூறினான் செழியன்.
திருநெல்வேலி
பேருந்து நிலையத்தில் மதுரைக்குச் செல்லும் பேருந்து நின்றிருக்க, “அப்போ நான் கிளம்புறேன்”
என்று மனமே இன்றி அவனுக்கு விடை கொடுத்தாள் அவள்.
அரண் செழியனோ
அவளிடம், “பாரூ…
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்” என்று கூற, அவள் புரியாமல் என்ன என்று கேட்டாள்.
“நான்
உன்னை கல்யாணம் செஞ்சுக்க விரும்புறேன். உனக்கு இதில் சம்மதம்னா
என்கூட வந்து பைக்கில் ஏறு. இல்லைன்னா…. இந்த பஸ்சில் ஏறி நீ தாராளமா ஊருக்குப் போகலாம். உன்னை
நான் வற்புறுத்த மாட்டேன். ஆனா, என் மனசுல
இருக்கறதை உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு!” என்றவன், அங்கிருந்து வேகமாக நடந்து வாகனம் நிறுத்துமிடத்திற்குச் சென்று விட்டான்.
அவன் என்னமோ
சாதாரணமாகப் பேசிச் சென்று விட்டான்.
ஆனால், அதைக் கேட்ட பார்கவிக்குத் தான் என்ன செய்வதென்றே
புரியவில்லை!
தன் முன்னால்
பொக்கிஷப் பேழையாக வந்திருக்கும் இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதா?
இல்லை, முன்பு தான் செய்த தவறை நினைத்து
வருந்தி, அதற்காக பயந்து மீண்டும் அதை செய்துவிடக் கூடாது என்று
நினைத்து இதை மறுப்பதா? என்று இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்து
நின்றாள் அவள்.
அரணாய் வருவான்…
மீண்டும்
சந்திப்போம்!
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- Other Apps
Comments
Arumai
ReplyDeleteநன்றி
DeleteVittraathey....pudichchikko kappunnu 😝😝😝😝😝
ReplyDelete😁😂
DeleteVery interesting
ReplyDeleteநன்றி!
Delete