Ongoing Novels
அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 3
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
பாகம் – 2
அத்தியாயம் – 3
களக்காடு
காவல் நிலையம்!
தனது தனியறையில்
கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த அரண் செழியனைத் தேடிச் சென்றார் ஏட்டு சுயம்புலிங்கம்.
“சார்!”
என்றவரிடம்,
“வாங்க
ஏட்டாய்யா!” என்றபடி நிமிர்ந்து அவரை பார்த்தான் செழியன்.
“சார்!
இன்னைக்கு நம்ம ஊர் பள்ளிக்கூடத்துல புது நூலகத் திறப்புவிழாவுக்கு உங்களை
சீஃப் கெஸ்டா கூப்பிட்டிருந்தாங்களே” என்று அவர் நினைவுப்படுத்தவும்,
“ஓஹ்…
அந்தத் திறப்புவிழா இன்னைக்கு தானா? மறந்தே போயிட்டேன்”
என்றவன்,
“எத்தனை
மணிக்கு ஃபங்ஷன்?” என்று கேட்டான்.
“பத்து
மணிக்கு சார்” என்று அவர் பதிலளிக்க, கடிகாரத்தில்
மணியைப் பார்த்தவன்,
“இன்னும்
அரைமணி நேரம் இருக்கு. அதுக்குள்ள இந்த ஃபைல்சை பார்த்து முடிச்சுடறேன்.
சரியா ஒன்பது ஐம்பதுக்கு இங்கிருந்து கிளம்பிடலாம்” என்று கூற, சுயம்புலிங்கமும் சரியென்று கூறிவிட்டு அங்கிருந்து
சென்றார்.
சொன்னபடியே
சரியான நேரத்திற்கு ஸ்டேஷனில் இருந்து கிளம்பிச் சென்றான் அரண் செழியன்.
ஏட்டு சுயம்புலிங்கத்துடன்
சரியாக ஒன்பது ஐம்பத்தி எட்டுக்கு அந்த ஊரில் இருந்த அரசு உதவிபெறும் பள்ளிக்குத் தங்கள்
காவல்துறை வாகனத்தில் சென்று இறங்கினான்.
பள்ளியின்
தலைமை ஆசிரியர் வந்து செழியனை வரவேற்க,
அவருடன் கை குலுக்கிவிட்டு அவரது அறைக்குச் சென்றான்.
அவன் அங்கு
வந்ததுமே ஒரு ஆசிரியை வந்து செழியனுக்குத் தேநீர் வழங்க, “தேங்க் யூ” என்றபடி அதை ஒரு சிரிப்புடன் அதை எடுத்துக் கொண்டான்.
சுயம்புவும், செழியனும் தேநீர் குடித்துக்
கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராஜ், “நீங்க நம்ம ஸ்கூலுக்கு வந்ததுல ரொம்ப சந்தேஷம் சார்” என்றவர்,
“நம்ம
எதிர்கட்சி MLA கனகரத்தினம் ஐயாவும் ஃபங்கஷனுக்கு வந்துட்டு இருக்கார்.
அவர் வந்ததும் விழாவை ஆரம்பிச்சுரலாம் சார்” என்று
கூற, செழியனோ சற்று யோசனையுடனே அவரிடம் சரியென்று தலையசைத்தான்.
அதன் பிறகு, விழா ஏற்பாட்டை கவனிப்பதற்காக
ஆரோக்கிய ராஜ் அங்கிருந்து சென்றுவிட, சுயம்புலிங்கத்தை அழைத்தவன்,
“கனகரத்தினம் ஐயா வர்ற விஷயம் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?”
என்று கேட்க,
“இல்ல
சார். இப்போ ஹெட் மாஸ்டர் வந்து சொன்ன பிறகு தான் எனக்கே இந்த
விஷயம் தெரியும் சார்” என்றார் அவர்.
“ம்ம்ம்…”
என்றபடி ஏதோ யோசித்தவன்,
“முன்னாடியே
கேட்கணும்னு நினைச்சேன். MLA கனகரத்தினம் எப்படிப்பட்டவர்?
ஊர்ல அவருக்கு ஆதரவு எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
“அவரை
பத்தி சொல்லணும்னா… நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவர் ஒரு பக்கா
அரசியல்வாதி சார். தன்னோட அரசியல் வாழ்க்கைக்காக அவர் எந்த எல்லைக்கு
வேணாலும் போவார்னு கேள்விப்பட்டிருக்கேன். அரசியலுக்கு வர்றதுக்கு
முன்னாடி லோக்கல்ல கட்டப்பஞ்சாயத்து பண்ணிட்டு இருந்ததா ஊருக்குள்ள பேச்சு இருக்கு
சார்” என்று சுயம்புலிங்கம் தனக்குத் தெரிந்த விவரங்களைக் கூற,
“ஐ
சீ!” என்றபடி யோசனையுடனே அமர்ந்திருந்தான் அரண் செழியன்.
அவனும், ஏட்டும் நீண்ட நேரமாக அந்த
அறையினுள் காத்திருந்த போதிலும், கனகரத்தினம் வருவதற்கான அறிகுறி
மட்டும் தென்படவில்லை.
மணி பத்தரை
ஆனது, பதினொன்று
ஆனது!
ஆனால், அவர் அங்கு வருவதற்கான அறிகுறி
துளியளவும் இல்லாமல் போக, பொறுமையிழந்து போனான் அரண் செழியன்.
அந்த அறையில்
இருந்து அவன் வேகமாக வெளியேற,
அவன் பின்னால் ஓடி வந்த ஏட்டு, “என்னாச்சு சார்?”
என்று கேட்டார்.
“என்ன
ஏட்டய்யா இது? நாம இங்கே வந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஆகுது.
எனக்கு என்ன வேற வேலை வெட்டி இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கேன்னு
நினைச்சுட்டு இருக்காங்களா?” என்று செழியன் சற்று கோபப்பட,
“சார்!
கொஞ்சம் பொறுமையா இருங்க சார். நான் போய் ஹெட்
மாஸ்டர்கிட்ட என்ன ஏதுன்னு விவரம் கேட்டுட்டு வர்றேன்” என்றவர்,
வேகமாக ஆரோக்கிய ராஜை தேடிச் சென்றார்.
சிறிது நேரம்
கழித்து சுயம்புலிங்கத்துடன் வந்த தலைமை ஆசிரியர், செழியன் சற்று டென்ஷனாக இருப்பதைக் கண்டு பதட்டமானார்.
“சாரி
சார்! உங்களை ரொம்ப நேரம் காத்திருக்க வச்சுட்டோம். கனகரத்தினம் ஐயா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க. அவர் வந்ததும் ஃபங்ஷன் ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்ற ஆரோக்கிய
ராஜிடம்,
“அங்கே
பாருங்க” என்று அந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை சுட்டிக்
காட்டினான் அரண் செழியன்.
மைதானம்
முழுக்க, அந்தப்
பள்ளியில் பயிலும் மாணவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
“நான்
வர்றதுக்கு முன்னாடியே இந்தக் குழந்தைங்க எல்லாரும் இங்கே உட்கார்ந்திருக்காங்க.
பாவம்! இந்த வேகாத வெயில்ல எப்படி கஷ்டப்பட்டு
உட்கார்ந்திருக்காங்க பாருங்க. ஆனா, நீங்க
அவங்களைப் பற்றி கவலைப்பட்ட மாதிரி எனக்குத் தெரியலையே” என்றவனிடம்,
“ஐயோ!
அப்படியெல்லாம் இல்ல சார். சரியா பத்து மணிக்கு
ஃபங்ஷன் ஆரம்பிக்கறது தான் சார் எங்களோட ப்ளான். ஆனா,
இவ்வளவு லேட்டாகும்னு நாங்க எதிர்பார்க்கல. சாரி
சார்” என்று மீண்டும் அவர் செழியனிடம் மன்னிப்பு கோர,
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“ஓகே
சார்! கூடுதலா இன்னும் பத்து நிமிஷம் வேணா வெயிட் பண்ணுறேன்.
அதுக்குள்ள MLA வந்துட்டாருன்னா நல்லது.
அப்படி இல்லாம இன்னும் லேட் பண்ணாருன்னா… ஐ ஆம்
சாரி! இந்த ஃபங்கஷன்ல என்னால கலந்துக்க முடியாது” என்று தெளிவாக அவரிடம் கூறி விட்டான் அரண் செழியன்.
அதைக் கேட்ட
ஆரோக்கிய ராஜிற்கு வியர்த்துக் கொட்டியது.
அவன் சொல்வதை ஏற்றுக் கொள்வதைத் தவிர, அவருக்கு
வேறு வழி இருக்கவில்லை.
பத்து நிமிடங்கள்
கடந்த பிறகும் கனகரத்தினம் அந்தப் பள்ளிக்கு வரவில்லை. நெற்றியில் வழிந்த வியர்வைத்
துளிகளைத் துடைத்தபடி, அவரது உதவியாளருக்கு அலைபேசியில் அழைத்தார்
ஆரோக்கிய ராஜ்.
இரண்டு முறைகள்
முயன்ற பிறகும் அழைப்பு ஏற்கப்படவில்லை!
சற்று பயத்துடன்
அவர் செழியனைப் பார்க்க, “ஓகே சார்! இதுக்கு மேல என்னால இங்கே இருந்து என்னோட நேரத்தை
வீணடிக்க முடியாது. இன்னொரு நாள் டைம் கிடைக்கும் போது வந்து
ஸ்டூடன்ட்ஸ்கிட்ட பேசுறேன்” என்று கூறிவிட்டு, காரில் ஏறி அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டான்.
சரியாக அவன்
கிளம்பி ஐந்து நிமிடங்கள் கழித்து,
MLA கனகரத்தினத்தின் கார் அந்த பள்ளிக்குள் நுழைந்தது.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தோளில் வெள்ளைத் துண்டு போட்டுக் கொண்டு தனது பெரிய காரின் முன்பக்க சீட்டில்
அமர்ந்திருந்தார் அவர்.
பின்னால்
இருந்த தனது உதவியாளரிடம், “என்ன ஜீவானந்தம்? அந்த இன்ஸ்பெக்டர் கிளம்பி போயிட்டான்ல?”
என்று கரகரப்பான குரலில் அவர் கேட்க,
“அவர்
கிளம்பிப் போய் அஞ்சு நிமிஷம் ஆச்சுங்கய்யா. நம்ம மருது ஸ்கூலுக்குள்ள
தான் இருக்கான். அவன்தான்யா அவர் கிளம்பிட்டதா கொஞ்ச நேரத்துக்கு
முன்னாடி தகவல் கொடுத்தான்” என்றான் ஜீவானந்தம்.
“ம்ம்ம்…
கிளம்பிட்டானா? அது தான் அவனுக்கு நல்லது”
என்றவர்,
“யாருய்யா
அந்த இன்ஸ்பெக்டரு? நேத்து வந்தவனுக்கெல்லாம் மரியாதை குடுத்து
எனக்கு சரி சமமா நிக்க வைக்கிறாங்க! எனக்கு பந்தோபஸ்து கொடுக்கற
இடத்துல இருக்கறவன் கூட சேர்ந்து நான் மேடையில் உட்காரணுமா? இந்த
ரத்தினதுக்குன்னு ஒரு கௌரவம் இருக்கா இல்லையா?” என்றவர்,
பின்னால்
திரும்பி, “என்ன
ஜீவா! நான் சொல்றது சரிதானே?”என்று கேட்க,
“சரிதாங்கய்யா!” என்றான் அவன்.
“சரி!
சரி! அந்த மாத்திரையைக் கொஞ்சம் குடு. காலையில மாத்திரை போட மறந்துட்டேன். உடம்பெல்லாம் ஒரு
மார்க்கமா உதறுது” என்று கூற, அவர் வழக்கமாகப்
போடும் சில மாத்திரைகளை எடுத்து கனகரத்தினத்திடம் கொடுத்தான் ஜீவானந்தம்.
மாத்திரையை
வாங்கிப் போட்டுக் கொண்டவர்,
“இனிமே இந்த மாதிரி சில்லறை பசங்களை எல்லாம் என் பக்கத்துல உட்கார வைக்க
நினைக்க வேண்டாம்னு அந்த ஹெட் மாஸ்டர்கிட்ட சொல்லி வை” என்றவரிடம்,
“சரிங்கய்யா” என்று பவ்யமாக பதிலளித்தான் அவன்.
அதன் பிறகு
அவர் தனது உதவியாளர் மற்றும் சில ஆதரவாளர்களுடன் சேர்ந்து அந்தப் பள்ளியின் நூலகத்
திறப்பு விழாவிற்குச் சென்று,
ஆரவாரத்துடன் நூலகத்தைத் திறந்து வைத்து, மாணவர்களிடம்
சொற்பொழிவும் ஆற்றினார்.
இப்படியே
இரண்டு வாரங்கள் கடந்திருக்க,
ஒரு நாள் அந்த ஊரின் கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்றிருந்தான்
அரண் செழியன்.
அன்று கோவில்
நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட,
கூட்டம் அலை மோதியது.
வெவ்வேறு
காவல் நிலையங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க, செழியன் அனைத்தையும் மேற்பார்வை
பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென, “நம்ம MLA ஐயா வர்றாங்க! எல்லாரும் வழி விடுங்க” என்று கூட்டத்தில் யாரோ கூச்சலிட, அரண் செழியன் கோவிலின்
வாயில்புறமாகப் போய் நின்றான்.
தனது கட்சிக்காரர்களுடன்
ஆரவாரமாக காரில் வந்திறங்கினார்
MLA கனகரத்தினம்.
காரில் இருந்து
இறங்கி வந்தவர், வாயிலில் நின்றிருந்த அரண் செழியனைக் கண்டு, “வணக்கம்
இன்ஸ்பெக்டர் தம்பி!” என்று சிரித்த முகமாக கை கூப்பி வணக்கம்
சொல்ல, செழியனும் அவருக்கு பதில் வணக்கத்தை தெரிவித்தான்.
கழுத்தை
சுற்றிப் போடப்பட்டிருந்த வெள்ளை துண்டை சரி செய்தபடி, “அன்னைக்கு நம்ம பள்ளிக்கூட
திறப்பு விழாவுல நீங்களும் கலந்துக்க இருந்ததா நம்ம ஹெட் மாஸ்டர் சொன்னாரு.
நானும் உங்களை சந்திக்க ஆவலா இருந்தேன். ஆனா,
கடைசி வரை சந்திக்க முடியாமலே போயிருச்சு” என்றார்
கனகரத்தினம்.
செழியனுக்கு
ஏனோ அவரை பார்த்ததுமே நல்ல அபிப்ராயம் தோன்றவில்லை. அவர் பேசுவதை வைத்தே ஏதோ ஒன்று அவரிடம் சரியில்லை
என்று நினைத்துக் கொண்டான்.
தனது யோசனையை
புறம் தள்ளிவிட்டு, “சாரி சார்! அன்னைக்கு எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை
இருந்தது. அதனால தான் அந்த ஃபங்கஷன்ல கலந்துக்க முடியல”
என்று தனக்கு தேன்றிய காரணத்தை சொல்லி சமாளித்தான் செழியன்.
அவரோ விஷமச்
சிரிப்பொன்றை உதிர்த்தபடி, “சரிங்க தம்பி! ஒருநாள் கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வாங்க…
பேசுவோம்” என்றவர், தனது குழுவுடன் சேர்ந்து கோவிலுக்குள்
சென்று விட்டார்.
உள்ளே நுழைந்ததும், “பார்த்தியா ஜீவா!
சாருக்கு ஏதோ முக்கியமான வேலை இருந்ததால தான் ஃபங்கஷனுக்கு வர முடியலையாம்!”
என்று சொல்லி சிரிக்க,
“எல்லாமே
உங்களோட திருவிளையாடல்தான்னு தெரியாம பேசுறாருய்யா அந்த இன்ஸ்பெக்டரு. போகப் போக உங்களைப் பத்தி புரிஞ்சுப்பாருங்கய்யா” என்றான்
ஜீவானந்தம்.
“அப்படி
அவன் புரிஞ்சுக்கலைன்னா… நாம புரிய வைப்போம்! என்ன நான் சொல்றது?” என்று கனகரத்தினம் கேட்க,
அவருக்கு ஜால்ரா தட்டிக் கொண்டே உள்ளே சென்றான் ஜீவானந்தம்.
கனகரத்தினத்திடம்
பேசிய பிறகு, அரண்
செழியனுக்கு மனதில் சில சந்தேகங்கள் எழுந்தன. அவரது பொய்யான சிரிப்பும்,
போலியான முகஸ்துதியும் அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி,
ஒருவேளை அவர் வேண்டுவென்றே தான் அன்று பள்ளி நூலகத் திறப்பு விழாவிற்கு
தாமதமாக வந்தாரோ என்று கூட தோன்றியது அவனுக்கு.
அதன் பிறகு, அன்னதானம் முடியும் வரை கோவிலில்
பாதுகாப்பு பணியில் இருந்தவன், ஏட்டு சுயம்புலிங்கத்துடன் சேர்ந்து
அங்கிருந்து கிளம்பினான்.
போலீஸ் காரில்
இருவரும் காவல் நிலையம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
ஊருக்கு
வெளியே, சாலையின்
இருபுறமும் அடர்ந்த தென்னந்தோப்பிற்கு நடுவே அந்த வாகனம் சென்று கொண்டிருக்க,
தூரத்தில் எதையோ பார்த்த செழியன், “ஏட்டய்யா… ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்துங்க” என்று கூறினான்.
அதைக் கேட்டதும்
சுயம்புலிங்கம் சட்டென வண்டியை நிறுத்தி,
“என்னாச்சு சார்?” என்று கேட்க, “அங்கே பாருங்க” என்று தூரத்தில் கை காட்டினான் அரண் செழியன்.
இவர்களது
வாகனம் நின்றிருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் ஒரு சிவப்பு நிற சுவிஃப்ட் கார்
நின்றிருந்தது.
அந்தக் காருக்கு
வெளியே நின்றிருந்த பெண்ணைக் கண்டதும்,
“இது… கொலை செய்யப்பட்ட அந்தக் கான்ட்ராக்டர் செல்வனோட
மனைவி சார்” என்று சுயம்புலிங்கம் கூற,
“ஆமா!
அவங்க தான். ஆனா, இங்கே என்ன
பண்ணிட்டு இருக்காங்க?” என்றான் செழியன்.
அந்த சிவப்பு
காருக்கு வெளியே நின்றிருந்த துர்கா,
குனிந்து காரினுள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த யாரிடமோ நின்று
பேசிக் கொண்டிருந்தாள்.
இரண்டு நிமிடங்கள்
கழித்து, சாலையின்
மறுபுறம் நின்றிருந்த ஒரு இருச்சக்கர வாகனத்தில் ஏறிச் சென்று விட்டாள் அவள்.
அதன் பிறகு, அந்த சிவப்பு நிற கார் அங்கிருந்து
கிளம்பிச் சென்று விட்டது.
இவை அனைத்தையும்
காருக்குள் இருந்து பார்த்த செழியனிடம்,
“துர்கா! யாரோ அவங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்ட பேசிட்டு
போறாங்க போல சார்” என்று சுயம்பு கூற,
“இல்ல!
அந்த சிவப்பு காரை இதுக்கு முன்னாடி நான் எங்கேயோ பார்த்திருக்கேன்.
ஆனா, எங்கே பார்த்தேன்னு சரியா ஞாபகம் வர மாட்டேங்குது”
என்றவன், நெற்றியில் விரல் வைத்து கண்கள் மூடி
ஒரு சில நிமிடங்கள் யோசித்தான்.
ஆழ்ந்த யோசனைக்குப்
பிறகு, “செல்வன்
கொலை செய்யப்பட்ட பிறகு, துர்கா ஏதோ ஒரு தோப்பு வீட்டுக்கு போயிட்டு
வந்தததைப் பார்த்தேன். உங்ககிட்ட கூட அந்த ஆட்டோ நம்பரை நோட்
பண்ணச் சொல்லி, அதைப் பற்றி விசாரிக்க சொன்னேனே! ஞாபகம் இருக்கா?”என்று கேட்டான் அரண் செழியன்.
“ஆமா
சார்! சொன்னீங்க. நானும் அந்த ஆட்டோ நம்பரை
வச்சு விசாரிச்சேன். ஆனா, சேகரை கைது செய்யப்
போற வேலையில பிசியா இருந்ததால, அதை ஃபாலோ பண்ண மறந்துட்டேன் சார்”
என்றார் ஏட்டு.
“சரி…
அதை விடுங்க. எனக்கென்னவோ இந்தக் காரை அந்தத் தோப்பு
வீட்டுல பார்த்ததா தான் ஞாபகம்” என்றவன், அந்த வீடு இருந்த இடத்திற்கு வண்டியை ஓட்டிச் செல்லும்படி அவரிடம் கூறினான்.
பத்து நிமிடங்கள்
கழித்து அவர்களது வாகனம், அந்த வீட்டின் முன்பு நிற்க, வண்டிக்கு உள்ளிருந்தே அந்த
வீட்டை நோட்டம் விட்டனர் இருவரும்.
“இது
யாரோட வீடுன்னு எனக்குத் தெரியணும் ஏட்டய்யா” என்ற செழியனிடம்,
“சார்!” என்றபடி சற்று தயங்கி நிறுத்தினார் அவர்.
என்னவென்று
புரியாமல் அவரை கேள்வியாகப் பார்த்தவனிடம்,
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார்! கான்ட்ராக்டர்
செல்வன் கேஸ்ல பிடிப்பட்ட கொலைகாரனுக்கும் அவனோட கூட்டாளிங்களுக்கும் தண்டனை கிடைச்சிருச்சு.
அதுக்கு பிறகும் செல்வன் மனைவியை ஃபாலோ பண்ணி அவங்க என்ன செய்யுறாங்கன்னு
பார்க்கறது எனக்கென்னமோ சரியா வரும்னு தோணல சார்!” என்றார் அவர்.
சுயம்புவையே
சில நொடிகள் ஆழ்ந்த பார்வை பார்த்தவன்,
“செல்வனோட கொலை வழக்கு என்னை பொறுத்த வரைக்கும் இன்னும் முடியல.
ரவுடி சேகரும், அவனோட கூட்டாளிகளும் யார் மூலமாகவோ
ஏவப்பட்ட அம்புகள் தான். நான் அதை ஆணித்தரமா நம்புறேன்”
என்று கூற, “சாரி சார்! நீங்க
டென்ஷனாகற மாதிரி ஏதாவது பேசி இருந்தா என்னை மன்னிச்சிருங்க” என்றார் ஏட்டு.
“இட்ஸ்
ஓகே! ஆனா, எனக்கென்னமோ குற்றவாளி நம்ம கண்ணு
முன்னாடி ரொம்ப நிம்மதியா நடமாடிட்டு இருக்கற மாதிரி தான் தோணுது. நமக்கு நல்லா தெரிஞ்ச யாரோ ஒருத்தர் தான் இந்தக் கொலைக்கு காரணம்னு என் மனசு
சொல்லிட்டே இருக்கு” என்றவனிடம்,
“இப்போ
நாம என்ன பண்ணுறது சார்?” என்று கேட்டார் சுயம்புலிங்கம்.
பெருமூச்சொன்றை
வெளியிட்டவன், “செல்வனோட கொலை கேசை ரீ ஓப்பன் பண்ணணும் ஏட்டய்யா. உண்மையான
குற்றவாளியை இந்த ஊருக்கு அடையாளம் காட்டி, அவங்களை சட்டத்துக்கு
முன்னாடி நிறுத்தணும்” என்று கூற, “செஞ்சுரலாம்
சார்!” என்றார் சுயம்புலிங்கம்.
“ஏட்டய்யா!
இந்த வீடு யாரோடதுங்கற முழு தகவலும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ,
எனக்கு வந்தாகணும்” என்று செழியன் கட்டளை பிறப்பிக்க,
அவரும் அதற்கு சம்மதித்தார்.
அந்த வாரம்
கோவில் திருவிழாவிற்கான பாதுகாப்பு பணியில் பிசியாக இருந்தவன், மறுவாரமே திருநெல்வேலிக்குக்
கிளம்பிச் சென்றான்.
அங்கிருந்த
ஆயுதப்படை காவலர் வளாகத்தில் ஒரு வாரப் பயிற்சிக்காக வந்திருந்தான்.
அவனுடன்
சேர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள்,
வெவ்வேறு இட்களில் இருந்து அந்தப் பயிற்சியில் வந்து கலந்து கொண்டனர்.
முதல் நாள்
பயிற்சியில் கலந்து கொண்டவன்,
சுமார் பதினோரு மணியளவில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்தான்.
வெயில் சற்று
அதிகமாக இருந்ததால் சாலையோரமாக இருந்த இளநீர் கடையொன்றில் இளநீர் வாங்கிப் பருகினான்
செழியன்.
ஸ்ட்ராவில்
இளநீரை உறிஞ்சியபடியே சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள், தனக்கு முன்னால் இருபதடி தூரத்தில்
நடந்து வருபவளின் மீது நிலைக்குத்தி நிற்க,
இமைக்கவும் மறந்து போய் அவளையே பார்த்து நின்றான் அவன்.
அவனுக்கு
எதிரே வந்து நின்ற பார்கவியும்,
செழியனை அங்கே எதிர்பார்க்கவில்லை போலும்! இதயம்
படபடக்க அவன் முன்பு நின்றிருந்தாள்.
அரணாய் வருவான்…
மீண்டும்
சந்திப்போம்!
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- X
- Other Apps
Comments
Nice update 👍👍👍
ReplyDelete🤩🤩🫰
DeleteNice
ReplyDeleteநன்றி♥
Delete