அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 21 (Final)

அரணாய் நீ வா!
பாகம் – 2
அத்தியாயம் – 20
தனது மடிக்கணினியை செயல்படுத்திய அரண் செழியன், கனகரத்தினத்தின் கணினியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்தான்.
ஆனால், அதை செய்வது அவனுக்கு சற்று சிரமமாகத் தான் இருந்தது. செழியன் ஒன்றும் கணினியின் இயக்கங்கள், மென்பொருள் ஆகியவை குறித்து கரைத்து குடித்தவன் இல்லையே!
இது போன்று ஹேக்கிங் செய்வது அவனுக்கு முதல் முறை என்பதால் மாதேஷூக்கு அழைத்து சில சந்தேகங்களை அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்க, ஒரு மணிநேரத்தில் கிட்டத்தட்ட அதைப் பற்றி கற்றுக் கொண்டான்.
இப்பொழுது கனகரத்தினத்தின் கணினி, அரண் செழியனின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது.
கணினி என்ன? கனகரத்தினத்தின் குடுமியே இப்பொழுது அவனது கைகளில் தான் இருந்தது.
இடையில் ஜீவானந்தத்துக்கு அழைத்தவன், அவனுக்கு அங்கு எதுவும் பிரச்சனை இல்லை என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு தனது வேலைகளைத் தொடர்ந்தான்.
சில மணிநேரத் தேடலுக்குப் பிறகு, கணினி திரையைப் பார்த்துக் கொண்டிருந்த செழியனின் விழிகள் பிரகாசமாக விரிந்தன. அவனது உதட்டிலோ வெற்றிப் புன்னகை பரவியிருந்தது.
கடந்த முறை கனகரத்தினத்தின் கட்சி ஆளும் அரசாக இருந்த போது, தொடர்ந்து பத்து ஆண்டுகள் அக்கட்சி ஆட்சியில் இருந்தது. கனகரத்தினமோ பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
மாநிலத்தின் அரசுத் துறை சார்ந்த கட்டுமானங்கள் நிறுவுதல், புதிய பாலங்கள் கட்டமைத்தல், சாலைகள் அமைத்தல், பொதுத்துறை நிறுவனங்களின் கட்டிட பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்புகள் போன்றவற்றை அத்துறை அமைச்சராக இருந்து நிர்வகித்து வந்தார் அவர்.
அப்பொழுது அத்துறைக்கு வழங்கப்பட்ட நிதிகள் குறித்த வங்கி விபரங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்த கோப்புகள் தான் இப்போது செழியனுக்கு கிடைத்தன.
உடனடியாக அதை தனது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து கொண்டான் அவன்.
ஒன்றல்ல! இரண்டல்ல!
நூற்றுக்கணக்கான கோப்புகள் அவனுக்கு கிடைத்தன. அனைத்தையும் பத்திரமாக பதிவிறக்கம் செய்தவன், அந்தக் கோப்புகளில் இருந்த பணப் பரிவர்த்தனைகளை முழுதாக ஆராய்ந்தான்.
கிட்டத்தட்ட பல நூறு கோடி ரூபாயை கனகரத்தினம் பல்வேறு வங்கி கணக்குகளில் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. அதுமட்டுமன்றி அவருக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்குள் இருப்பது குறித்த விபரங்களும் அதில் இருந்தன.
அதைக் கண்டவனோ, ‘அந்தக் கனகரத்தினத்தோட அரசியல் அத்தியாத்தை முடிக்க இந்த ஒரு ஆதாரம் போதும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
செழியன் மும்முரமாக கணினியில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவனது அலைபேசி ஒலியெழுப்பியது.
எடுத்துப் பார்த்தான்!
பார்கவி தான் அழைத்திருந்தாள்.
அழைப்பை ஏற்றவனிடம், “ரொம்ப பிசியா செழியன்?” என்று அவள் கேட்க,
“ஆமா பாரூ… ஒரு முக்கியமான வேலையா இருந்தேன். சாப்பிட்டியாம்மா?” என்று அக்கறையாக அவளிடம் விசாரித்தான்.
“ம்ம்ம்… சாப்பிட்டேன். நீங்க?” என்று அவள் கேட்க,
“சுத்தமா பசியில்ல பாரூ. இனிமே தான் ஏதாவது சாப்பிடணும்” என்றான்.
“மணி பதினொண்ணு ஆகுது. இன்னுமா நீங்க சாப்பிடல?” என்று அவள் சொன்ன பொழுது தான் நேரம் கடந்துவிட்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது.
“ஓ… பதினோரு மணி ஆயிருச்சா? வேலை பிசியில நேரம் போனதே தெரியல” என்றவனிடம்,
“அந்த MLA விஷயம் என்னாச்சு செழியன்? தம்பிங்க தந்த ஹேக்கிங் டிவைஸ் சரியா வேலை செஞ்சுதா?” என்று கேட்டாள் பார்கவி.
“ம்ம்ம்… சூப்பரா ஒர்க் ஆச்சு பாரூ. கூடிய சீக்கிரமே நாம எதிர்பார்த்தது எல்லாம் நடக்கப் போகுது” என்றான் அவன்.
அதன் பிறகு சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். நீண்ட நேரம் கணினியில் வேலை செய்ததால் அவனுக்கு பசியும், களைப்புமாக இருக்க, அந்த வேலைக்கு சிறு இடைவேளை கொடுத்து, சாப்பிடச் சென்றான்.
உண்டு முடித்துவிட்டு திரும்பி வந்தவன் மீண்டும் கணினிக்கு முன்பு தான் அமர்ந்தான்.
கனகரத்தினத்தின் கணினியில் பொருத்திய ஹேக்கிங் கருவி வழியாக அந்தக் கம்பியூட்டரை அவன் நினைத்த நேரத்தில் இணைக்கவும், அணைக்கவும் முடியும்.
இப்பொழுது மீண்டும் அவரது கணினியை உயிர்ப்பித்து வேறு ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று பார்த்தான்.
அதில் சில சிசிடிவி வீடியோக்கள் இருப்பது தெரிய, அதை ஓடவிட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவரது அலுவலக அறையில் இருக்கும் சிசிடிவி கேமரா, ரத்தினத்தின் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்க, அதிலிருந்த சில காணொலிகளை அவனால் பார்க்க முடிந்தது.
வரிசையாக வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு காணொலியைக் கண்டதும் விழி விரித்தான்.
அந்தக் காணொலியில், கார்த்திகேயன் யாரோ ஒரு நபருடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
அந்த நபர் தொப்பி அணிந்திருந்ததால், அவரது முகம் வீடியோவில் முழுதாகத் தெரியவில்லை.
அரண் செழியனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் அந்தக் காணொலியை முழுவதுமாக ஓடவிட்டு பார்த்தான்.
சில நிமிடங்கள் கடந்த பிறகு, மற்றொரு நபர் அந்த அறைக்கு வந்து கார்த்திகேயனிடம் ஒரு பையைக் கொடுத்துவிட்டு செல்ல, அதை தொப்பி அணிந்திருந்தவனின் கையில் கொடுத்தான் கார்த்திகேயன்.
அப்பொழுது தான் தொப்பியைக் கழற்றி கீழே வைத்த அந்த நபரின் முகத்தைப் பார்த்தான் அரண் செழியன். பார்த்த உடனேயே அவனது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன!
கார்த்திகேயனுடன் பேசிக் கொண்டிருந்த அந்த நபர் வேறு யாருமல்ல, கான்டிராக்டர் செல்வன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ரவுடி சேகர் தான்.
கார்த்திகேயனிடம் இருந்த பையை வாங்கியவன் அதிலிருந்த சில லட்ச ரூபாய் பணக் கட்டுகளை வெளியே எடுத்துப் பார்ப்பது வீடியோவில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
காணொலி பதிவாகியிருந்த தேதியைப் பார்த்தான் செழியன். பின்னர் சுயம்புலிங்கத்திற்கு அழைத்து கான்டிராக்டர் செல்வன் கொலை செய்யப்பட்ட நாளை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
அந்த வீடியோ பதிவு சரியாக அவர் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவாகியிருப்பது அவனுக்குத் தெரிந்தது.
உடனடியாக அந்தக் காணொலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டவனுக்கு பெரிதாக எதையோ சாதித்த உணர்வு.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் போல, கனகரத்தினத்திற்கு எதிராகவும், கார்த்திகேயனுக்கு எதிராகவும் பல ஆதாரங்கள் இப்பொழுது அரண் செழியனின் கைகளில் இருந்தன.
இனி அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்துவது தான் தனது ஒரே வேலை என்கிற மன நிம்மதியுடன் உறங்கச் சென்றான் அவன்.
இப்படியே இரண்டு நாட்கள் கடந்திருக்க, அன்று தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
கடந்த இரண்டு நாட்களாக செழியனிடமிருந்து பெரிதாக அவளுக்கு அலைபேசி அழைப்புகள் வரவில்லை.
முன்தினம் ஒருமுறை மட்டுமே அழைத்து அவளிடம் பேசியிருந்தான். அவனை பிரிந்து ஊருக்கு வந்ததில் இருந்து ஒரு வெறுமை அவளை ஆட்கொண்டிருக்க, தற்போது அவனது குரலை கேளாதது அவளுக்கு மிகவும் தவிப்பாக இருந்தது.
அதனால், மனதை திசை திருப்பும் நோக்கத்தில் தான் இப்பொழுது புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து பழச்சாறு நிரம்பிய கப்பை எடுத்துக் கொண்டு தனது சகோதரியைத் தேடி வந்தாள் ஷாரதா.
பார்கவி மதுரைக்கு வந்த பிறகு, அவளும் தனது அன்னையின் வீட்டில் தான் தங்கியிருக்கிறாள்.
“அக்கா! இந்தா… இந்த ஜூசை குடி!” என்று ஷாரதா அவளிடம் கப்பை நீட்ட நிமிர்ந்து பார்த்தவள்,
“எனக்கு வேண்டாம் ஷாரதா” என்றாள்.
“அதெல்லாம் முடியாது. நீ இந்த ஜூசை குடிச்சு தான் ஆகணும். வயித்துல இருக்கற குட்டிப் பாப்பாவுக்கு பசிக்கும்ல” என்று கூறியவள், பார்கவியின் கையில் கப்பை கொடுத்து, அவளை பழச்சாறு அருந்த வைத்தாள்.
அப்பொழுது ஷாரதாவின் கையிலிருந்த அலைபேசி ஒலியெழுப்ப, எடுத்து பேசினாள்.
“ஹலோ! இனியன்” என்று பேசியவளிடம் மறுபுறம் பேசியவன் என்ன சொன்னானோ தெரியவில்லை!
அவளோ, “அப்படியா? சரி நான் உடனே பார்க்கிறேன்” என்றபடி ஃபோனை வைத்தாள்.
தங்கை பேசியதைப் பார்த்த பார்கவியோ, “என்னாச்சு ஷாரூ?” என்று வினவ,
“அக்கா! செழியன் மாமா, டிவி பிரேக்கிங் நியூஸ்ல வர்றாங்களாம். இனியன் இப்போ தான் ஃபோன் பண்ணி சொன்னான்” என்றாள்.
“பிரேக்கிங் நியூசா? ஏன்? என்னாச்சு?” என்று பதறியவளை,
“அக்கா! ஏன் பதட்டப்படுற” என்றபடி அவளது கரம் பற்றி எழுப்பியவள்,
“வீட்டுக்கு போய் டிவியில் பார்க்கலாம் வா” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.
இருவரும் சோஃபாவில் அமர, பார்கவி தொலைக்காட்சியைப் போட்டு செய்திச் சேனலை ஓட விட்டாள்.
அதில், ‘அண்மைச் செய்தி! கான்டிராக்டர் செல்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!’
‘கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில், எதிர்கட்சி MLA கனகரத்தினத்தின் மகன் கார்த்திகேயனை அதிரடியாக கைது செய்தது காவல்துறை’
‘குற்றவாளியை தகுந்த ஆதாரங்களுடன் பிடித்த இன்ஸ்பெக்டர் அரண் செழியனுக்கு மாநில காவல்துறை வாழ்த்து!’ என்று செய்தி ஔிபரப்பாக, பார்கவிக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சியாக இருந்தது.
‘சாதித்து விட்டான்! தன் கணவன் சொன்னதை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டான்!’ என்கிற நினைப்பே அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.
துர்காவின் கணவன் மரணத்திற்கும், அவளுக்கு அவன் செய்த கொடுமைகளுக்கும் மட்டுமல்ல; சுபத்ராவின் விபத்திற்கும் சேர்த்து நியாயம் வாங்கி கொடுத்து விட்டான் என்பது அவளுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது.
தொலைக்காட்சி திரையில் கார்த்திகேயனை, செழியன் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சிகளை கண்டவள், தன் கணவனையே தான் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாவ்…. மாமா செம்மக்கா. MLAவோட மகனையே தைரியமா கைது பண்ணியிருக்காரே! ஐ ஆம் சோ ப்ரௌட் ஆஃப் ஹிம்” என்றாள் ஷாரதா.
அதைக் கேட்ட பார்கவியோ, “ம்ம்ம்… உண்மை தான் ஷாரூ! நான் தான் முட்டாள்தனமா போலீஸ் வேலையை விட்டா தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி செழியனை தேவையில்லாம கொஞ்ச நாள் கஷ்டப்படுத்திட்டேன். நல்ல வேளை என் பேச்சை கேட்டு அவர் அப்படி செய்யல” என்று சொன்ன பார்கவியிடம்,
“ம்ப்ச்… பழசை எல்லாம் விடுக்கா. இப்போ நாம மாமாவோட திறமையை நினைச்சு பெருமைப்பட வேண்டிய டைம்” என்றவள், இந்த விஷயத்தை தன் தாய் தந்தையிடம் கூறுவதற்காக எழுந்து சென்றாள்.
பார்கவிக்கோ செழியனிடம் உடனே பேச வேண்டும் என்கிற ஆவல் எழ, அவனது அலைபேசிக்குத் தொடர்பு கொண்டாள்.
ஆனால், மறுபுறம் அவன் அழைப்பை ஏற்கவில்லை. ஒருவேளை வேலையில் பிசியாக இருப்பான போலும் என்று நினைத்தவள், செய்திகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
இது இப்படி இருக்க, கார்த்திகேயன் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து அந்த ஊரே மிகவும் பரபரப்பாக இருந்தது.
கனகரத்தினத்தின் வீட்டிற்குச் சென்ற அரண் செழியன், அரெஸ்ட் வாரன்டை காட்டி அவரது மகனை அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தான்.
கடந்த இரண்டு நாட்களாக அவனை கைது செய்வதற்கான அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்து முடித்திருந்தான்.
எஸ்.பி வேலாயுதத்திடம் பேசி கூடுதல் காவலர்களையும் தங்கள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக வரவழைத்திருந்தான்.
கார்த்திகேயனை கைது செய்த பிறகு, எப்படியும் கனகரத்தினம் தனது ஆட்களை ஏவி கலவரத்தை வரவழைக்க வாய்ப்புகள் அதிகம் என்பது அவனுக்குத் தெரியும்.
காவல் நிலையத்திற்கு வந்தவன் கார்த்திகேயனை ஒரு தனியறைக்குள் அடைத்து வைக்க, பின்னாலேயே தனது கட்சி ஆட்களுடன் அங்கு வந்து சேர்ந்தார் கனகரத்தினம்.
அவரை கண்டதும் அனைத்து காவலர்களும் எழுந்து நிற்க, “எங்கய்யா அந்த இன்ஸ்பெக்டரு?” என்று சுயம்புலிங்கத்திடம் கேட்டார் அவர்.
“சார் அவரோட ரூம்ல இருக்காருங்க ஐயா” என்று சுயம்பு பதிலளிக்க, எவ்வித முன் அனுமதியுமின்றி அரண் செழியனின் அறைக்குள் நுழைந்தார் கனகரத்தினம்.
அவரது வருகை செழியன் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால், முகத்தில் எவ்வித உணர்ச்சி மாறுதல்களும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
“வாங்க சார்… உட்காருங்க” என்று தனக்கு முன்னால் இருந்த இருக்கையை அவன் கை காட்ட,
“ஏய்! நான் என்ன இங்கே சாவகாசமா உட்கார்ந்து விருந்து சாப்பிட வந்தேன்னு நினைச்சியா?” என்றவர் கோப மிகுதியுடன்,
“தப்பு பண்ணுறீங்க இன்ஸ்பெக்டர் தம்பி… பெரிய தப்பு பண்ணுறீங்க. நான் ம்ம்ம்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்! இந்த ஊரே பத்தி எரியும் தெரியும்ல?” என்று கூற,
சிரித்தபடியே தனது இருக்கையில் இருந்து எழுந்தவன், “ஐயோ! அந்த சீனெல்லாம் இங்கே இல்ல சார்” என்றபடியே அவரை நெருங்கி வந்து,
“இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க! நான் இருக்கற வரைக்கும் இந்த ஊருக்குள்ள ஒரு துரும்பை கூட உங்களால அசைக்க முடியாது” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு கனகரத்தினத்துடன் வந்த அல்லக்கைகள், “ஏய்!!” என்று கோரசாகக் கத்த, அவர்களை தனது அனல் கக்கும் ஒற்றை பார்வையாலேயே அடக்கி அமைதிப்படுத்தினான் செழியன்.
“இனிமே ஒருத்தரும் இங்கே நிற்க கூடாது. அவுட்!” என்றவன், “ஏட்டய்யா!” என்று கத்த, வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தார் சயம்புலிங்கம்.
“சொல்லுங்க சார்!” என்றவரிடம்,
“இம்மீடியட்டா இவங்க எல்லாரையும் இங்கிருந்து வெளியே அனுப்புங்க. என் ஸ்டேஷன்ல தேவையில்லாத சத்தம் எதுவும் வரக் கூடாது” என்றான்.
சுயம்புவும், “ஓகே சார்!” என்றபடியே கனகரத்தினத்தைப் பார்க்க, அவர் செழியனை முறைத்தபடியே தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அங்கிருந்து வெளியேறினார்.
அவர் அங்கிருந்து செல்லும் பொழுது அவருக்குப் பின்னால் சென்ற ஜீவானந்தம் செழியனை திரும்பி பார்க்க, அவனிடம் நன்றி கலந்த பார்வை ஒன்றை செலுத்தினான் அரண் செழியன்.
அந்த அறையில் இருந்து வெளியேறி, முன் அறையில் நின்றிருந்த சப் – இன்ஸ்பெக்டர் ஜெகனை பார்த்த கனகரத்தினமோ, “என்னய்யா? அந்த இன்ஸ்பெக்டர் என் மகனை கைது செய்யுறதுக்கு எல்லா வேலையையும் ரகசியமா செஞ்சிருக்கான். நீ என்ன? இங்கே உட்கார்ந்து மிக்சர் தின்னுட்டு இருந்தியா?” என்றவரிடம்,
“சத்தியமா எனக்கு எந்த விஷயமும் தெரியாதுங்கய்யா” என்றார் ஜெகன்.
“மாசா மாசம் சுளையா பணம் வாங்குறேல்ல… அதுக்கு கொஞ்சமாவது விசுவாசமா இருந்திருக்க வேண்டாம்?” என்று பல்லை கடித்தபடி பேசியவர்,
“உன்னை அப்புறமா கவனிச்சுக்குறேன்” என்றபடி,
“என் மகனை எங்கே வச்சிருக்கீங்க. நான் இப்பவே அவனை பார்க்கணும்” என்று கத்தினார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த அரண் செழியனோ, “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல சார். உங்க மகனை இன்னும் கொஞ்ச நேரத்துல கோர்டுக்கு கூட்டிட்டு போயிருவோம். எதுவா இருந்தாலும் அங்கே வந்து பேசிக்கோங்க” என்றான்.
அதன் பிறகு அவர் உள்ளே சென்றுவிட, அந்தக் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறினார் கனகரத்தினம்.
ஜீவானந்தத்துடன் சேர்ந்து காரில் ஏறியவர், “குமரவேலுக்கு ஃபோன் போடு ஜீவா” என்று கூற, அவனும் அவரது மூத்த மகனுக்கு அழைத்தான்.
அவன் அழைப்பை ஏற்றதும் ஃபோனை அவரிடம் அவன் கொடுக்க, “குமரா! வக்கீலை பார்த்து பேசிட்டியா? என்ன சொல்றாரு?” என்றார்.
“தம்பியை வெளியே கொண்டு வர்றதுக்கான வேலையை தான் பார்த்துட்டு இருக்கோம்பா. கேஸ் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கறதால தம்பியை வெளியே கொண்டு வர்றதுல சிக்கல் இருக்குறதா வக்கீல் சொல்றாரு” என்று அவன் கூற, அவருக்கு வியர்த்து கொட்டியது.
முகத்தில் வியர்வை வழிய, மூச்சு வாங்கியபடி அமர்ந்திருந்தவரை கண்ட ஜீவானந்தத்திற்கு ஒரு பக்கம் குற்ற உணர்ச்சியாக இருந்தாலும், தன் வாழ்க்கை ஆபத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு மனதை கல்லாக்கியபடி தண்ணீர் பாட்டிலை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
“தண்ணி குடிங்கய்யா” என்று அவன் கூற, “வேண்டாம் ஜீவா! முதல்ல வீட்டுக்கு கிளம்புவோம்” என்றார்.
கனகரத்தினம் அங்கிருந்து சென்ற பிறகு அரண் செழியனைத் தேடிச் சென்றார் சுயம்புலிங்கம்.
வேகமாகச் சென்று அவனுடன் கைக் குலுக்கியவர், “வாழ்த்துகள் சார்! சொன்ன மாதிரியே சாதிச்சு காட்டிட்டீங்க” என்றவர்,
“நான் கூட எங்கே அந்த MLAவை எதிர்க்க போய் உங்களுக்கு ஆபத்து வந்துருமோன்னு நினைச்சேன். ஆனா, நீங்க நிஜமாவே தைரியசாலி தான் சார். உங்க கீழே வேலை செய்றதை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன்” என்று கூற,
“நான் ஒரு போலீசா என்னோட கடமையை தான் செஞ்சேன் ஏட்டய்யா! இந்த மாதிரி ஆளுங்களுக்கு பயந்து நாம கடமையை செய்யாம விட்டா, நம்ம நாட்டுல ஈசல் மாதிரி குற்றவாளிங்க பெருகிடுவாங்க” என்றான் செழியன்.
சுயம்புவும் சிரித்தபடியே அதற்கு ஆமோதிப்பாக தலையசைக்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல அக்கியூஸ்டை கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணணும். எல்லா ஏற்பாட்டையும் கவனிங்க” என்றான்.
அவரும் சரியென்றபடி தனது வேலைகளை கவனிக்கச் சென்று விட்டார்.
அப்பொழுது தான் சற்று ஆசுவாசமாக உணர்ந்த செழியன் தனது அலைபேசியை எடுத்து பார்த்தான்.
அதில் ஏகப்பட்ட விடுபட்ட அழைப்புகள் இருக்க, முதல் வேலையாக தனது மனைவியின் எண்ணுக்கு அழைத்தான்.
அரணாய் வருவான்…
பிரியமுடன்,
சௌஜன்யா…
Intresting update 👍👍👍👍
ReplyDelete❤️❤️
Deletenice
ReplyDelete