Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2 அத்தியாயம் – 11 “ கார்த்திகேயனா ? உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா !” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட அரண் செழியனிடம் , “ ஆமா சார் ! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும் . என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான் ” என்றாள் சுபத்ரா . அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் , “ சரி ! சொல்லு சுபத்ரா . உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்தது ?” என்று செழியன் கேட்க , அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள் . அன்று சுபத்ராவிற்கு மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க , தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் . ரிஷியின் வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் . அந்த வீட்டை அவள் கடந்து சென்ற நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண் . முகம் முழுக்க வியர்த்துப் போயிருக்க , படபடப்பாகக் காணப்பட்டாள் அவள் . சுபத்ரா வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து , வண்டியை நிறுத்தும்படி கூறினாள் . அந்தப் பெண்ணின் முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும் , யோசனையுடன் சடன...

அரணாய் நீ வா - Epi 3

 அரணாய் நீ வா!


 

அத்தியாயம் - 3

இனியனிடம் பேசி விட்டு ஷாரதா வீட்டிற்குள் வர, அங்கு ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. 

ஹாலுக்கு வந்தவள் தன் தந்தையும் தாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டு, "என்னம்மா ஒரே சத்தமா இருக்கு?" என்று கேட்க,

"உன் அக்கா தான்டி! அவளோட மேக் அப் ஐட்டம் எதையோ காணோமாம். அதான் கத்தி கலாட்டா பண்ணிட்டு இருக்கா" என்றார் நீலவேணி.

"மேக் அப் ஐட்டமா?" என்றபடியே நடந்து தனது அக்காவின் அறைக்குச் சென்றாள் ஷாரதா.

தலையை நுழைத்து ரூமிற்குள் எட்டிப் பார்த்தவள், அந்த அறை முழுவதும் பொருட்கள் சிதறி தலைகீழாக இருப்பதைக் கண்டு விழி விரித்தாள்.

மெதுவாக, "அக்கா..." என்று ஷாரதா அழைக்க, ஒரு நொடி திரும்பி தன்னைப் பார்த்த பார்கவியிடம், 

"எதையோ காணோம்னு சொன்னியாம்!" என்று கூறி அமைதியானாள்.

மீண்டும் அந்த அறையில் இருந்த அலமாரியினுள் தனது தேடலை தொடங்கிய பார்கவி, "ஆமா! என்னோட டியோர் லிப்ஸ்டிக்கை காணோம். ஈவ்னிங் எனக்கு ஒரு ப்ரைடல் மேக் அப் வேற இருக்கு! அதுக்காகத் தான் தேடிட்டு இருக்கேன், கிடைக்க மாட்டேங்குது" என்றாள் ஆற்றாமையுடன்.

பார்கவி சொன்னதைக் கேட்டதுமே ஷாரதாவின் மனதில் திகில் உண்டானது.

'அந்த லிப்ஸ்டிக்கா. ஐயோ... போச்சு! இன்னைக்கு நம்ம கதை கந்தல் தான்!' என்று நினைத்து எச்சில் விழுங்கி தன் பயத்தை மறைக்க போராடிக் கொண்டிருந்தாள்.

முன்தினம் தனது தோழி ஒருத்தியின் திருமணத்திற்குச் செல்ல தயாரானவள், பார்கவி இல்லாத சமயத்தில் அவளது அறைக்குச் சென்று, லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து உதட்டில் பூசிக் கொண்டாள்.

பார்கவியின் மேக் அப் பொருட்களை யாரும் தொடக் கூடாது என்பது அந்த வீட்டில் எழுதப்படாத விதி. அதையும் மீறிய ஒரு அசட்டு தைரியத்தில் தான் ஷாரதா, அந்த லிப்ஸ்டிக்கை எடுத்து உபயோகித்தாள்.

அதோடு மட்டுமில்லாமல் மண்டபத்தில் வைத்து டச் அப் செய்து கொள்வதற்காக அந்த உதட்டு சாயத்தை தனது கைப்பையில் போட்டு எடுத்து சென்றாள்.

மணப்பெண் அறையில் தயாராகிக் கொண்டிருந்த அவளது தோழிக்கு லிப்ஸ்டிக் நிறம் பொருத்தமாக இல்லாது போக, தனது கைப்பையில் இருந்த உதட்டுச் சாயத்தை எடுத்து அவளுக்கு பூசி விட்டவள், அதனை அந்த அறையிலேயே மறந்து போய் வைத்து வந்து விட்டாள்.

இப்பொழுது பார்கவி அந்த லிப்ஸ்டிக்கை காணவில்லை என்று கூறவும் தான், அவளுக்கு தலையில் மணி அடித்தது.

இதை தான் இப்பொழுது கூறினால், அங்கு ஒரு பெரிய பிரளயமே வெடிக்கும் என்று நினைத்தவள், அதனை அவளிடம் சொல்லாமல் மறைக்க எண்ணி, தானும் தன் அக்காவுடன் சேர்ந்து தேடுவது போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.

"ச்ச... எங்க போச்சுன்னே தெரியல. பிரைடுக்கு (Bride) மேக் அப் ட்ரையல் பார்த்தப்போ அந்த லிப் ஷேட் தான் பொருத்தமா இருந்தது" என்று பார்கவி கூறவும்,

"அந்த லிப்ஸ்டிக் கிடைக்கலைன்னா வேற என்ன செய்ய முடியும்கா? பேசாம வேற ஷேட்ஸ் போட்டு மிக்ஸ் அன்ட் மேச் பண்ணி விடு" என்றாள் ஷாரதா.

திரும்பி தன் தங்கையைப் பார்த்தவள், "அந்த லிப்ஸ்டிக்கோட விலை என்ன தெரியுமா? நாலாயிரம்!" என்று கூற,

"என்னது நாலாயிரமா? கூட மூவாயிரம் சேர்த்து போட்டா, ஒரு தங்க மோதிரமே வாங்கிடலாமே! ஒரு முறை போட்டுட்டு அழிக்குற லிப்ஸ்டிக்கை எதுக்கு அவ்வளவு விலை குடுத்து வாங்கணும்?" என்றாள்.

"மேக் அப்பை பற்றி ஏபிசிடி கூட தெரியாத உனக்கு என்னால விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் ப்ரைடுக்கு மேக் அப் போடணும். அதுக்காக தான் அதை தேடிட்டு இருக்கேன். முடிஞ்சா தேடி கொடு. இல்லைன்னா இடத்தை காலி பண்ணு!" என்றாள் பார்கவி.

'தேடி கொடுக்குறதா. அந்த நாலாயிர ரூபா லிப்ஸ்டிக்கை காக்கா தூக்கிட்டு போய் நாலு நாள் ஆகுது! அதை எங்கேன்னு போய் நான் தேடுறது!' என்று நினைத்தவள், அங்கிருந்து நைசாக கழன்று கொண்டாள்.

ஹாலுக்கு வந்தவள் சோஃபாவில் அமர்ந்திருந்த தனது தந்தையிடம், "அப்பா... நம்ம பார்கவிக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு. மாப்பிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டரா இருக்காரு. அவர் கூட பிறந்தது ஒரு தம்பி மட்டும் தான். பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாத குடும்பம்! நாம ஓகேன்னு சொன்னா நாளைக்கே பொண்ணு பார்க்க ரெடியா இருக்காங்க" என்றாள்.

சுகுமாரோ, "என்ன பாப்பா... இப்படி திடுதிப்புன்னு வந்து சொல்ற?" என்று பேசிக் கொண்டிருந்த வேளையில், மொட்டை மாடியில் ஈரத் துணிகளை உலர்த்தப் போட்டுவிட்டு கீழிறங்கி வந்தார் நீலவேணி.

அவரையும் அழைத்து ஷாரதா விஷயத்தைக் கூறவும், "ஹ்ம்ம்... நாமளும் மாசத்துக்கு ஒரு சம்பந்தம் பார்த்துட்டு தான் இருக்கோம். ஆனா, உன் அக்கா தான் எதுக்குமே ஒத்து வர மாட்டேங்குறாளே!" என்று நீலவேணி சலித்துக் கொண்டார்.

"கவலைப்படாதீங்கம்மா! எனக்கு என்னவோ அக்காவுக்கு இந்த சம்பந்தம் நிச்சயமா அமையும்னு தான் தோணுது. அவ முரண்டு பிடிச்சாலும் நான் எப்படியாவது சம்மதிக்க வைக்குறேன்!" என்றாள் ஷாரதா.

பின்னர், "ஆங்... அப்புறம் மாப்பிள்ளை பொண்ணை வீட்டுக்கு வந்து பார்க்க மாட்டாராம். ஏதாவது பொது இடத்துல வச்சு பார்த்து பேசிக்கலாம்னு விருப்பப்படுறாரு!" என்று அவள் கூறவும்,

"அது சரியா வராது ஷாரதா!" என்று மறுத்தார் நீலவேணி.

"ஏன் வேணி? ஏன் சரியா வராதுன்னு நினைக்கிற?" என்று சுகுமார் கேட்க,

"என்னங்க! நம்ம பொண்ணை பத்தி நல்லா தெரிஞ்சுமா ஏன்னு கேட்குறீங்க? சும்மாவே வர்ற சம்பந்தத்தை எல்லாம் எதையாவது ஒண்ணு சொல்லி தட்டி கழிச்சுட்டு வர்றா. இப்போ பொது இடத்துல வச்சு சந்திச்சு பேசுனா சும்மா இருப்பாளா? மாப்பிள்ளைகிட்ட எடுக்கு மடக்கா எதையாவது பேசி வச்சிடப் போறா! அதனால தான் சொல்லுறேன். பேசாம நம்ம வீட்டுல வச்சே பொண்ணு பார்க்க வரச் சொல்லுவோம்!" என்றார் அவர்.

அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்த சுகுமார், "அதுவும் சரிதான்" என்றபடி திரும்பி ஷாரதாவிடம், 

"அம்மா சொல்லுறது தான் எனக்கு சரின்னு படுது பாப்பா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை நாளைக்கு நம்ம வீட்டுக்கே வர சொல்லிடு" என்று கூற,

"சரிப்பா.. " என்று அவளும் யோசனையுடனே தலையசைத்தாள். 

மறுபடியும் இனியனுக்கு அழைத்து தன் தந்தை சொன்ன விஷயத்தைக் கூற, “உங்க அப்பா சொல்றதும் சரிதான் ஷாரு! வீடுன்னா தேவையில்லாதப் பேச்சை அவாய்ட் பண்ணலாம். இவங்க இரண்டு பேரையும் ஒரு வழிக்கு கொண்டு வரணும்னா நம்ம கண்ணு முன்னாடி வச்சிருந்தா தான் முடியும். செழியன் அண்ணன்கிட்ட நான் பேசிக்குறேன். நீ எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடு” என்றான் இனியன்.

அன்று முழுவதும் காணாமல் போன தனது டியோர் லிப்ஸ்டிக்கைத் தேடி களைத்து ஓய்ந்து போய், ஒரு வழியாக ப்ரைடல் மேக் அப் செய்வதற்காக மண்டபத்திற்கு கிளம்பிச் சென்றாள் பார்கவி.

மேக் அப்பில் அவளுக்கு உதவியாக ஒரு பெண்ணும் ஏற்கனவே மண்டபத்தில் வந்து காத்திருந்தாள்.

“சரண்யா! பொண்ணு வந்தாச்சா?” என்று பார்கவி கேட்க, 

“இன்னும் வரலக்கா. நான் இங்கே வந்து அரைமணி நேரம் ஆச்சு!” என்றாள் அவள்.

அந்த மண்டபத்தில் மணமக்கள் வீட்டார், விருந்தினர்கள் என்று யாரும் இன்னும் அங்கே வந்திருக்கவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தவள், “என்ன இவ்வளவு லேட் பண்ணுறாங்க?” என்று நினைத்தவள், தனது அலைபேசியில் இருந்து ஒரு எண்ணுக்கு அழைத்தாள்.

மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டதும், “ஹலோ… புதுப்பொண்ணு! எப்போ மண்டபத்துக்கு வருவீங்க?” என்று பார்கவி கேட்க,

“கார்ல ஏறிட்டேன்டி. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்றாள் அஞ்சலி.

அந்தப் புதுப்பெண் வேறு யாருமல்ல!

பார்கவியுடன் கல்லூரியில் ஒன்றாக உடன் படித்த தோழி தான்.

முன்தினம் தான் அவளுக்குத் திருமணம் முடிந்திருந்தது. தன் தோழிக்கு திருமண மேக் அப் செய்ததும் பார்கவி தான்.

இப்பொழுது மாப்பிள்ளை வீட்டு ரிசெப்ஷனுக்கும் அவளை தான் ஒப்பனை செய்ய அழைத்திருந்தாள் அஞ்சலி.

அடுத்த இருபது நிமிடங்களில் அஞ்சலி மண்டபத்தை அடைந்திருக்க, மணப்பெண் அறையில் வைத்து அவளை தயார் செய்ய ஆரம்பித்தாள் பார்கவி.

சரண்யா அவளுக்கு சிகை அலங்காரம் செய்ய, பார்கவி முக ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்.

மேக் அப் செய்யும் பொழுதே ரகசியமாக அவளது காதில், “அப்புறம் அஞ்சலி! நேத்து நைட்டு எல்லாம் ஓகே தானே!” என்று கேட்க, அவளோ வெட்கத்துடன், “போடி!” என்றாள்.

“ஹ்ம்ம்… நீ வெட்கப்படுறதைப் பார்த்தாலே தெரியுது. எல்லாம் ஓகே தான் போல!” என்று சொல்லி அவள் சிரித்துக் கொண்டிருக்க, யாரோ அந்த அறையின் கதவை தட்டினார்கள்.

சரண்யா போய் கதவை திறக்க,  அங்கே ரம்யா, ஜெஸ்சி மற்றும் மல்லிகா என்று மூன்று பெண்கள் நின்றிருந்தனர்.

அவர்களும் அஞ்சலி மற்றும் பார்கவியுடன் ஒன்றாக சேர்ந்து படித்த தோழிகள் தான்.

அனைவரும் அவர்களின் கல்லூரி காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு அராத்து பெண்கள் அணி!

அவர்கள் உள்ளே வரவும், “எல்லாரும் வந்தாச்சா?” என்ற பார்கவி அஞ்சலிக்கு ஒப்பனை செய்வதைத் தொடர்ந்தபடி,

“இங்க பாருங்கடி. நான் நம்ம அஞ்சலிக்கு மேக் அப் போட்டு முடிக்குற வரைக்கும் பன்னு வேணும்… வெண்ணை வேணும்னு என்னை தொல்லை பண்ண கூடாது. இவளுக்கு மேக் அப் முடிச்சுட்டு தான் உங்க எல்லாருக்கும் போட்டு விடுவேன் சரியா?” என்றாள் பார்கவி.

அந்தக் கூட்டத்தில் ஒருத்தியான ரம்யாவோ, “சரிங்க மேடம்! நீங்க உங்க வேலையை கன்டினியூ பண்ணுங்க. நாங்க வீணா உங்களை தொந்தரவு பண்ண மாட்டோம்” என்று கூறவும்,

“ஏய்… என்னடி கிண்டலா” என்று அவளை நிமிர்ந்து பார்த்து பொய்யாக முறைத்தாள் பார்கவி.

அப்பொழுது அந்த அறையின் கதவு மீண்டும் தட்டப்பட, ரம்யா தான் சென்று கதவைத் திறந்தாள்.

வெளியே நின்றிருந்த ரம்யாவின் கணவன் அவனது கைகளில் இருந்த ஒன்பது மாதப் பெண் குழந்தையை அவளிடம் கொடுத்தபடி, “பாப்பா அழுறா ரம்யா. ஃபீட் பண்ணு” என்றுவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

ரம்யாவின் குழந்தை பசியில் அழ, உடனே சென்று தன் குழந்தைக்கு அமுதூட்டினாள் அவள்.

அதைக் கண்டதும், “நம்ம செட்ல கிட்டத்தட்ட எல்லாரும் கல்யாணம் முடிச்சு குழந்தை பெத்து ஆன்டி ஆயிட்டோம். இதோ நம்ம அஞ்சலிக்கு கூட இப்போ கல்யாணம் ஆயிருச்சு” என்றவள் ஒரு இடைவெளிவிட்டு,

“பாரூ… நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?” என்று பார்கவியிடம் கேட்டாள்.

ஒரு நொடி தனது தலையை மட்டும் நிமிர்த்தி பார்வையை அவள் புறமாக செலுத்தியவள், பெருமூச்சு விட்டபடி மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தாள்.

அவளது முகத்தில் தெரிந்த உணர்ச்சி மாறுதல்களைக் கண்டதும், “பாரூ… நீ இன்னும் அந்த அபிஷேக்கை மறக்கலையா?” என்று சட்டென கேட்டாள் மல்லிகா.

அவள் சொன்ன பெயரை கேட்டதும் மேக் அப் பிரஷ்ஷை பிடித்திருந்தவளின் கரம் ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்தது.

சரண்யா அவளை அதிர்ச்சியுடன் பார்த்து நிற்க, மற்ற பெண்கள் அனைவரும் மௌனமாக இருந்தனர்.

பார்கவியோ சரண்யாவிடம், “என்ன முழிச்சுட்டு நிக்கிற சரண். சீக்கிரமா ஹேர் ஸ்டைல் முடிச்சுட்டு ஹேர் செட் பண்ணி விடு!” என்று கூறவும், அவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

பின்னர் தன் தோழியிடம், “நீ எந்த அபிஷேக்கைப் பத்தி பேசுற மல்லி? எனக்கு சுத்தமா நினைவில்லையே” என்று கூற, அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.

மல்லிகா குறிப்பிட்ட அந்த அபிஷேக் வேறு யாருமல்ல, அவர்களுடன் கல்லூரியில் படித்த சீனியர் மாணவன் தான்.

சில்லென்று ஒரு காதல் படத்தில் வரும் இளம் வயது சூர்யா போன்று, அந்தக் கல்லூரியில் கெத்தாக வலம் வருபவனைக் கண்டதுமே காதலிக்க ஆரம்பித்து விட்டாள் பார்கவி.

தன் மனதில் இருக்கும் காதலை அவனிடம் வெளிப்படுத்தப் போன சமயத்தில் தான், அவன் தனது வகுப்பிலேயே படிக்கும் வேறொரு பெண்ணை காதலிக்கிறான் என்கிற விபரம் அவளுக்குத் தெரிய வந்தது.

அதன் பிறகு அவனை மறக்க நினைத்து, தோற்றுப் போய் இப்பொழுது தான் ஒருசில ஆண்டுகளாக அவனை முழுமையாகத் தன் மனதில் இருந்து அகற்றி இருந்தாள்.

பார்கவியின் இந்த நிறைவேறாத காதலைப் பற்றி அவளது தோழிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒப்பனை செய்து கொண்டிருக்க, “அப்படின்னா நம்ம பார்கவிகிட்டேயும் சீக்கிரமே டும் டும் டும் சத்தத்தை எதிர்பார்க்கலாம் போலிருக்கே!” என்று ஜெஸ்சி கூறவும் அவளை நிமிர்ந்து பார்க்காமலேயே,

“ஏன்டி ஊர் உலகத்துல ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு. வைரஸ் பிரச்சனை போய் இப்போ ஏதோ ஜப்பான்ல பாக்டீரியா பிரச்சனை வந்து பயமுறுத்திட்டு இருக்கு. அதை எல்லாம் பத்தி கவலைப்படுறதை விட்டுட்டு நீங்க எல்லாரும், நான் கல்யாணம் பண்ணிக்காதது தான் இப்போ ஏதோ பெரிய உலக மகா பிரச்சனை போல பேசிட்டு இருக்கீங்க!” என்றாள்.

தன் மகளுக்கு பாலூட்டி விட்டு எழுந்து வந்த ரம்யாவோ, “ஜப்பான்ல பாக்டீரியா பரவுறதைப் பத்தி கவலைப்படுறதை விட, உன் கல்யாணத்தைப் பத்தி கவலைப்படுறது தான் எங்களுக்கு முக்கியம் பாரூ! எத்தனை நாளைக்கு தான் நீயும் இப்படி தனியாவே காலம் தள்ளப் போற?” என்றாள்.

தன் தோழியை நிமிர்ந்து பார்ததவள், ‘உஃப்’ என்று பெருமூச்சை வெளியிட்டு, “உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனாலும் ஆச்சு! சுத்த பூமர் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்கடி!” என்றவள் தனது வேலையை மீண்டும் தொடர்ந்தபடி,

“இப்போ என்ன? என் கல்யாணத்தை நீங்க எல்லாரும் கண் குளிர பார்க்க ஆசைப்படுறீங்க! அப்படி தானே?” என்று கேட்க, மூவரும் சிரித்தபடியே ஆமாம் என்று தலையசைத்தனர்.

“சரி! எனக்குப் பிடிச்ச மாதிரி… என் கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்து வர்ற மாதிரி மாப்பிள்ளை அமைஞ்சா நான் நிச்சயமா கல்யாணம் பண்ணிக்குறேன்” என்று பார்கவி கூற, அனைவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மூவரும் அவளருகே சென்று பார்கவியை கட்டியணைத்து வாழ்த்தினர்.

அப்பொழுது அந்த அறையின் கதவு மீண்டும் தட்டப்பட, சரண்யா சென்று கதவை திறந்தாள்.

அஞ்சலியின் மாமியார் உள்ளே வந்து தனது மருமகளைப் பார்த்து, “தயாராயிட்டியாம்மா! கெஸ்ட் எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க” என்று கேட்டார்.

அவளும், “ரெடி ஆயிட்டேன் அத்தை!” என்றபடி எழுந்து நிற்க, அவளது அலங்காரத்தைப் பார்த்தவர், 

“ரொம்ப அழகா இருக்கம்மா! வா மேடைக்குப் போகலாம்” என்று அவளை அழைத்துச் சென்றார்.

தோழிகள் மட்டுமே அந்த அறையில் எஞ்சி இருக்க, பார்கவி அனைவருக்கும் ஒப்பனை செய்து விட்டாள்.

அன்றைய வரவேற்பு நிகழ்ச்சிக்கு அவர்கள் நான்கு பேரும் ஒரே போன்று நீளமான லாவண்டர் நிற கவுன் தான் அணிந்திருந்தனர்.

அஞ்சலியின் திருமண வரவேற்பில் நடனமாடுவதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே அனைவரும், நடன ஒத்திகையும் பார்த்திருந்தனர்.

மேடையில் அஞ்சலியும் அவளது கணவனும் நின்றிருக்க, விருந்தினர்கள் ஒவ்வெருவராக வந்து, அவர்களை வாழ்த்தி, பரிசுப் பொருட்களையும் அளித்துவிட்டு சென்றனர்.

அப்பொழுது, நீல நிறத்தில் டக் இன் செய்த முழுக்கை சட்டையும், மணல் நிற பேன்டும் அணிந்து கம்பீரமாக அந்த மண்டபத்திற்குள் நுழைந்தான் அரண் செழியன்.

மாப்பிள்ளையின் தந்தை, அதாவது அஞ்சலியின் மாமனார் தயாளன், காவல்துறையில் எஸ்.பியாக பணி செய்து ஓய்வு பெற்றவர்.

அவர் ராமநாதபுரத்தில் பணியில் இருந்த போது, அரண் செழியன் எஸ்.பி ஆஃபிசில் பணியில் இருந்தான். 

செய்யும் பணியில் நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட செழியனை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

அந்தப் பழக்கத்தில் தான் தன் மகனின் திருமணத்திற்கு அவனை அழைத்திருந்தார்.

ஆனால், திருமணத்திற்கு அவனால் வர முடியாமல் போக, திருமண வரவேற்பிற்கு நிச்சயம் வருவதாக சொல்லி இருந்தான்.

இப்பொழுது சொன்னது போல, வரவேற்பிற்கு சீக்கிரமாகவே வந்தவன், நேராக மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்தி அவர்களிடம் தான் வாங்கி வந்திருந்த பரிசினையும் அளித்தான்.

அரண் செழியனை தனது மகனுக்கும், மருமகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தார் தயாளன்.

அனைவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்த பிறகு, “இருந்து சாப்பிட்டு போங்க செழியன்” என்று தயாளன் கூற,

“கண்டிப்பா சார்” என்றவன் மேடையில் இருந்து இறங்கி கீழே போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான்.

அந்தத் திருமண வரவேற்பு ஏதோ ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தாரால் நடத்தப்பட்டு கொண்டிருந்தது.

மணமக்கள் இருந்த மேடைக்கு பக்கவாட்டில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய மேடையில், லைட் மியூசிக் நிகழ்ச்சி நடக்க, பக்க வாத்தியங்களுடன் இருவர் தமிழ் சினிமா பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர்.

இடையிடையே ஒரு பெண் வந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாள்.

இம்முறை மேடைக்கு வந்த அந்தப் பெண், “நம்ம புதுப்பொண்ணு மிசிஸ் அஞ்சலியோட ப்ரெண்ட்ஸ் இப்போ நமக்காக ஒரு மைன்ட் ப்ளோயிங் டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கப் போறாங்க! சோ… எல்லாரும் கை தட்டி அவங்களை மேடைக்கு வரவேற்போம்!” என்று கூறி விட்டு கீழிறங்கி சென்றாள்.

அடுத்து மேடைக்கு வந்தது, பார்கவியும் அவளது தோழிகளும் தான்.

‘தொடக்கம் மாங்கல்யம் தந்துனானே னா… பின்பு ஜீவிதம் துந்தனானே னா’ என்கிற பாடலில் ஆரம்பித்து, பிரபலமான தமிழ் பாடல்களுக்கு அழகாக நடனமாடினர் அவர்கள் நால்வரும்.

இடையே இருக்கையில் அமர்ந்திருந்த அஞ்சலியையும் அவளது கணவனையும் கரம் பற்றி எழுப்பி அவர்கள் ஆட வைக்க, அனைவரிடமும் இருந்து கூச்சலும் கரகொலியும் எழுந்தன.

சாதாரணமாக அந்த நடனத்தைப் பார்க்க ஆரம்பித்த செழியனின் விழிகள், நளினத்துடனும் அதற்கேற்ற அழகிய முக பாவனைகளுடனும் சேர்ந்து நடனமாடிய பார்கவியைக் கண்டதும் ஆச்சர்யத்தில் விரிந்தன.

அவளை அவன் அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதலில் அந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்தது போல இருப்பதாக நினைத்தவனுக்கு, சட்டென இனியன் காட்டிய பெண்ணின் புகைப்படம் நினைவிற்கு வரவும், ஒரவித இனம் புரியாத பரவசம் அவனை ஆட்கொண்டது.

நடனம் முடியும் வரை அவனது பார்வை பார்கவியை விட்டு அகலவே இல்லை.

நடனம் முடிந்து தன் தோழியருடன் கீழிறங்கி வந்தவள், செழியனுக்கு முன்னால் போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.

அவளது முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் பூத்திருக்க, பார்கவியின் வலப்பக்க நெற்றியோரத்தில் இருந்து அவளது கன்னத்திற்கு உருண்டோடிய வியர்வை துளி ஒன்று, அவளது தோளில் விழுந்து சிதறியது.

அந்த சமயத்தில் சிதறியது அவளது வியர்வை துளிகள் மட்டுமல்ல, அவனது இதயமும் தான்!

தன்னையும் மீறி அவளையே ரசித்துக் கொண்டிருந்தவனை, ஒரு இளைஞன், “சார் ஜூஸ்!” என்று கூறவும் தான் நிகழ்காலத்திற்கு வந்தான்.

அவன் கொடுத்த ஜூசை எடுத்துக் கொண்ட செழியனுக்கு, அன்று காலையில் இனியன் சொன்னது நினைவிற்கு வந்தது.

‘பேசாம நீ சாமியாரா போயிருக்கலாம்!’ என்ற வாக்கியம் அவனுக்கு நினைவு வர,

‘டேய்! செழியா... நீயாடா வெட்கமே இல்லாம அந்தப் பொண்ணை இவ்வளவு நேரமா ரசிச்சுட்டு இருந்த?’ என்று நினைத்தவன் பெருமூச்சுவிட்டபடி ஜூசை அருந்தினான்.

அப்பொழுது அவனது அலைபேசி ஒலிக்கவும் எடுத்து பேசினான். இனியன் தான் அழைத்திருந்தான்.

பாட்டு சத்தத்தில் மறுபுறம் பேசுவது செழியனுக்குக் கேட்காமல் போகவும், அலைபேசியுடன் மண்டபத்தில் இருந்து வெளியே வந்தான்.

“சொல்லுடா. என்ன விஷயம்?” என்றவனிடம்,

“அண்ணா… நீ இப்போ ஃப்ரீ தானே?” என்று கேட்டான் அவன்.

“ம்ம்ம்… ஃப்ரீ தான். சொல்லு” என்றவனிடம்,

“அது வந்துண்ணா. காலையில நான் உன்கிட்ட ஒரு பொண்ணை பத்தி பேசினேனே!” என்று இனியன் சொன்னதும் புருவம் சுருக்கியவன்,

“ஆமா! அவளுக்கென்ன?” என்று கேட்டான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஷாரதா எனக்கு கால் பண்ணுனா. அவங்க அம்மாவும் அப்பாவும் பொண்ணு பார்க்கற சடங்கை அவங்க வீட்டிலேயே வச்சு நடத்த பிரியப்படுறாங்க. பொண்ணு வீட்டுக்காரங்க சொல்றதை என்னாலேயும் மறுக்க முடியல. அதனால…” என்று தன் அண்ணன் என்ன சொல்வானோ என்கிற தயக்கத்துடன் இனியன் இழுக்க,

“ம்ம்ம்… நோ இஷ்யூஸ் இனியன். நாளைக்கு நாம எல்லாரும் அவங்க வீட்டுக்கே வந்து பொண்ணு பார்க்கறதா தகவல் சொல்லிடு” என்றவன்,

“வேற எதுவும் இல்லைல்ல!” என்று கேட்கவும்,

“இல்லண்ணா. நான் வச்சுடுறேன்!” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

தான் சொன்னதற்கு செழியன் உடனே ஒத்துக் கொள்வான் என்று, இனியன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

மகிழ்ச்சியுடனே அடுத்தடுத்த ஏற்பாடுகளை கவனிக்கச் சென்று விட்டான்.

இனியனிடம் பேசிவிட்டு தனது அலைபேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியைப் பார்த்தபடியே மண்டபத்திற்குள் நடந்து சென்ற செழியன், கவனிக்காமல் ஒருவர் மீது மோதி விட்டான்.

இடித்துக் கொண்டதால் அவனது தாடையில் வலியெடுக்க, அதை தேய்த்தபடியே, “சாரி… கவனிக்காம வந்து மோதிட்டேன்!” என்றவன் அப்பொழுது தான் தன் முன்பு நின்றிருந்தவளைப் பார்த்தான்.

அவன் மோதிக் கொண்டது பார்கவியுடன் தான்! 

அவளும் தனது நெற்றியை தேய்த்தபடியே செழியனைப் பார்த்து, “பொழுது போக்குக்காக தான் செல் ஃபோன் கண்டுபிடிச்சிருக்காங்க. நான் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இப்படி நடக்கும் போதும், ஓடும் போதும் முன்னாடி யார் வர்றாங்கன்னு கவனிக்காம வந்து மோதணுமா? உங்களுக்கு அந்த அளவுக்கு காமன் சென்ஸ் கூடவா இல்லை!” என்று வெடுக்கென அவனிடம் கேட்கவும், அவள் பேசியதைக் கேட்டு ஆச்சர்யத்தில் விழி விரித்து நின்றான் அரண் செழியன்.

அரணாய் வருவான்…

அடுத்த எபி புதன் அன்று பதியப்படும். நன்றி... நன்றி...

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 9

அரணாய் நீ வா (பாகம் 2) - Epi 7