Ongoing Novels
அரணாய் நீ வா - Epi 12
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
அத்தியாயம் – 12
துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிப் போன பார்கவி பதட்டப்பட, “யாரும் இங்கே நிக்காதீங்க! எல்லாரும் உடனே கிளம்புங்க” என்றார் அங்கு நின்ற வனத்துறை அதிகாரி ஒருவர்.
பார்கவியின் நண்பர்கள் அனைவரும் வேகமாகச் சென்று வண்டியில் ஏற, அவளோ பதட்டம் மாறாமல் அப்படியே நின்றிருந்தாள்.
“அக்கா… வந்து வண்டியில ஏறு” என்று ஷாரதா அவளது தோள் தொட்டு கூறவும்,
“எனக்கு பயமா இருக்கு ஷாரதா. ஒருவேளை அவருக்கு எதுவும் பிரச்சனை ஆயிருக்குமோன்னு நினைச்சு மனசு கிடந்து அடிச்சுக்குது” என்றாள்.
“ஐயோ… அதெல்லாம் எதுவும் இருக்காதுக்கா. நீ எதுக்காக வீணா மனசை போட்டு குழப்பிக்குற?” என்று அவளை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் ஷாரதா.
“ஏம்மா… சீக்கிரமா கிளம்புங்கன்னு எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன். நீங்க இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்தும்மா. சொன்னா புரிஞ்சுகோங்க” என்று அந்த வனத்துறை அதிகாரி பொறுமை இழந்து பேசவும், இனியன் அவர்களிடம் சென்றான்.
“என்னாச்சு? ஏன் இன்னும் வண்டியில ஏறாம இருக்கீங்க?’ என்று அவன் கேட்க,
“மாமாவை நினைச்சு அக்கா பயந்துட்டு இருக்கா இனியன்” என்றாள் ஷாரதா.
“இனியன்! ப்ளீஸ் எனக்காக உங்க அண்ணனுக்கு ஒரு ஃபோன் பண்ணி பாருங்களேன்” என்று பார்கவி கூற, அவளது முகத்தில் தென்பட்ட கலவரத்தைக் கண்டு அரண் செழியனின் எண்ணுக்கு உடனே அழைத்தான் அவன்.
மறுபுறம் ரிங் போனதே தவிர, செழியன் அழைப்பை ஏற்கவே இல்லை.
“அண்ணன் கால் எடுக்கல அண்ணி!” என்றவன்,
“நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. அவருக்கு ட்யூட்டி முடிஞ்சதும் அண்ணனை நேரா போய் பார்த்துடலாம். இப்போ வாங்க… வந்து வண்டியில ஏறுங்க!” என்று அவன் அவளை அழைக்க, பார்கவியும் அவர்களுடன் சேர்ந்து வண்டியில் ஏறுவதற்காகச் சென்றாள்.
அப்பொழுது பலத்த காலடி சத்தங்களும், பரபரப்பான பேச்சுக் குரல்களும் கேட்க, மூவரும் திரும்பிப் பார்த்தனர்.
அங்கே மூன்று போலீசார் கிடுக்குப் பிடி போட்டு ஒருவனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
அவனோ அவர்களுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவர்களுக்குப் பின்னால் மற்ற போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் வந்தனர்.
அவர்களுடன் செழியன் தென்படவில்லை என்றதும் பார்கவிக்கு திக்கென்றது.
“அவர் மட்டும் ஏன் இன்னும் வரல?” என்று அவள் பதட்டத்துடன் கேட்க, அந்தப் பதட்டம் இப்பொழுது இனியனையும் ஒட்டிக் கொண்டது.
அவனும் என்ன செய்வது, யாரிடம் சென்று விபரம் கேட்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்ற வேளையில், தூரத்தில் செழியன் வருவது அவனுக்குத் தெரிந்தது.
“அண்ணி! அங்கே பாருங்க!” என்று இனியன் கூறவும், அந்தப் பக்கமாகப் பார்த்தாள் பார்கவி.
தூரத்தில் ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருந்தவனை கைத்தாங்கலாக அழைத்து வந்தார் சுயம்புலிங்கம்.
செழியனோ தனது இடது கை தோளை பற்றிக் கொண்டு வலியில் முகத்தை சுழித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.
இக்காட்சியைக் கண்ட பார்கவியோ அதிர்ச்சியில் வாயில் கை வைத்து நிற்க, இனியனும் ஷாரதாவும் கூட அதிர்ந்து தான் போயினர்.
செழியன் மேலேறி வரவும் முதலில் அவனிடம் விரைந்து சென்றான் இனியன்.
“ஐயோ… அண்ணா என்னாச்சு?” என்று அவன் பதறிப் போய் கேட்கவும், ஏதோ சொல்ல வாயெடுத்தவன் தன்னை நோக்கி பதட்டமாக ஓடி வந்த பார்கவியைக் கண்டதும் ஒரு நொடி யோசித்து,
“ஒண்ணுமில்ல டா. கிரிமினலை பிடிக்கப் போன இடத்துல ஒரு சின்ன காயம் ஆயிருச்சு!” என்றான்.
அவனது இடது கை தோள்பட்டைக்கு கீழே ஏதோ வெட்டு பட்டிருக்க, அந்த இடத்தில் கட்டு போடப்பட்டிருந்தது.
அதை பார்கவி கவனித்து விழி விரித்து அதிர்ந்த வேளையில், “அந்த ராஸ்கல் நம்ம செழியன் சாரை கத்தியால வெட்ட வந்தான் தம்பி! கடவுள் புண்ணியத்துல சார் உஷாராகி திரும்பினதால, கையில பட்ட காயத்தோட போச்சு. இல்லைன்னா…” என்று அவர் மேலும் ஏதோ சொல்ல வரவும்,
“ஏட்டய்யா!” என்று கூறி அவரை தடுத்தான் அரண் செழியன்.
“அதெல்லாம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. நீங்க மூணு பேரும் பயப்படாம இங்கே இருந்து கிளம்புங்க!” என்று அவன் பொதுவாகக் கூறவும், கண்கள் கலங்கியபடி அவனையே முறைத்தாள் பார்கவி.
‘என்ன இவ இப்படி முறைக்கிறா?’ என்று செழியன் புரியாமல் பார்த்த போதிலும், அவள் தனது பார்வை சீற்றத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
“இங்கே இருந்து போறதா? உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு நாங்க எப்படிண்ணா போறது. முதல்ல ஹாஸ்பிட்டல் போய் உனக்கு ட்ரீட்மென்ட் பண்ணணும்” என்ற இனியன்,
“ஏட்டய்யா… நானும் உங்க கூட வர்றேன்” என்று கூற,
அடுத்த கணமே, “நானும் வர்றேன்!” என்றொரு குரல் கேட்டது.
சட்டென திரும்பி பார்கவியைப் பார்த்த செழியன், “வேண்டாம் பாரூ… இங்கே நிலமை சரியில்ல. நீ பேசாம உன் ப்ரெண்ட்ஸ் கூட கிளம்பு!” என்றான்.
அவளோ அவன் சொன்னதைக் காதில் கூட வாங்காதது போன்று, “நானும் வருவேன்!” என்று கூறிவிட்டு வேகமாக நடந்து சென்று அங்கே நின்றிருந்த ஒரு போலீஸ் காருக்கு அருகில் போய் நின்று கொண்டாள்.
அவளது செயலை கண்ட செழியனோ அவளை நினைத்து உள்ளுக்குள் சிரித்தபடி, “ஏட்டய்யா… நீங்க அக்யூஸ்டை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய், ஜெகன் சார்கிட்ட சொல்லி FIR போடுறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் இவங்க கூட ஹாஸ்பிட்டல் போய் ட்ரீட்மென்ட் முடிச்சுட்டு நேரா ஸ்டேஷனுக்கு வந்துடறேன்” என்றான்.
அவரும் சரியென்று கூற, செழியனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார் சுயம்புலிங்கம்.
அதன் பிறகு இனியனிடம் திரும்பியவன், “போலாமா டா. பார்கவி வேற நெருப்பு கோழி மாதிரி என்னை முறைச்சுட்டு நிக்குறா. அவ தீயை கக்கி என்னை பொசுக்குறதுக்குள்ள இங்கிருந்து போயாகணும்” என்றான்.
அதைக் கேட்ட இனியனோ, “எப்படிண்ணா… இந்த கலவரத்துலேயும் சளைக்காம காமெடி பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க,
“எல்லாம் உன்கிட்ட இருந்து கத்துகிட்டது தான்டா. நீயும் இப்படி எல்லாம் காமெடி பண்ணி தானே ஷாரதாகிட்ட இருந்து தப்பிச்சுட்டு இருக்க!” என்றான் செழியன்.
அவனை மேலும் கீழுமாகப் பார்த்தவனோ, “ஆமா… இப்போ அது ரொம்ப முக்கியம் பாரு!” என்றபடி அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.
ஷாரதாவிடம், “நீ அவங்க எல்லார் கூடவும் கிளம்பி போ ஷாரு. நானும் பார்கவி அண்ணியும் அண்ணனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வந்துடறோம்!” என்று இனியன் கூற,
“இல்ல… நானும் உங்க கூட தான் வருவேன். என்னால தனியா உட்கார்ந்து இங்கே என்ன நடக்குதுன்னு நினைச்சு மண்டையைப் போட்டு குழப்பிட்டு இருக்க முடியாது” என்றவள், ரம்யாவிடம் போய் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து கிளம்பிச் செல்லுமாறு கூறிவிட்டு வேகமாக நடந்து பார்கவியுடன் போய் நின்று கொண்டாள்.
அவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்த இனியன், “பார்த்தியாண்ணே… இந்த விஷயத்துல மட்டும் அக்காவும் தங்கச்சியும் எப்படி ஒற்றுமையா இருக்காங்கன்னு” என்று கூற,
“ஒற்றுமையா இருக்கறது நல்ல விஷயம் தானேடா” என்றான் செழியன்.
அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவன், “உன்கிட்ட போய் சொன்னேன் பாரு” என்று நக்கலாக சொன்னபடி,
“சரி சரி… இப்படியே பேசி நேரத்தை கடத்தாம சீக்கிரமா கிளம்பி ஹாஸ்பிட்டல் போயாகணும்” என்று செழியனை வாகனத்திற்கு அழைத்துச் சென்றான் அவன்.
அதன் பிறகு அனைவரும் வண்டியில் ஏற, அந்த வாகனம் மருத்துவமனை நோக்கி வேகமாகப் பயணித்தது.
அதே சமயம் செய்திகளில் அரண் செழியனின் அதிரடியான கைது நடவடிக்கை குறித்த தகவல்கள் பரபரப்பாக ஔிபரப்பாகிக் கொண்டிருந்தன.
‘அண்மை செய்தி!
கான்ட்ராக்டர் செல்வன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது!
குற்றவாளியை போலீசார் சுற்றி வளைத்த போது நிகழ்ந்த விபரீதம்.
காவல்துறை ஆய்வாளர் அரண் செழியனுக்கு கத்தி குத்து!’
என்கிற செய்தி வெளியாக, மதுரையில் இருந்த செழியனின் பெற்றோர் செய்திகளைக் கண்டு ஆடிப் போய் விட்டனர்.
ஆதிரை செல்வி, “என்னங்க இது… நியூஸ்ல என்னென்னமோ சொல்றாங்களே. நம்ம செழியனுக்கு என்னங்க ஆச்சு?” என்று பதட்டத்துடன் கூறி அழவும் சண்முகநாதன் தன் மனைவியை சமாதானப்படுத்த முயன்றார்.
“பதட்டப்படாத செல்வி. செழியனுக்கு எதுவும் ஆயிருக்காது. இரு… நான் இப்பவே அவனுக்கு ஃபோன் பண்ணுறேன்!” என்றபடி தனது அலைபேசியில் இருந்து மகனுக்கு அழைத்தார்.
ஆனால், மறுபுறம் அழைப்பு ஏற்கப்படாமல் போகவும் பயந்து தான் போனார் அவர்.
“என்னாச்சுங்க?” என்ற ஆதிரையிடம்,
“செழியன் ஃபோன் எடுக்கல செல்வி” என்றார் அவர்.
“ஃபோன் எடுக்கலையா?” என்று சில நொடிகள் யோசித்தவர்,
“நம்ம இனியன் களக்காட்டுக்கு தானே போயிருக்கான். உடனே அவனுக்கு ஃபோன் போட்டு என்னன்னு விசாரிங்க” என்றார்.
தன் மனைவி சொன்னவாறே சண்முகநாதனும் இனியனின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தார்.
மூன்றாவது ரிங்கில் அவன் அழைப்பை ஏற்றிருக்க, “இனியன்… நம்ம செழியனுக்கு என்னப்பா ஆச்சு. நியூஸ்ல ஏதேதோ சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்குப்பா!” என்று பதட்டமாகப் பேசவும், இனியன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து அவரிடம் பேசினான்.
“பதட்டப்படாதீங்கப்பா… செழியன் அண்ணனுக்கு நீங்க பயப்படுற அளவுக்கு எதுவும் நடக்கல. ஒரு குற்றவாளியை பிடிக்கப் போன இடத்துல, சின்னதா வெட்டு காயம் பட்டுருச்சு” என்று இனியன் பேச, தன் கணவரிடம் இருந்து ஃபோனை வாங்கினார் ஆதிரை செல்வி.
“கண்ணா! உங்க அண்ணன் நல்லா தானே இருக்கான். நானும் அப்பாவும் உடனே அங்க கிளம்பி வர்றோம்” என்று அவர் கூற,
“அம்மா… பயப்படாதீங்க. அண்ணன் நல்லா தான் இருக்கான். நான் இப்போ அண்ணன் கூட ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன். உள்ளே அவருக்கு ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு. அது முடிஞ்சதும் நானே உங்களுக்கு ஃபோன் பண்ணி அண்ணனை உங்ககிட்ட பேச வைக்கிறேன்மா!” என்று இனியன் கூற,
“எனக்கு இப்பவே செழியனை பார்க்கணும். நானும் அப்பாவும் உடனே அங்கே கிளம்பி வர்றோம். நாங்க வர்ற வரைக்கும் நீ அவன் பக்கத்திலேயே இருந்து கவனிச்சுக்கோ!” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார் ஆதிரை.
இனியனோ பெருமூச்சு விட்டபடி மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றான்.
வெளியே போடப்பட்டிருந்த இருக்கைகளில் பார்கவியும் ஷாரதாவும் அமர்ந்திருக்க, இனியனைக் கண்டதும், ‘என்னாச்சு?’ என்று அவனிடம் புருவம் உயர்த்தி வினவினாள் ஷாரதா.
“அம்மா, அண்ணனை பத்தி டிவியில நியூஸ் பார்துட்டு ஒரே அழுகை. இப்பவே கிளம்பி வர்றோம்னு சொன்னாங்க” என்று இனியன் கூற,
“எங்க வீட்டுல இருந்தும் கால் வந்தது இனியன். இப்போ தான் அப்பா செழியன் மாமாவை பத்தி விசாரிச்சுட்டு ஃபோனை வச்சாங்க!” என்றாள் ஷாரதா.
சிகிச்சை அறைக்கு வெளியே காவலுக்காக ஒரு போலீஸ் அதிகாரி நின்றிருக்க, பார்கவி தான் பெருகி வந்த அழுகையை கட்டுப்படுத்தியபடி மௌனமாக அமர்ந்திருந்தாள்.
அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் இனியனும், ஷாரதாவும் அமர்ந்திருந்த வேளையில், அந்த மருத்துவமனைக்குள் பரபரப்பான பேச்சு குரல்கள் கேட்டன.
தடக்… தடக்… என்று ஷூ சத்தம் கேட்க, அனைவரது பார்வையும் சத்தம் வந்த திசைக்குச் சென்றது.
அங்கே எஸ்.பி. வேலாயுதம் வந்து கொண்டிருக்க, அவருடன் முக்கியமான அதிகாரிகளும் வந்தனர்.
சிகிச்சை பிரிவுக்கு வெளியே அமர்ந்திருந்த மூவரையும் கண்டதும், “இவங்க…” என்று வேலாயுதம் கேட்க,
“செழியன் சாரோட ஃபேமிலி சார்!” என்று பதிலளித்தார் அங்கே காவலுக்கு நின்ற அதிகாரி.
“ஓஹ்…” என்றவர் மூவரிடமும், “கவலைப்படாதீங்க. செழியன் சீக்கிரமே குணமாகி வந்துடுவார்!” என்றார்.
அப்பொழுது அந்த அறையில் இருந்து மருத்துவர் வெளியே வரவும்,
“செழியன் இப்போ எப்படி இருக்கார் டாக்டர்?” என்று வினவினார் வேலாயுதம்.
“ஹீ இஸ் ஃபைன். கையில பட்ட வெட்டு காயத்துக்கு தையல் போட்டிருக்கோம். வலிக்கு மருந்தும் கொடுத்திருக்கோம். காயம் ஆற எப்படியும் ஃபியூ வீக்ஸ் ஆகும்!” என்று கூறினார் மருத்துவர்.
“ஓகே டாக்டர். இப்போ நாங்க செழியனை பார்க்கலாமா?” என்ற எஸ்.பியிடம்,
“ஷ்யூர்… ஓரொருத்தரா போய் பாருங்க!” என்று கூறிவிட்டு டாக்டர் அங்கிருந்து சென்று விட்டார்.
அதன் பிறகு எஸ்.பி. வேலாயுதம் தான் முதல் ஆளாக அந்த அறைக்குள் சென்று செழியனை சந்தித்தார்.
கட்டிலில் சோர்வாக அவன் படுத்திருக்க, “ஹௌ ஆர் யூ ஃபீலிங் நவ் செழியன்?” என்று கேட்டார் வேலாயுதம்.
“ஐ ஆம் ஃபைன் சார்!” என்றபடி அவன் எழுந்து அமர முயல,
“நோ… நோ… ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம். படுத்துக்கோங்க” என்றார் அவர்.
“நான் ஸ்டேஷனுக்குப் போய் பார்த்துட்டு தான் வர்றேன் செழியன். உங்க உயிரை பணயம் வச்சு கில்லரை பிடிச்சிருக்கீங்க! வாழ்த்துகள்!” என்று அவர் புன்னையுடன் கூற, செழியனோ அவருக்கு பதில் சொல்லாமல் மௌனம் காத்தான்.
அதைக் கண்டு புரியாமல் புருவம் சுருக்கியவர், “என்னாச்சு செழியன்? நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம அமைதியா இருக்கீங்க?” என்று கேட்க,
“சாரி சார்… ஸ்டேஷன்ல இருக்கறவன் நாம தேடுற கில்லர் இல்ல” என்றான் செழியன்.
“வாட் டு யூ மீன்? கில்லரை நெருங்கிட்டதா காலையில தானே எனக்கு தகவல் கொடுத்தீங்க” என்றவரிடம்,
“ஆமா சார்… செல்வனுக்கு நடந்தது ‘அ வெல் ப்ளான்ட் மர்டர்’. ஆனா, அந்தக் கொலையில சம்பந்தப்பட்டிருக்கறது மொத்தம் மூணு பேர். இப்போ நம்ம கஸ்டடியில இருக்கறது கொலைக்கு உடந்தையா இருந்தவங்க மட்டும் தான். ஆனா, உண்மையான கில்லர் இன்னும் நம்ம கைக்கு சிக்கல” என்றான் செழியன்.
அதைக் கேட்டதும், “உஃப்…” என்று பெருமூச்சு விட்டவர், “அப்படின்னா… உங்களுக்கு கில்லர் யாருன்னு தெரியுமா செழியன்?” என்று கேட்க,
“கொலைகாரன் யாருங்கறதைப் பத்தி ஒரு கணிப்பு இருக்கு சார். ஆனா, இப்போ என்னால உறுதியா எதுவும் சொல்ல முடியாது. நான் நினைக்கறது மட்டும் சரியா இருந்தா, இன்னைக்கோ அல்லது நாளைக்கோ கொலைகாரன் அவனாகவே வந்து நம்மகிட்ட சரண்டர் ஆக வாய்ப்பிருக்கு!” என்று செழியன் கூறவும்,
“அப்படின்னா… இது கூலிப்படையை ஏவிவிட்டு நடத்தப்பட்ட கொலையா?” என்று வேலாயுதம் கேட்க, செழியன் ஆமாம் என்று தலையசைத்தான்.
அதன் பிறகு செல்வனின் கொலை வழக்கு சம்பந்தமாக தான் விசாரித்து கண்டுபிடித்த சில ரகசியமான தகவல்களை அவரிடம் கூறினான் செழியன்.
அவன் சொன்னதை முழுமையாகக் கேட்டவர், “இட்ஸ் கோயிங் டு பி அ டஃப் ஜாப் செழியன். ஆனா, என் பக்கத்துல இருந்து எங்களால முடிஞ்ச எல்லா சப்போர்ட்டையும் உங்களுக்கு நாங்க தருவோம்!” என்று அவனுக்கு உறுதி அளித்தவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
எஸ்.பி. கிளம்பிச் சென்றதும் அடுத்து யார் உள்ளே செல்வது என்று மூவரும் யோசித்துக் கொண்டிருக்க, “உங்க அக்காவை முதல்ல போய் பார்க்க சொல்லு ஷாரதா” என்றான் இனியன்.
அவளும் பார்கவியிடம் அதை சொல்ல, அவள் சற்று தயக்கத்துடன் செழியனின் அறைக்குள் சென்றாள்.
கட்டிலில் சட்டையின்றி கையில் கட்டுடன் கண் மூடி சோர்வாகப் படுத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு மனம் ஏனோ கனத்துப் போனது.
போலீஸ் உடையில் எப்பொழுதும் கம்பீரம் குறையாமல் இருப்பவன், இன்று களை இழந்து போய் வலியுடன் படுத்திருந்தான்.
அரவம் கேட்டு கண்கள் திறந்தவன், தன் முன்னால் நிற்பவளைக் கண்டதும் புன்னகைத்தபடி விழிகளால் அவளை தன்னருகே வருமாறு அழைத்தான்.
செழியனுக்கு அருகில் சென்றவளுக்கோ, அவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வர, மௌனமாக கண்ணீர் சிந்தினாள்.
அதைக் கண்டதும், “ஹேய்… பாரூ…” என்று பதறியவன் எழ முற்படவும், அவனது கட்டு போட்டிருந்த கையில் வலியெடுத்தது.
“ஆஆ…” என்று வலியில் முனங்கியபடி மீண்டும் அவன் மெத்தையில் சாய முயல, வேகமாக அவனருகே சென்று அவனை அணைத்து கட்டிலில் படுக்க வைத்தாள் பார்கவி.
“ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க செழியன்!” என்று அவள் கூறவும், அவனது முகத்தில் பிரகாசமான புன்னகை.
என்னவென்று புருவம் உயர்த்தி கேட்டவளிடம், “இல்ல… என் பெயரை உன் வாயல கேட்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு பாரூ!” என்று அவன் சொல்ல, சோகம் மாறி சிரிப்பு வந்தது அவளுக்கு.
“கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்திருக்க கூடாதா?” என்றவளிடம்,
“போலீஸ்காரன் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்மா. நீ போகப் போக புரிஞ்சுக்குவ” என்றான் அவன்.
“உங்களை அந்த நிலமையில பார்த்ததும் நான் எவ்வளவு பதறிப் போயிட்டேன் தெரியுமா? நீங்க என்னடான்னா எல்லாமே சகஜம்னு சொல்றீங்க” என்றவளிடம்,
“சரி விடு… டென்ஷன் ஆகாத. அதான் நீ பயப்படுற மாதிரி எனக்கு எதுவும் ஆகல இல்ல” என்றான் அவன்.
“இப்போ எதுவும் ஆகல தான். ஆனா, ஒருவேளை ஃபியூச்சர்ல ஏதாவது ஆச்சுன்னா?” என்றபடி தனது நெஞ்சு கூட்டில் கை வைத்தவள்,
“அந்த மாதிரி ஒரு நிலமையை என்னால யோசிச்சு கூட பார்க்க முடியலைங்க!” என்றாள்.
“பாரூ…” என்றபடி தன்னருகே நின்றவளின் கரத்தைப் பற்றியவன், “ப்ளீஸ்… கண்டதையும் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத. எல்லாம் சரியாயிரும்” என்றான்.
அவளோ மறுப்பாக தலையசைத்தபடி, “இல்லங்க… இன்னைக்கு நடந்ததை பார்த்த பிறகு, வாழ்க்கை முழுக்க உங்களுக்கு என்னாகுமோ… ஏதாகுமோன்னு நினைச்சு கவலைப்பட்டு என்னால காலம் தள்ள முடியும்னு தோணல! அதனால…” என்று சொல்லி அவள் நிறுத்த,
“அதனால… அதனால என்ன பாரூ… இப்போ நீ என்ன சொல்ல வர்ற?” என்று குழப்பத்துடன் அவளிடம் கேட்டான் செழியன்.
அவளோ ஆழ மூச்செடுத்து தனது உணர்வுகளை சமன்படுத்தியபடி, “நேத்து கூட என் வேலையை விட, குடும்பம் தான் முக்கியம்னு ஒரு வார்த்தை சொன்னீங்களே!” என்று அவள் கூறவும்,
“ஆமா… அதுக்கு இப்போ என்ன?” என்று குழப்பம் மேலோங்கிய குரலில் அவளிடம் கேட்டான் செழியன்.
“எனக்காகவும் நம்ம குடும்பத்தோட நிம்மதிக்காகவும் நீங்க இந்த போலீஸ் வேலையை விடணும்! உங்களால அது முடியுமா?” என்று அத்தனை நேரமாகத் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை இறுதியாக அவனிடம் கேட்டாள் பார்கவி.
அவள் இப்படி ஒரு கேள்வியை தன்னிடம் கேட்பாள் என்று சற்றும் எதிர்பார்க்காத அரண் செழியனோ, திகைத்து தான் போனான்!
அரணாய் வருவான்…
வணக்கம் மக்களே!
இந்தக் கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி!
அடுத்த ஒரு மாதமும் சொந்த வேலைகளில் கொஞ்சம் பிசியாக இருப்பதால், தொடர்ந்து பதிவுகள் வருவதில் கொஞ்சம் தாமதம் ஆகலாம்.
முடிந்தவரை விரைவாக பதிவுகள் தரப் பார்க்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!
நன்றி♥
பிரியமுடன்,
சௌஜன்யா...
- Get link
- X
- Other Apps
Comments
Kizhinjithu...eppdi kettaa.....chezhiyan yenna sollvaannu theriyaathaa 🤧
ReplyDeleteஅதானே! காக்கி பாவம் இல்லையா?🫣😅
Delete