Ongoing Novels
அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 2
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
பாகம் – 2
அத்தியாயம் – 2
பார்கவியின்
பார்வை தனக்கெதிரே இருந்த அரண் செழியன் மேல் இருக்க, உணவு அவளது தொண்டையில் சிக்குண்டு இருமல் வந்தது.
கண்கள் கலங்கிப்
போய் இருமியவளைத் திரும்பிப் பார்த்த ஷாரதா,
“அக்கா! இந்தா தண்ணி குடி” என்று தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்ட, நீரை வாங்கி அருந்தினாள்.
அவளையே பார்த்துக்
கொண்டிருந்த செழியன், வேகமாக உண்டு முடித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.
மண்டபத்திற்குள்
சென்றவனின் கண்களில் அங்கே அமர்ந்திருந்த மாதேஷூம், ராஜேஷூம் தென்பட, ஏதோ ஒரு
உந்துதலில் அவர்களைத் தேடிச் சென்றான் அவன்.
அவர்களுக்கு
பின்னால் இருந்த நாற்காலியில் செழியன் அமர,
இருவரும் மும்முரமாக தங்களது மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தனர்.
செழியன் வந்ததை இருவரும் கவனிக்கவே இல்லை.
சுற்றுப்புறம்
மறந்து மடிக்கணினியை அவர்கள் உபயோகப்படுத்த,
அதைக் கண்டு புருவம் சுருக்கிய செழியன், மெதுவாக
எட்டிப் பார்த்தான்.
அந்தக் கணினி
திரையில் ஏதோ கம்ப்யூட்டர் புரோக்ராம்கள் இருப்பது தெரிய, அவனுக்கு குழப்பமாக இருந்தது.
“ம்ம்ம்…
ம்ம்ம்…” என்று அவன் தொண்டையைச் செருமவும் பதறிப்
போன இருவரும், சட்டென தங்கள் மடிக்கணினியின் திரையை மூடினார்கள்.
இருவரும்
ஒன்றாகப் பின்னால் திரும்பிப் பார்க்க,
அவர்களை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அரண் செழியன்.
“இரண்டு
பேரும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று அவன் கேட்க,
“அது…
அது… காலேஜ் ப்ராஜெக்ட்” என்று மாதேஷூம்,
“சும்மா
கேம் விளையாடினோம்” என்று ராஜேஷூம் ஆளுக்கு ஒரு பதிலை அவனிடம்
கூறினார்கள்.
இருவரும்
வெவ்வேறு பதில்களைச் சொல்லி அவனிடம் தொக்காக மாட்டிக் கொள்ள, “ப்ராஜெக்டா? இல்ல கேமா? இப்படி ஆளுக்கு ஒரு பதிலை சொன்னா நான் என்ன
பண்ணுறது. சட்டுன்னு முடிவு பண்ணி ஒரு பதிலை சொல்லுங்க”
என்றான் செழியன்.
அதைக் கேட்ட
இருவரது முகத்திலும் கலவரம் தென்பட,
செழியனின் சந்தேகம் வலுத்தது.
“நான்
கேட்டதுக்கு பதில் சொன்னா நல்லா இருக்கும்!” என்று அவன் சற்று
கண்டிப்பான குரலில் கூற, இருவரும் தலைகவிழ்ந்தபடியே அமர்ந்திருந்தனர்.
இதுவே அவனது
இடத்தில் இனியன் இருந்திருந்தால்,
இரண்டு ஜோக்குகளை அள்ளிப் போட்டு அவனை கலாய்த்துவிட்டு சென்றிருப்பார்கள்.
ஆனால், இப்பொழுது அவர்கள் முன்பு
இருப்பது அரண் செழியன் ஆயிற்றே!
அவனுக்கு
திருப்தியான பதிலை கூறும் வரை தங்களால் அங்கிருந்து செல்ல முடியாது என்பது இருவருக்கும்
நன்றாகவே தெரியும்.
பொறுத்திருந்து
பார்த்தவனுக்கு, பொறுமை பறிபோகவும், “அந்த லேப்டாப்பை என்கிட்ட கொடு!”
என்று ராஜேஷிடம் கேட்டான்.
அவனோ தயக்கத்துடன்
நிமிர்ந்து மாதேஷைப் பார்க்க,
அவன் மடிக்கணினியை அரண் செழியனிடம் கொடுக்கும்படி கண்ணசைவில் கூறினான்.
வேறு வழியில்லாமல்
அந்த லேப்டாப்பை செழியனிடம் கொடுத்தான் ராஜேஷ்.
இருவரையும்
முறைத்தபடியே அதை வாங்கியவன்,
அவர்களின் மடிக்கணினியைத் திறந்து பார்த்தான்.
சில நிமிடங்கள்
அதை ஆராய்ச்சி செய்தவனுக்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது.
“யாரோட
கம்ப்யூட்டரை ஹேக்(Hack) பண்ணியிருக்கீங்க?” என்று புருவங்கள் இடுங்கக் கேட்டவனிடம், இருவரும் மௌனம்
காக்க,
“அடுத்தவங்களோட
கம்ப்யூட்டரை ஹேக் பண்ணுறது சட்டப்படி குற்றம். இது உங்க இரண்டு
பேருக்கும் தெரியுமா இல்லையா?” என்று அவன் சற்று அதட்டவும் இருவரும்
பயந்து போயினர்.
“இப்போ
எனக்கு பதில் சொல்றீங்களா? இல்ல உங்க அப்பாவை கூப்பிட்டு பேசட்டுமா?”
என்று அரண் செழியன் கோபக் குரலில் கேட்கவும்,
“மாமா…
மாமா… வேண்டாம் மாமா. நாங்க
உண்மையை சொல்லிடுறோம். அப்பாகிட்ட மட்டும் இதைப் பற்றி எதுவும்
சொல்லிடாதீங்க” என்று ராஜேஷ் பதட்டமாகக் கூறவும், நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி,
“சரி
சொல்லு. இரண்டு பேரும் சேர்ந்து யாரோட கம்ப்யூட்டரை ஹேக் பண்ணீங்க?”
என்று கேட்டான் செழியன்.
“எங்க
கெமிஸ்ட்ரி ப்ரொஃபசரோட கம்ப்யூட்டரை தான் ஹேக் பண்ணோம்” என்று
உண்மையைக் கூறினான் மாதேஷ்.
“ஏன்?”
என்று கேட்ட செழியனிடம்,
“ஷாரதா
அக்காவோட கல்யாணத்துக்காக நிறைய லீவ் எடுத்துட்டோம். வரப்போற
இன்டர்னல் எக்சாமுக்கு படிக்கவே இல்ல. இந்த எக்சாம்ல ஃபெயிலானா
பேரன்ட்சை கூட்டிட்டு வரணும்னு எங்க கெமிஸ்ட்ரி சார் சொல்லியிருந்தாரு. அதான் காலேஜ்ல வச்சு அவருக்குத் தெரியாம அவரோட லேப்டாப்பை ஹேக் பண்ணோம்.
எக்சாமுக்கு அவர் ரெடி பண்ணி வச்சிருக்கற க்வஸ்டின் பேப்பரோட சாஃப்ட்
காப்பி ஏதாவது அதில் இருக்கான்னு தான் இப்போ தேடிட்டு இருந்தோம்” என்று மாதேஷ் விவரமாகக் கூறவும், அரண் செழியன் ஆச்சர்யத்தில்
இருவரையும் விழி விரித்துப் பார்த்தான்.
“நான்
உங்க இரண்டு பேரையும் என்னமோ நினைச்சேன்டா. ஆனா, சும்மா சொல்லக் கூடாது. பலே ஆளுங்கதான் நீங்க”
என்றவன்,
“சரி!
இப்படி கஷ்டப்பட்டு உங்க புரொஃபசரோட லேப்டாப்பை ஹேக் பண்ணதுல ஏதாவது
பலன் கிடைச்சுதா?” என்று கேட்க, இல்லை என்று
தலையசைத்தனர் இருவரும்.
ராஜேஷோ, “கெமிஸ்ட்ரி எக்சாம் க்வஸ்டின்
பேப்பர் கிடைக்கும்னு பார்த்தா, எங்க சாருக்கும் பிசிக்ஸ் மேடமுக்கும்
நடுவுல இருக்கற கெமிஸ்ட்ரி தான் கிடைச்சது” என்று கூற,
“என்ன
கெமிஸ்ட்ரி… பிசிக்சுன்னு உளர்ற? கொஞ்சம்
புரியுற மாதிரி சொல்லு” என்றான் செழியன்.
“நீயே
சொல்லுடா” என்று ராஜேஷ், மாதேஷிடம் கூற,
“அது
வந்து… எங்க கெமிஸ்ட்ரி சாருக்கும் பிசிக்ஸ் மேடமுக்கும் நடுவுல
ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருக்கும் போல. அந்த மேடம் கூட
பண்ண சேட்டிங்கை அவர் கம்ப்யூட்டர்ல சேவ் பண்ணி வச்சிருந்தாரு. அதை தான் நாங்க கண்டுபிடிச்சோம்” என்று அவன் சீரியசான
குரலில் கூற, அரண் செழியனுக்கு சட்டென சிரிப்பு வந்து விட்டது.
குலுங்கி
குலுங்கி சிரித்தவனைக் கண்டு இருவரும் புரியாமல் விழித்தனர்.
ஒரு வழியாக
சிரித்து முடித்தவன், “சரி… நீங்க நினைச்ச மாதிரி கெமிஸ்ட்ரி க்வஸ்டின் பேப்பர்
கிடைக்கல. அடுத்ததா என்ன பண்ணப் போறீங்க?” என்று கேட்க,
“அந்த
சேட்டிங்கை எங்க சாரோட வைஃபுக்கு அனுப்பிடுவோம்னு செல்லி, எங்க
சாரை மிரட்டலாமான்னு யோசிச்சுட்டு இருக்கோம்” என்று ராஜேஷ் கூற,
அரண் செழியன் அதிர்ந்து போய் விட்டான்.
“நோ
நோ… அதெல்லாம் ரொம்ப தப்பு. அப்படி செஞ்சா
நீங்க இரண்டு பேரும் பரீட்சை மார்க்கை எண்ண முடியாது தம்பி; ஜெயில்ல
கம்பி தான் எண்ணணும்!” என்ற செழியனிடம்,
“அப்படின்னா
எங்க சார் இல்லீகல் அஃபையர் வச்சிருக்கறது மட்டும் சரியா?” என்று
கேட்டான் மாதேஷ்.
“அதுவும்
தப்பு தான். ஆனா, அது அவரோட சொந்தப் பிரச்சனை.
அதைத் தட்டிக் கேட்கிற உரிமை உங்க சாரோட மனைவிக்கு மட்டும் தான் இருக்கு!”
என்று அரண் செழின் கூற, இருவரும் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.
இருவரையும்
மாற்றி மாற்றி பார்த்தவன், “இங்கே பாருங்க! இந்த வயசுல விளையாட்டா நீங்க செய்யுற
விஷயங்கள் உங்களை அறியாமலேயே ஆபத்துல கொண்டு போய் நிறுத்திடும். அதனால, இரண்டு பேரும் ஒழுங்கா படிச்சு பரீட்சை எழுதுங்க.
பாசோ… ஃபெயிலோ… பரிட்சையில
என்ன மார்க் எடுத்தாலும் உங்க செயல்ல நேர்மை கண்டிப்பா இருக்கணும். அதுதான் உங்க அப்பா அம்மாவுக்கு நீங்க வாங்கித் தர்ற பெஸ்ட் கிஃப்ட்.
என்ன! நான் சொல்றது புரிஞ்சுதா?” என்று கேட்க, இருவரும் ஆமென்று தலையசைத்தனர்.
“இனிமே
இரண்டு பேரும் இந்த மாதிரி யாரோட பெர்சனல் டேட்டாவையும் ஹேக் பண்ணக் கூடாது.
உங்க மேல நான் எப்பவும் ஒரு கண்ணு வச்சிருப்பேன்” என்றபடி, அவன் அவர்களது மடிக்கணினியைத் திருப்பிக் கொடுக்க,
இருவரும் அதைச் சற்று பயத்துடன் வாங்கிக் கொண்டனர்.
இவர்கள்
மூவரும் பேசிக் கொண்டிருந்தததை தூரத்தில் நின்று பார்த்த பார்கவி, குழப்பத்துடன் அவர்களைத் தேடி
சென்றாள்.
“ராஜ்…
மேடி…” என்று சற்று தொலைவில் அவளது குரல் கேட்கவும்,
தனது பின்னந்தலையைக் கோதிக் கொண்டான் அரண் செழியன்.
அவர்களுக்கு
அருகில் வந்ததும், “நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டீங்களா?” என்று தன் தம்பிகளிடம்
அவள் கேட்க, இருவரும் இல்லை என்று பதிலளித்தனர்.
“முதல்ல
போய் சாப்பிடுங்க!” என்று பார்கவி கூற, இருவரும் செழியனிடம் விடைபெற்று சாப்பிடச் சென்றனர்.
அங்கே செழியனும்
பார்கவியும் மட்டுமே நின்றிருக்க,
இருவரிடமும் ஒருவித மௌனம்!
இங்கிருந்து
பேசாமல் சென்று விடுவதே சிறந்தது என்று நினைத்தவள், அங்கிருந்து நகர முற்படவும், “ம்ம்ம்… ம்ம்ம்…” என்று தொண்டையைச்
செருமினான் அவன்.
அந்தச் சத்தத்தைக்
கேட்டதுமே சடன் ப்ரேக் போட்டது போன்று நின்றவள், திரும்பி அவனைப் பார்த்தாள்.
“உன்கிட்ட
ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்” என்று எங்கோ பார்த்தபடி
அவன் கூற, ஒருகணம் புரியாமல் விழித்தவள், “ம்ம்ம்… சொல்லுங்க!” என்றாள்.
“உன்னோட
தம்பிங்க மேல ஒரு கண்ணு வச்சுக்கோ” என்று செழியன் அவளிடம் மொட்டையாகக்
கூறவும், குழப்பத்துடன், “புரியல”
என்றாள் அவள்.
சற்று முன்னர்
நடந்த விஷயத்தைப் பற்றி அரண் செழியன் அவளிடம் விவரமாகக் கூறவும் பார்கவிக்கும் அதிர்ச்சியாகத்
தான் இருந்தது.
“சரி…
நான் பார்த்துக்குறேன்!” என்றவளிடம்,
“நான்
இந்த விஷயத்தைப் பற்றி உன்கிட்ட சொன்னது அவங்களுக்குத் தெரிய வேண்டாம்” என்றான் செழியன்.
அதற்கு சரியென்று
தலையசைத்தவள், “தேங்கஸ்!” என்று அவனது கண்களைப் பார்த்து கூற,
“இட்ஸ் ஓகே” என்று பதிலளித்தான் அவன்.
அதன் பிறகு, இருவரும் என்ன பேசுவதென்று
புரியாமல் நின்றிருக்க, செழியனே தான் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.
“எப்படி
இருக்க பாரூ…” என்று சொல்ல வந்தவன், பாரூவை
பாதியிலேயே நிறுத்தி, “எப்படி இருக்க பார்கவி?” என்று முடித்தான்.
அவன் தன்னை, ‘பாரூ’ என்று அழைத்ததுமே அவளது தேகம் ஒருநொடி சிலிர்த்தது.
ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
“நான் நல்லா இருக்கேன். நீங்க?” என்று சுருக்கமாகக் கேட்டவளிடம், “ம்ம்ம்… டூயிங் குட்” என்றான் அவன்.
இப்படியே
இருவரும் பேசிக் கொண்டிருந்த வேளையில் தன் மகனைத் தேடி அங்கு வந்தார் ஆதிரை செல்வி.
“செழியா!”
என்றபடியே அவர்களின் அருகே வந்தவர், பார்கவியை
ஏளனமாகப் பார்த்தபடி, “இங்கே என்னப்பா பண்ணுற?” என்று கேட்டார்.
“ஒண்ணுமில்லம்மா…
சும்மா பேசிட்டு இருந்தோம்!” என்றவனிடம்,
“இவ
கூட உனக்கென்ன பேச்சு வேண்டி கிடக்கு!” என்று தன் மகனைக் கடிந்து
கொண்ட ஆதிரை, பார்கவியைப் பார்த்து,
“உனக்கு
கொஞ்சம் கூட அறிவில்லையா? உன்னால நாங்க ஒரு தடவை மூக்கு உடைஞ்சு
போனது பத்தாதா? என் புள்ளையை வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ என்ன அவன்கிட்ட வந்து பல்லை காட்டிட்டு நிக்கிற?” என்று தடித்த வார்த்தைகளை கடித்து துப்பவும் பார்கவியின் விழிகளில் நீர் நிறைந்து
விட்டது.
அதற்கு மேல்
அவரது வசைச் சொற்களை கேட்கும் தைரியமின்றி அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டாள்.
பார்கவி
அங்கிருந்து அழுது கொண்டே செல்வதைப் பார்த்தவன், “அம்மா!” என்று கோபமாகத்
தன் அன்னையிடம் திரும்பி, “நாங்க சாதாரணமா தான் பேசிட்டு இருந்தோம்.
நீங்க ஏன் பார்கவியை அவ்வளவு மோசமா பேசுனீங்க?” என்று கேட்டான்.
“உனக்கு
பொண்ணுங்களைப் பத்தி முழுசா தெரியாது செழியா. பசங்க நீங்க விலகி
விலகிப் போனாலும், அவளுங்க விடாம துரத்திப் பிடிப்பாளுங்க.
இந்த மாதிரி பொண்ணுங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்பா”
என்று ஆதிரை கூறவும், அவரை குழப்பத்துடன் பார்த்தவன்,
“எப்போ
இருந்தும்மா நீங்க இப்படி மாறுனீங்க. எனக்குத் தெரிஞ்ச என்னுடைய
அம்மா ரொம்ப சாஃப்டான, ஸ்வீட்டான ஆளு. ஆனா,
இன்னைக்கு காலையில இருந்து நீங்க பேசுறதையெல்லாம் கேட்குறப்போ,
நிஜமாவே இது நீங்கதானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!” என்று கூறவும், ஆதிரை ஆடிப் போய்விட்டார்.
“இனிமே
பார்கவியை மட்டுமில்ல, யாரையுமே இப்படி ஹர்ட் பண்ணி பேசாதீங்க!”
என்றவன், அங்கிருந்து சென்றுவிட, அதிர்ந்து போய் நின்றார் அவர்.
‘இவன்
என்ன அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு போறான்? இவனை இப்படியே விட்டா
சரி வராது. சீக்கிரமே ஏதாவது செய்யணும்’ என்று நினைத்தவர், தன் கணவரைத் தேடிச் சென்றார்.
திருமணத்திற்கு
வந்த விருந்தினர்கள் அனைவரும் சென்ற பிறகு,
மண்டபத்தில் இருந்து தனது கணவனுடன் புகுந்த வீட்டிற்குச் செல்லத் தயாரானாள்
ஷாரதா தேவி.
நீலவேணி
அழுது கொண்டே தன் மகளுக்கு விடை கொடுக்க,
ஷாரதாவின் தலையை வருடிக் கொடுத்த சுகுமார், “சந்தோஷமா
போயிட்டு வா பாப்பா!” என்றார்.
பின்னர்
இனியனிடம் திரும்பியவர், “மாப்பிள்ளை…” என்றபடி கண்கள் கலங்கினார்.
அவரது மனநிலையை
புரிந்து கொண்டவனோ, “கவலைப்படாதீங்க மாமா. ஷாரதாவை நான் நல்லபடியா பார்த்துக்குறேன்.
நீங்களும் அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து போங்க!” என்று தன் மாமனாருக்கு ஆறுதலளித்தான்.
பார்கவியிடம்
விடைபெறுகையில் ஷாரதாவிற்கு அழுகை பீறிட்டு வந்தது.
தானும் தன்
அக்காவும் ஒன்றாகத் திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று ஒரு
கனவே வைத்திருந்தாள் அவள்.
அந்த நேரத்தில்
அவை அனைத்தும் ஷாரதாவிற்கு நினைவு வந்து,
அவளை கலங்கச் செய்து விட்டது.
தன்னை கட்டியணைத்து
ஏங்கி ஏங்கி அழுபவளின் முதுகை வருடிக் கொடுத்து, அவளை ஆறுதல்படுத்திய பார்கவியின் விழிகளிலும்
கண்ணீர்.
சில நிமிடங்களிலேயே
ஷாரதாவின் அழுகை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வர,
அவளது தோள்களைப் பற்றி நிமிர்த்தியவள், “சந்தோஷமா
போயிட்டு வா ஷாரூ. நேரம் கிடைக்கும் போது ஃபோன் பண்ணு”
என்றாள்.
இவை அனைத்தையும்
காருக்குள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அரண் செழியனோ பெருமூச்சுவிட்டபடி, காரை ஸ்டார்ட் செய்தான்.
பார்கவிக்குப்
பின்னால் சோகத்துடன் நின்றிருந்த தனது தம்பிகளிடம் வந்த ஷாரதா, “ராஜ்… மேடி… அக்காவை மறந்துடாதீங்கடா” என்று கூற, அவர்கள் இருவரும் கண்ணீருடன் அவளை கட்டியணைத்து
விடை கொடுத்தனர்.
அதன் பிறகு
இனியனும் ஷாரதாவும் செழியனின் காரில் ஏறிக் கொள்ள, அதற்கு பின்னால் நின்றிருந்த வாகனங்களில் அவர்களின்
குடும்பத்தார் அமர்ந்து கொண்டனர்.
ஷாரதா தனது
வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு அடியெடுத்து வைத்திருக்க, பார்கவியின் வாழ்க்கையோ ஒரே
இடத்தில் தேங்கி நின்றது!
அரணாய் வருவான்…
மீண்டும்
சந்திப்போம்!
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- X
- Other Apps
Comments
Nice
ReplyDeleteThank you sis😊
DeleteSuper
ReplyDeleteThank you 😊
Delete