Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2 அத்தியாயம் – 11 “ கார்த்திகேயனா ? உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா !” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட அரண் செழியனிடம் , “ ஆமா சார் ! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும் . என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான் ” என்றாள் சுபத்ரா . அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் , “ சரி ! சொல்லு சுபத்ரா . உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்தது ?” என்று செழியன் கேட்க , அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள் . அன்று சுபத்ராவிற்கு மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க , தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் . ரிஷியின் வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் . அந்த வீட்டை அவள் கடந்து சென்ற நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண் . முகம் முழுக்க வியர்த்துப் போயிருக்க , படபடப்பாகக் காணப்பட்டாள் அவள் . சுபத்ரா வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து , வண்டியை நிறுத்தும்படி கூறினாள் . அந்தப் பெண்ணின் முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும் , யோசனையுடன் சடன...

அரணாய் நீ வா - Epi 5

 அரணாய் நீ வா!


 

அத்தியாயம் – 5

அரண் செழியன் சொன்னதைக் கேட்டவள், அதிர்ச்சியில் இருந்து வெளியே வர, முழுதாக ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டாள்.

தன் தங்கை எதற்காக தனக்கு திருமணம் நடத்தி வைக்க இத்தனை ஆர்வமாக இருக்கிறாள் என்பது இப்பொழுது பார்கவிக்கு நன்றாகவே புரிந்தது.

அவள் யோசனையுடனே நிற்பதைக் கண்டவன், “நம்ம இரண்டு பேரும் எப்படி இந்த இடத்துல நிக்குறோம்னு இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“அப்படின்னா… அவங்க இரண்டு பேருக்கும் ரூட் க்ளியர் ஆகணும்னு தான் நம்மளை ஒண்ணா கோர்த்து விட்டாங்களா?” என்று கேட்டவளிடம் ஆமாம் என்று தலையசைத்தவன்,

“அது மட்டுமில்ல! என்ன தான் அவங்க அஞ்சு வருஷமா காதலிச்சுட்டு வந்தாலும், கூடப் பிறந்தவங்களுக்கு கல்யாணம் ஆன பிறகு தான் அவங்க ஒண்ணா வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறாங்க!” என்றான்.

“சோ… உங்க தம்பிக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகணுங்கறதுக்காக தான் நீங்க இந்த ஏற்பாடுக்கு ஓகே சொன்னீங்க. அப்படி தானே!” என்று பார்கவி தனது ஒற்றை புருவத்தை மேலேற்றி அவனிடம் கேட்கவும்,

“இல்லை” என்று உடனே மறுத்தவன்,

“உங்களை எனக்கு பிடிச்சிருக்குங்கற ஒரே காரணத்துக்காக தான், நான் இங்கே வந்தேன்” என்றான் தீர்க்கமான குரலில்.

அதை கேட்டவளுக்கு உள்ளுக்குள் மீண்டும் அதே பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு!

ஆனால், அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல், “ஓகே… இப்போ கடைசியா நீங்க என்ன தான் முடிவு செஞ்சிருக்கீங்க?” என்று கேட்டவளிடம்,

“நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே! எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. ஒருவேளை உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல விருப்பம் இல்லைன்னா… நீங்களே உங்க வீட்டில் பேசி இதை எல்லாம் நிறுத்துங்க. அப்படி இல்லை… என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நீங்க நினைச்சாலும், தாராளமா பண்ணிக்கலாம்” என்றவன், 

அவளது விழிகளை ஆழமாக ஊடுருவிப் பார்த்தபடி, “த சாய்ஸ் இஸ் யூர்ஸ்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்து வீட்டிற்குள் சென்று விட்டான்.

அவன் என்னவோ அசால்டாக பேசி சென்று விட்டான் தான். ஆனால், பார்கவி தான் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்துப் போய் நின்றாள்.

தன் திருமண விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக யோசித்து கொண்டிருந்தாள்.

‘இந்த ஷாரதாவாவது முன்னாடியே அவ லவ் மேட்டரை நம்மகிட்ட சொல்லி இருந்தா, ஏதாவது புத்திசாலித்தனமா யோசிச்சு முடிவு எடுத்திருக்கலாம். எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில என்னை கொண்டு வந்து நிறுத்தி வச்சிருக்கா!’ என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டபடி வீட்டிற்குள் சென்றாள்.

அங்கே அனைவரும் சகஜமாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, பார்கவியைக் கண்டதும் அமைதியாகி விட்டனர்.

“என்னம்மா… இரண்டு பேரும் மனசு விட்டு பேசுனீங்களா? ஹ்ம்ம்… எங்க காலத்துல எல்லாம் இந்த மாதிரி வாய்ப்பே கிடைக்கல” என்று மரகதம் ஆதங்கப்பட,

“என்ன பெரியம்மா! ஒருவேளை உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சிருந்தா நம்ம பெரியப்பாவை டீல்ல விட்டிருப்பீங்க போல?” என்று சட்டென இனியன் கேட்க, மற்றவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சும்மா இரு இனியன்” என்று ஆதிரை செல்வி தன் மகனை கண்டிக்க, அவன் அமைதியாகி விட்டான்.

பார்கவியோ தன்னருகே நின்றிருந்த ஷாரதாவை முறையோ முறை என்று முறைக்க, அதை ஓரக்கண்களால் கவனித்தவள்,

‘இவ ஏன் இப்போ குஷி பட ஜோதிகா மாதிரி நம்மளை இப்படி முறைக்கிறா?’ என்று உள்ளுக்குள் நினைத்தாளே தவிர, அந்தப் பக்கம் திரும்பவே இல்லை.

“சரி சரி… பொண்ணும் மாப்பிள்ளையும் பேசியாச்சு. அடுத்து ஆக வேண்டியதை பார்ப்போம்” என்று மரகதம் அவசரப்படுத்த, செழியன் நிமிர்ந்து பார்கவியைப் பார்த்தான்.

அவளோ எதுவும் பேச வாயெழாமல் அவனையே தான் பார்த்து நின்றாள்.

அதை புரிந்து கொண்டவன், “பொண்ணுக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்டுடுங்க!” என்றான்.

‘ஐயோ… இவன் ஏன் இப்போ நம்மளை கோர்த்து விடுறான்!’ என்று அவள் நினைக்க,

“நீ என்னம்மா சொல்லுற?” என்று தன் மகளிடம் கேட்டார் சுகுமார்.

பார்கவிக்கு பதட்டம் அதிகரிக்க, “இப்படி எல்லார் முன்னாடியும் வச்சு கேட்டா, பதில் சொல்ல கூச்சமா இருக்கும்ல. ஒண்ணும் பிரச்சனை இல்ல. இரண்டு நாள் டைம் எடுத்து உங்க பொண்ணுகிட்ட பேசிட்டு முடிவைச் சொல்லுங்க!” என்று சண்முகநாதன் கூறவும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

‘அப்பாடா தப்பிச்சோம்!’ என்று அவள் நினைத்த வேளையில்,

“ஒரு நிமிஷம்… உங்க எல்லார்கிட்டேயும் இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்!” என்றான் அரண் செழியன்.

அதைக் கேட்டதும் ஷாரதா என்னவென்று புருவம் உயர்த்தி இனியனிடம் கேட்க, அவனோ தனக்கு தெரியவில்லை என்று தோளை குலுக்கினான்.

“என்ன விஷயம்பா?” என்ற ஆதிரையிடம்,

“எல்லாம் நம்ம இனியனோட கல்யாண விஷயம்தான் மா!” என்று அவன் கூறவும், அதிர்ச்சியில் வாயைப் பிளந்தார் அவர்.

இனியனுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்க, ஷாரதாவிற்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.

“அண்ணா… என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவனது காதில் இனியன் ரகசியமாக வினவவும்,

“நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு இனியன்” என்றவன், சுகுமாரிடம் பேச ஆரம்பித்தான்.

“சார்… உங்க இரண்டாவது பொண்ணும் என் தம்பி இனியனும் அஞ்சு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் மனசார காதலிக்குறாங்க. கல்யாணம் செஞ்சுக்கவும் விருப்பப்படுறாங்க!” என்று அவர்களின் காதல் கதையை சபையில் ஒரே போடாக செழியன் போட்டு உடைக்க, அந்த வீடே மயான அமைதி ஆனது.

பார்கவிக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் என்பதால், ஷாரதாவிடம் ஏளனமாக ஒரு பார்வையை மட்டும் செலுத்திவிட்டு அமைதியாகி விட, நீலவேணி தான் அதிர்ந்து போய் அவளையே பார்த்து நின்றார்.

‘காலையில கூட அக்காவுக்காக பார்த்து பார்த்து செய்யுறாளேன்னு இவளை நினைச்சு பெருமை பட்டோமே! அப்படின்னா எல்லாம் திட்டம் போட்டு தான் செஞ்சாளா?’ என்று நினைத்து பெருமூச்சு விட்டபடி நின்றார்.

“நம்ம செழியன் சொல்லுறது உண்மையா செல்வி?” என்று மரகதம் கேட்க,

“எனக்கு எதுவுமே புரியலக்கா. தலை கிருகிருன்னு சுத்துது!” என்றபடி தனக்கு முன்னால் இருந்த டீபாயில் வைத்திருந்த நீரை எடுத்து அருந்தி பதட்டத்தை கட்டுப்படுத்த முயன்றார்.

பின்னர் தன் மகனிடம், “நீ சொல்லுறது உண்மையா செழியா?” என்று ஆதிரை கேட்க, அவன் ஆமாம் என்று தலையசைத்தான்.

அவர் அப்படியே திரும்பி இனியனைப் பார்க்க, அவனோ தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தான்.

சுகுமாரும், சண்முகநாதனும் கூட குழப்பத்துடனே அமைதியாக அமர்ந்திருக்க, செழியன் தான் அடுத்தகட்ட பேச்சை முன்னெடுத்தான்.

“நான் திடுதிப்புன்னு சொன்னதும் உங்க எல்லாருக்கும் அதிர்ச்சியா தான் இருக்கும். ஆனா, நிதர்சனம்னு ஒண்ணு இருக்குல்ல. கொஞ்சம் இவங்க பக்கம் இருந்து நாம யோசிச்சு பார்க்கணும்”

“கூட பிறந்தவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு தான் அவங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கணும்னு லட்சியத்தோட இருக்காங்க. ஒருவேளை எனக்கும் பார்கவிக்கும் செட் ஆச்சுன்னா கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சிருக்காங்க. இதுல தப்பு எதுவும் இருக்கறதா எனக்குத் தோணல!” என்று அவர்கள் இருவரையும் ஏதோ தியாகி ரேஞ்சுக்கு அவன் உயர்த்தி பேச, பெரியவர்களின் மனம் சற்று கனிந்தது.

“செல்வி! அந்தப் பொண்ணை பார்க்கவும் நல்ல பொண்ணா தான் தெரியுது. நம்ம இனியனுக்கு தனியா பொண்ணு தேடுற வேலை மிச்சம். பேசாம இரண்டு சம்பந்தத்தையும் ஒண்ணா பேசி முடிச்சுரு” என்று தன் தங்கையின் காதில் மரகதம் கிசுகிசுக்க, அவருக்கும் அது சரியென்றே தோன்றியது.

“ஏங்க! ஒரு நிமிஷம் என் கூட வாங்க!” என்று தன் கணவரை வெளியே அழைத்துச் சென்றார் ஆதிரை செல்வி.

அவர்கள் பேசுவற்காக சென்ற இடைவேளையின் போது இனியன் தான் சங்கோஜமாக யாரையும் எதிர் கொள்ளும் தைரியமின்றி அமர்ந்திருந்தான்.

ஷாரதாவோ தன் அறைக்குள் சென்று அடைந்து கொள்ள, அவளை பின் தொடர்ந்து சென்ற பார்கவி, “எப்படியோ… நீ நினைச்சதை சாதிச்சுட்ட! வாழ்த்துகள் மா. ஆனா, உன் அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் இல்ல. எப்பேற்பட்ட ப்ளான் எல்லாம் போட்டு எங்க எல்லாரையும் ஏமாத்தி இருக்க?” என்றாள்.

“அக்கா ப்ளீஸ். நானே என்ன நடக்கப் போகுதோன்னு நினைச்சு பயந்து போய் இருக்கேன். தயவு செஞ்சு என்னை காயப்படுத்துற மாதிரி எதுவும் பேசாத!” என்றாள் ஷாரதா.

அதற்குள் சண்முகநாதனும், ஆதிரை செல்வியும் திரும்பி வர, அவர்கள் வரும் அரவம் கேட்டு சகோதரிகள் இருவரும் ஹாலுக்கு வந்தனர்.

“ம்ம்ம்… ம்ம்ம்…” என்று தொண்டையை செருமிய சண்முகநாதன், 

“உங்க இரண்டாவது மகளை எங்க இனியனுக்கு கட்டி வைக்குறதுல எங்களுக்கு பரிபூரண சம்மதம்!” என்று முகம் மலர கூறவும், இனியனுக்கு அளவற்ற மகிழ்ச்சியாக இருந்தது.

செழியன் அவனை லேசாக அணைத்து வாழ்த்த, அவன் ஷாரதாவை பார்த்தான்.

அவளும், இது உண்மைதானா  என்று நம்ப முடியாமல் தான் நின்றிருந்தாள்.

சுகுமார் என்ன செய்யலாம் என்பது போன்ற பாவனையுடன் நீலவேணியைப் பார்க்க, அவரும் சம்மதம் என்று தலையசைத்தார்.

ஆனால், அடுத்ததாக சண்முநாதன் சொன்னதைக் கேட்டு அனைவரும் விழி விரித்தனர்.

“அதே போல, எங்க செழியனுக்கும் உங்க மூத்த பொண்ணுக்கும் கல்யாணம் நடந்தா, நாங்க ரொம்பவே சந்தோஷப்படுவோம். ஏன்னா… பெரியவனை வச்சுட்டு முதல்ல சின்னவனுக்கு கல்யாணம் பண்ண முடியாது இல்லையா?” என்றார்.

அவர் மறைமுகமாக செழியனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடந்தால் தான் இனியன் – ஷாரதாவின் திருமணம் நடக்கும் என்று கூறுகிறார் என்பது அனைவருக்கும் புரிந்தது.

செழியனோ, “அப்பா… என் கல்யாண விஷயத்துல அவங்களை கம்பல் பண்ண வேண்டாம்!” என்று கூற,

‘அவ்வளவு நல்லவனாடா நீ?’ என்று உள்ளுக்குள் நினைத்தாள் பார்கவி.

“நீ சும்மா இரு செழியா. நல்ல காரியம் கூடி வர்றப்போ அபசகுனமா பேசக் கூடாது. சின்னவங்க சேர்ந்து இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் போதும். இனிமே பெரியவங்க நாங்களே பேசி முடிவு பண்ணிக்குறோம்!” என்றார் ஆதிரை.

சுகுமாருக்கு தன் மூத்த மகளின் சம்மதம் இந்தத் திருமண விஷயத்தில் மிகவும் முக்கியமாகப் பட்டது.

அவளது கோபத்தின் அளவை தான் தினம் தினம் பார்ப்பவர் ஆயிற்றே!

தனது மனைவி மற்றும் மகள்களை அறையினுள் அழைத்துச் சென்று அபிப்ராயம் கேட்டார்.

“பாரூ… நீ என்னம்மா சொல்ற? செழியனை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமா?” என்று கேட்க, 

என்ன ஆச்சர்யம்? 

எப்பொழுதும் குய்யோ முறையோ என்று குதிக்கும் பார்கவி இன்று தன் தந்தையின் முன்பு மெளனமாக நின்றிருந்தாள்.

நீலவேணி, “எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லிடும்மா!” என்று கூற,

“எனக்காக நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்னு நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்கா. உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் ஓகே சொல்லு” என்றாள் ஷாரதா.

தன் குடும்பத்தார் பேசுவதைக் கேட்ட பார்கவியின் உள்ளம் உருகித் தான் போனது.

சிறுவயதில் இருந்தே அந்த வீட்டில் பார்கவி ராஜ்ஜியம் தான். தனக்கு ஒன்று வேண்டும் என்றால் பிடிவாதம் பிடித்து அதை அடைவதும், வேண்டாம் என்றால் பிடிவாதமாக அதை மறுத்து விடுவதும் தான் அவளது வாடிக்கையான செயல்.

அனைவருடனும் அவள் தனது பாச முகத்தை காட்டியதை விட, கோப முகத்தை காட்டியது தான் அதிகம்.

ஆனால், தன் வாழ்க்கை என்று வந்ததும் அதை எல்லாம் மறந்துவிட்டு, தன் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பவர்களை நினைத்து அவளுக்கு மெய் சிலிர்த்தது.

அதிகமாக அலட்டிக் கொள்ளாமல், “எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம் பா!” என்று கூறிவிட்டு அமைதியாக தலைகவிழ்ந்து நின்றாள்.

அவள் சொன்ன பதிலைக் கேட்டு அனைவரும் மகிழ, மகிழ்வுடன் இந்த விஷயத்தை மாப்பிள்ளை வீட்டாருடனும் பகிர்ந்து கொண்டனர்.

பார்கவி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாள் என்பதைக் கேட்டதும் ஆச்சர்யம் விலகாமல் அவளைப் பார்த்த செழியன், 'இன்ட்ரெஸ்டிங்…' என்று நினைத்தபடி புன்முறுவலுடன் அவளை பார்த்தான்.

இரு ஜோடிகளின் திருமணமும் அவர்களின் பெற்றோரால் உறுதிபடுத்தப்பட்ட வேளையில் அந்த வீட்டிற்குள் இருவர் நுழைந்தனர்.

வேறுபாடு கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அச்சு அசலாக ஒரே போன்று இருந்த இரண்டு இளைஞர்களையும் செழியனின் குடும்பம் குழப்பத்துடன் பார்க்க, நீலவேணியோ அவர்களை பார்வையால் தன்னருகே வரும்படி அழைத்தார்.

பார்த்தவுடனே அவர்கள் இருவரும் இரட்டை பிறவிகள் என்பது அனைவருக்கும் புரிந்தது.

சுகுமாரோ, “இவங்க தான் எங்க வீட்டு கடைக்குட்டிங்க. இவன் மாதேஷ்! அது ராஜேஷ்!” என்று தனது இளைய மகன்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

“என்னது… மாதேஷ்… ராஜேஷா? ஏன்டா இந்த வீட்டுல டிக்கெட் அவ்வளவு தானா… இல்ல இன்னும் வர வேண்டி இருக்கா?” என்று செழியன் தன் தம்பியின் காதில் ரகசியமாகக் கேட்க,

“அவ்வளவு தான் அண்ணா. நான் தான் இவங்களை பத்தி உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்!” என்றான் இனியன்.

“ம்ம்ம்… இரண்டு பொண்ணுங்க! இரண்டு பசங்களா? உன் மாமனார் ஓவர் டைம் பார்த்திருப்பார் போலயே!” என்று செழியன் கிண்டலாகக் கூறவும், இனியனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

“இரண்டு பேரும் பார்க்க அச்சு அசலா ஒரே மாதிரி இருக்காங்களே! அப்போ வீட்டுல நிறைய கலாட்டா நடக்கும்ன்னு சொல்லுங்க!” என்று கூறி சிரித்த மரகதத்திடம்,

“ஆமாமா… இங்க கலாட்டாவுக்கு பஞ்சமே இருக்காதுங்க!” என்றார் சுகுமார்.

“இரண்டு பேரும் காலேஜ் டூர் போயிட்டு வந்திருக்காங்க” என்று பொதுவாகக் கூறிய நீலவேணி, தன் மகன்களிடம்,

“போய் கை கால் முகம் கழுவி ட்ரெஸ் மாத்திட்டு வாங்க!” என்று கூற, அவர்களும் வந்திருப்போர் யாரென்று புரியாமல், குழப்பத்துடனே மேல் தளத்தில் இருந்த தங்கள் அறைக்குச் சென்றனர்.

“அப்போ நாங்க கிளம்புறோம். ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயதார்த்த தேதி முடிவு பண்ணி சொல்லுறோம். எங்க செழியன் வேற அடுத்த வாரம் டியூட்டில ஜாயின் பண்ணனும். அதுக்கு முன்னாடி நாள் தோதுபட்டா பூ வச்சு உறுதி பண்ணிக்கலாம்” என்று சண்முகநாதன் கூற, பெண் வீட்டாரும் அதற்கு சம்மதித்தனர்.

அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டார் விடைபெற, செழியன் திரும்பி பார்கவியை நோக்கினான். அவனது பார்வையை சந்தித்ததுமே தலைகவிழ்ந்து கொண்டாள் அவள்.

அவனும் சிரித்தபடியே காரில் ஏறி தன் குடும்பத்தாருடன் அங்கிருந்து சென்று விட்டான்.

ஏனோ செழியன், தன் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை பார்கவியால் மறுக்க முடியவில்லை.

பெருமூச்சுடன் தனது அறைக்குச் சென்று விட்டாள்.

தான் நினைத்தது ஒரு வழியாக பெரிய போராட்டத்திற்கு பிறகு நடந்து விட்டது என்பதை நினைத்து ஷாரதாவிற்கு, ‘அப்பாடா’ என்றிருந்தது.

சோஃபாவில் அமர்ந்திருந்த ஷாரதாவிடம் வந்த நீலவேணி, “மேடம்… எப்போ இருந்து பெரிய மனுஷி ஆனீங்க? எங்களுக்குத் தெரியாம நிறைய வேலை பார்த்திருக்கீங்க போல!” என்று கூற,

“அம்மா…” என்று அவரை ஓரக்கண்ணால் பார்த்தவள்,

“இனியன் பத்தி உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு எதுவும் இல்லம்மா! பார்கவிக்கு கல்யாணம் முடிவானதும் சொல்லிக்கலாம்னு நினைச்சேன்” என்றாள்.

“விடு வேணி! அதான் எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சுருச்சே. எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்றார்.

அப்பொழுது மாடியில் இருந்து இறங்கி வந்தனர், மாதேஷூம் ராஜேஷூம்!

“வாங்கடா! மாது… ராஜூ… காலேஜ் டூர் எல்லாம் எப்படி இருந்தது?” என்று கேட்டாள் ஷாரதா.

“ஹேய் ஷாரு… எத்தனை தடவை சொல்லுறது. கால் மீ மேடி!” என்று மாதேஷ் கூற,

“யெஸ்… கால் மீ ராஜ்!” என்றான் ராஜேஷ்.

இவர்களின் சத்தம் கேட்டு புடவை மாற்றி பைஜாமா அணிந்தபடி வெளியே வந்தாள் பார்கவி.

“ராஜ்… மேடி… இரண்டு பேரும் எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?” என்று கேட்டவளிடம்,

“தேட்ஸ் மை சிஸ்டர். பார்த்தீங்களா எங்களுக்கு பிடிச்ச மாதிரியே எங்க பெயரை கூப்பிடுறாங்க” என்றான் ராஜேஷ்.

‘க்கும்… மூணு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்களா? இனி நம்மளை டீல்ல விட்டுருவாங்க’ என்று நினைத்தாள் ஷாரதா.

“நம்ம அப்பா குடுத்த காசு செலவுக்கே சரியா இருந்துச்சு பாரூக்கா! எதுவுமே வாங்க முடியல” என்று மாதேஷ் கூற,

“அப்போ நான் குடுத்த காசு?” என்று கேட்டாள் பார்கவி.

“அது…” என்று அவன் இழுக்க,

“எல்லா காசையும் ஹோட்டலுக்குப் போய் தின்னு தீர்த்து செலவு பண்ணியிருப்பாங்க! இவனுங்களை பத்தி தெரியாதா என்ன?” என்று ஷாரதா கூற,

“அடப்பாவிங்களா!” என்று வாயில் கை வைத்து ஆச்சர்யப்பட்டாள் பார்கவி.

அதைக் கேட்டு திருதிருவென விழித்தனர் இருவரும்.

“அது… டூர் போயிட்டு வந்தது ரொம்ப டயர்டா இருக்கு நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்” என்று மாதேஷ் கழன்று கெள்ள, ராஜேஷூம் அவன் பின்னாலேயே சென்றான்.

செழியனின் வீட்டில் ஆதிரை செல்வி மிகவும் மகிழ்ச்சியாக தன் மகன்களின் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

தங்கள் குடும்ப ஜோசியரிடம் ஃபோனில் பேசிவிட்டு வந்தவர், “ஏங்க… வர்ற வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்காம். அன்னைக்கே பூ வைக்கலாம்னு நம்ம ஜோசியர் சொன்னாரு!” என்று தன் கணவரிடம் கூறினார்.

அதன்படியே, அந்த நல்ல நாளில் பார்கவி தேவிக்கும், ஷாரதா தேவிக்கும் பூ வைக்கப்பட்டு இரு ஜோடிகளின் திருமணத்திற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது.

பூ வைத்த நாளிலேயே நிச்சயதார்த்த தேதியும் குறிக்கப்பட்டது.

ஒரு மாதம் கழித்து நிச்சயதார்த்த தேதி முடிவு செய்யப்பட்டிருக்க, செழியன் பார்கவியிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அவளை, அவளது வீட்டு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.


“இன்னும் இரண்டு நாள்ல திருநெல்வேலிக்கு கிளம்பிடுவேன். இன்ஸ்பெக்டரா ட்யூட்டி ஜாயின் பண்ணணும்!” என்று அவன் கூற,

“ஓ சரி… அதுக்கு நான் என்ன பண்ணணும்?” என்று புரியாமல் கேட்டாள் அவள்.

“உன்கிட்ட பேசுறதுக்கு ஃபோன் நம்பர் வேணும். நம்பர் கொடு!” என்றபடி தனது அலைபேசியை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தான் செழியன்.

“என்னோட நம்பரா? அதெல்லாம் தர முடியாது!” என்றவளிடம்,

“ஏன் தர முடியாது?” என்று புரியாமல் கேட்டான் அவன்.

“அ…அது… கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் ஃபோன்ல பேசிக்கறது எங்க அப்பாவுக்குப் பிடிக்காது” என்று பார்கவி சொல்ல, செழியனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

பக்கென சிரித்தவனை முறைத்துப் பார்த்தவள், “என்னவாம்?” என்றாள்.

“இல்ல… என்னமோ அப்பா சொல்லை தட்டாத பாசப் புதல்வி மாதிரி, டயலாக் எல்லாம் பேசுறியே! அதை நினைச்சு தான் சிரிப்பு வந்துருச்சு!” என்றான் அவன்.

“என்ன கிண்டலா? நான் நிஜமா தான் சொல்றேன். எங்க அப்பா அந்த காலத்து ஆளு. அவருக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது” என்று பார்கவி விடாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று நிற்க,

“அப்போ சரி! நான் மாமா கிட்டேயே பேசி உன் நம்பரை வாங்கிக்குறேன்” என்றபடி அவளது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டான் செழியன்.

‘ஐய்யயோ… சும்மா ஒரு பேச்சுக்கு அப்பாவுக்கு பிடிக்காதுன்னு கதையை விட்டா… இவர் நேரா அப்பாகிட்டயே போறாரே!’ என்று நினைத்தவள், மெதுவாக நடந்து வீட்டை நோக்கி சென்றாள்.

சுகுமாரிடம் பேசிவிட்டு திரும்பி வந்தவன், வாசலில் நின்றிருந்தவளிடம் தனது அலைபேசியின் தொடுதிரையை திருப்பிக் காட்ட, அதில் அவளது அலைபேசி எண் பதிவாகி இருப்பது தெரிந்தது.

தனது தொடர்பு எண்ணை வாங்கியது கூட அவளுக்குப் பிரச்சனை அல்ல!

ஆனால், அந்த எண்ணை அவன் பதிவு செய்து வைத்திருந்த பெயர் தான் அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

‘ஏ. ஆர்’ என்ற பெயரில் பார்கவியின் எண் பதிவு செய்யப்பட்டிருக்க,

“அதென்ன ஏ.ஆர்? ஏ.ஆர். ரகுமானா?” என்று சட்டென கேட்டாள்.

அதற்கு, “ஏ. ஆர்னா… உடனே ஏ.ஆர் ரகுமானா? நான் பதிவு பண்ணியிருக்கற பெயருக்கு அர்த்தம்…” என்று அவளது விழிகளை ஊடுருவி அவன் பார்க்க, தன்னையும் அறியாமல் ஒரு ஆர்வத்துடன் அவன் சொல்ல வருவதைக் கேட்பதற்காக, தனது காதுகளை தீட்டிக் கொண்டாள் அவள்.

“அழகான ராட்சசி!” என்று அவளது காதோரம் தனது மூச்சுக் காற்று படும்படியாக நொடிப் பொழுதில் ரகசியம் பேசிவிட்டு, அவளிடமிருந்து விலகிச் சென்றான் செழியன்.

அதை கேட்ட பார்கவிக்கோ, மீண்டும் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு!

தன் மனம் கொஞ்சம் கொஞ்சமாக அரண் செழியனிடம் சாய்வதை அவளால் நன்றாகவே உணர முடிந்தது.

அரணாய் வருவான்…

அடுத்த எபியுடன் திங்கள் அன்று உங்கள் எல்லாரையும் சந்திக்க வருகிறேன். நன்றி!

பிரியமுடன்,

சௌஜன்யா...

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 9

அரணாய் நீ வா (பாகம் 2) - Epi 7