Ongoing Novels

அரணாய் நீ வா - Epi 12

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 12 துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிப் போன பார்கவி பதட்டப்பட, “யாரும் இங்கே நிக்காதீங்க! எல்லாரும் உடனே கிளம்புங்க” என்றார் அங்கு நின்ற வனத்துறை அதிகாரி ஒருவர். பார்கவியின் நண்பர்கள் அனைவரும் வேகமாகச் சென்று வண்டியில் ஏற, அவளோ பதட்டம் மாறாமல் அப்படியே நின்றிருந்தாள். “அக்கா… வந்து வண்டியில ஏறு” என்று ஷாரதா அவளது தோள் தொட்டு கூறவும், “எனக்கு பயமா இருக்கு ஷாரதா. ஒருவேளை அவருக்கு எதுவும் பிரச்சனை ஆயிருக்குமோன்னு நினைச்சு மனசு கிடந்து அடிச்சுக்குது” என்றாள். “ஐயோ… அதெல்லாம் எதுவும் இருக்காதுக்கா. நீ எதுக்காக வீணா மனசை போட்டு குழப்பிக்குற?” என்று அவளை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் ஷாரதா. “ஏம்மா… சீக்கிரமா கிளம்புங்கன்னு எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன். நீங்க இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்தும்மா. சொன்னா புரிஞ்சுகோங்க” என்று அந்த வனத்துறை அதிகாரி பொறுமை இழந்து பேசவும், இனியன் அவர்களிடம் சென்றான். “என்னாச்சு? ஏன் இன்னும் வண்டியில ஏறாம இருக்கீங்க?’ என்று அவன் கேட்க, “மாமாவை நினைச்சு அக்கா பயந்துட்டு இருக்கா இனியன்” என்றாள் ஷாரதா. “இனிய

அரணாய் நீ வா - Epi 2

 அரணாய் நீ வா!


 

அத்தியாயம் - 2

மறுநாள் காலையில் மதுரையில் இருக்கும் தனது வீட்டின் முன்பு நின்றிருந்தான் செழியன். 

மகன் வருகிறான் என்றதுமே அவனுக்காக, வாசலிலேயே வழி மேல் விழி வைத்து காத்து நின்றார் ஆதிரை செல்வி.

ஆட்டோவில் வந்து இறங்கியவன், வீ்ட்டின் கேட் தாண்டி உள்ளே வந்ததும் கையில் ஆரத்தி தட்டுடன் வந்தார் அவர்.

அன்னையைக் கண்டதும் புன்னகை மாறா முகத்துடன் நின்றவன், "எதுக்கும்மா இதெல்லாம்?" என்று கேட்டான்.

அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவர் ஆரத்தி எடுத்துவிட்டு அவனை உள்ளே செல்லுமாறு கூறினார். 

அரண் செழியனும் தனது பைகளுடன் வீட்டிற்குள் செல்ல, "வாப்பா... பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது?" என்றார் சண்முகநாதன்.

"ஓகே தான் பா!" என்றவன் சோபாவில் தன் தந்தைக்கு அருகே அமர்ந்தபடி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,

"எங்கேப்பா... நம்ம இனியனை காணோம்!" என்றான்.

"அவன் கடையை திறந்துட்டு வர்றேன்னு சீக்கிரமாவே கிளம்பி போனான் செழியா. இப்போ வர்ற நேரம் தான்!" என்றார்.

செழியனின் தம்பி இனியன், மதுரையில் சொந்தமாக ஒரு செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறான். 

அவர்களின் குடும்பத்திலேயே அரசு வேலை அல்லாது சொந்தமாக தொழில் செய்வது அவன் மட்டுமே!

காலியான ஆரத்தி தட்டுடன் வீட்டிற்குள் வந்த ஆதிரை செல்வியோ தன் மகனுக்கு அருகே போய் நின்று அவனது தலையை வருடி விட்டபடி, "எப்படிப்பா இருக்க? வேலை வேலைன்னு உடம்பை சரியா கவனிக்கறது இல்லை போல! இளைச்சு போயிட்டியே" என்று வருந்தவும்,

"அவன் தான் இளைச்சுட்டான்னு தெரியுதுல்ல. நீயாவது நம்ம செழியன் கூட போய் ஒரு மாசம் தங்கி இருந்து அவனுக்கு நல்லா சமைச்சு போட்டு பார்த்துக்க கூடாதா செல்வி?" என்றார் சண்முகம்.

"க்கும்..." என்று நாடியை தோளில் இடித்து தன் கணவரிடம் நொடித்துக் கொண்டவர்,

"இந்த வயசான காலத்துல நினைச்ச இடத்துக்கு நினைச்ச நேரத்துல என்னால ஓடி ஓடி போய் நிற்க முடியுமா? அதுக்கு தான் இவனை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுறேன். என் பேச்சை எங்க கேக்குறான்!" என்றார்.

தன் அன்னை சொன்னதைக் கேட்டதும், "ம்மா..." என்று செழியன் சலித்துக் கொள்ள,

"செல்வி! எதை எப்போ பேசணும்னு இல்லையா. செழியன் டயர்டா வந்திருக்கான். முதல்ல போய் அவனுக்கு காஃபி, டிபன் எல்லாம் ரெடி பண்ணு" என்றார் சண்முகநாதன்.

"க்கும்... இந்த வீட்டுல நான் பேசுனா மட்டும் உடனே குற்றம் சொல்ல வந்துடுவீங்களே!" என்றபடி சமையலறைக்குச் சென்று விட்டார் ஆதிரை செல்வி.

அவரை கண்டு பெருமூச்சு விட்ட தன் மகனிடம், "அம்மா பத்தி தான் உனக்கு தெரியுமே பா! வெடுக்குன்னு எதையாவது பேசிடுவா. நீ டென்ஷன் ஆகாதே" என்றார்.

"அம்மா தப்பா எதுவும் சொல்லலையே பா. எனக்கு தான் ஏனோ இந்த கல்யாணம், குடும்ப வாழ்க்கையில எல்லாம் பெருசா இன்ட்ரெஸ்ட் வர மாட்டேங்குது" என்று செழியன் கூறிய வேளையில்,

"சுத்தம்! உனக்கு இந்தக் கல்யாணம் காட்சில எல்லாம் இன்ட்ரெஸ்ட் வர்றதுக்குள்ள, நான் அன்னாடங்காச்சி ஆயிடுவேன் போல இருக்கு. கொஞ்சம் பார்த்து எடுத்து உன் உடன் பிறப்புக்கும் ரூட்டை க்ளியர் பண்ணி விடுண்ணா!" என்று வாசற்புறமாக ஒரு குரல் கேட்கவும் இருவரும் திரும்பி பார்த்தனர்.

அங்கே சிரித்த முகமாக இனியன் நின்றிருக்க, "வாடா தம்பி! என்ன... நீ பேசுற தோரணையைப் பார்த்தா ஏற்கனவே பொண்ணு எல்லாம் பார்த்து ரெடியா வச்சிட்ட போலிருக்கு?" என்றான் செழியன்.

இனியனும் அவன் அருகே வர, அவனை தனக்கு அருகே அமரச் சொன்னான் செழியன்.

அண்ணன் தம்பி இருவருக்கும் மூன்று ஆண்டுகள் தான் வயது வித்தியாசம்.

வயதில் மட்டும் தான் இருவருக்கும் வித்தியாசம் உள்ளதே தவிர, இருவரின் குணநலன்கள், பிடித்த விஷயங்கள், எண்ண ஓட்டம் என்று மற்றவை அனைத்தும் ஒரே கோட்டில் ஒற்றுமையாகத் தான் பயணிக்கும்.

சிறுவயது முதலே சகோதரர்கள் என்பதைத் தாண்டி இருவருக்கும் இடையே ஒரு நட்பு அழகிய மெல்லிசையாய் ஒலித்து கொண்டே இருக்கின்றது.

மற்ற வீடுகளைப் போல ஒருவன் அம்மா செல்லம், மற்றவன் அப்பா செல்லம் என்றெல்லாம் இல்லை. 

ஆதிரை செல்வியின் புதல்வர்களை பொறுத்த மட்டில், இருவரும் எந்தப் பக்கமும் சாயாமல் ஒரே கட்சியாக எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

இவர்களுக்கு இடையில் ஆதிரையும் சண்முகநாதனும் தான் முட்டி கொண்டும் மோதிக் கொண்டும் நிற்பார்கள்.

அரண் செழியனுக்கு அருகே அமர்ந்தவனோ, "ஆமா! பொண்ணெல்லாம் பார்த்து ரெடியா வச்சாச்சுண்ணா" என்று கூறவும் அவனுடன் சேர்ந்து சண்முகநாதனும் விழி விரித்தார்.

இருவரின் முக பாவனையைக் கண்டதும், "அட! பொண்ணு பார்த்துட்டாங்கன்னு நான் சொன்னது எனக்கில்லண்ணா... உனக்குத் தான்" என்றான் இனியன்.

அவன் சொன்னதைக் கேட்டதும் சமையலறையில் இருந்து வேகமாக ஹாலுக்கு வந்தார் ஆதிரை செல்வி.

ஹாலுக்குப் பக்கவாட்டில் இருந்த பூஜையறைக்குச் சென்றவர், சாமி படத்திற்கு முன்னால் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து வந்து செழியனிடம் நீட்டினார்.

இமைகளை மூடித் திறந்து என்ன என்பது போல் அவன் தன் அன்னையைப் பார்க்க, "பொண்ணோட ஃபோட்டோ. வாங்கி பாரு செழியா" என்றார் அவர்.

செழியன் எந்த பதிலும் கூறாமல் மௌனமாக அமர்ந்திருக்க, அதை கையில் வாங்கிய இனியன், "நான்  பார்த்துக்குறேன் மா. நீங்க போங்க!" என்றான்.

அவர் சென்றதும் சண்முகநாதன், "உன் அம்மா ரொம்ப ஆசைப்படுறாப்பா. ஒருமுறை ஃபோட்டோவை பார்த்துட்டு உன் விருப்பத்தை சொல்லு" என்றுவிட்டு எழுந்து தனது அறைக்குச் சென்று விட்டார்.

ஃபோட்டோ கவரை கையில் வைத்திருந்த தன் தம்பியை முறைத்து பார்த்த செழியனோ, "டேய்... நீ எப்பவுமே என் சைட் தானே டா. இப்போ ஏன் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி அவங்க பக்கமா கோல் போட்டுட்டு இருக்க. என்ன விஷயம் தம்பி?" என்று முகத்தில் சந்தேக பாவனை மேலோங்க புருவங்கள் உயர்த்தி கேட்டவனிடம்,

"அதெல்லாம் நான் யாருக்கும் கோல் போடல. உனக்கும் வயசாகுதுல்ல! அதான் அண்ணணுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க இந்தத் தம்பி ஆசைப்படுறேன்" என்றான் எங்கோ பார்த்தபடி.

"நம்பிட்டேன்!" என்று சட்டென அவனுக்கு செழியன் பதிலளிக்க, இனியனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

"அப்புறம்... சார் எத்தனை வருஷமா லவ் பண்ணுறீங்க?" என்று செழியன் கேட்க, அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவன், "எப்படிண்ணா கண்டுபிடிச்ச?" என்று கேட்டான்.

"அதான் உன் முகத்துலேயே எழுதி ஒட்டியிருக்கே. இதை தனியா கண்டுப்பிடிக்க வேற ஸ்பெஷலா சிஐடி வரணுமாக்கும். உன் அண்ணன் போலீஸ் டா! ஞாபகம் இருக்குல்ல..." என்று லேசாக தனது மீசையை முறுக்கி விட்டபடி செழியன் கூற,

"அப்போ நான் லவ் பண்ணுற விஷயத்தை கண்டுபிடிக்க தான் நீ கஷ்டப்பட்டு படிச்சு போலீஸ் வேலைக்கு சேர்ந்தியா. இத்தனை வருஷமா இது தெரியாம போச்சு பாரேன்" என்றான் இனியன்.

அதை கேட்ட செழியனோ அவனை முறைத்தபடி, "வளவளன்னு பேசாம விஷயத்துக்கு வா இனியன். யாரை லவ் பண்ணுற? எத்தனை வருஷ லவ்?" என்று கேட்க, சுற்றும் முற்றும் பார்த்தவன், 

"இங்கே வேண்டாம். மொட்டை மாடிக்கு போய் பேசலாம்" என்றான் அவன்.

மொட்டை மாடிக்குச் சென்றதும், "ம்ம்ம்... சொல்லுடா. யாரு அந்தப் பொண்ணு?" என்று செழியன் கேட்க,

"என் கூட காலேஜ்ல படிச்ச பொண்ணு தான் அண்ணா. ஆனா, எனக்கு ஜூனியர். இரண்டு பேரும் அஞ்சு வருஷமா லவ் பண்ணுறோம்" என்றான் இனியன்.

"அஞ்சு வருஷமா? அப்பா உன்னை காலேஜூக்குப் படிக்க சொல்லி அனுப்புனா நீ லவ் பண்ணி சுத்திட்டு இருந்திருக்க..." என்று அவன் சொன்னதைக் கேட்டதும்,

"உனக்கு ஏன் கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லைன்னு இப்போ தானே தெரியுது! நீ பேசாம போலீஸ் ஆனதுக்கு பதிலா சாமியாரா போயிருக்கலாம்" என்றான் இனியன்.

அவனை செழியன் முறைக்கவும், "சரி சரி... முறைக்காத. ஒழுங்கா இந்தப் பொண்ணுக்கு ஓகே சொல்லிட்டு என் ரூட்டை க்ளியர் பண்ணி விடு!" என்றபடி தனது கையில் இருந்த காகித உறையை தன் அண்ணனிடம் நீட்டினான்.

அதை குழப்பத்துடன் வாங்கிய செழியனோ, "நீ லவ் பண்ணுறேன்னா... வீட்ல பேசி அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே!" என்றான்.

"அதெப்படி? எனக்குப் பெரியவன் நீ ஒருத்தன் இருக்குறப்போ... நான் எப்படி முதல்ல கல்யாணம் பண்ணுறது. என் மனசு அதுக்கு இடம் கொடுக்கலண்ணா" என்று வராத கண்ணீரை துடைத்தபடி உணர்ச்சி பொங்க பேசினான் இனியன்.

"டேய்! டேய்! பத்து பைசாவுக்கு தேறாத உன்னோட ஆக்டிங்கை வேற எங்கேயாவது வச்சுக்கோ" என்றவன்,

"நான் வேணும்னா அப்பா அம்மாகிட்ட உன் லவ்வை பத்தி பேசட்டுமா?" என்றான்.

"ஐய்யயோ... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ முதல்ல இந்த பொண்ணை கல்யாணம் பண்ணுறதுக்கு சரின்னு மட்டும் சொல்லு. அது போதும்! மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கறேன்" என்றான் இனியன்.

அதன் பிறகு செழியனாலும் மறுக்க முடியாமல் போக, அந்த காகித உறையைப் பிரித்து அதிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தான்.

அந்தப் புகைப்படத்தை பார்த்த உடனே அவனையும் அறியாமல் ஒரு புன்னகை அரண் செழியனின் இதழோரம் படர்ந்தது.

சிம்பிளாக ஒரு பட்டுப்புடவை கட்டி மிதமான ஒப்பனை மற்றும் அலங்காரத்துடன் நின்றிருந்த அந்தப் பெண் ஏனோ பார்த்த மாத்திரத்தில் அவனிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள்.

புகைப்படத்தை பார்த்தபடியே அவன் அமைதியாக நின்றிருக்க, செழியனின் மௌனத்திற்கானஅர்த்தம் புரியாத இனியனோ, "என்னண்ணா! உனக்கு இந்தப் பொண்ணை பிடிச்சிருக்கு தானே?" என்று குழப்பத்துடன் கேட்க, 

அதற்கு பதில் சொல்லாமல், "பொண்ணோட பெயர் என்ன இனியன்?" என்று கேட்டான்.

"அந்த ஃபோட்டோ பின்னாடி போட்டிருக்குமேண்ணா" என்று அவன் பதிலளிக்கவும், புகைப்படத்தை திருப்பி பார்த்தான் செழியன்.

அதில், 'பார்கவி தேவி' என்கிற பெயர் எழுதப்பட்டிருக்க, அதை ஒருமுறை சத்தம் வராமல் உச்சரித்து பார்த்தவன், "பெயர் ரொம்ப பழசா இருக்கே!" என்றான்.

"பெயர் பழசா இருந்தா என்ன? உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா இல்லையா அதை சொல்லு முதல்ல..." என்றான்.

"ஆமா... நீ ஏன் திரும்ப திரும்ப இந்தப் பொண்ணை பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டே இருக்க? இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி எனக்கு தோணுதே!" என்றான் செழியன் புருவங்கள் இடுங்க.

"ஹா... அ..அது... வந்து . இந்த பார்கவி தேவி வேற யாருமில்ல. என் லவ்வரோட சொந்த அக்கா தான்!" என்று இனியன் கூறவும்,

"வாட்?" என்று அதிர்ச்சியில் வாயைப் பிளந்தான் அரண் செழியன்.

"என்னடா சொல்லுற? உன் லவ்வரோட அக்காவா!" என்று அதே அதிர்ச்சி மாறாமல் கேட்டவனிடம்,

"ஆமா... இந்த பார்கவியும் உன்னை மாதிரியே கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டு இருக்கற ஒரு கேஸ் தான். அவங்களுக்கு கல்யாணம் ஆனா தான் என் லவ்வரோட ரூட்டும் க்ளியர் ஆகும்... சோ..." என்று இனியன் இழுக்க,

"சோ வாட்? அந்த கேசசையும் இந்த கேசையும் ஒண்ணா கோர்த்து விட்டா உன் கேசு க்ளோஸ் ஆகும். அதானே?" என்றவனிடம்,

"அதே தாண்ணா!" என்றான் இனியன்.

"டேய்! இதெல்லாம் ரொம்ப அநியாயம் டா. உங்க போதைக்கு எங்க இரண்டு பேரையும் ஊறுகாவாக்க பார்க்குறீங்களா?" என்றான் செழியன்.

பின்னர் ஏதோ யோசித்தவன், "ஆமா... உன் லவ்வர் பெயர் என்ன சொன்ன?" என்று கேட்க,

"இன்னும் சொல்லலைண்ணா. அவ பேரு ஷாரதா தேவி!" என்றான்.

"சாரதா தேவி... இது அவ அக்கா பெயரை விட அதர பழசா இருக்கே டா" என்றவனிடம்,

"சா.. இல்லண்ணா. ஷா...ஆஆஆ... ஸ்டைலா இருக்கட்டுமேன்னு ஷாரதான்னு மாத்தி வச்சுகிட்டா" என்று இனியன் கூற,

"ஆண்டவா!" என்று தலையில் அடித்துக் கொண்டான் செழியன்.

"டேய்... ஏற்கனவே ட்ராவல் பண்ணி களைச்சு போய் வந்திருக்கேன். டிசைன் டிசைனா பேசியே என்னை இன்னும் டயர்ட் ஆக்கி போட்டுடாத. நான் கீழே போறேன். இதுக்கு மேல நீ பேசுறதை கேட்டா என் பாடி தாங்காது!" என்றவன் விறுவிறுவென நடந்து கீழே சென்று விட்டான்.

அலுப்பு தீர குளித்து விட்டு வந்தவனுக்கு சூடாக இட்லி, சாம்பார், சட்னி மற்றும் வடை என்று வெரைட்டியாக காலை உணவை பரிமாறினார் ஆதிரை செல்வி.

அவனுடன் சேர்ந்து சண்முகநாதன் மற்றும் இனியனும் சேர்ந்து உணவருந்தினர்.

"அம்மா... நீங்களும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடுங்க!" என்று செழியன் கூற,

"எனக்கு கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்குப்பா! அதை முடிச்சுட்டு அப்புறமா சாப்பிடுறேன்" என்றார் அவர்.

"அதெல்லாம் முடியாது. நீங்களும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடணும்" என்றவன் ஆதிரையின் கரத்தைப் பற்றி அவரை தன் அருகே இருந்த நாற்காலியில் அமர வைத்து அவருக்கு தானே உணவு பரிமாறினான்.

"நாம இப்படி குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டு எத்தனை மாசம் ஆச்சு. இனிமே அடிக்கடி இதை ஃபாலோ பண்ணணும்" என்ற செழியன் தன் அன்னை சமைத்த உணவை ருசித்து உண்டான்.

இடையே, "ஊருக்கு எதுல வந்த செழியா?" என்று சண்முகநாதன் வினவ,

"பஸ்ல தான்பா. புல்லட்டையும் மற்ற பொருட்களையும் வண்டியில ஏத்தி திருநெல்வேலிக்கு அனுப்பிட்டேன்" என்று பதிலளித்தான் செழியன்.

"உன் வேலையில சின்சியரா இருந்து ப்ரமோஷன் வாங்கி... இப்போ இன்ஸ்பெக்டரா பதவி ஏற்க போற. உன் தம்பின்னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்குண்ணா!" என்று கூறிய இனியனைப் பார்த்து புன்னகைததான் அவன்.

"எப்போண்ணா டியூட்டி ஜாயின் பண்ணணும்?" என்றவனிடம்,

"அடுத்த வாரம் டா" என்று செழியன் பதிலளிக்க, அதை கேட்ட ஆதிரை தன் மனதிற்குள் வேறு கணக்கு போட்டார்.

செழியன் உணவருந்திக் கொண்டிருக்க, அவன் அறியா வண்ணம் இனியனிடம், 'உன் அண்ணன்கிட்ட பேசுனியா?' என்று செய்கையால் வினவினார்.

அதற்கு அவனும் ஆமாம் என்று தலையசைத்து பதிலளிக்க, தலை நிமிர்த்தாமலேயே, "எது கேட்கணும்னாலும் என்கிட்ட டைரக்டா கேட்கலாமே ம்மா" என்றான் செழியன்.

அவன் சட்டென கேட்கவும் ஜெர்க்கான ஆதிரை, "இல்லப்பா... அது..." என்று சமாளிக்க,

அவரை நிமிர்ந்து பார்ததவன், "நீங்க ஆசைப்பட்ட மாதிரி நாளைக்கே பொண்ணு பார்த்துடலாம்மா" என்று செழியன் சொல்லவும், ஆதிரைக்கு முகம் கொள்ளா புன்னகை.

சண்முகநாதனும், இனியனும் கூட மகிழ்ச்சியில் புன்னகைத்தனர்.

"ஆனா, வழக்கமா பொண்ணோட வீட்டுக்கு போய் காஃபி வடை எல்லாம் சாப்பிடுற ஃபார்மாலிடீஸ் வேண்டாம். எங்கேயாவது பொது இடத்துல வச்சு கேஷூவலா பார்த்து பேசிக்கலாம்" என்று செழியன் கூற,

"அதெப்படி சரியா வரும்பா. என்ன இருந்தாலும் சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்குல்ல. பொண்ணு வீட்ல இதை எப்படி ஒத்துப்பாங்க?" என்றார் ஆதிரை.

ஒரு சில நொடிகள் யோசித்த செழியன், "இந்த சம்பந்தத்தை பத்தி உங்ககிட்ட சொன்னது யாரு?" என்று தன் அன்னையிடம் கேட்க,

"நம்ம இனியன் தான். யாரோ அவனுக்குத் தெரிஞ்ச ப்ரெண்டோட அக்கான்னு சொன்னான்" என்று பதிலளித்தார் அவர்.

"அப்படின்னா... பொண்ணு வீட்ல பேசி இனியனே இதை ஒத்துக்க வைப்பான்!" என்றபடி அவனைப் பார்த்தவன்,

"என்ன இனியன்? நான் சொன்ன மாதிரியே செஞ்சுடுவேல்ல!" என்றான் உள்ளர்த்தம் பொதிந்த பார்வையுடன்.

"ஆங்... அது... சரிண்ணா. நான் பார்த்துக்குறேன்!" என்று அவன் பதிலளிக்க,

"தட்ஸ் குட்!" என்றபடி எழுந்து கை கழுவ சென்று விட்டான்.

அவன் சென்றதும், "என்னடா இவன் இப்படி சொல்லிட்டு போறான். பொண்ணு வீட்டுக்காரங்க இதுக்கெல்லாம் ஒத்துப்பாங்களா?" என்று ஆதிரை கேட்க,

"செல்வி... நம்ம செழியன் பொண்ணு பார்க்க சம்மதிச்சு இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிய விஷயம். நீ பாட்டுக்கு எதையாவது தேவையில்லாம பேசி காரியத்தை கெடுத்துடாத" என்றார் அவரது கணவர்.

"க்கும்... நான் வாயை திறந்துட்டா போதும். உடனே உப்பு பத்தல, புளி அதிகம்னு குறை சொல்ல வந்துடுவீங்களே!" என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார் ஆதிரை.

அதைக் கண்டதும், "உங்க டாம் அன்ட்  ஜெர்ரி சண்டை எப்போ தான்பா முடியும்?" என்று இனியன் கேட்க,

சத்தமாக சிரித்தவர், "இதுக்கு பேர் தான்டா ஊடல். காதல் வாழ்க்கையில இதெல்லாம் இருந்தா தான் மகனே ஒரு கிக்கு. நீயும் இது பற்றி எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோ. ஃபியூச்சர்ல யூஸ் ஆகும்" என்றுவிட்டு அவரும் எழுந்து செல்ல, இனியன் வாயடைத்து போய் அமர்ந்திருந்தான்.

"ஹ்ம்ம்... அஞ்சு வருஷமா காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்க நான் ஒருத்தன் நாய் படாத பாடுபடுறேன். ஆனா, இந்த ஓல்ட் மேன்... இந்த வயசுலயும் காதல் ஊடல்னு இருபது வயசு இளசாட்டம் டயலாக் விட்டுட்டு போறாரு. ஆண்டவா... இவிங்களுக்கு மத்தியில போராடி நான் எப்படி என் காதலை கரை சேர்க்கறது?" என்று வாய்விட்டே புலம்பியபடி அமர்ந்திருந்தான்.

பின்னர் தனது அண்ணன் சொன்னதை யோசனை செய்து பார்த்தவன், உண்டு முடித்துவிட்டு தனது காதலியின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தான்.

மறுபுறம் முழுதாக ஒரு ரிங் போய் கட்டாகவும், இரண்டாவது முறை முயன்ற பொழுது அழைப்பை ஏற்றாள் அவள்.

"ஹலோ பேபி..." என்று இனியன் பேச, மறுபுறம் மௌனமே நிலவியது.

"ஹலோ... பேபி லைன்ல இருக்கியா?  நான் பேசுறது கேட்குதா!" என்று மீண்டும் அவன் கேட்க, இம்முறையும் மௌனம் மட்டுமே.

தன் மேல் ஏதோ கோபமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன், "சாரதா.." என்று தான் கூறினான்; படபட பட்டாசாக பொரிந்து தள்ளி விட்டாள்.

"எத்தனை தடவை சொல்றது இனியன்... என் பேரு சாரதா இல்ல, ஷாரதான்னு..." கோபமாக கூறிவிட்டு அவள் மூச்சு வாங்கவும்,

"சரி சரி... சாரி! மை டியர் ஷாரதா பேபி... எதுக்காக என் மேல கோபமா இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றான் இனியன்.

"ஏன்! நான் எதுக்காக கோபமா இருக்கேன்னு உனக்கு தெரியாதா?" என்றவள் தொடர்ந்து,

"சம்பந்தம் முடிவு பண்ணுறேன்னு எங்க அக்கா ஃபோட்டோவை நீ வாங்கிட்டு போய் எத்தனை நாளாச்சு! இப்போ வரைக்கும் பாசிடிவா ஏதாவது பதில் சொன்னியா?" என்றாள் சாரதா... மன்னிக்கவும், ஷாரதா.

இனியனோ, "இப்போ நான் எதுக்காக உனக்கு ஃபோன் பண்ணேன்னு நினைக்கிற?" என்று கூறவும், 

"அப்படின்னா... உங்க அண்ணன் சம்மதிச்சுட்டாரா?" என்று கேட்டாள் அவள், முகம் கொள்ளா புன்னகையுடன்.

"ஆமா... உங்க அக்காவை பொண்ணு பார்க்க வர்றதுக்கு செழியன் அண்ணன் சம்மதம் சொல்லிட்டான்!" என்றவனிடம்,

"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இனியன்!" என்று ஷாரதா பதிலளிக்க,

"உங்க அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இத்தனை மெனக்கிடுறியே ஷாரு... உன்னை மாதிரி ஒரு தங்கச்சி கிடைக்க அவங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்" என்றான் உணர்ச்சி பொங்க.

மறுகணமே அவள், "மண்ணாங்கட்டி!" என்று பதிலளிக்கவும், உதட்டோரம் ஒட்டியிருந்த சிரிப்பு மறைந்து ஆந்தை போல விழித்தான் அவன்.

"பல வருஷமாவே காதல், கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லி எனக்கு ரொம்ப இடைஞ்சலா இருக்கா. அதான் இவளை உன் அண்ணன் கிட்ட தள்ளி விட்டுட்டு, நான் என் ரூட்டை க்ளியர் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்"

"இது புரியாம நீ வேற... கொடுத்து வச்சிருக்கணும், பணத்தை பீரோவுல எடுத்து வச்சிருக்கணும்னு நான்சென்ஸ் மாதிரி இமோஷனலா டயலாக் எல்லாம் விட்டுட்டு இருக்க!" என்று ஷாரதா பேசியதைக் கேட்டு ஒரு நொடி வாயடைத்து தான் போனான் அவன்.

செழியன் - இனியனைப் போல் அல்லாமல், பார்கவியும் ஷாரதாவும் இரு வேறு துருவங்கள்.

இருவருக்கும் ஒன்றரை ஆண்டு வயது வித்தியாசம் தான். அதனாலேயே, எல்லா விஷயங்களிலும் எலியும் பூனையுமாகத் தான் இருப்பார்கள்.

பார்கவி ரஷ்யா என்றால், ஷாரதா யுக்ரைன்!

அவர்களது வீடு நித்தமும் இருவரது சண்டையிலும் சலசலப்பிலும் போர்களமாகத் தான் காட்சியளிக்கும்.

இவர்களுக்கு நடுவில் இருவரின் பெற்றோரும் தான், பாவமாக மாட்டிக் கொண்டு முழிப்பார்கள்.

பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், திருமணத்திற்குப் பிறகு அவர்களைப் பிரிய வேண்டிய சூழலை நினைத்து மிகவும் மனம் வருந்துவார்கள்.

ஆனால், இவர்களின் பெற்றோரை பொறுத்த வரை, எப்போதடா தங்கள் பெண்கள் திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்கு செல்வார்கள் என்று நினைக்கும் அளவிற்கு தினமும் அவர்களை ஆட்டி படைத்து விடுவார்கள்.

இதில் பெரிய ஜோக் என்னவென்றால், தான் பார்த்து கொடுக்கும் சம்பந்தத்திற்கு தன் அக்கா நிச்சயம் சம்மதிப்பாள் என்று ஷாரதா முழுமையாக நம்புவது தான்.

அரண் செழியன் உன்னை பெண் பார்க்க வருகிறான், என்று ஷாரதா கூறும் பொழுது, பார்கவியின் பதில் என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

அரணாய் வருவான்...

திங்கள் அடுத்த எபியுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன்.

முதல் அத்தியாயத்திற்கு நீங்கள் அனைவரும் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி மக்களே!♥

பிரியமுடன்,

சௌஜன்யா...

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா - Epi 12

அரணாய் நீ வா - Epi 1

அரணாய் நீ வா - Epi 11