Ongoing Novels
அரணாய் நீ வா - Epi 13
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
அத்தியாயம்
– 13
தான் கேட்டதற்கு
பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவனிடம்,
“சொல்லுங்க செழியன்! எனக்காக உங்க போலீஸ் வேலையை
விடுவீங்க தானே!” என்று குரலில் எதிர்பார்ப்புடன் அவனிடம் கேட்டாள்
பார்கவி.
சில நொடிகள்
மௌனமாக இருந்தவன் எங்கோ பார்த்தபடி,
“என்னால அது முடியாது பாரூ…” என்றான்.
“ஏன்?”
என்று சட்டென கேட்டவளிடம்,
“லிசின்…
நேத்து நான் சொன்னதுக்கு அர்த்தம் வேற. நீ புரிஞ்சுக்காம
பேசிட்டு இருக்க. இப்போதைக்கு இந்தப் பேச்சை விடு பாரூ”
என்றான் செழியன்.
விழியோரம்
வழியவிருந்த நீரை அணை போட்டு தடுத்தபடி,
“அப்போ… நீங்க கடைசி வரைக்கும் போலீசா தான் இருக்கப்
போறீங்க. அப்படித்தானே” என்று அவள் கேட்டதற்கு
அவன் மௌனத்தையே பதிலாக அளிக்க,
“ஃபைன்…
இதுதான் உங்க முடிவுன்னா… அப்போ நானும் சில முடிவுகள்
எடுத்தாகணும்” என்றவள்,
“உடம்பை
பார்த்துக்கோங்க. நான் கிளம்புறேன்!” என்று அவனிடம் கூறிவிட்டு வேகமாக
நடந்து அந்த அறையில் இருந்து வெளியேறினாள் பார்கவி.
தன்னை விட்டு
விலகிச் செல்பவளையே, அவள் போகும் வரை பார்த்திருந்தவன் விழி மூடியபடி மெத்தையில் சரிந்தான்.
செழியனைப்
பார்த்துவிட்டு வெளியே வந்தவளிடம்,
“மாமாவை பார்த்தியாக்கா. இப்போ எப்படி இருக்கார்?”
என்று ஷாரதா கேட்க, “கிளம்பலாம் ஷாரதா!”
என்றாள்.
அதைக் கேட்டு
இனியனும், ஷாரதாவும்
புரியாமல் விழித்தனர்.
“என்னாச்சுக்கா?”
என்று மீண்டும் கேட்டவளிடம்,
“கிளம்பலாம்னு
சொன்னேன்!” என்றவள், விறுவிறுவென நடந்து
அந்த மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றாள்.
“என்னாச்சு
ஷாரூ… உங்க அக்கா ஏதோ கோபமா இருக்கிற மாதிரி தெரியுது!”
என்ற இனியனிடம்,
“அதான்
எனக்கும் ஒண்ணும் புரியல இனியன். நான் கிளம்புறேன். வீட்டுக்கு போயிட்டு உனக்கு கால் பண்ணுறேன்… மாமாகிட்ட
சொல்லிடு!” என்றவள் பார்கவியை பின் தொடர்ந்து வெளியே சென்றாள்.
இனியனோ பெருமூச்சு
விட்டபடி தன் அண்ணனை பார்ப்பதற்காக,
செழியன் இருந்த அறைக்குள் சென்றான்.
விழிகள்
மூடி, வலக்கரத்தை
மடக்கி நெற்றி மீது வைத்தபடி சோர்வாகப் படுத்திருந்தவனைக் கண்ட இனியனுக்கு ஏனோ அவனை
பார்த்துப் பாவமாக இருந்தது.
அரவம் எழுப்பாமல்
அவனிடம் சென்றவன், கட்டிலுக்கு அருகே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தான்.
சுமார் பத்து
நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்த செழியன் தன்னருகே அமர்ந்திருப்பவனை கண்டதும், “எப்போ வந்த இனியன்?
என்னை எழுப்பி இருக்கலாம்ல!” என்றான்.
“நீ
அசந்து தூங்கின மாதிரி இருந்தது. அதான் உன்னை எழுப்ப மனசில்லாம
உட்கார்ந்திருந்தேண்ணா” என்றவன்,
“இப்போ
உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
“கையில
வலி கொஞ்சம் இருக்கு. பட் இட்ஸ் ஓகே… மேனேஜ்
பண்ணிக்கலாம்” என்றான் செழியன்.
“அம்மா,
அப்பா ஃபோன் பண்ணாங்கண்ணா. டிவி நியூஸ் பார்த்துட்டு
பயந்து போய் என்கிட்ட பேசுனாங்க. நீ ஒரு தடவை அவங்ககிட்ட பேசிடு”
என்றவன் தனது அலைபேசியில் இருந்து தங்கள் தந்தையின் எண்ணுக்கு அழைத்தான்.
மறுபறம்
அழைப்பு ஏற்கப்படவும், “ஹலோ… அப்பா! அண்ணன்கிட்ட பேசுங்க!”
என்ற இனியன் அலைபேசியை செழியனிடம் கொடுத்தான்.
“ஹலோ…
அப்பா…” என்று செழியன் பேசவும்,
“செழியா…
என்னப்பா ஆச்சு? டிவியில நியூஸ் பார்த்து நானும்
அம்மாவும் ரொம்ப பயந்துட்டோம்பா… உனக்கு எதுவும் பிரச்சனை இல்லைல.
நீ நல்லா இருக்கியாப்பா?” என்று கேட்டார் சண்முகநாதன்.
“பயப்படுற
மாதிரி எதுவும் இல்லப்பா. சின்ன காயம் தான். ஒரு வாரத்துல சரி ஆயிரும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க” என்று அவன் பதிலளிக்க,
“சரிப்பா…
இப்போ நானும் அம்மாவும் திருநெல்வேலிக்கு தான் கிளம்பி வந்துட்டு இருக்கோம்”
என்றார் அவர்.
செழியன், “எதுக்குப்பா? இனியன் தான் என்கூட இருக்கானே! நான் பார்த்துக்குறேன்.
நீங்களும் அம்மாவும் எதுக்கு வீணா சிரமப்படுறீங்க” என்று பேசும் பொழுதே ஃபோனை தன் கணவரிடம் இருந்து வாங்கிய ஆதிரை செல்வி,
“செழியா…
உன்னை கவனிக்கறதை விட எங்களுக்கு இங்கே எதுவும் வெட்டி முறிக்குற வேலை
இல்ல. நான் நேர்ல வந்து உன்கிட்ட பேசிக்குறேன். உடம்பை பார்த்துக்கோப்பா” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்
ஆதிரை.
அலைபேசியை
இனியனிடம் கொடுத்தவன் மீண்டும் மெத்தையில் சாய, “அண்ணா…” என்று சற்று தயக்கத்துடன்
செழியனை அழைத்தான் அவன்.
“ம்ம்ம்…
சொல்லுடா” என்று இமைகள் திறக்காமலேயே பதிலளித்தவனிடம்,
“உனக்கும்
பார்கவி அண்ணிக்கும் ஏதாவது பிரச்சனையா?” என்று இனியன் கேட்கவும்
சட்டென விழி திறந்து அவனை நோக்கியவன்,
“ஏன்?
பிரச்சனைன்னு அவ சொன்னாளா?” என்று கேட்டான்.
“இல்லண்ணா…
அவங்க எதுவும் என்கிட்ட சொல்லலை. ஆனா, திடீர்னு கோபமா ஊருக்குக் கிளம்பி போயிட்டாங்க. அதான்
உன்கிட்ட கேக்குறேன்!” என்று இனியன் கூற, செழியனுக்கு அதிர்ச்சியுடன் கூடவே கோபமும் வந்தது.
“என்கிட்ட
ஒரு வார்த்தை கூட சொல்லாம ஊருக்குக் கிளம்பி போயிட்டாளா?” என்று
முணுமுணுத்தவன்,
“என்
ஃபோனை எடுத்துக் கொடு இனியன்” என்றபடி எழுந்து அமர்ந்தான்.
இனியனும்
அவனது அலைபேசியை எடுத்து செழியனிடம் கொடுக்க,
அதிலிருந்து பார்கவியின் எண்ணுக்கு அழைத்தான்.
மூன்று முறை
முயன்ற பிறகும் அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றதும், அரண் செழியனுக்கு கோபம் அதிகரித்தது.
“ஷாரதாவோட
நம்பர் சொல்லு இனியன்” என்று அவன் கேட்க, இனியனும் அவளது எண்ணை அவனுக்கு அளித்தான்.
தனது அலைபேசியில்
இருந்து ஷாரதாவின் எண்ணுக்கு செழியன் அழைக்க,
மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ…
நான் செழியன் பேசுறேன்மா” என்றவனிடம்,
“ஹலோ…
சொல்லுங்க மாமா” என்றாள் ஷாரதா.
“இப்போ
எங்கே இருக்கீங்க?” என்று அவன் கேட்க,
“திருநெல்வேலிக்கு
பஸ்ல போயிட்டு இருக்கோம் மாமா” என்றாள் ஷாரதா.
“சரி…
ஃபோனை உங்க அக்காகிட்ட கொடு” என்று அவன் கூறவும்,
“சரிங்க
மாமா!” என்றவள் அலைபேசியை பார்கவியிடம் நீட்டியபடி, “மாமா உன்கிட்ட பேசணுமாம்!” என்று கூற, அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதைக் கண்டதும், ‘ம்ப்ச்…’ என்று சலித்துக் கொண்ட ஷாரதா, “இங்கே பாரு… வீணா பஸ்ல வச்சு எந்த சீனும் கிரியேட் பண்ணாத. எல்லாரும்
நம்மளை தான் பார்க்குறாங்க. இந்தா ஃபோனை பிடி” என்று சொல்லி அலைபேசியை அவளது கைகளில் திணித்தாள்.
மறுபுறம்
ஷாரதா பேசுவது செழியனுக்கு நன்றாகவே கேட்டது.
வேண்டா வெறுப்பாக
ஃபோனை வாங்கியவள், “ம்ம்ம்… சொல்லுங்க!” என்று கூறவும்,
‘மேடம்…
ரொம்ப கேவமா இருக்காங்க போல!’ என்று நினைத்துக்
கொண்டான் செழியன்.
அவன் பேச
ஆரம்பித்ததுமே இனியன் எழுந்து அந்த அறையில் இருந்து வெளியே சென்று விட்டான்.
செழியனோ, “ஏன் என்கிட்ட கூட சொல்லாம
ஊருக்குக் கிளம்பிப் போன பாரூ!” என்று கேட்க,
“சொன்னா
மட்டும் என்ன செஞ்சிருப்பீங்க? உடனே உங்க போலீஸ் வேலையை விட்டிருப்பீங்களா?”
என்று சட்டென கேட்டாள் பார்கவி.
“ஏன்
பாரூ இப்படி எல்லாம் பேசுற? உனக்கே தெரியும்ல எனக்கு போலீஸ் வேலைன்னா
எவ்வளவு பிடிக்கும்னு” என்றவனிடம்,
“அதுதான்
சார் நானும் சொல்லுறேன். உங்களுக்கு பிடிச்ச போலீஸ் வேலையையே
கட்டிகிட்டு அழுங்க. ஆனா, என்னை விட்ருங்க!”
என்றாள் அவள்.
அதைக் கேட்டதும், “பாரூ…” என்று செழியன் கத்த, அவனது குரலில் தெறித்த கோபத்தைக்
கண்டவள் ஒரு கணம் பயந்து தான் போனாள்.
தன் செயல்
உணர்ந்து தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டவனோ, “தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ. எனக்கு நீயும் முக்கியம்… இந்தப் போலீஸ் வேலையும் முக்கியம்.
சூஸ் த பெஸ்ட் ஆப்ஷன் மாதிரி இரண்டுல ஏதாவது ஒண்ணை என்னால தேர்ந்தெடுக்க
முடியாது. ஐ லவ் மை ஜாப்… அன்ட் மார் தேன்
தேட் ஐ லவ் யூ பாரூ…” என்று உணர்ச்சி பொங்க அவளிடம் பேசினான்
அரண் செழியன்.
அவன் பேசிய
உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளைக் கேட்டவளுக்கு தேகம் சிலிர்த்தது.
ஆனால், தன் காதலை விட, ஈகோவே இப்பொழுது அவளது மனதை அதிகமாக ஆக்கிரமித்திருக்க, “நீங்க பேசுறதை கேட்கறதுக்கு நல்லா தான் இருக்கு செழியன். ஆனா, நான் என் வாழ்க்கைக்கு எது பெஸ்டோ அதை தான் தேர்ந்தெடுக்கணும்னு
நினைக்கிறேன். எனக்கு பீஸ்ஃபுல்லான ஒரு வாழ்க்கை தான் வேணும்”
“தினம்
தினம் என் புருஷனுக்கு என்ன ஆகுமோ… ஏதாகுமோன்னு பயந்து சாகுற
ஒரு லைஃப் எனக்கு வேண்டாம்னு தோணுது” என்று அவள் பேசிய பொழுது,
பார்கவியின் கன்னங்களை விழிநீர் நனைத்திருந்தது.
தன் அக்கா
பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷாரதாவிற்கும் கூட ஒரு நொடி கண்கள் கலங்கிப் போய் விட்டது.
செழியனோ
பார்கவி சொன்னதைக் கேட்டு பேச வாயெழாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.
அதன் பிறகு
பார்கவி அலைபேசியை தன் தங்கையிடம் கொடுக்க,
அதை வாங்கியவள், “ஹலோ… மாமா!”
என்று பேச,
“நான்
அப்புறமா பேசுறேன்மா. இரண்டு பேரும் பார்த்து பத்திரமா வீட்டுக்கு
போங்க. நான் வச்சுடறேன்” என்று கூறிவிட்டு
அழைப்பைத் துண்டித்தான்.
பார்கவி
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஒரு பெண்ணாக
அவளது பக்க நியாயமும் அவனுக்குப் புரியத் தான் செய்தது.
சிறிது நேரம்
கழித்து அந்த அறைக்குள் திரும்பி வந்தான் இனியன்.
அவர்கள்
இருவரும் பேசி முடித்ததும், இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்பதை குறுஞ்செய்தி வாயிலாக இனியனுக்குத்
தெரியப்படுத்தியிருந்தாள் ஷாரதா.
“அண்ணா…”
என்று குரலில் சோகம் கலந்து அவன் அழைக்க,
“இப்போதைக்கு
எதைப் பற்றியும் என்கிட்ட கேட்காத இனியன்” என்று அரண் செழியனிடம்
இருந்து பதில் வந்தது.
இனியனும்
அதன் பிறகு எதைப் பற்றியும் செழியனிடம் பேசவில்லை.
நேரம் இரவு
எட்டு மணியை நெருங்கிய பொழுது சண்முகநாதனும்,
ஆதிரை செல்வியும் களக்காட்டை வந்தடைந்தனர்.
செழியனைக்
கண்டதும் ஆதிரை அழ ஆரம்பிக்க,
“ம்மா… ப்ளீஸ். எனக்கு தான்
எதுவும் ஆகல இல்ல. அப்புறம் ஏன் அழுறீங்க?” என்று கேட்டான்.
“நல்லவேளை
உனக்கு எதுவும் ஆகல கண்ணா! ஆனா, ஒருவேளை
துரதிஷ்டவசமா ஏதாவது ஆகி இருந்தா…” என்று ஆதிரை கூறவும் சட்டென
பார்கவி தான் அவனது மனக்கண் முன்பு தோன்றி மறைந்தாள்.
“உன்னோட
போலீஸ் வாழ்க்கையில வேணும்னா இதெல்லாம் சகஜமா இருக்கலாம். ஆனா,
உன்னை பெத்த தாயா என்னால இதையெல்லாம் தாங்கிக்க முடியலப்பா” என்று கூறி அவர் மீண்டும் அழ,
“செல்வி…
செழியனே ஒரு பெரிய கண்டத்துல இருந்து இப்போ தான் மீண்டு வந்திருக்கான்.
எதுக்காக நீயும் உணர்ச்சிவசப்பட்டு அவன் மனசையும் கலங்க வைக்கிற?”
என்று சண்முகநாதன் கூற, ஆதிரை செல்வி சற்று ஆசுவாசப்பட்டார்.
உறவுகள்
என்று வரும்பொழுது இரும்பாய் இருக்கும் பெண்களின் மனம் கூட, பலவீனமாகிப் போகும் நிதர்சனத்தை
அன்றைய நாளில் முழுமையாக புரிந்து கொண்டான் அரண் செழியன்.
ஒரு பக்கம்…
அவன் உயிருக்கு
உயிராய் நேசிக்கும் பார்கவி!
மற்றொரு
பக்கம்…
தனக்கு உயிர்
தந்து இந்த உலகத்திற்கு தன்னை அழைத்து வந்த அன்னை என்று, அவனது வாழ்வின் முக்கியமான
இரு பெண்களின் எண்ண ஓட்டமும் ஒரே கோட்டில் பயணிப்பதை நினைத்து இப்பொழுது சந்தோஷப்படுவதா
இல்லை வருத்தப்படுவதா என்று அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை!
ஆனால், அனைத்திற்கும் மேலாக இப்பொழுது
தான் ஒரு காவல் அதிகாரியாகத் தன் கடமையை ஆற்ற வேண்டும் என்று நினைத்தவன்,
“இனியன்!
நீ அம்மாவையும் அப்பாவையும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு. எனக்கு ஸ்டேஷன்ல முடிக்க வேண்டிய சில முக்கியமான வேலைகள் இருக்கு. அதையெல்லாம் முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வந்துடறேன்” என்றான்.
“இந்த
நிலமையில எப்படிண்ணா…” என்று இனியனும்,
“டாக்டர்
தான் உன்னை நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரேப்பா… இப்போ
நீ கண்டிப்பா ஸ்டேஷன் போயாகணுமா?” என்று ஆதிரை செல்வியும் கூறியவற்றை
உதாசீனம் செய்தவன், அவர்களை வற்புறுத்தி தனது இல்லத்திற்கு அனுப்பி
வைத்தான்.
அதன் பிறகு
காவல் நிலையத்திற்கு அழைத்து ஏட்டு சுயம்புலிங்கத்தை மருத்துவமனைக்கு வரவழைத்தவன், மருத்துவரின் அறிவுரையையும்
மீறி சுயம்புவுடன் காவல் நிலையத்திற்குச் சென்றான்.
தனது உடல்
நிலையையும் பொருட்படுத்தாமல் காவல் நிலையத்திற்கு வந்த அரண் செழியனைக் கண்டு மற்ற அதிகாரிகள்
மலைத்து தான் போனார்கள்.
அவனது நேர்மையும், தனது வேலைக்கு அவன் காட்டிய
விசுவாசமும் அவன் மீதான அவர்களின் மரியாதையை மேலும் ஒரு பங்கு உயர்த்தி இருந்தது.
தனது அறைக்குள்
வந்தவன் இருக்கையில் அமர்ந்தபடி,
“ஜெகன் சாரை கூப்பிடுங்க!” என்று கூற,
“சார்…
அது! ஜெகன் சார் இப்போ ஸ்டேஷன்ல இல்ல சார்.
ஏதோ வெளி வேலையா போயிருக்கார்” என்று அவனுக்கு
பதிலளித்தார் சுயம்புலிங்கம்.
அதைக் கேட்டு
புருவம் சுருக்கியவன், “அவருக்கு கால் பண்ணி நான் கூப்பிட்டேன்னு இமீடியட்டா அவரை இங்கே வரச் சொல்லுங்க.
அவர் எங்க இருந்தாலம் சரி! இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல
என் முன்னாடி வந்தாகணும்” என்றான்.
சற்றே கர்ஜனையான
குரலில் அவன் பேச, சுயம்புலிங்கம் பதட்டத்துடன் எச்சில் விழுங்கியபடி சரியென்று தலையசைத்து விட்டு
அங்கிருந்து நகர்ந்தார்.
அரண் செழியனின்
கட்டளைப்படியே அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அவன் முன்பு வந்து நின்றார் சப் – இன்ஸ்பெக்டர் ஜெகன்.
செழியனுக்கு
சல்யூட் அடித்தபடி, “சார்! அவசரமா வரச் சொன்னீங்களாமே! என்ன விஷயம் சார்?” என்று அவர் கேட்க,
“ட்யூட்டி
நேரத்துல எங்கே போனீங்க?” என்றான் செழியன்.
“சார்!
அது… பக்கத்து ஊர்ல இரண்டு கோஷ்டிக்கு நடுவுல தகறாரு
வர மாதிரி இருக்குன்னு ஃபோன் வந்தது சார். அதான் என்ன ஏதுன்னு
விசாரிக்கறதுக்காகப் போயிருந்தேன்” என்றார் ஜெகன்.
அதைக் கேட்டதும், “எல்லாம் சரிதான் சார்!
ஆனா, ஸ்டேஷன்ல முக்கியமான இரண்டு அக்கியூஸ்ட் இருக்காங்க.
நானும் அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கற ஒரு இக்கட்டான சூழ்நிலையில நீங்க
இப்படி ஸ்டேஷனை அம்போன்னு விட்டுட்டு போகலாமா?” என்று சற்று கோபத்துடனே
கேட்டான் செழியன்.
“சாரி
சார்… என் தப்பு தான். இனிமே இந்த மாதிரி
நடக்காம பார்த்துக்குறேன்!” என்று தலைகவிழ்ந்தபடியே அவனுக்கு
பதிலளித்தார் ஜெகன்.
“எந்த
விஷயத்துல நேர்மை இல்லைன்னாலும், நாம செய்யுற வேலையில நேர்மை
இருக்கணும் சார்” என்றவன்,
“சேர்மதுரை
மேல முதல்ல FIR ஃபைல் பண்ணுங்க. நாளைக்கு
சதீஷ், சேர்மதுரை இரண்டு பேரையும் கோர்ட்ல ஆஜர்படுத்தணும்.
அந்த ப்ரொசீஜர் முடியுற வரைக்கும் நீங்க ஸ்டேஷன்லேயே இருந்து கவனிச்சுக்கோங்க”
என்று கூற,
“சரிங்க
சார்” என்று பதிலளித்தார் ஜெகன்.
பின்னர்
எழுந்து சேர்மதுரை இருந்த அறைக்குச் சென்றவன், அவன் முன்னால் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தான்.
“உன்
கூட்டாளி சதீஷ் எல்லா உண்மையையும் எங்ககிட்ட சொல்லிட்டான். நீயும்
நடந்தது என்னன்னு வாக்குமூலம் கொடுத்தேன்னா… குறைஞ்சபட்ச தண்டனையோட
தப்பிக்கலாம்” என்றவன், தனது பின்னங் கழுத்தை
தேய்த்து விட்டபடி,
“எப்படி!
நீயே உண்மையை சொல்றியா… இல்ல… உன்னை விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்கட்டுமா?” என்றான் அரண் செழியன்.
சேர்மதுரையோ
முகத்தில் எவ்வித சலனமும் காட்டாமல்,
“நானும் அந்த சதீஷூம் ஒண்ணா தான் சூப்பர் மார்கெட்ல வேலை பார்த்தோம்
சார். ஆனா, அவன்கிட்ட நான் எந்த நகையையும்
கொடுக்கல. எனக்கும் அந்த செல்வன் கொலைக்கும் எந்த சம்பந்தமும்
இல்ல சார்” என்றான்.
அவனை செழியன்
நெருங்கிச் செல்லவும், பயத்துடன் பின்னால் நகர்ந்து எச்சில் விழுங்கினான்.
“கொலைக்கும்
உனக்கும் சம்பந்தம் இல்லைன்னா… எதுக்காக காட்டுப்பகுதிக்குப்
போய் தலைமறைவா இருந்த?” என்று கேட்டவனிடம்,
“நா…ன்… நான் தலைமறைவா எல்லாம் இருக்கல சார். என் ஃப்ரண்ட்சுங்க கூட தலையணையில குளிக்க போனேன்” என்று
திமிராக பதிலளித்தான் சேர்மதுரை.
“குளிக்கப்
போனவனுக்கு கத்தியோட என்னடா வேலை? ஐயாவை பார்த்த உடனே பயந்து
போய் நீ அவரை கத்தியால காயப்படுத்துனத்துக்கும் புதுசா ஏதாவது கதை வச்சிருக்கியா?”
என்று சயம்புலிங்கம் கேட்க, அவனோ பதில் கூறாமல்
மௌனமாக அமர்ந்திருந்தான்.
“நீ
செல்வனை கொலை பண்ணலைன்ணு எனக்குத் தெரியும்!” என்று அரண் செழியன்
சட்டென கூறவும் அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தான் சேர்மதுரை.
“ஆனா,
நகைக்காக நீயும் சதீஷூம் சேர்ந்து தான் செல்வனை கொலை செஞ்சதா FIR
ஃபைல் பண்ணி கேசை முடிச்சுட்டு போயிட்டே இருப்பேன்!” என்றான்.
அந்த விசாரணை
எவ்வித ஆதாரமாகவும் பதிவு செய்யப்படவில்லை என்பதால் தைரியமாகவே அவனிடம் அவ்வாறு கூறினான்
செழியன்.
அதைக் கேட்டதும், “சார்…” என்றபடி பயந்தவன், “சத்தியமா நான் கொலை பண்ணல சார்.
தயவு செஞ்சு என்மேல அந்த மாதிரி எதுவும் கேஸ் போட்டுடாதீங்க சார்”
என்றான் அவன்.
“அப்படின்னா…
கொலையாளி யாருன்னு இப்பவே என்கிட்ட சொல்லு!” என்று
செழியன் கூற, ஒரு சில நொடிகள் யோசித்த சேர்மதுரை, சற்று தயங்கியபடி தனக்குத் தெரிந்த உண்மைகளை அவனிடம் கூறினான்.
அந்தப் பெயரைக்
கேட்டதும் அரண் செழியன் குழப்பத்துடன் ஏட்டு சுயம்புலிங்கத்தை திரும்பிப் பார்க்க, “ஆள் யாருன்னு தெரியும் சார்.
புடிச்சுரலாம்” என்றார் அவர்.
அதன் பிறகு, சேர்மதுரை மற்றும் சதீஷ் கூறிய
உண்மைகளை வீடியோ ஆதாரமாகப் பதிவு செய்த பிறகு, அடுத்தக்கட்ட வேலைகள்
அனைத்தும் துரிதமாக நடந்தன.
இரவு வீட்டிற்குக்
கூட செல்லாமல் கை வலியையும் பொறுத்துக் கொண்டு, கொலைகாரனைப் பிடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
செய்தான் அரண் செழியன்.
சதீஷையும்
சேர்மதுரையையும் ஜெகனின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டு, கோவில்பட்டி நோக்கி தனது குழுவினருடன்
விரைந்திருந்தான்.
அரணாய் வருவான்…
வணக்கம்
ப்ரெண்ட்ஸ்,
ஒரு long break க்கு அப்புறம் உங்க
எல்லாரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இத்தனை நாள் எபிக்காக
உங்க எல்லாரையும் wait பண்ண வைத்ததற்கு என்னை மன்னிக்கவும்.
இனிமேல்
தொடர்ந்து அத்தியாயங்கள் பதிவிடப்படும்.
வழக்கமா கதைக்கு தர்ற ஆதரவை இனிமேலும் தருவீங்கன்னு நம்புறேன்.
நன்றி நன்றி!
மீண்டும்
சந்திப்போம்…
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- X
- Other Apps
Comments
Nice update dear 👍👍👍
ReplyDeleteThank you😊
DeleteNice long gap
ReplyDeleteThank you! Will update episodes regularly hereafter!!😊
Delete