Ongoing Novels
அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 4
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
பாகம் – 2
அத்தியாயம் – 4
எதிர்பாராத
சந்திப்பு இருவருக்கும் முதலில் ஆச்சர்யத்தை தான் கொடுத்தது. இருவருமே அந்த நேரத்தில்,
அந்த இடத்தில் வைத்து சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!
தான் பருகி
முடித்த இளநீரை கீழே போட்டுவிட்டு தனக்கு எதிரே நின்றிருந்த பார்கவியிடம் சென்றான்
அரண் செழியன்.
புருவங்கள்
சுருக்கி, “நீ
எப்படி இங்கே?” என்று அவன் கேட்க, அவளுக்கு,
ஒரு கணம் பதில் சொல்லலாமா? வேண்டாமா? என்று சற்று தயக்கமாக இருந்தது.
அவளது தயக்கம்
கண்டு, “இட்ஸ்
ஓகே! விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்” என்று எங்கோ பார்த்தபடி அவன் கூற,
“இல்ல…
அது…” என்றவள்,
“இங்கே
நடக்குற ஒரு மேக்கப் மாஸ்டர் க்ளாஸ்ல சேர்ந்திருக்கேன். பதினஞ்சு
நாள் கோர்ஸ்” என்றவள், சாலைக்கு எதிர்புறமாக
இருந்த ஒரு பெரிய ஹோட்டலை சுட்டிக் காட்டி, “அந்த ஹோட்டல்ல தான்
க்ளாஸ் நடக்குது” என்றாள்.
அதைக் கேட்டவன், “ஓஹ்… ஓகே” என்று பதிலளிக்க, அவளோ,
“நீங்க?” என்றபடி அவனை கேள்வியாக நோக்கினாள்.
“எங்க
டிபார்ட்மென்ட்ல இருந்து ஒரு ட்ரெய்னிங் அட்டென்ட் பண்ணுறதுக்காக என்னை இங்கே அனுப்பியிருக்காங்க.
ஒரு வாரம் இங்கே தான் இருப்பேன்!” என்றான் செழியன்.
“ம்ம்ம்…”
என்று அவள் பதிலளிக்க, அதன் பிறகு இருவருக்கும்
என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“ஓகே…
பார்க்கலாம்” என்றவன், சின்னதாக
ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர, பார்கவியும்
ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து சென்று விட்டாள்.
இரவு வரை
செழியனுக்கு பயிற்சி இருக்க,
முதல் நாள் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்தான்.
சட்டென அவனுக்கு
பார்கவியின் முகம் நினைவிற்கு வர,
பின்னந் தலையைக் கேதியபடி தனது அலைபேசியை கையில் எடுத்தான்.
அவளுக்கு
அழைக்கலாமா? வேண்டாமா?
என்று யோசித்தவன், பின்னர் வேண்டாம் என்று நினைத்தபடி
வெளியே நிறுத்தியிருந்த தனது இருச்சக்கர வாகனத்தை நோக்கி நடந்தான்.
ஏனோ மீண்டும்
மீண்டும் பார்கவியின் முகம் அவனது மனக்கண் முன்பு வந்து நின்றது.
கடந்து சென்ற
எட்டு மாதங்களில், அவன் எவ்வளவோ முயன்றும் அவளது நினைவுகள் அவ்வப்போது அவனுக்கு வந்து கொண்டே
தான் இருந்தது.
கடைசியாக
அவளைப் பார்த்து பேசி, பிரிந்து விடலாம் என்று திட்ட வட்டமாக அவளிடம் கூறிய போது, அவனுக்கு இருந்த கோபம், இப்பொழுதும் அதே அளவிற்கு இருக்கிறதா
என்று கேட்டால், அதற்கு அவனிடம் பதில் இல்லை.
இனியனின்
திருமணத்தில் வைத்து அவளை நேரில் சந்தித்து பேசிய பிறகு அவனது மனதில், பார்கவியைப் பற்றிய நினைவுகள்
எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
என்ன இருந்தாலும்
அவளை மனதாரக் காதலித்தவன் அல்லவா!
இப்படியே
சிந்தனையுடன் நடந்து சென்று தனது பைக்கில் ஏறியவனுக்கு மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே
இருக்க, எதைப்
பற்றியும் யோசிக்காமல் தனது அலைபேசியில் இருந்து பார்கவிக்கு அழைப்பு விடுத்தான்.
இரண்டாவது
ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவள்,
“ஹ…ஹலோ!’ என்றாள்.
அவளது குரலில்
தெரிந்த பதற்றம் அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, “ஹலோ… பார்கவி! எங்கே இருக்க?” என்று கேட்டான்.
“நா…ன் நான்” என்றவள், மேலே பேசுவதற்கு
பயப்படுவது போன்று அவனுக்குத் தோன்றியது.
“பாரூ…
ஆர் யூ சேஃப்?” என்று பதட்டம் மேலோங்கிய குரலில்
கேட்டவன், “யாராவது உனக்கு தொந்தரவா இருக்காங்களா?” என்றான்.
“ஆமா”
என்று அவள் பதிலளிக்க, அவளுக்குப் பின்னால் சத்தமாக
பாடல் ஒலிப்பது அவனுக்குக் நன்றாகக் கேட்டது.
“உன்னால
இப்போ என்கிட்ட விவரமா பேச முடியுமா?” என்றவனிடம், “இல்லை” என்று பதிலளித்தாள் பார்கவி.
“சரி…
பதட்டப்படாத. எப்படியாவது நீ இருக்கற லொக்கேஷனை
எனக்கு ஷேர் பண்ணு. நான் அங்கே உடனே கிளம்பி வர்றேன்”
என்றவனிடம், “சரி!” என்று
அவள் கூற, அழைப்பைத் துண்டித்தவன் பார்கவியின் குறுஞ்செய்திக்காகக்
காத்திருந்தான்.
இரண்டு நிமிடங்கள்
கழித்து, அவள்,
தான் இருக்கும் இடத்தை செழியனுக்கு அலைபேசி வாயிலாகப் பகிர்ந்திருக்க,
அந்த இடத்திற்கான மேப் (Map) போட்டு, உடனே அங்கிருந்து தனது புல்லட்டில் ஏறிக் கிளம்பிச் சென்றான்.
சுமார் பதினைந்து
நிமிடங்கள் பயணம் செய்து அவன் சென்றது ஒரு பெரிய ஹோட்டலுக்கு.
பார்க்கிங்கில்
வண்டியை நிறுத்திவிட்டு பார்கவிக்கு அவன் அழைக்க, அவளோ அவனது அழைப்பை துண்டித்து விட்டாள்.
‘நீ
சொன்ன இடத்துக்கு வந்துட்டேன். எங்கே இருக்கேன்னு சொல்லு.
நான் உடனே அங்கே வர்றேன்’ என்று, அவன் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப, ‘நாலாவது ஃப்ளோருக்கு
வாங்க!’ என்று பதில் அனுப்பி வைத்தாள் அவள்.
அந்த ஹோட்டலுக்குள்
வேகமாகச் சென்றவன், லிஃப்டில் ஏறி நான்காவது தளத்தை வந்தடைந்தான்.
அந்தத் தளத்தில் ‘Cocktail bar’ என்று எழுதப்பட்டிருக்க,
‘இவ எதுக்காக இங்கே வந்தா?’ என்று நினைத்தபடியே
உள்ளே சென்றான்.
அந்த இடத்தில்
மங்கலான வெளிச்சம் மட்டுமே பரவியிருக்க,
விழிகளால் பார்கவியைத் தேடியபடியே உள்ளே நடந்து சென்றான் அரண் செழியன்.
இறுதியாக
ஒரு இடத்தில் பார்கவி அமர்ந்திருப்பது அவனுக்குத் தெரியவும், அவளை நோக்கி விரைந்தான்.
அவளுடன்
மூன்று வாலிபர்களும் இரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர். அவர்களின் கரங்களில் காக்டெயில்
நிரம்பிய கோப்பைகள் இருக்க, பார்கவியோ வெளிறிப் போன முகத்துடன்
அவர்களுடன் அமர்ந்திருந்தாள்.
செழியனின்
வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு,
அவனைக் கண்ட பிறகு தான் ஆசுவாசமாக இருந்தது.
அரண் செழியன்
அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்குச் சென்று,
“பார்கவி!” என்று அழைக்க, அவள் எழுந்து நின்றாள்.
அவளுடன்
அமர்ந்திருந்த இளைஞர்கள், செழியனைக் கண்டு புரியாமல் விழித்தனர்.
அவர்களின்
சிவந்த விழிகளைக் கண்டு, அவர்கள் போதையில் இருப்பதைப் புரிந்து கொண்டான் அவன்.
“பார்கவி!
யார் இவரு? நீ எதுக்காக எழுந்து நிக்கிற?
உட்காரு” என்று ஒருவன் கூற,
“இல்ல…
அது… இவர்… என்னோட”
என்றவளுக்கு அவனை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை.
உடனேயே அந்த
இளைஞன், “ஜாலியா
இருக்கலாம்னு தானே எங்க கூட வந்த! இப்படி பாதியிலேயே விட்டுட்டு
போனா எப்படி?” என்றவன், அவளது கரம் பற்றி,
இருக்கையில் அமர வைத்தான்.
அதைப் பார்த்த
செழியனோ பற்களை கடித்தபடி, “பார்கவி… கிளம்பு போகலாம்” என்றான்.
அதைக் கேட்டு
அவள் மீண்டும் எழ, மற்றொருவன் எழுந்து வந்து செழியனின் முன்பு நின்றான்.
“யாருடா
நீ? அந்தப் பொண்ணை இப்போ அனுப்ப முடியாது. நாங்க எங்களோட வேலை எல்லாம் முடிச்சுட்டு உனக்கு சொல்றோம். அப்புறமா வந்து இவளை கூட்டிட்டு போ!” என்று வார்த்தைகளில்
இரட்டை அர்த்தம் பொதிந்து அவன் பேச, தன் கையில் கிடந்த வெள்ளிக்
காப்பை முறுக்கிய செழியன், அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
அடி வாங்கியவன்
பொறிப் போய் கலங்கி விழித்துக் கொண்டு நிற்க,
மற்றொருவன் தனது கையில் இருந்த கண்ணாடி க்ளாசால் செழியனை தாக்க வந்தான்.
அவனையும்
நொடிப் பொழுதில் தடுத்து நிறுத்தி அவனது மூக்கில் ஒரு குத்துவிட்டான் செழியன். அடி வாங்கியவனின் மூக்கில்
இருந்து இரத்தம் கொட்டியது.
இவர்களின்
சத்தம் கேட்டு யாரோ நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க, அந்த தளத்தின் மேனேஜர் அவர்களிடம் விரைந்து வந்தார்.
“இங்கே
என்ன சார் பிரச்சனை?” என்று அந்த மேனேஜர் கேட்க,
“திடுதிப்புன்னு
இங்கே வந்து எங்களை கண்ணு மண்ணு தெரியாம அடிக்குறான் சார் இந்த ஆளு. முதல்ல போலீசுக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்க” என்றான்,
அந்த மூவரில் ஒருவன்.
மேனேஜர்
திரும்பி செழியனைப் பார்க்க,
“தேவையில்ல. நானும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தான்.
இங்கே இருக்கற லோக்கல் போலீசுக்கு நானே தகவல் சொல்லிடுறேன்” என்றபடி, தனது அலைபேசியை கையில் எடுத்தான். அதைக் கண்டு அந்த இளைஞர்கள் அரண்டு போயினர்.
“சார்!
சார்! சாரி சார்! நீங்க யாரு
என்ன ஏதுன்னு தெரியாம தப்பு பண்ணிட்டோம். இந்த ஒருமுறை எங்களை
மன்னிச்சு விட்டுருங்க சார்” என்று ஒருவன் கெஞ்ச, மற்றொருவன் செழியனின் காலிலேயே விழுந்து விட்டான்.
“சார்!”
என்று மேனேஜர் செழியனை அழைக்க, அவன் என்ன என்பது
போன்று திரும்பி அவரைப் பார்த்தான்.
“சாரி
சார்! உங்களுக்கு என்ன தேவையோ அதை எங்க மேனேஜ்மென்ட்ல இருந்து
பண்ணி கொடுத்துடறோம். ஆனா, போலீஸ் கேஸ்
மட்டும் வேண்டாம் சார். எங்க ஹோட்டலோட பெயர் கெட்டு போயிடும்”
என்று அவர் கூற, சில நொடிகள் யோசித்தவன்,
“சரி!
இந்தப் பிரச்சனையை இதோட விடுறேன். ஆனா,
மறுபடியும் இந்த மாதிரி எந்த விஷயமும் இங்கே நடக்காமல் பார்த்துக்கோங்க”
என்று கூற,
“கண்டிப்பா…
ரொம்ப நன்றி சார்” என்றார் மேனேஜர்.
அங்கே பார்கவியுடன்
நின்றிருந்த இரண்டு பெண்களையும் பார்த்தவன்,
“எப்படி இவனுங்களை நம்பி இந்த இடத்துக்கு வந்தீங்க? முதல்ல நீங்க இரண்டு பேரும் இங்கிருந்து கிளம்புங்க” என்று கூற, அவர்கள் இருவரும் விரைவாக அங்கிருந்து கிளம்பிச்
சென்றனர்.
பின்னர்
பார்கவியின் கையைப் பற்றியவன்,
“வா!” என்றபடி, அவளை தன்னுடன்
அழைத்துக் கொண்டு அந்த ஹோட்டலில் இருந்து வெளியேறினான்.
பார்க்கிங்கில்
வந்து வண்டியில் ஏறும் வரை அவன் அவளது கரத்தை விடவே இல்லை.
பைக்கில்
ஏறி அமர்ந்தவன், பார்கவியின் முகம் நோக்காமல், “வண்டியில ஏறு!”
என்றான்.
அவளோ, தயக்கத்துடனே நின்றிருக்க,
“ஏறுன்னு சொல்றேன்ல” என்றான், கர்ஜனையானக் குரலில்.
அதைக் கேட்ட
பிறகு மறு பேச்சு பேசாமல், பைக்கில் ஏறி அமர்ந்தவள், அவனுடன் சேர்ந்து அங்கிருந்து
கிளம்பினாள்.
அவனது பயிற்சி
நடைபெறும் இடத்திற்கு அருகே இருந்த ஒரு ரெஸ்டாரன்டிற்கு பார்கவியை அழைத்துச் சென்றான்
அரண் செழியன்.
அந்த உணவகத்தின்
மொட்டை மாடியில் ரூஃப் டாப்
(Rooftop) ரெஸ்டாரன்ட் அமைக்கப்பட்டிருக்க, அங்கிருந்த
மேஜை ஒன்றில் இருவரும் எதிர் எதிர் பக்கமாக அமர்ந்திருந்தனர்.
சில நிமிடங்கள்
மௌனத்திலேயே கரைய, பார்கவி தரையில் பார்வை பதித்தபடியே அமர்ந்திருந்தாள்.
“ம்ம்ம்…
ம்ம்ம்…” என்று அவன் தொண்டையைச் செரும,
அவனை நிமிர்ந்து நோக்கினாள் அவள்.
தன் கையருகே
இருந்த கண்ணாடி கப்பை அவளருகே நகர்த்தியவன்,
“முதல்ல இந்தத் தண்ணியைக் குடி” என்றான்.
அவளும் மறுக்காமல்
அதை எடுத்து அருந்தினாள்.
முழுதாக
ஐந்து நிமிடங்கள் அவள் ஆசுவாசப்படுவதற்கு நேரம் கொடுத்தவன், அவளது பதற்றம் குறையும் வரை
காத்திருந்தான்.
“பார்கவி!”
என்று செழியன் அழைக்க, “ம்ம்ம்…” என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“நான்
நேரா விஷயத்துக்கு வர்றேன். நீ எதுக்காக அவங்க கூட சேர்ந்து அந்த
பாருக்குப் போன? இப்போ பார்… இதனால எவ்வளவு
பிரச்சனைன்னு. இதுக்காகத் தான் நீ மதுரையில் இருந்து கிளம்பி
வந்தியா? உங்க அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா எவ்வளவு
வருத்தப்படுவாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?” என்று
சற்று காட்டமாகவே அவளிடம் கேட்டான் செழியன்.
அவன் பேசப்
பேச அவளது விழிகளில் நீர் திரண்டது.
அதைக் கண்டு
கடுப்பானவன், “இப்போ நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு அழுதுட்டு இருக்க? நடந்த உண்மையை தானே சொன்னேன்” என்றான்.
அவனை நிமிர்ந்து
பார்த்தவள், தனது
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, “இப்போ நீங்க ஒரு கேஸ்ல
சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியைப் பிடிக்குறீங்கன்னு வச்சுப்போம். நடந்த தப்பை பற்றி அவன்கிட்ட விசாரிக்காமலேயே நேரா தண்டனை வாங்கிக் கொடுத்துருவீங்களா?”
என்று கேட்க, செழியன் ஒரு கணம் வாயடைத்து போனான்.
“என்னோட
நல்ல நேரமோ என்னவோ நீங்களாகவே எனக்கு ஃபோன் பண்ணி, சரியான நேரத்துக்கு
என்னை காப்பாத்த வந்தீங்க. ஆனா, இப்போ…
என்கிட்ட என்ன நடந்ததுன்னு ஒரு வார்த்தைக் கூட கேட்காம என்னை உட்கார
வச்சு திட்டிட்டு இருக்கீங்க” என்றவள்,
அவனை நிமிர்ந்து
பார்த்து, “இதுவே
நீங்க கட்டின பொண்டாட்டியா இருந்தா இந்த மாதிரி நடந்திருப்பீங்களா? அவங்களை அமைதியா உட்கார வச்சு என்ன ஆச்சுன்னு பொறுமையா விசாரிச்சிருக்க மாட்டீங்க?”
என்றாள்.
அதைக் கேட்டதும்
செழியனின் இதழோரம் லேசாக புன்னகை அரும்பியது.
தனது பின்னந்தலையை
கோதியபடி, “என்
பொண்டாட்டி அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போக மாட்டான்னு நான் ஆணித்தரமா நம்புறேன்”
என்று அவன் கூற,
“புரியுது!
ஆனா, நான் அந்த இடத்துல இருந்ததால மட்டுமே என்மேல
தப்பிருக்கறதா நீங்க நினைக்கறது தான் எனக்கு வருத்தமா இருக்கு செழியன்” என்றாள் பார்கவி.
அவளது, ‘செழியன்’ என்கிற அழைப்பு, ஏனோ அவனுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
அவளது முகம்
நோக்கி, “சரி சொல்லு.
நீ எப்படி அங்கே போன? அங்கே என்ன நடந்தது?”
என்று அவன் கேட்க, பார்கவி நடந்ததை அவனிடம் விவரிக்க
ஆரம்பித்தாள்.
மாலையில்
பார்கவியின் மேக்கப் வகுப்பு முடிந்த பொழுது நேரம் மாலை ஏழை கடந்திருந்தது.
தான் தங்கியிருக்கும்
ஹோட்டலுக்குச் செல்லலாம் என்று அவள் நினைத்த பொழுது, அவளுடன் பயிலும் நேஹாவும், மாயாவும் அவளிடம் வந்தனர்.
“பார்கவி!
இங்கே பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்குன்னு கேள்விப்பட்டோம்.
அங்கே போய் டின்னர் சாப்பிடலாம்னு இருக்கோம். நீயும்
எங்க கூட வாயேன்” என்று அவளை நேஹா அழைக்க,
பார்கவியோ
யோசனையுடன், “இல்ல…
நான் வரல நேஹா. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு.
இன்னொரு நாள் பார்த்துக்கலாம். நீங்க போயிட்டு
வாங்க” என்று கூறினாள்.
“ப்ளீஸ்
பார்கவி. இன்னைக்கு நம்ம மாயாவோட பர்த் டே. சோ அங்கே போய் சின்னதா ஒரு கேக் கட் பண்ணிட்டு, டின்னர்
சாப்பிட்டு வந்துரலாம்” என்றாள் நேஹா.
“ஆமா
பார்கவி. இன்னைக்கு என்னோட பர்த் டே ட்ரீட். ப்ளீஸ் எங்க கூட நீயும் வாயேன்” என்று அவளை மாயா அழைக்க,
பார்கவிக்கு யோசனையாக இருந்தது.
அவள் இங்கு
வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
நேஹாவுடனும், மாயாவுடனும் அவளுக்கு குறுகிய கால
நட்புதான் என்றாலும், அவர்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்தது
அவளுக்கு.
அவர்களுடன்
சேர்ந்து டின்னர் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று நினைத்து, இருவருடன் சேர்ந்து அங்கிருந்து
கிளம்பிச் சென்றாள்.
அந்தப் பெரிய
ஹோட்டலுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியதும்,
புருவம் சுருக்கிய பார்கவி, “நான் ஏதோ சின்ன ஹோட்டலா
இருக்கும்னு நினைச்சேன். ஆனா, இது பெரிய
ஹோட்டலா இருக்கும் போல” என்றபடி அவர்களுடன் சேர்ந்து உள்ளே சென்றாள்.
மூவரும்
லிஃப்டிற்காக காத்திருந்த வேளையில் அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு வந்த மாயா, “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம்
நேஹா. அபியும் அவனோட ஃப்ரெண்ட்சும் வந்துட்டு இருக்காங்க”
என்று கூற, பார்கவி புரியாமல் விழித்தாள்.
“அபி
யாரு?” என்று சந்தேகத்துடன் கேட்டவளிடம்,
“அபின்னா…
அபிஷேக். என்னோட பாய்ஃப்ரென்ட்” என்றாள் மாயா.
“ஓஓஓ…”
என்றவளுக்கு ஏனோ அவர்கள் வருகிறார்கள் என்கிற செய்தி அவ்வளவு உவப்பாக
இருக்கவில்லை.
சுமார் ஐந்து
நிமிடங்கள் கழித்து மூன்று இளைஞர்கள் அந்த ஹோட்டலுக்குள் வந்தனர்.
மாயா சென்று
அவர்களை வரவேற்க, மூவரின் பார்வையும் அங்கு நின்றிருந்த பார்கவியின் மீது தான் பதிந்தது.
“ஆள்
யாரு? புதுசா இருக்காங்களே” என்ற அபிஷேக்கிடம்,
“எங்க
கூட தான் மாஸ்டர் க்ளாஸ் படிக்குறாங்க. பெயர் பார்கவி”
என்று அவளை அறிமுகப்படுத்தினாள் மாயா.
அவர்களின்
பார்வை பார்கவிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த,
“இப்போ தான் ஞாபகம் வந்தது… எனக்கு ஒரு முக்கியமான
வேலை இருக்கு நேஹா. நான் கிளம்புறேன். நாளைக்கு
க்ளாஸ்ல பார்க்கலாம்” என்று கூறி அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.
அதைக் கேட்ட
அபிஷேக்கோ, “என்ன
மாயா? நாங்க வந்தது அவங்களுக்கு பிடிக்கல போல இருக்கு.
உடனே இங்கிருந்து கிளம்பிப் போகணும்னு நினைக்கறாங்களே” என்று கூற,
“ஐயோ!
அப்படியில்ல அபி” என்றவள், பார்கவியிடம் திரும்பி,
“பார்கவி!
ப்ளீஸ் நீயும் என்னோட பர்த் டே பார்ட்டியில் கலந்துக்கோயேன்.
கேக் கட் பண்ணி முடிச்சதும் நீ கிளம்பிடு. அதுக்கப்புறம்
உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்றாள் மாயா.
பார்கவியும்
வேறு வழியின்றி அவள் சொன்னதற்கு சம்மதித்து அவர்களுடன் சேர்ந்து லிஃப்டில் ஏறி மேலே
சென்றாள்.
ஆனால், அவர்கள் சென்ற லிஃப்ட்,
காக்டெயில் பார் இருக்கும் தளத்திற்குச் சென்று நிற்க, புரியாமல் விழித்தவள், “இங்கே எதுக்காக வந்திருக்கோம்”
என்று நேஹாவிடம் கேட்டாள்.
அதற்கு, “இங்கே தான் மாயாவுக்கு கேக்
கட் பண்ணப் போறோம் பாரூ” என்றாள் அவள்.
“இங்கேயா?”
என்று விழித்தவள், கேக் வெட்டியதும் இங்கிருந்து
உடனடியாகக் கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்தபடி உள்ளே சென்றாள்.
ஆனால், பார்கவி நினைத்ததற்கு மாறாக
உள்ளே சென்றதும், அபிஷேக்கும் அவனது நண்பர்களும், கூடவே மாயாவும் சேர்ந்து காக்டெயில் வாங்கிப் பருக ஆரம்பித்தனர்.
அவர்கள்
கேக் வெட்டுவதற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லாமல் போக, நேஹாவிடம் திரும்பியவள், “இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட என்னால இங்கே இருக்க முடியாது நேஹா. நான் கிளம்புறேன்” என்றபடி எழுந்தாள்.
அவர்கள்
ஆறு பேரும் ஒன்றாக ஒரு மேஜையில் தான் அமர்ந்திருந்தனர்.
பார்கவி
எழவும், அவளை நிமிர்ந்து
பார்த்த அபிஷேக், “அதுக்குள்ள என்ன அவசரம் பேபி! பொறுமையா ஒரு பத்து மணிக்கு இங்கிருந்து கிளம்பினா போதாதா?” என்று கேட்க, அதிர்ந்து விழித்தவள், திரும்பி மாயாவை பார்த்தாள்.
அவளும் அபிஷேக்
இப்படி பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை.
“சாரி
பாரூ!” என்று சத்தம் வராமல் அவள் வாயசைக்க, அபிஷேக்கோ, “முதல்ல உட்காரு” என்று
அவளது கரம் பற்றி அவளை அமர வைத்தான்.
“எதுக்கு
இவ்வளவு அவசரப்படுற? உங்க மூணு பேருக்கும் கம்பெனி குடுக்கத்
தானே நாங்க வந்திருக்கோம். அதுக்குள்ள கால்ல சக்கரத்தை கட்டிகிட்டு
கிளம்பினா எப்படி? இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கே”
என்று கூற, பார்கவிக்கு உள்ளே பயப்பந்து உருண்டது.
இதுவே மதுரையாக
இருந்திருந்தால், யோசிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றிருப்பாள். ஒரு
ஃபோன் செய்தால் தெரிந்தவர்தகள் மறு நிமிடமே அவளுக்காக ஓடி வந்திருப்பார்கள்.
ஆனால், தெரியாத ஊரில் யாரிடம் சென்று
உதவி கேட்பது என்று யோசித்தவளுக்கு, அரண் செழியனின் நினைவு வரத்தான்
செய்தது.
ஆனால், ஒருவேளை அவள் அவனிடம் உதவி
கேட்கப் போய், தன்னிடம் மீண்டும் அவள் உறவாட வருகிறாளோ என்று
அவன் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? என்று நினைத்தவள்,
செழியனிடம் உதவி கேட்கும் எண்ணத்தை கை விட்டாள்.
அந்த ஹோட்டலில்
இருந்து எப்படி வெளியேறுவது என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான், அரண் செழியன் அவளது அலைபேசிக்கு
அழைத்தான்.
அனைத்தையும்
கூறி முடித்தவள், அவனைப் பார்க்க, செழியனோ யோசனையுடன் மௌனமாக அமர்ந்திருந்தான்.
“இப்போ
உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நானா அந்த பாருக்குப்
போகல” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“எல்லாம்
சரிதான். ஆனா, நீ ஏன் எனக்கு உடனே ஃபோன்
பண்ணல. ஒருவேளை நான் வந்து உனக்கு உதவி பண்ணாம இருந்திருந்தா…
நைட் முழுக்க அங்கேயே தான் இருந்திருப்பியா?” என்று
கேட்டான்.
“இல்ல…
ஒருவேளை நான் உங்களுக்கு ஃபோன் பண்ணா என்னை தப்பா நினைச்சுருவீங்களோன்னு
தான்…” என்று கூறி அவள் நிறுத்த,
“ஒரு
போலீஸ்காரனா யார் யாருக்கோ பாதுகாப்பு கொடுக்குறேன். உனக்குத்
தர மாட்டேனா?” என்று செழியன் கூற, அவளால்
அதைக் கேட்டு சந்தோஷப்பட முடியவில்லை.
ஒரு காவல்துறை
அதிகாரியாக உனக்கு உதவி செய்வேன் என்றால்,
அவன் தன்னை ஓரடி தள்ளி நிறுத்துகிறான் என்பதை அவளால் புரிந்து
கொள்ள முடிந்தது.
ஆனால், முன்பு போல் அவனிடம் இப்பொழுது
தன்னால் எந்த உரிமையையும் எதிர்பார்க்க முடியாது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
யோசனையுடன்
அமர்ந்திருப்பவளின் எண்ண ஓட்டம் அவனுக்குப் புரிந்ததோ என்னவோ?
“போலீஸ்காரனா
மட்டுமில்ல… உன்னோட நலம் விரும்பியா உனக்கு எந்த நேரத்துல,
என்ன உதவி தேவைப்பட்டாலும் நான் உனக்காக வருவேன் பாரூ”
என்று அரண் செழியன் கூற, விலுக்கென அவனை நிமிர்ந்து
பார்த்தாள் பார்கவி.
அவனையே இமைக்காமல்
பார்த்தவளின் விழிகளில் நீர் நிறைந்திருந்தது.
அரணாய் வருவான்…
மீண்டும்
சந்திப்போம்!
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- X
- Other Apps
Comments
Nice
ReplyDeleteThank you😊
Delete👍
ReplyDelete😊😊
Delete