Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2 அத்தியாயம் – 11 “ கார்த்திகேயனா ? உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா !” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட அரண் செழியனிடம் , “ ஆமா சார் ! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும் . என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான் ” என்றாள் சுபத்ரா . அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் , “ சரி ! சொல்லு சுபத்ரா . உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்தது ?” என்று செழியன் கேட்க , அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள் . அன்று சுபத்ராவிற்கு மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க , தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் . ரிஷியின் வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் . அந்த வீட்டை அவள் கடந்து சென்ற நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண் . முகம் முழுக்க வியர்த்துப் போயிருக்க , படபடப்பாகக் காணப்பட்டாள் அவள் . சுபத்ரா வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து , வண்டியை நிறுத்தும்படி கூறினாள் . அந்தப் பெண்ணின் முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும் , யோசனையுடன் சடன...

அரணாய் நீ வா - Epi 8

 அரணாய் நீ வா!


 

அத்தியாயம் – 8

செழியன் அவளை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியும், ஆச்சர்யமும் கலந்து பார்கவியையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவளோ அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை தாழ்த்திக் கொண்டாள்.

அதன் பிறகு, அவன் வாகன ஓட்டுனரிடம் சென்று தனது வழக்கமான விசாரணையை நடத்தி முடித்தான்.

பின்னர், திரும்பி மீண்டும் பார்கவியைப் பார்த்தவன், அப்பொழுது தான் அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த ஷாரதாவைப் பார்த்தான்.

அவளருகே சென்று, “ஓஹ்… இரண்டு பேரும் ஒண்ணா தான் வந்திருக்கீங்களா?” என்றவனிடம்,

“ஆமா மாமா! நாங்க டூர் வந்த விஷயத்தைப் பத்தி அக்கா உங்ககிட்ட எதுவும் சொல்லலையா?” என்று ஷாரதா கேட்கவும்,

“ஏய்! என்னடி நீ? அவரைப் போய் மாமா சோமான்னு சொல்லிட்டு இருக்க!” என்று தன் தங்கையின் காதோரம் கிசுகிசுத்தாள் பார்கவி.

ஆனால், அவள் பேசியதை உதாசீனம் செய்த ஷாரதாவோ, அரண் செழியனையே கேள்வியாக நோக்கவும்,

“என்கிட்ட இதைப் பற்றி எதுவும் உங்க அக்கா சொல்லலையே!” என்றான் பார்கவியையே கூர்ந்து பார்த்தபடி.

“ஓஹோ…” என்ற ஷாரதா,

“இரண்டு நாள் டூர் தான் மாமா. அக்காவோட ப்ரெண்ட்ஸ் அன்ட் ஃபேமிலி டூர் ப்ளான் பண்ணாங்க. நான் அவங்க கூட ஜாயின் பண்ணிகிட்டேன்” என்றாள்.

“ஓஹ்… சரி!” என்றவன், 

“எங்கே தங்கப் போறீங்க?” என்று அவன் கேட்க,

“அது… ஏதோ களக்காடு பக்கத்துலன்னு சொன்னாங்க!” என்றவள்,

“ரம்யா அக்கா… நாம எங்கே தங்கப் போறோம்?” என்று பார்கவியின் தோழியிடம் கேட்க,

“களக்காடு பக்கத்துல ஒரு ஹோம் ஸ்டே ஏற்பாடு பண்ணியிருக்கோம்!” என்றாள் ரம்யா.

உடனே செழியன், “தலை அணையில குளிக்க வந்தீங்களா?” என்று கேட்க, ரம்யாவும் ஆமாம் என்று தலையசைத்தாள்.

“ஓகே… ஹேவ் ஃபன்!” என்றவன் இம்முறை பார்கவியைப் பார்க்காமல், அந்த வாகனத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்று விட்டான்.

தனது போலீஸ் வாகனத்தில் சாய்ந்து நின்றபடி அங்கிருந்த ஒரு கான்ஸ்டபிளிடம் செழியன் பேசிக் கொண்டிருக்க, அவனையே ஜன்னல் வழியாகப் பார்த்தாள் பார்கவி.

அவளது வேன் அங்கிருந்து நகர்ந்த போதிலும், அவளை அவன் பார்க்கவே இல்லை.

இதைக் கண்ட பார்கவிக்கு தான் ஏனோ மனதில் சின்ன ஏமாற்றம் எழுந்தது.

அவர்களது டெம்போ ட்ராவலர் அங்கிருந்து நகர்ந்த பிறகே, அந்த வாகனத்தின் மீது பார்வை பதித்தான் செழியன்.

அவனுக்கோ, தான் பணிபுரியும் ஊருக்கு சுற்றுலா வருகிறாள்; ஆனால், தன்னிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்கிற கோபம்!

இருந்தாலும் பணிக்கு நடுவில் தனது சொந்த விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தவன், செல்வனின் கொலை வழக்கில் தனது முழு கவனத்தையும் செலுத்தினான்.

பார்கவி சென்ற வாகனமோ அவளது தோழியரின் சத்தத்தில் அல்லோலஹல்லோல பட்டது.

“ஹேய் பாரூ! நம்ம ஷாரதா என்ன அந்த இன்ஸ்பெக்டரை மாமான்னு கூப்பிடுறா? அவரு என்ன உங்க சொந்தக்காரரா?” என்று மல்லிகா கேட்க, அவளது முகத்தைப் பார்க்காமல்,

“இவ ஏதோ லூசு மாதிரி உளறினா... நீங்க வேற ஏன்டி அதையே புடிச்சுட்டு நிக்குறீங்க?” என்றாள் பார்கவி.

“யாரு… நான் லூசா?” என்ற ஷாரதா அவளை ஒரு நொடி முறைத்தாள்.

பின்பு எழுந்து நின்று, “எல்லாரும் கேட்டுக்கோங்க… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம வண்டியில ஏறுன போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியனைத் தான் எங்க அக்கா கல்யாணம் பண்ணிக்கப் போறா. நான் சொல்றது சத்தியமான உண்மை!” என்று சத்தமாகக் கூறவும்,

“ஏய் நிஜமாவா?” என்று மல்லிகா புன்னகைக்க,

“பார்த்தீங்களாடி! கல்யாணம் முடிவான விஷயத்தைக் கூட நம்மகிட்ட சொல்லாம அமுக்குணி மாதிரி இருந்திருக்கா!” என்றாள் ரம்யா.

“எது எப்படியோ… கடைசியில நம்ம சிங்கிள் பாரூ மிங்கில் ஆயாச்சு. அப்புறம் என்ன? இன்னைக்கு நைட்டே பார்ட்டி கொண்டாடிரலாம்” என்றாள் அஞ்சலி.

அதைக் கேட்ட அனைவரும், “ஹே….!” என்று கோரசாகக் கத்தவும், அந்த வேனில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களது குழந்தைகள் உறக்கம் கலைந்து எழுந்து அழ ஆரம்பிக்க, அதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் பார்கவி. 

கடந்த நான்கு நாட்களாக, கான்ட்ராக்டர் செல்வன் கொலை வழக்கில், கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக, அரண் செழியனும் அவனது குழுவும் எடுத்த முயற்சிகள் எதுவும் பெரிதாக அவர்களுக்கு பலனளிக்கவில்லை.

கொலைகாரனைப் பற்றிய சின்ன தகவல் கூட அவர்களுக்கு கிடைக்காமல் போகவும், செழியனுக்கு நம்பிக்கை சற்று குறைந்து விட்டது.

முன்தினம் தான் செல்வனின் மகனிடம் தனது விசாரணையை நடத்தியிருந்தான் அவன்.

கொலை நடந்த அன்றைய நிகழ்வை குறித்து செல்வனின் மகன் கொடுத்த தகவலும், துர்கா கொடுத்த வாக்குமூலமும் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் ஒத்துப் போக, துர்காவை தனது சந்தேகப் பட்டியலில் இருந்து தள்ளி வைத்திருந்தான் செழியன்.

வாகன சோதனையை முடித்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றவனை அவனது அறைக்குச் சென்று தனியாக சந்தித்துப் பேசினார் ஹெட் கான்ஸ்டபிள் சுயம்புலிங்கம்.

“சார்!” என்றபடி உள்ளே வந்தவரை ஏதோ யோசனையில் இருந்தவன் நிமிர்ந்து பார்த்து,

“வாங்க!” என்றான்.

“செல்வன் கேஸ் சம்பந்தமா ஏதாவது துப்பு கிடைச்சுதா சார்?” என்று கேட்டவரிடம், இல்லை என்று தலையசைத்தவன்,

“ஃபாரன்சிக் டிபார்ட்மென்ட் கொடுத்த ரிப்போர்ட்டை தவிர, வேற எந்தத் தகவலும் தெரியல. கொலையாளி பயன்படுத்தின மர்டர் வெப்பன் கிடைச்சிருந்தா கூட, நம்மளால சுலபமா அவனை நெருங்கியிருக்க முடியும்! ஆனா, அதுக்கும் வாய்ப்பில்லாமல் போச்சு!” என்றான் பெருமூச்சு விட்டபடி.

சில நொடிகள் எதையோ யோசித்த சுயம்புலிங்கம், “சார்… நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா, எப்படி சொல்றதுன்னு…” என்று தயங்க,

“என்ன விஷயம் ஏட்டய்யா? எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க!” என்றான் அரண் செழியன்.

“இல்ல… அது” என்று அவர் மீண்டும் இழுக்க,

“செல்வன் கேஸ் சம்பந்தமா உங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. அப்படித் தானே!” என்று கேட்டான் அவரை கூர்ந்து பார்த்தபடி.

அவரும் அதற்கு ஆமாம் என்று தலையசைக்க, “சொல்லுங்க! என்ன விஷயம்?” என்றான்.

செழியனுக்கு அருகில் சற்று நெருங்கி வந்தவரோ, “இந்த ஊருல இருக்கற நம்மளோட இன்ஃபார்மர் ஒருத்தன் கொடுத்த தகவல்படி, கான்ட்ராக்டர் செல்வனை யாரோ திட்டம் போட்டு தான் கொலை பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்று கூற,

அதற்கு ஆமோதிப்பாகத் தலையசைத்த செழியன், “எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே அப்படி தான் தோணுது. கூலிப்படை ஆளை அனுப்பி, அவரை யாரோ கொலை செஞ்சிருக்கணும். அன்னைக்கு செல்வன் வீட்டுக்கு வந்தனுக்கு திருட்டு தான் மோட்டிவ்னா அந்த வீட்டுல இருந்த பணம், நகைன்னு மொத்தத்தையும் அவன் திருடிட்டு போயிருக்கணும்!”

“ஆனா, அவன் அதை பண்ணல. சும்மா திருட்டு மாதிரி ஜோடிக்கறதுக்காக துர்கா போட்டிருந்த நகையை மட்டும் கழற்றி வாங்கியிருக்கான்”

“அது மட்டுமில்லாம, செல்வனை கொலை செஞ்சவன், அந்தக் கொலைக்கு சாட்சியா இருந்த துர்காவை உயிரோட விடுறதுக்கான காரணம் என்ன? அவங்களையும் சேர்த்து கொலை செஞ்சிருந்தா சாட்சியே இருந்திருக்காதே!” என்றபடி தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து சுயம்புவை பார்த்தான் செழியன்.

“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரிதான் சார்! கொலையாளி எதுக்காக செல்வனை மட்டும் கொலை பண்ணிட்டு, துர்காவை உயிரோட விட்டுட்டு போகணும்?” என்று சுயம்பு கேட்க,

“ஏன்னா… இது திட்டம் போட்டு செய்யப்பட்ட கொலை. கொலை செஞ்சவனுக்கும் செல்வனுக்கும் பெர்சனலா எந்தப் பகையும் கிடையாது. அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை, செல்வனை கொலை செய்யுறது மட்டும் தான். அதனால தான் அவன் துர்காவை கொலை செய்யாம உயிரோட விட்டிருக்கான்” என்றான் செழியன், ஆணித்தரமாக.

“டாக்டர் கொடுத்த அட்டாப்சி ரிப்போர்ட்ல, கழுத்து நரம்பு அறுபட்டதால தான் செல்வனோட உயிர் போனதா இருக்கு. அதுவும், கொலை செஞ்சு பழக்கமான ஒரு கை தேர்ந்த புரொஃபஷனல் கில்லரால மட்டும் தான் இந்த மாதிரி ஒரு கொலையை செய்ய முடியும்னு டாக்டர் என்கிட்ட சொன்னாரு!” என்றான் செழியன்.

அதைக் கேட்ட சுயம்புலிங்கம், “ஆமா சார்! இந்தக் கொலையாளி, கொலை செய்யுறதை தொழிலா வச்சிருக்கற ஒரு ஆள் தான்!” என்று கூறவும்,

புருவம் சுருக்கிய செழியன், “அப்படின்னா… கில்லர் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா ஏட்டய்யா!” என்றான்.

“இல்ல சார்… கொலைகாரன் யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா, இது பழி வாங்கறதுக்காக செய்யப்பட்ட கொலைன்னு மட்டும் எனக்கு ஓரளவுக்கு தெரியும்” என்றவரிடம், 


“எப்படி தெரியும்? உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்று செழியன் கேட்க, அவர் ஆம் என்று தலையசைத்தார்.

“யாரு?” என்று எதிர்பார்ப்பு கலந்த குரலுடன் செழியன் கேட்க,

“எதிர்கட்சி எம்.எல்.ஏ. ‘கோட்டை’ கனகரத்தினம்!” என்றார் சுயம்புலிங்கம்.

அதைக் கேட்டதும் தனது இருக்கையில் இருந்து சட்டென எழுந்தான் செழியன்.

“என்ன ஏட்டய்யா சொல்றீங்க. அவர் எதுக்காக இதை செய்யணும்? அவருக்கும் செல்வனுக்கும் இடையில அப்படி என்ன பகை?” என்று கேட்டவனிடம்,

“முழு விவரம் எனக்குத் தெரியல சார். ஆனா, ஏதோ நிலம் சம்பந்தமா இரண்டு பேருக்கும் நடுவுல சில வருஷமாவே தகறாரு இருந்ததா கேள்விப்பட்டேன். ஆனா, அது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்குத் தெரியல. ஒருவேளை அதனால கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம்னு எனக்கு தோணுது சார்” என்றார் அவர்.

“சாட்சி, ஆதாரம்னு எதுவும் இல்லாம அப்படி பொத்தாம் பொதுவா நம்மளால, எந்த முடிவுக்கும் வர முடியாது ஏட்டய்யா. அதுவும் எம்.எல்.ஏ ஊருக்குள்ள எவ்வளவு செல்வாக்கான ஆளு. அவரை  அடிப்படை ஆதாரம் இல்லாம இந்த கேசுக்குள்ள இழுக்க முடியாது” என்றான் செழியன்.

“நீங்க சொல்றதும் சரிதான் சார். கேசுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு எனக்குத் தெரிஞ்ச விவரங்களை உங்கிட்ட சொல்லிட்டேன். நான் போய் வேலையைப் பார்க்கறேன் சார்!” என்றவர் அங்கிருந்து செல்ல எத்தனித்தார்.

ஆனால், திடீரென ஏதோ நினைவு வந்தவராக, “நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே சார்!” என்றவரிடம்,

“ம்ம்ம்… சொல்லுங்க” என்றான் அரண் செழியன்.

“இந்தக் கேஸ் சம்பந்தமான முக்கியமான விஷயங்களை முடிஞ்சவரை ஜெகன் சாருக்குத் தெரியாம பார்த்துகோங்க” என்று அவர் கூற,

“ஏன்?” என்று புருவம் சுருங்கக் கேட்டான் செழியன்.

“இல்ல சார்… அது…” என்று தயங்கியவர்,

“என்னால டீட்டெயிலா உங்ககிட்ட எதுவும் இப்போ சொல்ல முடியாது சார்! ஆனா, கிட்டத்தட்ட உங்க அப்பா வயசுல இருக்கறதால, ஒரு அக்கறையில சொல்றேன். ஜெகன் சார்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கோங்க!” என்று கூறிய சுயம்புலிங்கம், அந்த அறையில் இருந்து வெளியேறினார்.

அவர் வந்து பேசிவிட்டு சென்ற பிறகு, செழியனுக்கு குழப்பம் மேலும் அதிகரித்தது.

ஏனோ, செல்வனின் இந்தக் கொலை வழக்கு அத்தனை சுலபத்தில் முடியப் போவதில்லை என்று அந்த நேரத்தில் அவனுக்கு ஆணித்தரமாகத் தோன்றியது!

அன்று மாலை அந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக, களக்காடு சுற்று வட்டாரத்தில் ரவுடியாக பெயர் வங்கியிருந்த சிலரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தான் செழியன்.

வரிசையாக ஒவ்வொருவரிடமும் பேசி, கொலை நடந்த அன்று அவர்கள் எங்கே இருந்தார்கள் என்கிற தகவலையும் சேமித்துக் கொண்டிருந்தான்.

கடைசியாக ஒருவனிடம் செழியன் விசாரணை நடத்திய போது, சுயம்புலிங்கம் அறைக்கு வந்தார்.

அவரை பார்த்தவனோ, “என்ன விஷயம் ஏட்டய்யா?” என்று கேட்க,

“சார்! உங்களைப் பார்க்க உங்க தம்பி வந்திருக்காரு!” என்றார் அவர்.

“என் தம்பியா? அவன் எதுக்காக இங்கே வந்தான்!” என்றபடி புருவம் சுருக்கியவன், 

“அவனை கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லுங்க!” என்றான்.

அவரும் சரியென்று பதில் கூறி சென்றுவிட, அரண் செழியன் தனது வேலையைத் தொடர்ந்தான்.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து விசாரணையை முடித்தவன், “ஏட்டய்யா!” என்று தனது அறையில் இருந்தபடி குரல் கொடுக்க, வெளி அறையில் அமர்ந்திருந்தவர்,

“உள்ளே போங்க தம்பி!” என்று இனியனிடம் கூறினார்.

அவனும் எழுந்து செழியனின் அறைக்கு வர, கால் மேல் கால் போட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் அவனை தலை நிமிர்த்தி பார்த்தபடி, “வாங்க சார்… உட்காருங்க!” என்றான்.

இனியனும் அவனுக்கு எதிர்புறமாக இருந்த இருக்கையில் அமர, “டீ, வடைன்னு ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்றான் செழியன்.

“அதெல்லாம் நான் இங்கே வந்தப்போவே வாங்கி கொடுத்துட்டாங்க. ஆனா, சும்மா சொல்லக் கூடாதுண்ணா! இன்ஸ்பெக்டரோட தம்பின்னு சொன்னதும் என்ன கவனிப்பு… என்ன மரியாதை…” என்றவன்,

“நீ குடுத்து வச்சன்டா இனியன்!” என்று தன்னை தானே பெருமை பேசிக் கொண்டான்.

“கொடுத்து வச்சதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் தம்பி! நீ எதுக்காக என்கிட்ட சொல்லாம கொள்ளாம இங்கே கிளம்பி வந்த? அதை முதல்ல சொல்லு!” என்று செழியன் கேட்க,

“அது… உன்னை ரொம்ப மிஸ் பண்ணேனா! அதான் உடனே கிளம்பி வந்துட்டேண்ணா” என்றான் அவன்.

மேஜையில் கை வைத்து இனியனை சற்று நெருங்கி வந்த செழியன், “சாரு… என்னை மிஸ் பண்ணீங்களா? இல்ல உங்க வருங்கால மிஸிசை மிஸ் பண்ணீங்களா?” என்று கூற குழப்பமடைந்தவனோ,

“வருங்கால மிஸிசா! யாருண்ணா அது?” என்று கேட்க,

“டேய்! டேய்! நடிக்காத டா. உன்னோட ஆருயிர் காதலி ஒரு பெரிய பட்டாளத்தோட இங்கே டூர் வந்திருக்கற விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும்!” என்றான் அரண் செழியன்.

அதைக் கேட்டு உதட்டை பிதுக்கிய இனியன், “ஓ… தெரிஞ்சுருச்சா?” என்றபடி,

“அட ஆமா! பார்கவி அண்ணி தான் உன்கிட்ட சொல்லியிருப்பாங்கல்ல. நான் மறந்தே போயிட்டேன்” என்றான்.

அதைக் கேட்டதும், ‘க்கும்… அவ எங்கே என்கிட்ட சொன்னா!’ என்று முணுமுணுத்த செழியன்,

“சரி! நீ நேரா மேட்டருக்கு வா! என்ன விஷயமா இங்கே வந்த?” என்றான்.

“ஏண்ணா… நான் இங்கே வரக் கூடாதா? உன்னை வந்து பார்க்கறதுக்கு உன் தம்பிக்கு உரிமை இல்லையா?” என்றவனிடம்,

“அதுக்கில்ல இனியன்! நான் இப்போ ஒரு முக்கியமான கேஸ்ல பிசியா இருக்கேன். இந்த நேரத்துல உன்னை என்னால சரியா கவனிக்க முடியாது. அதனால தான் கேட்டேன்” என்றவனிடம்,

“பரவாயில்லண்ணா… நீ உன் வேலையைப் பாரு. நான் வந்த வேலையை தனியாவே கவனிச்சுக்குறேன்” என்று உள்ளர்த்தம் பொதிந்து பேசினான் அவன்.

“வந்த வேலையா? அப்படின்னா… நான் நினைச்ச மாதிரி, நீ ஷாரதா கூட ஊர் சுத்த தான் மதுரையில இருந்து கிளம்பி வந்திருக்கியா?” என்று செழியன் புருவம் உயர்த்தி கேட்க, அவனோ ஆமாம் என்று தலையசைத்தான்.

“அடப்பாவி!” என்று வாயில் கை வைத்தவன்,

“வீட்ல என்னடா சொல்லிட்டு வந்த?” என்று கேட்க,

“வேற என்ன? உன்னை பார்க்க வர்றேன்னு தான் சொன்னேன்!” என்றான் இனியன்.

செழியனோ, “நீ இங்கே வந்துட்டா கடையை யாரு பார்த்துப்பா?” என்று வினவ,

“அதான் நம்ம பிரதாப் இருக்கான்ல. அவன் பார்த்துப்பான்” என்று தனது செல்ஃபோன் கடையில் வேலை செய்பவனைப் பற்றி கூறினான்.

“ஹ்ம்ம்… எல்லாரும் நல்லா ப்ளான் போட்டு தான்டா வந்திருக்கீங்க. கடைசியில நான் தான் ஒண்ணும் தெரியாத தத்தி மாதிரி முழிச்சுட்டு நிக்குறேன்!” என்றான் செழியன், பெருமூச்சு விட்டபடி.

பின்னர், “சரி இனியன்… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. உன் கூட ஒரு போலீசை துணைக்கு அனுப்புறேன். அவர் உன்னை நம்ம வீட்ல ட்ராப் பண்ணிடுவாரு. நான் வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துடறேன்!” என்றவன் தன் வீட்டு சாவியை இனியனிடம் கொடுத்தான்.

அதன் பிறகு அவன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட, செழியன் தனது வேலைகளில் மூழ்கினான்.

செல்வனின் கொலை வழக்கு சம்பந்தமான சில கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சட்டென ஒன்று தோன்றவும் சுயம்புலிங்கத்தை தனது அறைக்கு அழைத்தான்.


“சார்!” என்றபடி தன் முன்பு வந்து நின்றவரிடம்,

“கொலைகாரன் திருடிட்டு போன துர்கா நகைகளோட ஃபோட்டோ இருக்கற ஃபைலை கொஞ்சம் எடுத்துட்டு வாங்க!” என்று செழியன் கூற, சுயம்புவும் அவன் கேட்ட கோப்புகளை எடுத்து வந்தார்.

திருடப்பட்ட நகைகளுடைய புகைப்படத்தை தனது அலைபேசியில் படம் எடுத்துக் கொண்டவன், “கொலைகாரன் திருடிட்டு போன இந்த நகையை கண்டிப்பா ஒண்ணு அடகு வச்சிருப்பான்… இல்ல வித்திருப்பான்!” என்று கூற,

“நீங்க சொல்ற மாதிரி நடக்க நிறைய வாய்ப்பு இருக்கு சார்!” என்றார் சுயம்புலிங்கம்.

“கண்டிப்பா திருநெல்வேலி தாண்டி எங்கேயும் இந்த நகைகளை விற்க வாப்பில்லை. அதனால, இந்த ஃபோட்டோவை வச்சு எந்த நகைக் கடையில… இல்ல அடகு கடையில, இதை வித்திருப்பாங்கன்னு நாம செக் பண்ணணும்” என்று செழியன் கூற,

“கண்டிப்பா பண்ணிடலாம் சார். இப்போவே நம்ம சுற்று வட்டாரத்துல இருக்கற ஸ்டேஷனுக்கெல்லாம் இந்த ஃபோட்டோவை அனுப்பி விசாரிக்கச் சொல்லுறேன்!” என்றார் அவர்.

சுயம்புலிங்கம் அந்த வேலையை கவனிக்கச் செல்லவும், “ஒரு நிமிஷம்!” என்று கூறி அவரை நிறுத்திய செழியன்,

“இந்த விஷயம் ஜெகன் சாருக்கத் தெரிய வேண்டாம்!” என்றான்.

அவரோ, “சரிங்க சார்! இந்த மேட்டரை யாருக்கும் தெரியாம ரகசியமாவே டீல் பண்ணுறேன்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அரண் செழியன் அடிக்கடி தனது அலைபேசியில் தினசரி செய்திகளை பார்த்துக் கொண்டே இருப்பான்.

அப்படி அவன் பார்த்த பொழுது, திருநெல்வேலியில் செயல்படும் செய்திச் சேனல் ஒன்றில்,

‘கான்ட்ராக்டர் செல்வன் கொலை வழக்கு!

இதுவரை கொலையாளியை பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை!

மெத்தனம் காட்டுகிறதா காவல்துறை?

களக்காடு பகுதிகளில் கான்ட்ராக்டர் செல்வனின் ஆதரவாளர்கள் ஆத்திரம்!

அங்குள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் கலவரம் வெடிக்கும் அபாயம்!’ 

என்று அடுக்கடுக்கான செய்திகள் வந்து கொண்டிருக்க, அதைப் பார்த்த அரண் செழியன் பெருமூச்சு விட்டபடி தனது அலைபேசியை அணைத்தான்.

நேரம் மணி ஏழை நெருங்க, அன்றைய பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான்.

புல்லட் சத்தம் தடதடக்க, தனது வீட்டின் காம்பவுன்டிற்குள் நுழைந்தவன், வண்டியை நிறுத்தி சாவியை எடுத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்தான்.

முன் வாசல் கதவு சாத்தப்பட்டிருக்க, அழைப்பு மணியை ஒலித்து விட்டு, கதவு திறக்கப்படுவதற்காகக் காத்து நின்றான் செழியன்.

முழுதாக ஒரு நிமிடம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் போக, “இனியன்!” என்று குரல் கொடுத்தபடி, கதவை தட்டினான்.

ஆனால், கதவை அவன் தட்டுவதற்காக எத்தனித்த பொழுது சரியாக அதே நேரத்தில் கதவு திறக்கப்படவும், கதவை திறந்த பார்கவியின் நெற்றியில் எதிர்பாராமல் ‘டங்…’ என்று அவனது கையால் ஒரு அடி விழுந்தது.

அவளுக்கோ அடிபட்ட இடத்தில் வலியெடுக்க, “ஆஆஆ…” என்று முனங்கியபடி தனது நெற்றியில் கை வைத்தாள்.

பார்கவி வந்து கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்க்காத செழியனோ, அவளுக்கு அடிப்பட்டு விட்டது என்று தெரிந்ததும், பதறித் தான் போனான்.

“ஹேய்!” என்றபடியே பார்கவியிடம் விரைந்தவன், அவளது கரத்தை விலக்கி விட்டு உடனடியாக தனது கையால் அவளது நெற்றியில் அழுத்தமாகத் தேய்த்து விட்டான்.

உடனே, “ஸ்ஸ்ஸ்…” என்று வலியில் அவள் முகத்தை சுருக்கவும், 

“ரொம்ப வலிக்குதா பாரூ?” என்றவன், இதழ் குவித்து அவளது நெற்றியில் ஊதிவிட்டு, மீண்டும் மென்மையாக… மிக மிக மென்மையாக… அவளது நெற்றியில் தன் கரம் கொண்டு தேய்த்து விட்டான்.

அவனது ஸ்பரிசம் அவளை ஏதோ செய்ய, செழியனின் முகத்தையே விழி விலக்காமல் பார்த்து நின்றாள் பார்கவி.

அரணாய் வருவான்…

கதை வாசித்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்!

மீண்டும் திங்கள் சந்திப்போம்♥

பிரியமுடன்,

சௌஜன்யா...

Comments

  1. Chezhiyan thavira yellam oru plan la thaan suththuraanga pola....

    ReplyDelete
  2. Haha 😄 🤣 😂

    ReplyDelete

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 9

அரணாய் நீ வா (பாகம் 2) - Epi 7