Ongoing Novels
அரணாய் நீ வா - Epi 11
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
அத்தியாயம் – 11
அரண் செழியனும் மற்ற காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு சூப்பர் மார்க்டெ்டுக்குச் சென்றனர்.
போலீஸ் வாகனம் கடை முன்பு நின்றதுமே அந்தக் கடையின் உரிமையாளர் எழுந்து வெளியே வந்தார்.
“என்ன விஷயம் சார்?” என்று சுயம்புலிங்கத்திடம் அவர் கேட்க,
“உங்க கடையில வேலை பார்க்கிற ஒரு ஆள்கிட்ட நாங்க விசாரிக்கணும். பெயர் சதீஷ். கொஞ்சம் அவரை கூப்பிட முடியுமா?” என்றார் சுயம்புலிங்கம்.
“ஏன் சார்! ஏதாவது பிரச்சனையா? அந்தப் பையன் ஏதாவது தப்பு பண்ணிட்டானா?” என்று அவர் கேட்க,
“அந்த சதீஷ் எவ்வளவு நாளா உங்க கடையில வேலை செய்யுறான்?” என்று கேட்டான் செழியன்.
“அந்த பையன் இங்கே வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசம் தான் சார் ஆகுது. வேலை எல்லாம் குறை சொல்ல முடியாத அளவுக்கு நல்லா தான் செய்யுறான் சார்!” என்றவர் மீண்டும்,
“என்ன பிரச்சனை சார்?” என்று கேட்க,
“அதை அவன்கிட்டேயே நாங்க பேசிக்குறோம்! முதல்ல நீங்க போய் சதீஷை கூட்டிட்டு வாங்க” என்றான் செழியன்.
அதன் பிறகு அவரும் கடைக்குள் சென்று சதீஷை அழைத்து வந்தார்.
போலீஸ் அவனைத் தேடி வந்திருக்கிறது என்று அறிந்ததும், அந்தக் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள், என்னவோ ஏதோ என்று யோசித்தபடி ஒரே இடத்தில் கூடி விட்டனர்.
சதீஷை கடை உரிமையாளர் அழைத்து வந்ததும், வாசலில் நின்ற போலீசாரைக் கண்டு அதிர்ந்தான் அவன்.
“என்ன விஷயம் சார்! எதுக்காக என்னைத் தேடி வந்திருக்கீங்க?” என்று தனது பதட்டத்தை மறைக்க முயன்றபடி அவன் கேட்க,
“அதை பத்தி ஸ்டேஷனுக்குப் போய் சாவகாசமா பேசுவோம். இப்போ நீ வண்டியில ஏறு!” என்றான் செழியன்.
“சார்! எதுக்கு சார்? நான் எந்த தப்பும் பண்ணல சார்!” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனை குண்டு கட்டாகத் தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.
அதன் பிறகு அந்த வாகனம் அசுர வேகத்தில் மீண்டும் காவல் நிலையத்தை வந்தடைந்தது.
உள்ளே வந்ததும் அங்கிருந்த தனியறை ஒன்றில் சதீஷை அமர வைத்து, தனது விசாரணையைத் தொடங்கினான் செழியன்.
“துர்காவோட நகைகள் உன் கைக்கு எப்படி கிடைச்சுது?” என்று அவன் கேட்கவும்,
“எ…எந்த நகை சார்? யாரு துர்கா? எனக்கு எதுவும் தெரியாது” என்றான் சதீஷ்.
“சரி உனக்குப் புரியுற மாதிரி தெளிவாகவே சொல்றேன்” என்ற செழியன், தனது கைகளை மேஜை மீது ஊன்றி அவனை நெருங்கிச் சென்று,
“கான்ட்ராக்டர் செல்வன் கொலை செய்யப்பட்ட அன்னைக்கு, அவரோட மனைவி துர்கா போட்டிருந்த நகைகளை கொலைகாரன் திருடிட்டு போய்ட்டான். அந்த நகையை நீ வள்ளியூர்ல இருக்கற ஒரு கடையில போய் வித்திருக்க. அப்படின்னா… நீ தான் செல்வனை கொலை பண்ணியா?” என்று கேட்டான் செழியன்.
விசாரணையின் போது அவனது குரல், கர்ஜனையுடன் ஒலித்தது. அதைக் கேட்ட சதீஷூம் உள்ளுக்குள் அரண்டு தான் போயிருந்தான்.
“கொலையா?” என்று விழி விரித்து அதிர்ந்தவன்,
“ஐயோ… இல்ல சார்! நான் யாரையும் கொலை பண்ணல. என்னை இந்தக் கேஸ்ல மாட்டி விடுறதுக்காக வீணா யாரோ என் மேல பழி போடுறாங்க” என்றான் அவன்.
அதைக் கேட்டு நிமிர்ந்து நின்றவன், “உண்மையை சொன்னா பெருசா சேதாரம் இல்லாம தப்பிக்கலாம். இல்ல… பொய் மேல பொய் சொல்லி எங்களை ஏமாத்தணும்னு நினைச்சேன்னா… அப்புறம் வரப் போற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டதுமே சதீஷூக்கு பயம் தொண்டையை அடைத்தது.
இருந்த போதிலும், “சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார்! எனக்கும் அந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. தயவு செஞ்சு என்னை விட்ருங்க சார்” என்று கிட்டத்தட்ட செழியனிடம் கெஞ்சினான் அவன்.
அரண் செழியனுக்கோ அவன் இழுத்து வைத்திருந்த பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய் கொண்டிருந்தது.
தனது அலைபேசியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சதீஷூக்குப் போட்டுக் காண்பித்தவன், “இங்கே பார்! நீ தான் அந்தக் கடையில நகையை வித்திருக்கேன்னு கேமராவுல தெள்ளத் தெளிவா பதிவாகி இருக்கு! இதுக்கு மேலேயும் நீ உண்மையை சொல்ல மறுத்தா… கொலை கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளிடுவேன்” என்றான்.
அந்த சிசிடிவி ஆதாரத்தைப் பார்த்த சதீஷ் பயத்தில் விதிர்விதிர்த்து போய் அமர்ந்திருந்தான்.
ஒன்றும் பேசாமல் மொளனமாக இருந்தவனைக் கண்டு செழியனுக்கு கோபம் அதிகரித்தது.
“இவனுக்கு நம்ம ஸ்டைல்ல ட்ரீட்மென்ட் கொடுத்தா தான் சார் வழிக்கு வருவான். கொஞ்ச நேரம் டைம் கொடுங்க… இவன் வாயாலேயே உண்மையை கக்க வைக்கிறேன்!” என்று கனமான பிரம்பு கம்பு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு சுயம்பு அவனருகே செல்லவும், சதீஷ் பயத்தில் அழத் தொடங்கி விட்டான்.
அதை கண்டு, “ஏட்டய்யா!” என்று செழியன் அழைக்கவும், திரும்பி பார்த்தார் அவர்.
அவனை எதுவும் செய்ய வேண்டாம் என்று கண்களால் அவரிடம் கூறியவன், மேஜையில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து அவனிடம் நீட்டினான்.
அவனோ குழப்பத்துடனே அதை வாங்கி தனது முகத்தை துடைத்துக் கொள்ள, சதீஷூக்கு எதிர்புறமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தவன்,
“இங்கே பாரு. நீ இந்த கொலையை செய்யலைன்னு நான் முழுமையா நம்புறேன். ஆனா, வீடியோ ஆதாரம் உனக்கு எதிரா இருக்கறதால, உன் மேல கொலைப் பழி விழுறதுக்கு நூறு சதவீதம் வாய்ப்பிருக்கு. நீ மட்டும் என்ன நடந்ததுன்னு உண்மையை சொன்னேன்னா, உன் மேல பெருசா கேஸ் வராம நான் பார்த்துக்குறேன்!” என்றான் செழியன்.
உடனேயே, “சார்!” என்று தயங்கிய குரலில் பேசிய சதீஷ், “நான் உண்மையை சொல்லிடுறேன் சார்!” என்றான்.
அதை கேட்டதும் வெற்றிப் புன்னகையுடன் சுயம்புலிங்கத்தை திரும்பிப் பார்த்தான் செழியன்.
அவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, சதீஷ் கூறியதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர்.
“அந்த நகை யாரோடதுன்னு எனக்கு சத்தியமா தெரியாது சார். என்கூட வேலை பார்க்கிற சேர்மதுரை தான் இந்த நகைகளை என்கிட்ட கொடுத்தான். இதை எப்படியாவது வித்து கொடு... உனக்கு கொஞ்சம் காசு தர்றேன்னு சொன்னான்”
“நானும் காசுக்கு ஆசைப்பட்டு அந்த நகையை என் சொந்த ஊருக்கு எடுத்துட்டு போய் எனக்குத் தெரிஞ்ச கடையில வித்துட்டேன். காசை துரைகிட்ட தான் கொடுத்தேன் சார். ஆனா, அவன் மொத்த காசையும் வாங்கிட்டு எனக்கு பணம் தராம ஏமாத்திட்டான். சாமி சத்தியமா இது திருட்டு நகைன்னு எனக்குத் தெரியாது சார்!” என்று கூறிவிட்டு தலைகவிழ்ந்து கொண்டான் சதீஷ்.
அவன் சொன்னதைக் கேட்ட செழியனோ, “நீ சொன்ன பதில் எனக்குத் திருப்தியா இல்ல சதீஷ். உன் கூட வேலை பார்க்கிறவன், இவ்வளவு காஸ்ட்லியான நகைகளை கொண்டு வந்து கொடுத்தப்போ உனக்கு துளியளவு கூட சந்தேகம் வராமலா இருந்திருக்கும். அப்படியே அந்த நகை, சேர்மதுரையோட சொந்த நகையா இருந்திருந்தா, அதை அவனே வித்திருக்கலாமேன்னு உனக்கு கொஞ்சம் கூடவா தோணல?” என்றான்.
அதைக் கேட்ட சதீஷ் எச்சில் விழுங்கியபடி அமைதியாக அமர்ந்திருக்க, செழியன் சென்று சுயம்புலிங்கத்திடம் ஏதோ பேசிவிட்டு வந்தான்.
அவரும் அவன் சொன்னதைக் கேட்டு தலையாட்டியபடி, “சரி சார்… இப்போவே போய் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டார்.
செழியனோ, “நான் வர்ற வரைக்கும் இப்படியே அமைதியா உட்கார்ந்திருக்கணும்!” என்று சதீஷிடம் கூறிவிட்டு வெளியே சென்றான்.
தனது தனியறைக்குச் சென்றவன், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
முதலில் சாதாரண கொலை வழக்காக தோன்றியது, இப்போது இடியாப்ப சிக்கலாக மாறி, செழியனுக்குப் பெரிய தலைவலியைக் கொண்டு வந்திருந்தது.
சில நொடிகள் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தவன், தனது அலைபேசியை எடுத்து பார்கவிக்கு அழைத்தான்.
மறுபுறம் அழைப்பு சென்றதே தவிர, அவள் பதிலளிக்கவே இல்லை.
இருமுறை முயன்று பார்த்துவிட்டு அழைப்பை துண்டித்தவன், அடுத்ததாக இனியனின் எண்ணுக்கு அழைத்தான்.
அவனும் அழைப்பை ஏற்கவே இல்லை!
“ச்ச…. எல்லாரும் என்ன தான் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு கால் அட்டென்ட் பண்ண முடியாத அளவுக்கு அப்படி என்ன வேலை” என்று வாய்விட்டே புலம்பினான் செழியன்.
சிறிது நேரம் கழித்து அவனது அறைக்கு வந்த சுயம்புலிங்கம், “சார்! நீங்க சொன்ன மாதிரியே தான் சார் நடந்திருக்கு!” என்றபடி செழியனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
அதை வாங்கிப் பார்த்தவன், “அந்தப் புறம்போக்கு இவ்வளவு நேரமா நம்மகிட்ட நாடகமாடிட்டு இருந்திருக்கான் ஏட்டய்யா! இருக்கட்டும் பார்த்துக்குறேன்” என்றபடி கோபத்தில் பற்களை கடித்தவன், அந்தப் பையையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
திடீரென அவனுக்கு ஒன்று நினைவு வரவும், “ஆமா! நம்ம ஜெகன் சார் இரண்டு மணி நேரம் பெர்மிஷன்ல கிளம்பி போனாரு. அவர் போய் மூணு மணிநேரத்துக்கு மேல ஆகுது. இன்னும் ஆளைக் காணோம்! அவர் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கார்” என்று செழியன் கேட்க,
“விடுங்க சார்! அவர் இங்கே இருக்கறதை விட, இல்லாம இருக்கறது தான் நல்லது. அவரை விட்டுத் தள்ளுங்க சார். நாம அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றார் சுயம்புலிங்கம்.
அதன் பிறகு இருவரும் சதீஷ் இருக்கும் அறைக்குச் சென்றனர். தான் எடுத்து வந்த பையை மேஜை மீது வைத்தான் அரண் செழியன்.
தனக்கு முன்னால் இருந்த பையைக் கண்ட சதீஷூக்கு தூக்கி வாரி போட்டது. பயத்தில் அவனது நெற்றியில் இருந்து வியர்வை வழிய ஆரம்பித்தது.
“என்னடா… நம்ம ரூம்ல இருந்த பை… இங்கே எப்படி வந்ததுன்னு யோசிக்குறியா?” என்று செழியன் தனது புருவத்தை மேலேற்றி கேட்கவும்,
“சார்!” என்றபடி பயத்தில் எச்சில் விழுங்கினான் சதீஷ்.
சட்டென அவனது சட்டைக் காலரை கொத்தாகப் பற்றிய அரண் செழியன், “ஏன்டா… உன்னை தேடி கண்டுபிடிச்சு இங்கே கூட்டிட்டு வந்து, உண்மையை சொல்லுடான்னு கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி எடுத்து சொன்னா… நீ எங்ககிட்டேயே பொய் சொல்லி ஏமாத்துறியா?” என்றபடி அவனை மேலும் நெருங்கிச் சென்று,
“தொலைச்சுருவேன்!” என்றான் கண்கள் சிவக்க.
பின்னர் அவனது சட்டை காலரை தனது கரத்தில் இருந்து விடுவித்தவன், அந்தப் பையைத் திறந்து அதிலிருந்த பணக்கட்டை வெளியே எடுத்தான்.
அதில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் பணம் இருக்க, அந்தப் பணத்தை அவனிடம் காட்டியபடி, “இந்த பணம் ஏது? இவ்வளவு பணம் உன் கைக்கு எப்படி வந்தது?” என்று செழியன் கேட்க,
“அது… அது என் சொந்த பணம் சார். நான் சொந்தமா சம்பாதிச்சு சேர்த்த பணம்!” என்றான் சதீஷ்.
“ஓஹோ… இரண்டு மாசத்துக்கு முன்னாடி சூப்பர் மார்க்கெட்ல வேலைக்கு சேர்ந்த நீ… அதுக்குள்ள இவ்வளவு பணம் சம்பாதிச்சுட்டியா? பொய்க்கு மேல பொய் சொன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” என்றான் செழியன்.
“இவன்கிட்ட பேச்சு வார்த்தை நடத்துனா வழிக்கு வர மாட்டான் சார்! பேசாம நம்ம ஸ்டைல்ல விசாரிச்சுடலாம்!” என்று சுயம்புலிங்கம் கூற,
அவனையே கூர்மையாகப் பார்த்தவன், தனது கையில் போட்டிருந்த வெள்ளி காப்பை முறுக்கி விட்டபடி, “எனக்கும் நீங்க சொல்றது தான் சரின்னு படுது ஏட்டய்யா!” என்றவன் சுயம்புலிங்கத்தை திரும்பிப் பார்த்து,
“ஆனா, அதுக்கு முன்னாடி இவனோட அப்பாவுக்கு தகவல் குடுத்து அவரை உடனே இங்கே கிளம்பி வரச் சொல்லுங்க” என்றான்.
செழியன் சொன்னதைக் கேட்டதுமே பதறிப் போன சதீஷ், “சார்… சார்… வேண்டாம் சார். எங்க அப்பா வயசானவரு. உடம்பு சரியில்லாம வேற இருக்காரு. என்னை போலீஸ் புடிச்சுட்டாங்கன்னு தெரிஞ்சா, அவரு தாங்க மாட்டாரு சார்” என்று கூறி அழ ஆரம்பித்தான்.
அதைக் கேட்ட செழியனோ பெருமூச்சு விட்டபடி, “அப்படின்னா… எல்லா உண்மையையும் மறைக்காம எங்ககிட்ட சொல்லு!” என்றான்.
அடுத்த அரைமணி நேரமும் செல்வன் கொலை சம்பந்தமாகத் தனக்கு தெரிந்த முக்கியமான தகவல்களை போலீசாரிடம் கூறினான் சதீஷ்.
அதைக் கேட்ட அரண் செழியனுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
உண்மையை கூறி முடித்ததும், “சார்! என் மேல கேஸ் எதுவும் போட மாட்டீங்கல்ல! என்னை விட்டுருவீங்கல்ல சார்” என்று சதீஷ் கேட்க,
“இதையெல்லாம் நீ தப்பு பண்ணுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும். இப்போ தலைக்கு மேல வெள்ளம் போன பிறகு… என்னால எதுவும் செய்ய முடியாது” என்ற செழியன் சுயம்புலிங்கத்திடம் திரும்பி,
“ஏட்டய்யா… இவன் மேல FIR போடுறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அது மட்டுமில்ல… இன்னும் அரைமணி நேரத்துல அந்த சேர்மதுரையோட ஃபோட்டோ, அவன் எங்கே இருக்காங்கற தகவல் எனக்கு வந்தாகணும்” என்று கூறிவிட்டு சில முக்கியமான நபர்களிடம் ஃபோன் பேசுவதற்காக வெளியே சென்று விட்டான்.
அடுத்த அரைமணி நேரத்தில் சேர்மதுரை இருக்கும் இடம் போலீசாருக்குத் தெரிய வர, “உடனே எல்லாரும் கிளம்புங்க!” என்று அனைத்து காவலர்களையும் உஷார்படுத்தினான் செழியன்.
சதீஷை காவல் நிலைய லாக் அப்பில் அடைத்திருந்தனர்.
அதன் பிறகு, அனைவரும் காவல்துறை வாகனத்தில் ஏறுவதற்காகச் சென்ற பொழுது அங்கே வந்து சேர்ந்தார் ஜெகன்.
போலீசார் எங்கோ செல்வது அவருக்குத் தெரியவும் குழப்பத்துடன் அரண் செழியனை நோக்கிச் சென்றவர், “சார்! எல்லாரும் எங்கே கிளம்பிட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.
“ஒரு எமெர்ஜென்சி சிட்சுவேஷன் ஜெகன் சார். நான் வந்து எல்லாத்தையும் உங்களுக்கு விவரமா சொல்றேன். நாங்க வர்ற வரைக்கும் ஸ்டேஷனை பார்த்துகோங்க!” என்று பதிலளித்துவிட்டு காவல்துறை காரில் ஏறி அங்கிருந்து சென்று விட்டான்.
அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று புரியாமல் விழித்த ஜெகன், குழப்பத்துடன் காவல் நிலையத்திற்குள் சென்றார்.
அரண் செழியனும் அவனது குழுவினரும் சேர்மதுரையைத் தேடிச் சென்றது களக்காடு – முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்கு உட்பட்ட, ‘தலையணை’ என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் ஒரு ஆற்றுப் பகுதியை நோக்கி தான்.
‘தலையணை’ முழுக்க முழுக்க, வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதி.
அங்கே யார் செல்ல வேண்டும் என்றாலும், வனத்துறையினரின் அனுமதி பெற்ற பிறகு தான் செல்ல முடியும்.
அதிலும் குறிப்பாக, அங்கு வருவோரை பலத்த சோதனைக்குப் பிறகே வனத்துறையினர் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.
இயற்கை பொருட்களைத் தவிர, வேறு எதுவும் அங்கே எடுத்துச் செல்வதற்கு அனுமதியில்லை!
செழியன் தலையணைக்கு செல்வதற்கான செக் போஸ்டை அடைந்ததும் அங்கிருந்த வனத்துறையினரை சந்தித்துப் பேசினான்.
ஒரு குற்றவாளியைத் தேடி அவர்கள் இங்கே வந்திருப்பதாகச் சொல்லவும், தங்களிடம் இருந்த வருகைப் பதிவேட்டைப் பார்த்த வனத்துறை அதிகாரி,
“காலையில இருந்து அஞ்சு வண்டி ஆளுங்க உள்ளே போயிருக்காங்க சார். முப்பது வயசுக்கு உட்பட்ட ஆளுன்னா… இரண்டு பைக்ல நாலு பசங்க ஒருமணி நேரத்துக்கு முன்னாடி தான் உள்ளே போனாங்க!” என்றார்.
‘அப்போ அந்தக் கூட்டத்தில தான் சேர்மதுரை இருக்கணும்’ என்று நினைத்தபடி,
“உள்ளே போய் குற்றவாளியை அரெஸ்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை வரலாம் சார். நீங்க எங்களுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்தா ஈசியா இருக்கும்!” என்று செழியன் அந்த வனத்துறை அதிகாரியிடம் சொல்ல,
“கண்டிப்பா சார்! இரண்டு ஆஃபிசர்சை உங்க கூட அனுப்பி வைக்கிறேன்” என்றார் அவர்.
அதன் பிறகு காவல்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் சேர்ந்து தலையணை நோக்கிப் பயணித்தனர்.
செக் போஸ்டில் இருந்து சில கிலோமீட்டர்கள் தூரம் பயணம் செய்து தான் தலையணைக்குச் செல்ல முடியும்.
சற்று கரடு முரடான சாலை வழியாகப் பயணித்த செழியன், சாலையின் இரு புறமும் இருந்த அடர்ந்த தேக்கு மரக் காடுகளைப் பார்த்து பிரம்மித்து தான் போனான்.
காடுகளுக்கு பின்னணியில் தெரிந்த மேற்கு தொடர்சி மலைகளின் வரிசை, கண்ணை கவரும் விதமாக இருந்தது.
வழியில் ஆங்காங்கே சில பாதைகளில் வனத்துறையினரால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முக்கியமான வேலையில் இருந்தாலும், அந்த இடத்தின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை செழியனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
ஒரு வழியாக பயணம் செய்த அதிகாரிகள் அனைவரும் தலையணையை அடைந்தனர்.
சிறிய மியூசியம், சிறுவர் பூங்கா என்று அனைத்தையும் கடந்து கீழே இறங்கி மக்கள் குளிக்கும் ஆற்றுப் பகுதிக்கு வந்தனர்.
பெரிய உருண்டை கற்கள் மற்றும் பாறைகள் அடுக்கடுக்காக இருபுறமும் இருக்க, அதற்கு நடுவே தெளிந்த நீரோடையாக மலையில் இருந்து இறங்கி பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது அந்த ஆறு.
சுற்றும் முற்றும் பார்த்த செழியன், “இரண்டு இரண்டு பேரா பிரிஞ்சு தேடுவோம்” என்றவன் தனது அலைபேசியில் இருந்த சேர்மதுரையின் புகைப்படத்தை தங்கள் காவல்துறை குழுவில் பகிர்ந்தான்.
“இவனை எங்கே பார்த்தாலும் உடனே எனக்குத் தகவல் சொல்லணும்” என்றவன்,
“அதுக்கு முன்னாடி பப்ளிக்கை இங்கிருந்து அப்புறப்படுத்தணும்!” என்று கூற, “அதை நாங்க பார்த்துக்குறோம் சார்” என்றார் அவனருகே நின்றிருந்த வனத்துறை அதிகாரி ஒருவர்.
அதன் பிறகு அரண் செழியனும் அவனது குழுவினரும் குற்றவாளியைத் தேட ஆரம்பித்தனர்.
இது இப்படி இருக்க, பார்கவியும் அவளது நண்பர்கள் குழுவினரும் தலையணையில் தான் குளித்துக் கொண்டிருந்தனர்.
தூரத்தில் போலீசார் கும்பலாக வருவதைக் கண்டதும், “அக்கா அங்கே பார். செழியன் மாமா வந்திருக்கார்” என்றாள் ஷாரதா.
அதைக் கேட்டதும் அவள் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்த பார்கவி, “என்ன அவர் கூட இத்தனை பேர் வந்திருக்காங்க. ஏதாவது பிரச்சனையா இருக்குமோ!” என்றபடி இனியனிடம் திரும்பி,
“உங்க அண்ணனுக்கு ஒரு ஃபோன் பண்ணி பாருங்களேன். ஏதாவது பிரச்சனையா இருக்கப் போகுது” என்று பதட்டமாகக் கூறினாள்.
இனியனோ, “பிரச்சனையை சமாளிக்கறது தான் அண்ணி செழியன் அண்ணனோட வேலையே. ஏதாவது கேஸ் விஷயமா விசாரிக்க வந்திருப்பான். நீங்க பயப்படாம இருங்க” என்றான்.
செழியனுக்கும் அவளுக்கும் இடையே பெரிய கற்களும், பாறைகளும் நிறைந்த பாதை இருக்க, அவளால் நினைத்த உடனே அவனிடத்தில் செல்ல முடியவில்லை.
என்னவோ ஏதோ என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவர்களிடம் வந்த வனத்துறை அதிகாரி ஒருவர், “சீக்கிரமா எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க. யாரும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல இங்கே இருக்கக் கூடாது” என்றார்.
“ஏதாவது பிரச்சனையா சார்!” என்று இனியன் கேட்க,
“ஒரு குற்றவாளி இங்கே பதுங்கி இருக்கறதா போலீசுக்கு தகவல் வந்திருக்கு. அவனைப் பிடிக்கத் தான் போலீஸ் வந்திருக்காங்க” என்று பதிலளித்தவர் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து கிளம்பச் சொன்னார்.
அதன் பிறகு அங்கே குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி வெளியே செல்ல ஆரம்பித்தனர்.
பார்கவி அனைவருடனும் சேர்ந்து கிளம்பினாலும், அவளது பார்வை முழுவதும் அரண் செழியனிடமே இருந்தது.
அவளது மனதிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற, அங்கிருந்து செல்வதற்கு மனமே இன்றி நடந்து சென்றாள்.
செழியனோ மறு கரையில் நின்றிருக்க, பார்கவி எதிர் கரையில் நின்றபடி அவனையே பார்த்தாள்.
யதார்த்தமாக அந்தப் பக்கமாகப் பார்த்தவனின் விழிகள் பார்கவியைக் கண்டதும் ஆச்சர்யத்தில் விரிந்தன.
இருந்தாலும் முக்கியமான நேரத்தில் தனது சொந்த விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல், ‘சீக்கிரமா இங்கிருந்து கிளம்பு!’ என்று அவளிடம் கண்களால் ஜாடை பேசினான் அவன்.
இனியனிடமும் அவர்களை அங்கிருந்து அழைத்து செல்லும்படி அவன் கூற, அவனும் சரியென்று தலையசைத்தான்.
பார்கவியும் மனமே இல்லாமல் அவன் சொன்னதற்கு கட்டுப்பட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்து வெளியேறினாள்.
வெளியே வந்து தனது ஆடைகளை எடுத்துக் கொண்டு உடைமாற்றும் இடத்திற்குச் சென்று உடை மாற்றிவிட்டு வந்த பார்கவிக்கு, தூரத்தில் தோட்டா வெடிக்கும் சத்தம் பலமாகக் கேட்க, நெஞ்சில் கை வைத்தபடி அப்படியே உறைந்து போய் நின்றாள்.
அரணாய் வருவான்…
அத்தியாயம் படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கா!
திங்கள் அடுத்த எபியோடு வர்றேன்.
ஆதரவு தரும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்♥
மீண்டும் சந்திப்போம்...
பிரியமுடன்,
சௌஜன்யா...
- Get link
- X
- Other Apps
Comments
Interesting update dear
ReplyDeleteThank you akka❤️
Delete