Ongoing Novels
அரணாய் நீ வா - Epi 14
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
அத்தியாயம் – 14
நள்ளிரவு மூன்றரை மணியளவில் அந்தக் காவலர் குழு கோவில்பட்டியை
அடைந்தது.
களக்காட்டில்
இருந்து கிளம்பும் பொழுதே தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் கைது நடவடிக்கைக் குறித்தான
விபரங்களைக் கோவில்பட்டி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு தெரிவித்திருந்தான்
அரண் செழியன்.
அவர்களும்
இந்த வழக்கிற்கு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறியிருந்தனர்.
அந்த நள்ளிரவு
வேளையில், அகிலாண்டபுரம்
என்ற கிராமத்து எல்லையில் நின்றிருந்தது அந்தப் பெரிய காவல் வாகனம்.
உள்ளே அமர்ந்தபடி
தனது அலைபேசியில் இருந்த ஒருவனின் புகைப்படத்தையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்
செழியன்.
“ஏட்டய்யா…
இவனைப் பத்தின ஃபுல் டிட்டெயில்ஸ் சொல்லுங்க!” என்று அவன் கேட்க,
“இவன்
பெயர் சேகர் சார். களக்காடு பக்கத்துல புதூருங்கற கிராமம் தான்
இவனோட சொந்த ஊர். சுமார் இருபது வருஷத்துக்கு முன்னாடி திருநெல்வேலியில
பெரிய ரவுடியா பெயர் வாங்கியிருந்த நட்ராஜ் கேங்கைச் சேர்ந்தவன்”
“சின்ன
வயசுல இருந்து ப்ளேடால கீறி பிக் பாக்கெட் அடிச்சு பிரபலமானதால இவனுக்கு ப்ளேடு சேகர்னு
பெயர் வந்தது. திருநெல்வேலி மாவட்டத்துல இந்த நட்ராஜ் கேங்க்
செய்யாத அட்டூழியம் இல்ல. கொலை, கொள்ளை,
கட்டப் பஞ்சாயத்து, கலவரம்னு நட்ராஜ் தலைமையில
கிட்டத்தட்ட ஒரு மினி அரசாட்சியே நடந்துட்டு இருந்த காலம் அது!”
“இந்த
சேகர், நட்ராஜ் கேங்கில் சேர்ந்த பிறகு, அவனோட நம்பிக்கையை சம்பாதிச்சு நட்ராஜூக்கு வலது கையா இருந்தான். நட்டுவோட கண்ணசைவை வச்சே ஒருத்தனை அடிக்கணுமா இல்ல போடணுமான்னு புரிஞ்சுக்கற
அளவுக்கு அவனுக்கு நெருக்கமான ஆளா இருந்தான். திருநெல்வேலிக்குள்ள
இவனுங்க அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போச்சு”
“இதெல்லாம்
அப்போ எஸ்.பியா இருந்த நம்ம விநாயகமூர்த்தி சார் காதுக்குப் போகவும்,
கடந்த 2010 ஆவது வருஷம் அவர் தலைமையில நட்ராஜையும் அவனோட நெருக்கமா இருந்த இரண்டு
மூணு அடியாளுங்களையும் என்கவுன்டர்ல போட்டுத் தள்ளுனாரு. ஆனா,
அந்த சமயத்துல, இந்த சேகர் மட்டும் எப்படியோ தப்பிச்சுட்டான்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு மறுபடியும் அது மாதிரி ஒரு ரவுடி கேங்க்
உருவாகவே இல்ல. என்கவுன்டருக்கு பயந்து யாரும் பெருசா தப்பும்
செய்யல”
“நட்ராஜ்
செத்ததுக்குப் பிறகு, சேகர் இருந்த இடம் தெரியாம காணாமல் போயிட்டான்.
ஆனா, இத்தனை வருஷத்துக்குப் பிறகு இப்போ இந்தக்
கேஸ்ல சேகரோட பெயர் அடிபடுறது எனக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு சார்!” என்றார் ஏட்டு சுயம்புலிங்கம்.
அவர் சொன்னதை
முழுமையாகக் கேட்ட செழியனோ,
“அதிர்ச்சியா இருக்கா? ஏன் ஏட்டய்யா… தப்பு பண்ணிட்டு கொஞ்ச நாளைக்கு தலைமறைவு ஆயிட்டா அவன் திருப்பியும் தப்பு
செய்ய மாட்டான்னு ஏதாவது உத்தரவாதம் இருக்கா?” என்றவன்,
வாகனத்தின் முன்பக்க கண்ணாடி வழியாக வெளியே பரவியிருந்த இருளை கூர்ந்து
பார்த்தபடி,
“தன்னோட
வாழ்க்கையை ஒருத்தன் எப்படி ஆரம்பிக்கறாங்கறதை பொறுத்து தான் அவனோட முடிவும் இருக்கும்.
ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கற மாதிரி தான் இதுவும்.
கடந்த சில நாளா நம்மளை சுத்தல்ல விட்டுட்டு அவன் எந்தக் குற்ற உணர்ச்சியும்
இல்லாம நிம்மதியா இருந்தான்ல! இப்போ அந்த நிம்மதிக்கு முழுசா
முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!” என்றான்.
பின்னர்
பெருமூச்சு விட்டபடி, “எல்லாரும் தயாரா இருங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கோவில்பட்டி
ஸ்டேஷன் போலீஸ், நமக்கு உதவியா ஸ்பாட்டுக்கு வந்துருவாங்க.
அவங்க உதவியோட அந்த சேகரை நாம பிடிச்சாகணும். நான்
சொன்னது எல்லாருக்கும் புரிஞ்சுதுல்ல!” என்று அந்த வாகனத்தில்
அமர்ந்திருந்தவர்களிடம் அரண் செழியன் கூற,
அனைவரும், “எஸ் சார்!” என்று அவனுக்கு பதிலளித்தனர்.
சுயம்புவோ, “சார்! சொல்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது. உங்களுக்கு அடிப்பட்டிருக்கற
இந்த நேரத்துல, நீங்களே
நேரடியா அக்யூஸ்டை பிடிக்க இறங்கியிருக்கறது எனக்கென்னமோ சரியா படல சார். கோவில்பட்டி போலீஸ் கூட, நம்ம க்ரூப்பும் சேர்ந்து போய்
அந்த சேகரை பிடிச்சுட்டு வர்றோம். எனக்கென்னமோ நீங்க இங்கேயே
இருக்கறது தான் நல்லதுன்னு தோணுது” என்றார்.
அதைக் கேட்டு
லேசாக புன்னகைத்தவன், “இந்த ஆப்பரேஷன்ல என்னோட உயிர் போனாக் கூட எனக்கு கவலையில்ல ஏட்டய்யா.
ஆனா, அந்த சேகரை என் கையால பிடிச்சு அவனை கோர்ட்டுல
ஒப்படைக்கிற வரைக்கும் என்னால நிம்மதியா எந்த வேலையும் செய்ய முடியாது” என்றவன், அவரை திரும்பிப் பார்த்தபடி,
“இந்த
ஆப்பரேஷன் எனக்கு நானே கொடுத்திருக்கற ஒரு சவால். இதுல ஜெயிக்கறதை
பத்தி மட்டும் தான் இப்போ என்னோட மூளை யோசிச்சுட்டு இருக்கு. நீங்க என்னைப் பத்தி கவலைப்படாம நம்ம பசங்களை ரெடி பண்ணுங்க” என்றான்.
அரண் செழியன்
பேசியதைக் கேட்ட சுயம்புலிங்கத்திற்கு தேகம் சிலிர்த்தது எனலாம்.
அதற்கு மேல்
எதைப் பற்றியும் வீணாகப் பேசாமல் அடுத்தக்கட்ட வேலைகளில் கவனம் செலுத்தினார்.
அரைமணி நேரம்
கழித்து கோவில்பட்டி போலீஸ் அந்த இடத்திற்கு வந்திருக்க, சேகரை கைது செய்வதற்கான தருணத்தை
எதிர்நோக்கி காத்திருந்தான் அரண் செழியன்.
அந்த ஊரில்
இருந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்
(Friends of police) ஒருவனிடம், சேகர் இருக்கும்
இடம் குறித்து ஏற்கனவே விசாரித்து வைத்திருந்தனர்.
நேரம் அதிகாலை
நான்கு மணியைக் கடந்திருந்த வேளையில்,
காவலர்கள் அனைவரும் சத்தம் எழுப்பாமல் அந்த ஊருக்குள் ஊடுருவினர்.
அந்தக் கிராமத்தின்
எல்லையில் தான் சேகர் இருக்கும் வீடு இருந்தது.
அரண் செழியனோ
தன் தோள் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல்,
கையில் துப்பாக்கியுடன் சேகரின் வீட்டு முன்பு கம்பீரமாக நின்றிருந்தான்.
அவனுக்குத்
துணையாக அந்த ஊரின் காவலர் குழுவும் நின்றிருக்க, பெருமூச்சொன்றை வெளியிட்டவன், “எவ்ரிபடி… டேக் பொசிஷன்ஸ்!” என்று
உத்தரவு பிறப்பிக்க, அனைவரும் சேகரின் வீட்டை சுற்றி வளைத்திருந்தனர்.
அப்பொழுது
அந்த வீட்டின் பின்பக்க வாசலை திறந்து கொண்டு அறுபது வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர்
கொல்லைப் புறத்திற்கு வந்தார்.
அன்று பௌர்ணமி
நாள் என்பதால், நிலா வெளிச்சம் இன்னும் பூமி மீது பிரகாசமாகப் பரவியிருக்க, அந்த வெளிச்சத்தில் தெரிந்த போலீசாரின் உருவங்களைக் கண்டு பயத்தில் அலறினார்
அவர்.
அந்தப் பெண்மணி
கத்தும் சத்தம் கேட்டதும், வீட்டிற்குள் யாரோ மின்விளக்கைப் போட, அரண் செழியனும்
அவனது குழுவினரும் உஷார் ஆயினர்.
அந்த வீட்டின்
முன்பக்கமாக நின்றிருந்தவன்,
மெதுவாக நடந்து பின்கட்டுக்குச் சென்றான்.
அப்பொழுது
நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவன் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தபடி, “எதுக்கு அத்தை கத்துனீங்க?”
என்று கேட்க,
“ஐயோ
மாப்பிள்ளை… நம்ம வீட்டுக்குப் போலீஸ் வந்திருக்கு!” என்று பதட்டத்துடன் அந்தப் பெண்மணி கூற, அதைக் கேட்ட
மறுநொடியே வேகமாக பின்பக்க கதவை தாழிட்டுவிட்டு வீட்டிற்குள் திரும்பி ஓடினான் சேகர்.
அதைக் கண்ட
செழியனோ துரிதமாக செயல்பட்டு அந்த வீட்டின் முன்பக்க வாசலுக்கு வந்து விட்டான்.
“கைஸ்…
பீ ரெடி. அந்த சேகர் எப்படியும் இந்த வீட்டைவிட்டு
தப்பிக்க முயற்சி செய்வான். இன்னைக்கு அவனை தப்பிக்க விட்டா…
இத்தனை நாளா நாம போட்ட அத்தனை உழைப்பும் வீணாயிடும். சோ எல்லாரும் அலர்ட்டா இருங்க” என்று செழியன் கூற,
அங்கே கூடியிருந்த அனைத்து காவலர்களும் கழுகு பார்வையுடன் உஷாராக இருந்தனர்.
அந்தச் சிறிய
வீட்டை போலீசார் முழுவதுமாகச் சுற்றி வளைத்திருக்க, அரண் செழியன் தனது குரலைச் செருமியபடி அந்த வீட்டை
நோக்கி கத்தினான்.
“சேகர்!
வீணா தப்பிக்கறதுக்கு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். உன் வீடு மட்டுமில்ல… இந்த ஊரையே மொத்தமா போலீஸ் சுற்றி
வளைச்சிருக்கு. அதனால, மரியாதையா எங்ககிட்ட
சரன்டர் ஆயிரு” என்றான்.
அவன் பேசிய
பிறகும் கூட, அந்த
வீட்டிற்குள் இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.
ஏற்கனவே
சேகரின் வீட்டிற்குப் பின்னால் நின்றிருந்த அந்த மூதாட்டியை செழியனின் கட்டளையின் பேரில்
அங்கு நின்ற போலீசார் பிடித்து வைத்திருந்தனர்.
“சேகர்!
நல்லா கேட்டுக்கோ… உன் வீட்டில் இருந்து வெளியே
வந்த வயசான அம்மா, இப்போ எங்க கஸ்டடியில் தான் இருக்காங்க.
நீ எந்தப் பிரச்சனையும் பண்ணாம சரணடைஞ்சா யாருக்கும் எந்தச் சிரமமும்
இருக்காது. நான் சொல்றது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்”
என்று மீண்டும் அந்த வீட்டைப் பார்த்து சத்தமாகப் பேசினான் செழியன்.
அவன் பேசி
முடித்து சரியாக ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க, சேகரிடமிருந்து எந்த பதில் செயல்பாடும் வரவில்லை.
‘உஃப்’
என்று பெருமூச்சுவிட்ட செழியனோ பின்னால் திரும்பிப் பார்த்தபடி,
“நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு. இதுக்கு மேல
வெயிட் பண்ண வேண்டாம். கதவை உடைச்சு வீட்டுக்குள்ள போயிரலாம்”
என்று கூற, அனைவரும், “எஸ்
சார்!” என்றபடி தயாராகினர்.
செழியன்
இவ்வாறு யோசித்து தயாரான அதே நேரத்தில்,
சரியாக அந்த வீட்டின் தலைவாசல் திறக்கப்பட்டது.
உள்ளே இருந்து
தனது இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கியபடி, மெதுவாக வெளியே நடந்து வந்தான் சேகர்.
அவனைக் கண்டதும்
செழியன் உட்பட அனைவரது கையிலும் இருந்த துப்பாக்கியின் முனைகள் சேகரைப் பார்த்து குறி
வைக்கப்பட்டன.
மெதுவாக
நடந்து வந்தவனையே துளைக்கும் பார்வைப் பார்த்த அரண் செழியன், “தப்பா எதுவும் யோசிச்சு முயற்சிக்க
வேண்டாம் சேகர். நீ எங்ககிட்ட சரணடையுறது தான் உனக்கும் உன் குடும்பத்துக்கும்
நல்லது” என்றான்.
அதைக் கேட்டபடியே
மௌனமாக நடந்து வந்தவன், செழியனை நெருங்கியதும் புயல் வேகத்துடன் தனது இடையில் சொருகி வைத்திருந்த ஒரு
கத்தியை வெளியே எடுத்து அரண் செழியனை நோக்கிப் பாய்ந்து வந்தான்.
அடுத்து
நிகழவிருக்கும் அசம்பாவிதத்தைக் கண்டு,
சுயம்புலிங்கம், “சா…ர்”
என்று பதறியபடி கத்த, அதைச் சரியாக கணித்த செழியன்,
தான் நின்ற இடத்திலிருந்து இடப்பக்கமாக நகர்ந்து குனிந்தான்.
சேகர் வைத்திருந்த
கத்தி தரையை நோக்கிப் பாய்ந்த வேளையில் திரும்பி அவனது முதுகில் ஓங்கி உதைத்தான் அவன்.
இந்த எதிர்பாராத
தாக்குதலால் நிலைத்தடுமாறி கீழே சரிந்த சேகரின் முதுகில் தனது முட்டியை மடக்கி, அவன் மீது அமர்ந்தவன்,
சேகரின் இரு கைகளையும் பின்னால் இழுத்து கட்டி தனது கைகளுக்குள் அடக்கினான்.
“ஹேன்ட்கஃப்ஸ்”
என்று அவன் கத்த, சுயம்புலிங்கம் வேகமாக ஓடி வந்து
அரண் செழியனிடம் கை விலங்கை ஒப்படைக்க, சேகரின் கைகள் இரண்டிலும்
விலங்கு பூட்டப்பட்டது.
“களக்காடு
கான்ட்ராக்டர் செல்வனை கொலை செய்த வழக்குல உன்னை கைது செய்யுறோம் சேகர்!” என்று கூறிவிட்டு அவனை எழுப்பி நிறுத்தினான்.
சரியாக அதே
சமயத்தில் சேகரின் வீட்டில் இருந்து ஒரு பெண்மணி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தாள்.
“ஐயா…
என் புருசனை விட்டுருங்க. அவர் எந்தத் தப்பும்
செய்யலைங்க!” என்று கூறி அவள் அழ,
“எங்ககிட்ட
அரெஸ்ட் வாரன்ட் இருக்கும்மா! நாளைக்கு காலையில இவனை கோர்ட்ல
ஆஜர்படுத்தப் போறோம்” என்று மட்டும் கூறிவிட்டு சேகரை தனது கட்டுப்பாட்டில்
வைத்தபடி,
“ஏட்டய்யா…
அக்யூஸ்டை வண்டியில ஏத்தச் சொல்லுங்க” என்று கூற,
அவரும் சரியென்றபடி மற்றவர்களிடம் அவனை அழைத்துச் செல்லும்படி கூறினார்.
சேகர் காவல்துறை
வாகனத்தில் பத்திரமாக ஏற்றப்பட்டதை உறுதி செய்த பிறகு, “என்கூட வாங்க!” என்று சுயம்புலிங்கத்தை அழைத்தவன், அதிரடியாக சேகரின்
வீட்டிற்குள் நுழைந்தான்.
அவர்களைத்
தொடர்ந்து சென்ற சேகரின் மனைவியோ,
“சார்! என்ன சார் தேடுறீங்க?” என்று பதட்டமாகக் கேட்க, அவளுக்கு பதிலளிக்காமல் தான்
வந்த வேலையில் கவனம் செலுத்தினான் செழியன்.
அந்தச் சிறிய
வீட்டை முழுதாக அவன் ஆராய, சுயம்புலிங்கம் செழியனுக்குத் துணையாக நின்றிருந்தார்.
வீட்டை ஆராய்ந்து
முடித்துவிட்டு பின்வாசல் வழியாக கொல்லைப் புறத்திற்கு வந்தான் அரண் செழியன்.
“ஏட்டய்யா…
டார்ச் லைட் கொடுங்க” என்று அவன் கேட்க,
சுயம்புலிங்கம், தான் வைத்திருந்த டார்ச் லைட்டை
செழியனிடம் கொடுத்தார்.
அதிலிருந்து
வந்த ஔியின் உதவியுடன் அந்தக் கொல்லைப் புறத்தில் எதையோ தேடியவனின் விழிகள், ஒரு இடத்தைப் பார்த்ததும்
விரிந்தன.
“ஏட்டய்யா…
அந்த ரோஜா செடி இருக்கற இடத்துல தோண்டுங்க” என்று
செழியன் கூற, சுற்றும் முற்றும் பார்த்தவர் அங்கே கிடந்த ஒரு
சிறிய மண்வெட்டியை எடுத்து, செழியன் சுட்டிக்காட்டிய இடத்தை தோண்ட
ஆரம்பித்தார்.
நான்கைந்து
முறை தோண்டியதும், உள்ளே அவருக்கு ஏதோ தட்டுப்பட, “சார்! இங்கே ஏதோ இருக்கு!” என்றார்.
சட்டென அங்கே
சென்ற செழியன், அந்தச் சிறிய குழியில் இருந்து கிடைத்த ஒரு ப்ளாஸ்டிக் கவரை வெளியே எடுத்தான்.
அதைத் திறந்து
பார்த்தவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய,
“அதுல என்ன சார் இருக்கு?” என்று கேட்டார் சுயம்புலிங்கம்.
“செல்வனை
கொலை செய்ய பயன்படுத்துன கத்தின்னு நினைக்கிறேன். கத்தியில இன்னும்
ரத்தக்கறை இருக்கு!” என்று செழியன் கூற, சுயம்புவிற்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
“ஒருவழியா
மர்டர் வெப்பன் கிடைச்சிருச்சு. அந்த சேகரை உள்ளே தள்ள,
நமக்கு இந்த ஒரு எவிடென்ஸ் போதும்” என்றபடி அந்தக்
கவரை அவரிடம் நீட்டி, “பத்திரம்!” என்று
கூறி அங்கிருந்து வெளியேறினான் செழியன்.
சேகரின்
மனைவியும் அவளது தாயும் அழுதபடியே நின்றிருக்க, ஒருநொடி நின்று அவர்களைப் பார்த்தவன்,
எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறினான்.
சேகரின்
வீட்டை போலீசார் கைது செய்ததால் எழுந்த சலசலப்பு கேட்டு, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்
தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து வேடிக்கைப் பார்த்தனர்.
சிறிது நேரத்திலேயே
போலீசாரால் சேகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த ஊர் முழுவதும் காட்டுத் தீயாய் பரவ
ஆரம்பித்தது.
முதலில்
சேகரை அழைத்துக் கொண்டு கோவில்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்றான் செழியன்.
அங்கே சட்டப்படி
செய்து முடிக்க வேண்டிய வேலைகளை முடித்த பின்னர், அந்த ஊர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துவிட்டு,
சேகருடன் திருநெல்வேலி நோக்கி பயணித்தனர் அரண் செழியனும் அவனது குழுவினரும்.
நேராக எஸ்.பி அலுவலகத்திற்கு சேகரை அழைத்து
வந்திருந்தான், செழியன். அவனை அங்கு அழைத்து
வந்த விஷயத்தை எஸ்.பி வேலாயுதத்திற்கும் தெரியப்படுத்தி இருந்தான்.
அந்த அலுவலகத்தில்
இருந்த ஒரு தனியறையில் கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டு ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தான்
சேகர்.
அறைக்கு
வெளியே நின்றிருந்த செழியனிடம்,
“இவன் கொலை செஞ்சுட்டு தலைமறைவா இருப்பான்னு பார்த்தா, குடும்பத்தோட ரொம்ப ரிலாக்ஸ்டா இருந்திருக்கானே சார்” என்று சுயம்புலிங்கம் கூற,
“நாம
அந்த சேகரை பிடிக்க ஸ்கெட்ச் போட்டது ஏற்கனவே அவனுக்குத் தெரிஞ்சிருக்கு ஏட்டய்யா.
இன்னைக்கு ராத்திரி நாம அங்கே போவோம்னு தெரிஞ்சே தான் அவன் வீட்டுல இருந்திருக்கான்”
என்று பதிலளித்தான் செழியன்.
“எப்படி
சார் அவ்வளவு ஆணித்தரமா சொல்றீங்க?” என்று கேட்டவரிடம்,
“ப்ராக்டிக்கலா
பார்த்தா கொலை நடந்து குறைஞ்சது இரண்டு மாசத்துக்காவது கொலைகாரன் தலைமறைவா இருக்கறது
தானே வழக்கம். ஆனா, இப்போ எலி தானாகவே பொறியில
வந்து மாட்டியிருக்குன்னா… எல்லாம் முன்னாடியே திட்டம் போட்டு
செஞ்ச மாதிரி தான் எனக்குத் தோணுது” என்றான் செழியன்.
“சார்!
அப்படின்னா இந்தக் கொலை?” என்று சற்றே பதட்டத்துடன்
கேட்ட சுயம்புவிடம்,
“நாம
நினைக்கிற மாதிரி இவன் வெறும் கருவி தான். இவனை ஏவி விட்டது யாருங்கறதை
நாம தான் கண்டுபிடிக்கணும்” என்றவன் பெருமூச்சுவிட்டபடி,
“ஓகே…
ஃபாரன்சிக்ல பேசிட்டீங்களா? மர்டர் வெப்பனை அனலைஸ்
பண்ணி DNA அன்ட் கைரேகை பரிசோதனை பண்ண சொல்லிடுங்க” என்று செழியன் கூற,
“ஏற்கனவே
எஸ்.பி ஆஃபிசில் இருந்து அவங்களுக்குத் தகவல் போயிருச்சு சார்.
காலையில கோர்ட் ப்ரொசீஜர் முடிஞ்சதும் ஃபாரன்சிக் டிபார்ட்மென்ட்கிட்ட
மர்டர் வெப்பனை ஒப்படைச்சுரலாம்” என்றார் அவர்.
அதன் பிறகு, அந்த அறைக்குள் சென்ற செழியன்
தன்னருகே நின்றிருந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், “விசாரணையை
ரெக்கார்ட் பண்ணுங்க” என்று கூற, அவரும்
அவன் சொன்னபடியே வீடியோ ஆதாரமாகப் பதிவு செய்தார்.
சேகருக்கு
முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த அரண் செழியன் அவனிடம், “நேரா விஷயத்துக்கு வர்றேன்
சேகர். நான் கேட்கறதுக்கு உன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல்
பதில் சொல்லு” என்றவன், லேசாக வலியெடுத்த
தனது தோள்பட்டையை மறுகையால் பிடித்து விட்டபடி நிமிர்ந்து அமர்ந்தான்.
“எதுக்காக
கான்ட்ராக்டர் செல்வனை கொலை செஞ்ச? அவருக்கும் உனக்கும் என்ன
சம்பந்தம்?” என்று சேகரிடம் கேட்டான்.
அவனோ நொடியும்
தாமதிக்காமல், “ஒரு பத்து, பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு
நிலம் வாங்கித் தர்றதா சொல்லி என்கிட்ட இருந்து பத்து லட்சம் வாங்கிட்டு ஏமாத்திட்டான்.
அதான் சமயம் பார்த்து அவனை போட்டு தள்ளுனேன் சார்” என்று அசால்டாக பதில் கூறினான் சேகர்.
அதைக் கேட்டதும், “நீ நட்ராஜ் கேங்கை சேர்ந்தவன்னு
கேள்விப்பட்டேன். அவர் செத்து இத்தனை வருஷமா தலைமறைவா இருந்துட்டு,
இப்போ ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அதுக்காக செல்வனை கொலை பண்ணதா சொல்ற!
உன் பேச்சு ரொம்ப முரண்பாடா இருக்கே” என்று செழியன்
கூறவும்,
“நான்
தான் சொல்றேனே சார்! செல்வனை கொலை பண்ணது நான் தான். நீங்க தாராளமா என் மேல கேஸ் போட்டு உள்ளே தள்ளுங்க. உங்க
விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தர்றேன் சார்” என்றான் அவன்.
“அப்படின்னா…
நீ யாரோட தூண்டுதலும் இல்லாம தான் இந்தக் கொலையைப் பண்ணுனதா ஒத்துக்குறியா?”
என்று கேட்ட செழியனிடம்,
“சத்தியமா
இந்தக் கொலை முழுக்க முழுக்க என்னோட தனிப்பட்ட பகைக்காக செய்யப்பட்டது தான் சார்.
இந்த உண்மையை நான் எந்தக் கோர்ட்ல வேணாலும் வந்து சொல்லுறேன்”
என்று சேகர் கூற,
“ரெக்கார்டிங்கை
நிறுத்துங்க” என்று அந்த அதிகாரிக்கு கட்டளை பிறப்பித்தான் அரண்
செழியன்.
அவன் சொன்னவாறே
அந்த ஔிப்பதிவு நிறுத்தப்பட,
“எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க” என்றான்.
மற்ற அதிகாரிகள்
அனைவரும் வெளியே சென்ற பிறகு,
தனது இருக்கையில் இருந்து எழுந்தவன், சேகரை நெருங்கிச்
சென்று அவனது சட்டை காலரை கொத்தாகப் பற்றினான்.
அவனது கண்களை
நேருக்கு நேராகத் துளைக்கும் பார்வை பார்த்தவன், “டேய்! நீ ஏதேதோ கதை சொல்லி
சட்டத்தை வேணா ஏமாத்தலாம். ஆனா, இந்தச்
செழியனை ஏமாத்த முடியாது. கூடிய சீக்கிரமே உன்னை ஏவினவன் யாருன்னு
கண்டுப்பிடிச்சு, அவனோட முகத்திரையைக் கிழிச்சு, சட்டத்துக்கு முன்னாடி கொண்டு வந்து குற்றவாளியா நிறுத்துவேன். நீயும் அதைப் பார்க்கத் தான் போற!” என்று கர்ஜனையுடன்
பேசிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
அவன் சென்ற
பிறகும் கூட, புலி
உறுமியது போன்று தன் செவியில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்த அரண் செழியனின் குரலை
நினைத்து சற்றே அரண்டு போய் தான் அந்த அறைக்குள் அமர்ந்திருந்தான் சேகர்.
அரணாய் வருவான்…
மீண்டும்
சந்திப்போம்!
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- X
- Other Apps
Comments
Nice update 👍👍👍👍
ReplyDeleteமிக்க நன்றி🤩
Delete